தனித்திரு !

author
0 minutes, 36 seconds Read
This entry is part 1 of 2 in the series 19 மே 2024

சோம. அழகு

            கோவிட் காலம், அதுவல்லாத காலம், இளமை, முதுமை என எல்லா நிலைகளிலும் எனக்கு மட்டும்தான் ‘தனித்திரு’ என்னும் இச்சொல் இன்பத்தேனாகப் பாய்கிறதா? “‘கொடிது கொடிது தனிமை கொடிது; அதனினும் கொடிது முதுமையில் தனிமை’. வயசானாதான் அதுலாம் தெரியும். இப்போ அதுபற்றி உனக்குப் புரியாது” – இதைத்தானே சொல்லப் போகிறீர்கள்? ஒப்புக்கொள்கிறேன். முதல் வரியில் ‘முதுமை’யைச் சேர்த்துக் கொள்ள எனக்குத் தகுதி இல்லைதான். ஆனால் ‘முதுமையில் நாம் தனித்திருக்க இயலாது’ என்னும் ஒற்றைக் காரணத்திற்காக நாம் கொடுத்துக் கொண்டிருக்கும் பிரம்மாண்டமான மாபெரும் மிகப் பெரிய்ய்ய்ய்ய விலையைப் பற்றி யாரும் பெரிதாகக் கண்டுகொள்வதாகத் தெரியவில்லை. அதைப் பற்றித்தான் கொஞ்சம் கதைக்கலாமெண்டு வந்தனான்.         

            இப்பதிவை முறையாக என் பெற்றோரை வசைபாடியபடி இறைவணக்கத்துடன் துவங்குவது சிறப்பாய் அமையும். நமது முதல் உலகம் வீடல்லவோ? என் அம்மா என்பதற்காகச் சொல்லவில்லை. மனித குலத்தின் விநோதமான விதிவிலக்கு அவள். எவ்வித காழ்ப்புணர்வும் இன்றி எப்படி ஒரு மனுஷியை எல்லோர்க்கும் பிடித்துப் போகும்? இந்தப் புதிரின் புரியாத விடை அவள். கோபத்தைக் கூட அமைதியினுள்ளோ புன்னகையினுள்ளோ ஒளித்து வைத்த வருத்தமாகத்தான் வெளிப்படுத்தத் தெரியும் அவளுக்கு. இதுவரை ஒருவர் கூட அவளிடமோ அவளைப் பற்றியோ சினந்து பேசியதில்லை. வள்ளுவனைப் பொய்யாக்கிவிடக் கூடாது என்னும் ஒரே காரணத்திற்காக அப்பா மட்டும் அவ்வப்போது அவளிடம் சிறு சிறு விஷயங்களுக்குக் கோபம் கொள்வார்கள். அது இயற்கைதானே? எனவே அதுவும் கணக்கில் வராது. அப்பா, தங்கை, நான் – நாங்கள் அனைவரும் நாத்திகர்கள் என்பதில் அவளுக்கு எப்போதும் மனத்தடையோ வருத்தமோ கிடையாது. “நான் உங்களுக்குப் பகுத்தறிவுப் பாதையைக் காண்பித்திருக்கலாம். ஆனால் பிற ஆத்திகவாதிகள் போல் அல்லாமல் நீங்கள் பூசிக் கொள்ள விரும்பும் நிறத்தைத் தேர்வு செய்யும் சுதந்திரத்தை உங்களிடமே வழங்கியதில் எல்லா பெருமையும் அவளையே சாரும்” என்று அப்பாவே சொல்வார்கள். இவள் எந்த கிரகத்திலிருந்து வந்தாள்? முதல் குற்றவாளி இவள்தான்.

