விழிகளிலே வெள்ளோட்டம்

This entry is part 1 of 3 in the series 12 மே 2024

17 ஆண்டுகால வகுப்பறை வாழ்க்கையின் கடைசி நாள். 30 ஏப்ரல்,1971.  முதுகலை. மாநிலக் கல்லூரி. சென்னை.

பொறுப்பாசிரியர், ஜேபிஎஸ் என்கிற ஜே. பாலசுப்ரமணியம். அவர் சொன்னார்

‘நாளை முதல் விடுமுறை. ஆனாலும் மே 15வரை செய்முறை தேர்வுக்கு நீங்கள் தயாராக, சோதனைக்கூடம் தினமும் திறந்திருக்கும். உதவியாளர்கள் இருப்பார்கள். நாங்களும் இருப்போம். நீங்கள் வந்து எல்லா சோதனைகளையும் எப்பொழுது வேண்டுமானாலும் செய்துபார்த்துக் கொள்ளலாம்.

கல்லூரிக்குப் பக்கத்திலேயே உள்ள நல்லதம்பி முதலித் தெருவில்தான் என் இருப்பிடம். ஓர் அறையில் நான்கு பேரில் ஒருவனாக நான். அறை வந்தபோது அத்தாவிடமிருந்து ஒரு கடிதம் வந்திருந்தது.

‘உன் அம்மாவுக்கு கர்ப்பப் பையில் கட்டியாம். தஞ்சாவூரில் கல்பனா மருத்துவமனையில் சேர்த்திருக்கிறேன். நீ படி. நான் பார்த்துக் கொள்கிறேன். உனக்குத் தெரிய வேண்டும் என்பதற்காகத்தான் இந்தக் கடிதம் எழுதியிருக்கிறேன்.’

அம்மாவுக்கு ஆபத்தான ஓர் அறுவை சிகிச்சை. நான் இங்கே படிக்க வேண்டுமாம். நான் படிக்கத்தான் வேண்டுமென்றால், அதை எனக்கு தெரியப் படுத்தாமலேயே இருந்திருக்கலாமே. அத்தா அந்தரங்கமாக என்னை எதிர்பார்ப்பது புரிகிறது. கடிதம் கண்டதும் நான் புறப்பட ஏற்பாடு செய்தேன். ஆனால் செய்முறை தேர்வுக்கான பயிற்சி?

அடுத்த நாள் கல்லூரி சென்றேன். சோதனைகளைச் செய்து பார்க்க அல்ல. என் ஆசிரியர் ஜேபிஎஸ்ஸை சந்திக்க. அவர் ஆசிரியரல்ல. அம்மா. பார்க்கும்போது ‘செலவுக்கு காசு வச்சுருக்கியா?’ என்று கேட்ட, என் அனுபவத்தில் என்றுமே சந்தித்திருக்காத ஒரே ஆசிரியர். அது ஆசிரியரின் வார்த்தைகளா? அம்மாவின் வார்த்தைகளா?

ஜேபிஎஸ்ஸை சந்தித்தேன். சொன்னேன். கைகளைக் கட்டியபடி, வலதுகையின் விரல்களால் நெற்றியை வருடினார். அவர் அப்படிச் செய்தால் ‘தீவிரமாக யோசிக்கிறார்’ என்று அர்த்தம். சில வினாடிகள் மணிகளாய்க் கடந்தன. பின் சொன்னார்.

‘உன்னால் நிச்சயமாக இங்கே நிம்மதியாய்ப் படிக்க முடியாது. நீ அவசியம் போய்த்தான் தீரவேண்டும். திருச்சி ஜமால்முகமது கல்லூரியின் இயற்பியல் துறைத் தலைவர் டாக்டர் தேவேந்திரனிடம் நான் பேசுகிறேன். நீ சென்னை வரவேண்டாம். திருச்சியிலேயே அந்தக் கல்லூரியில் நீ சோதனைகளை செய்து பார்த்துக் கொள்ளலாம். அவர் எல்லா ஏற்பாடுகளும் செய்து தருவார். அது சரி. தீடீரென்று செல்கிறாயே. காசு இருக்கா.?’