            அடுத்த முக்கிய குற்றவாளியான அப்பாவின் crime rate விண்ணை முட்டி ஆக்ஸிஜன் தேடி அலைகிறது. எவ்வளவு தைரியம், பெண் பிள்ளை என்றும் பாராமல் கருப்பின் மீதும் சிவப்பின் மீதும் ஈர்ப்பை உண்டாக்க? பகுத்தறிவு, திராவிடம், கம்யூனிஸம் உள்ளிட்ட பெரிய பெரிய கருத்தாக்கங்களைத் தெள்ளிய முறையில் எடுத்துரைப்பதென்ன; ‘நறுக்’, ‘சுருக்’ என தம் வாதங்களின் மூலம் வியக்க வைப்பதென்ன; வீட்டிலே ஆகச் சிறந்த சனநாயகச் சூழலை உருவாக்கித் தந்ததென்ன; தோழர்கள் உலகைக் காண்பிப்பதென்ன; நிரம்பிய நூலுடைய கொள்கைச் சான்றோரின் கலந்துரையாடல்களுக்கு அழைத்துச் செல்வதென்ன… என்ன? என்ன? என்ன? போதாக் குறைக்கு இலக்கிய ரசனையை எங்களுக்கே தெரியாமல் எங்களுள் ஏற்றியிருக்கிறார்கள். இவ்வளவும் செய்தவர்களுக்குப் புற உலகைப் பற்றிய நிதர்சனத்தையும் கூறி வளர்க்கத் தெரியாதா?

            சொல்லித்தான் வளர்த்தார்கள்… நான்தான்… நான் பார்த்த உலகில் உள்ளவர்கள் தான் முழு உலகிலும் பெரும்பாலானவர்களாக நிறைந்து இருப்பார்கள் என்னும் கற்பனையை ஆசையாக மாற்றி நம்பத் துவங்கினேன். அதற்காக என்னைத் தவறென்று சொல்லாதீர்கள். எனக்கு இப்போது கோபத்தைக் காட்ட இடம் வேண்டும். ‘பிங்க் ஜிமிக்கி எங்கு கிடைக்கும்?’, ‘தேங்காய் நாரில் மாங்காய் டிசைன் போட்ட மயில் கழுத்து நிற சேலை எப்போது கடைக்கு வரும்?’ போன்ற உருப்படியான(!) கவலைகளை மட்டுமே ஊட்டி வளர்த்திருந்தால் இவ்வுலகில் ‘இருத்தல்’ தொழில் சுலபமாகியிருக்கும். ப்ச்! வளர்ப்பு சரியில்லை…!

            ஏதோ ‘மாற்றுக் கருத்து’ என்றாலே எனக்கு ஒவ்வாமை என நினைத்துவிட வேண்டாம். ‘இடியாப்பம் பிடிக்கும்; பிடிக்காது’ என்ற அளவில் இருப்பதன் பெயர்தான் மாற்றுக் கருத்து. ‘இடி அமீன் பிடிக்கும்; பிடிக்காது’ என்பதில் வருவதல்ல. ‘இடி அமீன் ஏன் வெறுக்கப்பட வேண்டும்?’ என்பதெற்கெல்லாம் விளக்கம் கொடுக்க வேண்டி சூழல் பணிக்கிறதெனில் சுற்றம் சரியில்லை என்றுதான் பொருள்! எவ்வளவு எடுத்துக் கூறியும் “இல்லையில்லை. நீ எவ்வளவு சொன்னாலும் இடி அமீனை வெறுப்பது எனக்குச் சரியாகப் படவில்லை. அவன் பக்க நியாயம் என்று ஒன்று இருக்கிறதல்லவா?” என்று கூறுவோரையெல்லாம் வேறு வழியில்லாமல் சகித்துக் கொண்டு செல்ல வைக்கும் வாழ்க்கை மீதுதான் என் மொத்த கோபமே. இடி அமீனுக்குப் பதில் அதிமுக்கியமான வாழ்வியல் விஷயங்களை, ஒரு மனிதனை அடிப்படையாக வரையறுக்கும் பண்புகளை கருத்தாக்கங்களை வைத்து யோசிக்கவும்.  ‘வாழ்க்கை இப்படியே போயிருமா?’ என ஒரு கடுப்பு வரும் இல்லையா?

பொருத்தமான நிகழ்வொன்றை விவரிப்பது ஏதுவாய் அமையும்.

            உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிக்குச் செல்ல நேரிட்டது. பந்தியில் உணவருந்த அமர்ந்தோம். முதல் வாய் உள்ளே சென்ற போது அருகில் துன்னுட்டு இருந்த துன்னியார் ஒருவர், “புதுசா நான் கட்டிட்டு இருக்குற வீட்டுல பெருசா ஒரு டைனிங் டேபிள். பக்கத்துல ரொம்ப பெருசா ஒரு ஜன்னல். ஹால்ல 70 இஞ்ச் டிவி,…. சுக்கு காப்பி, மிளகு ரசம்….” என்று அடுக்கிக் கொண்டே சென்றார் பெருமிதம் பொங்க. இதற்குள் எதிர் வரிசையில் கொஞ்சம் தள்ளி இருந்த மாமா ஒருவர் “வீட்டைக் கட்டிப் பாருன்னு சும்மாவா சொல்லி வச்சாங்க. எனக்கெல்லாம் விழி பிதுங்கிடுச்சு. அப்போல்லாம் சாப்பாட்டுக்கே கஷ்டம். ஒருத்தர் இல்ல தூக்கி விடுறதுக்கு, உன்னையும் சேர்த்துதான். எல்லாத்தையும் மீஈஈஈறி நின்ன்னு காமிச்சேன். உக்காந்து காம்போசிசன் எழுதுனேன்…. நடந்து போய் கமர்கட் வாங்குனேன்” என்று அவர் பங்குக்கு அடித்து விட்டுக் கொண்டிருந்தார்.

ஒரு நல்ல அரசு உத்தியோகத்தில் இருந்தும் ‘பேதைதன் கையொன் றுடமை பெற்ற’தைப் போல் வாழ்ந்து பணி ஓய்வு பெற்று இருந்திருந்து திறவோன் பருவத்தின் மத்திம கால வயதில் முதன்முதலாகத் தாம் கட்டும் வீட்டைப் பற்றி இவ்வளவு சிலாகித்த அந்தச் சுக்குக் காப்பி சித்தப்பாவிடம் ‘பயனில சொல்லாமை’ பற்றி எடுத்துச் சொல்வது வராஹ பகவானின் முன் முத்துகளைச் சிந்துவதாகும். அந்த மாமாவின் பின்னணி தெரியாமல் இதைக் கேட்டால் ஏதோ உத்வேகம் தரும் கதை போல என யாரும் நம்பிவிடுவர். குடும்பத்தில் முதல் ஆளாக வேலைக்குச் சென்றவர். அதுவும் நல்ல வேலை… பின்னர் வணிகக் காந்தமாகும் முயற்சியில் மும்மரமாகக் குதித்துக் கால் இடறியதில் அன்பை முறிக்கும் சுறாக்களின்(!) காந்தவலையில் சிக்கி முக்கி மீண்டு வந்துதான் ‘சிறுமை அணியுமாம் தன்னை வியந்து’ இப்பேருரை. காதுகள் பாவமில்லையா? தன் ‘அறிவார்ந்த(!)’ சோதனை முயற்சிகளின் மூலம் ‘ஏதங்கொண்டு ஊதியம் போக’ விட்டு இன்மையில் உழன்ற கதையை glorify/romanticize செய்து சொல்லிக் கொண்டிருந்ததில் அனைவரின் தலைமுடி கைமுடி எல்லாம் ‘parade salute!’ என எழுந்து நின்றன. ‘சீரல் லவர்கண் படின்’ ‘முந்திரிமேற் காணி மிகுவேதல் கீழ்தன்னை இந்திரனா எண்ணு’ம் இவர்களின் உளுத்துப் போன அறுவையுரையால் அறை முழுதும் ஊசல் வாடை கமழ்ந்தது.