சுற்றிப் பார்த்துவிட்டு, தன் காசுப்பையிலிருந்து ஒரு நோட்டை எடுத்து என் சட்டைப் பையில் திணித்துவிட்டு அவர் வேலையைக் கவனித்தார். 100 ரூபாய். பேருந்துப் பயணச்சீட்டு போக 60 ரூபாய் மிச்சப்படும்.

சரியான நேரத்தில் தஞ்சாவூர் வந்துவிட்டேன். அறுவை சிகிச்சை முடிந்து, ‘நல்லாயிருக்கியாயா?’ என்ற அம்மாவின் வார்த்தைகளையும் கேட்டுவிட்டேன். திருச்சி சென்றேன். தேவேந்திரன் இருகரம் நீட்டி வரவேற்றார். பிறகு சொன்னார்.

‘ஜேபிஎஸ் உன்னைப் பற்றிச் சொன்னார். இரண்டு உதவியாளர்களுடன் சோதனைக்கூடம் திறந்தே இருக்கும். எல்லாச் சோதனைகளையும் செய்து பார்த்துக் கொள்.’ என்றார்.

‘முதுகலையில் முதல் வகுப்பில் வெற்றி’ என்ற முடிவு ஜேபிஎஸ்ஸால் தான் எழுதப்பட்டது. பிறகு கல்லூரிப் பேராசிரியர் வேலைக்கு விண்ணப்பித்து, நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு வந்தது. ஜேபிஎஸ்ஸுக்கு கடிதம் எழுதினேன். தொலைபேச தைரியம் வரவில்லை. என் கடிதம் அவருக்குக் கிடைத்திருக்கும். பதிலில்லை.

சென்னைக் கல்லூரிக் கல்வி இயக்ககத்தில்தான் நேர்முகத் தேர்வு. 9 மணிக்கே முதல் ஆளாய்ச் சென்றுவிட்டேன். வெளியே கிடந்த இருக்கையில் அமர்ந்தேன். பிறகு ஒவ்வொருவராய் வந்தார்கள். 10மணிக்குத்தான் தேர்வு. காதுகள் செவிடுபட இருதயம் துடித்தது. நேர்முகத் தேர்வு செய்யும் ஆசிரியர்கள் வந்தார்கள். அவர்களில் ஜெபிஎஸ்ஸும் இருந்தார். அவரைப் பார்த்ததும், இடியெனத் துடித்த இருதயம், இதமாக புல்லாங்குழல் ஊதியது. நேர்முகத் தேர்வு நடந்தது. என்னை ஜெபிஎஸ்தான் நேர்முகத் தேர்வு செய்தார். சம்பிரதாயத்திற்காக ‘ரேடார் என்றால் என்ன? எதற்காக அந்தக் கருவியைப் பயன்படுத்துகிறார்கள்?’ என்று கேட்டார். அதற்கு பதில் சொல்ல முதுகலைப் பட்டம் தேவையில்லை. நான் பதில் சொன்னேன். என் நேர்முகத் தேர்வு முடிந்தது.

தஞ்சாவூர் மன்னர் சரபோசி கல்லூரியில் வேலை கிடைத்துவிட்டது. பின்னணியில் இருந்தது ஜேபிஎஸ்தான் என்று எனக்குத் தெரியும். அவருக்கு தகவலைச் சொல்லி, ஒரு நன்றிக் கடிதம் எழுதினேன். கிடைத்திருக்கும் பதில் இல்லை. எனக்குத் தெரியும். அவர்கள் காட்டிக் கொள்ளக் கூடாது.