நானும் எதிரில் அமர்ந்திருந்த அப்பாவும் சிரித்து வைக்கவும் முடியாத, கடுப்பை வெளிப்படுத்தவும் இயலாத ஒரு கலவையான பார்வையைப் பரிமாறிக் கொண்டோம். இதில் வேறு அந்த மாமா என் அம்மாவிடம், “நானா கண்டு தாக்குப்பிடிச்சேன். என்னக்கா?” என அவளின் ஆமோதித்தலை எதிர்ப்பார்க்க அவளும் “பின்ன? சும்மாவா?” என்று சொல்லிச் சமாளிக்க, நானோ யாருக்கும் கேட்காதவாறு அவளின் காதில் “கூச்சமே இல்லேல?” என்றேன். சிரித்தாவாறே முகத்தை வைத்துக் கொண்டு “வாய மூடிட்டுச் சாப்பிடு” என்று கடுகடுத்தாள். “அது எப்பிடிம்மா முடியும்?” என்று கொடூரமாக நகைச்சுவையை அள்ளித் தெளித்தேன். இதற்குள் பெரியப்பா ஒருவர் “ஏன் காத கடிக்கா எம்மவ?” எனக் கேட்க “மோர் வேணுமாம்” என்று சொல்லி வைத்தாள் அம்மா.

ஒரு அரை கிலோமீட்டர் தூரத்து உறவு அண்ணன் ஒருவன் மோர் கொண்டு வந்தான். உடனே அறைக்கு இன்னும் மணம் சேர்க்கும் பொருட்டு அங்கிருந்த அவனது அம்மா, “இவன் பக்குவம் பொறுப்பு அறிவு யாருக்கும் வராது… ஆனை பூனை அல்லே பராக்….” என்று நீட்டி முழக்கிய போது அவ்வார்த்தைகளுக்கும் அவனுக்கும் என்ன சம்பந்தம் என நிச்சயம் எல்லோரும் யோசித்துக் கொண்டிருந்திருப்பார்கள். கல்லூரியில் வகுப்புகளுக்கு வெளியேதான் அறிவு கிட்டும் என ஆழமாக நம்பும் ஞானி அவன். ஒவ்வொரு தாளையும் குறைந்தது நான்கு முறையாவது எழுதுவதைப் பொறுப்பாகச் சலிக்காமல் ஏற்றுச் செய்து வந்தான். ஒரே நேரத்தில் பல இளைஞிகளுடன் எவ்விதக் குழப்பமும் இல்லாமல் நிலக்கடலை வியாபாரம் பார்ப்பதில் வல்லவன். இப்போது சம்பந்தமே இல்லாத துறை எனினும் நன்றாகச் சம்பாதிக்கிறான் என்று அவனுக்காக ஆறுதலடையவோ மகிழவோ கூட அனுமதிக்க மாட்டான். உடனே சுக்கு நூறாக அவனுள் ஆங்காங்கே சிதறுண்டு கிடந்து ஒட்ட மறுக்கும் ஆங்கிலத்தையும் இவனே வலுக்கட்டாயமாக அடித்து உடைத்த தமிழையும் கொண்டு திருவாய் மலர்ந்தருளி ‘திருவேறு தெள்ளிய ராதலும் வேறு’ என்ற இருவேறு உலகத்து இயற்கைக்கு வாழும் உதாரணம் தான் என நிரூபிப்பான்.  

அத்தை ஒருத்தி அம்மா காதில், “இவன் இருந்த இருப்புக்கு வேலையா கெடைச்சுருக்கும்? கோடகநல்லூர் கைலாசநாதர் கோவில்ல  ஒரு தேங்காய் விடலை போட்ட கையோட மரகநெடுங்குழைக்காதர் பெருமாள் கோவிலில் துளசித் தண்ணி வாங்கி ஒரு மடக்கு குடிச்சுட்டு கரெக்ட்டா ரெண்டு துளிய உச்சந்தலையில தெளிச்சு விட்டுட்டு நேரே சாயிபாபா கோவிலுக்குப் போய் நாலரை சுத்து சுத்தீட்டு வடமேற்கு பக்கமா திரும்பி நின்னு ஒரு கையை மேலே தூக்கி இன்னொரு கையால் கால் சுண்டு விரலைப் பிடித்தவாறே வானத்தைப் பார்த்து வேண்டிக்கொண்டால் நினைத்தது நிச்சயம் நடக்கும்னு அவனுக்குப் பரிகாரம் சொன்னேன். அத செஞ்ச பொறவு தான் உடனே ரெண்டு வருசம் கழிச்சு வேலை கெடச்சது. ஒங்களுக்கும் ஏதாவது வேணும்னா கேளுங்க” என்றார். “கொஞ்சம் தண்ணி குடிச்சுக்கோங்க” என்று அந்த அத்தையிடம் சொல்லிவிட்டு அம்மாவின் இந்தக் காதில் நான் “ஒவ்வொரு சாமியும் மத்த சாமி பாத்துக்கும்னு விட்டதுல கொஞ்சம் தாமதாமாகிட்டு போல” என்றது அத்தைக்குக் கேட்டுவிட்டது போலும். என்னை முறைத்துக் கொண்டே இஞ்சிப் பச்சடியை வத்தக்குழம்பு என நினைத்து சோற்றில் போட்டுப் பிசைந்துவிட்டார்.

“எதேச்சையா வந்த இந்த விசேஷ வீட்டோட டைனிங் ஹால்ல தற்செயலா நுழைஞ்சேன் ஃப்ராண்ட்ஸ்… இங்க பாத்தீங்கன்னா எல்லாரும் சாப்பிட்டுட்டு இருக்காங்க ஃப்ராண்ட்ஸ்… அதுவும் வலது கையால எடுத்து வாயாலயே சாப்பிடுறாங்க ஃப்ராண்ட்ஸ்… இங்க ஒரு ஆன்டி காரத்துல கதறுரததான் பாத்துட்டு இருக்கீங்க….” என்று கி.பி இராண்டாயிரமாம் காலகட்டத்தைச் சார்ந்த குழந்தை ஒன்று கைபேசியில் ஒளிபரப்பிக் கொண்டிருந்தது.

திடீரென ஒரு அங்கிள் அரசியல் பேசத் துவங்கினார்கள். உலக அரசியல் வழியாக உள்நாட்டு அரசியலுக்குத் தாவி உள்ளூர் அரசியலை அடைந்து… என அங்கும் இங்கும் சுற்றி கடைசியில் காவிக்குக் காவடி எடுத்தார்கள். “அடச்சை! Toilet paper” என அவர்கள் வீட்டில் வாங்கும் நாளிதழ் என் நினைவிற்கு வந்து சென்றது. அப்பாவும் அருகிலிருந்த தோழரும் அவரைப் பரவச நிலையிலிருந்து நிதானமாக இறக்க முற்பட்டார்கள். அவரோ ‘பவர்ர்ர்ர்ர்’ என இன்னும் இன்னும் உக்கிரத்தை நோக்கிச் செல்ல இருவரும் நிலைமையைப் புரிந்து கொண்டு அமிழ்தத்தை இங்கு கொட்டக்கூடாது என்றுணர்ந்து கை கழுவ அங்கணத்தை நோக்கிச் செல்ல ஆயத்தமானார்கள். நானும் ‘புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க’ என்று புளிசேரியை எதிர்நோக்கிக் காத்திருந்தேன். அப்பாவின் வார்ப்பு நான் என்றறிந்த அங்கிள் “நீ என்ன சொல்லுத?” என்று என் வாயைக் கிண்டினார்கள். “எந்தக் கட்சிக்கும் ஆதரவா நான் பேசல. எல்லா இடத்துலயும் ஊழல் இருக்கலாம். ஆனா எதேச்சதிகாரத்தை ஒழிக்குறதுதான் இப்போ முக்கியம். அதனால இந்தக் குறிக்கோளோட மக்கள் பக்கம் நிக்குற கட்சிக்கு வாக்கு அளிக்குறதுதான் சரியா இருக்கும்” என்று பதில் மொழியவும் நான் எந்தக் கட்சியைச் சொல்கிறேன் என்பதை உணர்ந்து என்னை அக்கட்சியின் பரப்புரையாளராகப் பாவித்து என்னைச் சாடத் துவங்கினார். ‘வெளியார்முன் வான்சுதை வண்ணம் கொள்’ளும் முயற்சியில் பரிதாபமாகத் தோற்று நின்றேன்.