வேலை, திருமணம், வீடு, பிள்ளைகள் என்று வாழ்க்கையின்  அடுத்தடுத்த அத்தியாயங்கள் தொடங்கிய  போதெல்லாம் ஜேபிஎஸ்ஸுக்கு தெரியப் படுத்தினேன். இப்போது அவர் கல்லூரிக் கல்வி இயக்ககத்தில் உயர்ந்த பொறுப்பில் இருக்கிறார். ஒரு நாள் அலுவலகம் தொடர்பாக நான் வேலை செய்யும் சரபோசி கல்லூரிக்கு வந்தார். அவர் தங்கியிருந்த விடுதிக்குச் சென்றேன். தனக்கு அருகாமையிலேயே ஓர் இருக்கையில் அமரவைத்தார். ஏறஇறங்கப் பார்த்து புன்முருவலித்தார். ‘கையில் காசுருக்கா?’ என்று கேட்கவில்லை. அந்தப அன்புப் பார்வை என்னை உடல் முழுக்க வருடியது. விடைபெற்றேன்.

வெயில், மழை, கனமழை, புயல் என்ற வானிலை மாற்றம்போல் வாழ்க்கையும் மாறுகிறது. நான் இப்போது சிங்கப்பூர் வந்துவிட்டேன். குடும்பத்தோடு இடம் பெயர்ந்துவிட்டேன். ஜேபிஎஸ்ஸுக்கு தெரியப்படுத்தினேன். பதிலில்லை. அவருக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்கும் என்பது மட்டும் தெரியும். சிங்கப்பூரில் சில வேளைகள் உணவை மறந்துகூட இருந்திருக்கிறேன். ஜேபிஎஸ்ஸை நினைக்காமல் இருந்ததில்லை. புதிய நண்பர்கள் என்று யாரை சந்தித்தாலும் நிச்சயமாக அவர்களிடம் நான் சொல்லும் முதல் செய்தியே இந்த ஜேபிஎஸ் தான். குடும்பம் வளர்ந்தது. ஒரு மகள் அமெரிக்காவில் பணிபுரியும் ஓர் இளைஞனை மணந்துகொண்டு, அமெரிக்காவுக்கே சென்றுவிட்டார்.

சிங்கப்பூரில் நான் ஓர் ஆசிரியர் என்பதைவிட, ஓர் எழுத்தாளன் என்றே தமிழ் சமூகம் அறிந்திருந்தது. நிறைய கதைகள், கவிதைகள், நாவல்கள்  எழுதினேன். தொகுத்து நூலாக்கி, வெளியிட்டேன். வெளியிட்ட போதெல்லாம் அமெரிக்காவில் இருக்கும் மகளுக்கும் சில படிகளை அனுப்புவேன். என் எழுத்தைப் பற்றி ஒருநாள் கூட என் மகள் பேசியதில்லை.  எந்தக் கருத்தும் எப்போதுமே சொன்னதில்லை. நூல்கள் அனுப்புவதோடு சரி. நானும் கேட்டதில்லை. அதெல்லாம் இயற்கையாக வரவேண்டும். நாமே கேட்டால் பொய்தான் பதிலாக வரும்.

ஒரு நாள் மகள் தொலைபேசினார். எதிர்பார்க்காத வகையில் என் கதைத் தொகுப்பில் இருந்த ‘இளைஞன்’ என்ற கதையைப் பற்றிச் சொல்லிவிட்டுத் தொடர்ந்தார்.

‘அத்தா, என் வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு பெண் குடி வந்திருக்கிறார். அவர் பெயர் சுதா. நிறைய கதைகள் படிப்பாராம். அவரிடம் உங்கள் நூல்களையெல்லாம் கொடுத்தேன். ஒருநாள் உங்களின் ‘இளைஞன்’ கதையைப் பற்றி என்னிடம் சொன்னார். தன் மகனின் மேற்படிப்புக்காக அப்பாவும் அம்மாவும் விவாதிக்கும் காட்சியை ஒங்க அப்பா தத்ரூபமாக எழுதியிருக்கிறார். அது அப்படியே என் மேற்படிப்பின்போது என் அப்பா அம்மாவுக்கு இடையே நடந்தது என்று ஆச்சரியப்பட்டார். ஒங்க அப்பாவை எப்படியும் நான் சந்திக்கவேண்டும் என்றும் சொன்னார்.’