இன்னொரு அங்கிள் வந்து “இந்த நாடு குட்டிச்சுவரா போறதுக்கே ஒங்கள மாதிரி ஆட்கள்தான் காரணம்” என்று காவி அங்கிளைப் பார்த்துச் சொல்ல ‘ஒளி தெரிகிறது’ என்று என் மனம் பூரிக்கத் துவங்கவும் படாரென்று ஒரு நடிகரின் நடுநிலைமைக் கட்சியைத் தாம் ஆதரிப்பதாகச் சொன்னார். ஒளி வந்த வேகத்திலேயே மறைந்துவிட்டது!

மூன்றாவதாக அண்ணாவா அங்கிளா என்று குழப்ப வைத்த ஒரு நபர் வந்து அவ்விருவரையும் பார்த்து “இப்படியே பேசிட்டு இருந்தா விளங்கிரும். ஒங்க ஆளுக்கு ஊர் சுத்தவே நேரம் இல்லை. ஒங்காளு பேச்சுக்கு கோனார் உரை கூட கெடைக்காது…” என்றார். ஆகா! என்னை ஆதரிக்க இவர் திருவுளங்கொண்டு விட்டார் என நான் எண்ணுகையில் என்னை நோக்கித் திரும்பி “இவ ஒரு கருப்பு சிவப்பு சங்கி” என்று அதிர்ச்சியடைய வைத்தார். பிறகு சாந்தமான குரலில் கூறினார் “புதுசா கட்சி ஆரம்பிச்சுருக்குற எங்க நடிகருக்கு ஒரு வாய்ப்பு குடுக்கலாம்ல”.  அவர் தலைவராவது புரிபடாமல் பேசுவதில்தான் வல்லவர்; இவர் தலைவர் வாயையே திறக்காமல் பேசுவதில் வல்லவர்.

ஹ்ம்ம்ம்!!! பிரமாதம். என்னைச் சொன்னது கூட வலிக்கல மை டியர் அங்கில்ஸ்! அட!அட!அட! இதுக்குப் பேசாம நான் பேசாமலே இருந்துருக்கலாம்!

            பீற்றல் பேர்வழிகளுக்கும் ‘அறிவுஜீவி’ நோய்க்குறியால் (syndrome – கூகிள் இப்படித்தான் சொல்லுச்சு!) வாடும் வகையறாக்களுக்கும் மனமார்ந்த அனுதாபங்களையும் ஆழ்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்து விட்டு ‘பாயாசம் சாப்பிடுங்க ஃப்ராண்ட்ஸ்’ என சொல்லச் சொல்லி மனது அரித்துக் கொண்டிருந்ததை மிகவும் கஷ்டப்பட்டுக் கட்டுப்படுத்தினேன். “எனக்குச் சோறே வேண்டாம். ஆள விடுங்கடா” என எழலாம் என்று பார்த்தால் பந்தி முடியவில்லை. என் இரு பக்கமும் ஒருவரும் எழவில்லை. என்னாலும் எழ முடியவில்லை. பாதியிலேயே எழுந்தால் மரியாதைக் குறைவு, இங்கிதமின்மை என்பார்கள், ஏதோ இவ்வளவு நேரமும் அவர்கள் அதைக் கடைபிடித்ததைப் போல.

            தப்பிக்க இயலாமல் கடைசி வரை இருந்து தொலைக்க வேண்டிய நிர்பந்தம். ‘என் உலகம் வேறு; இது ஏதோ தற்காலிகச் சூழல்’