என் மகளைப் பார்க்க, இந்த ஆண்டு பிப்ரவரியில் அமெரிக்கா புறப்பட்டேன். ஒர் எழுத்தாளனுக்கு உண்மையான சன்மானம் என்பது, தன் எழுத்துக்களை விரும்பும் ஒரு வாசகரின் பாராட்டும்படியான இரண்டு வார்த்தைகள்தான் என்பது எழுத்தாளர்களுக்குப் புரியும். மகள் சொன்ன வார்த்தைகள், என்னை லேசாகப் பறக்கவைத்தன. உண்மையில் நான் மகளைப் பார்க்க மட்டும்  அமெரிக்கா புறப்படவில்லை. சுதாவை பார்ப்பதற்காகவும்தான்.

சான்ஃபிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் இறங்கி வெளியேறினேன். மகள் காத்திருந்தார். இருவரின் கண்ணீரும் ஒருதுளியாய் சங்கமித்த காட்சியெல்லாம் முடிந்து, வீட்டுக்கு மகளோடு மகிழ்உந்தில் புறப்பட்டேன். வீடு டப்ளினில் இருக்கிறது. ஒரு மணிநேரப் பயணம். இதோ வீடு வந்துவிட்டது. இறங்கி வாசலுக்கு வந்தோம். கதவைத் திறந்துகொண்டு ஒரு பெண் வெளியே வந்தார். என் கண்களை நேரடியாகச் சந்தித்து ‘வணக்கம் அப்பா’ என்றார். அந்த அப்பா என்ற அன்பில் சிலிர்த்தேன். என்னைப் பற்றித் தெரிந்தால்தான் இப்படி  உரிமை கொண்டாட முடியும். நானும்  மகளாக ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். பக்கத்திலேயே தயாரா யிருந்த ஆரத்தித் தட்டை எடுத்து, எனக்கு ஆரத்தி சுற்றினார்.  

ஆரத்தி. அதுவும் அமெரிக்காவில். உண்மையில் நான் அமெரிக்காவில்தான் இருக்கிறேனா? ஆரத்தியைப் பார்த்ததும், திருமணமாகி, மனைவியுடன் முதன்முறையாக வீட்டு வாசலில் அடிவைத்தபோது, அம்மா ஆரத்தி எடுத்தது ஞாபகத்துக்கு வந்தது. அதன்பின் ஒவ்வொரு ஆண்டு ஹரிரயா பண்டிகையின்போதும் பள்ளிவாசலில் தொழுகையை முடித்துவிட்டு வீட்டுக்கு வரும்போது மனைவி ஆரத்தி எடுத்தது ஞாபகத்துக்கு வந்தது. இங்கே முன்பின் தெரியாத ஒரு முகம் அல்லவா ஆரத்தி எடுக்கிறது. இடமும் வலமுமாக மூன்று மூன்று முறை சுற்றிவிட்டு, அந்தப் பெண் சொன்னார்.

‘காலில் விழுந்து ஆசிபெற ஆசை அப்பா. ஆனால் இப்போது முடியாது.’

என்று சொல்லிச் சிரித்தார். ஆம். அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.

மகள் சொன்னார்

‘அத்தா நான் சொன்னேனே சுதா. அந்தப் பெண் இவர்தான்.’

அட! அருமையான அறிமுகம். நான் யாரை உண்மையிலேயே சந்திக்க ஆசைப்பட்டேனோ, அவரைத் தேடிச் செல்லாமலேயே அல்லவா சந்திக்கிறேன். எல்லாருமாகச் சேர்ந்து வீட்டுக்குள் சென்றோம். சாப்பாட்டு மேசையில் நானும் மகளும் அமர்ந்தோம்.

சுதா இருவருக்கும் தட்டு வைத்தார். மேகத்துண்டுகளாக மூன்று இட்லிகளை என் தட்டில் வைத்தார். மகளுக்கும்தான். சாம்பார் பாத்திரத்தைத் திறக்கும்போதே, அந்தத் துவரம்பருப்பு வாசம் மனதுக்குள் ‘உங்கள் விருப்பம்’ இசைத்தது. சாம்பாரை எடுத்துவந்த சுதா, அந்த இட்லி மேலேயே, இட்லிகள் மூழ்கும் வரைக்கும் ஊற்றினார்.

‘அத்தா, இட்லி நான் செய்தது. சாம்பார் சுதா வைத்தது. விமானநிலையம் செல்லும் முன் நான் செய்யச் சொல்லவில்லை. அவராகவே செய்திருக்கிறார். உங்களுக்கு சாம்பார் பிடிக்கும் என்று எப்போவோ சொன்ன ஞாபகம்.’

அந்த சாம்பாரில் இட்லியைப் பிசைந்துகொண்டே நான் சொன்னேன்.

‘இந்த சாம்பாரைப் பார்க்கும்போது, சென்னை திருவல்லிக்கேணியில் இருக்கும் ரத்னா கஃபே ஞாபகம் வந்துவிட்டது. அங்குதான் இப்படி இட்லியை சாம்பாரில் மூழ்கடிப்பார்கள். அதோடு ஒரு கோப்பையில் உதிரியாக சாம்பாரும் தருவார்கள்.’

‘அட! ரத்னா கஃபே உங்களுக்குத் தெரியுமா? என்றார் சுதா

‘மாநிலக் கல்லூரியில் படித்தவன் ரத்னா கஃபேயை அறியாமல் இருக்கமுடியாதம்மா.’

‘அப்ப நீங்கள் மாநிலக் கல்லூரியில் படித்தீர்களா?’

‘ஆம்’

‘என்ன படித்தீர்களப்பா?’

‘இயற்பியல். முதுகலை.’

‘எந்த ஆண்டு.’

‘1969-71’

‘அட! அப்படியென்றால் உங்களுக்கு ஜே பாலசுப்ரமணியம் என்கிற ஜேபிஎஸ்ஸத் தெரிந்திருக்க வேண்டுமே. அவரைத் தெரியுமா?’

அந்தப் பேரைக் கேட்டதும் புல்லரித்தேன். ஒரு குடம் பால் என் தலையில் ஊற்றப்பட்டது.  

‘என்ன சுதா இப்படிக் கேக்குறீங்க. இந்த உயரத்தில் நான் இருக்கிறே னென்றால், என்னை ஏற்றிவிட்டது அவரின் கைகள் தான் சுதா. அது ஆசிரியர் கரங்களல்ல. அம்மாவின் கரங்கள். என் வாழ்க்கை அனுபவத்தில் அப்படி ஒரு உயர்ந்த மனிதரைக் கண்டதில்லை சுதா. அது சரி. அவரை உங்களுக்கு எப்படித் தெரியும்.’

நிமிர்ந்து சுதாவின் முகத்தைப் பார்த்தேன். இரண்டு விழிகளிலும் கண்ணீர் மிதந்து மின்னியது. இந்த விழிகளில் ஏனிந்த வெள்ளோட்டம்?

‘சுதா! கேட்கிறேனே. அவரை உங்களுக்குத் தெரியுமா?’

‘அவர் மகள்தானப்பா நான்.’

யூசுப் ராவுத்தர் ரஜித்

Series Navigationமுன்னொரு காலத்துல…
author

யூசுப் ராவுத்தர் ரஜித்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *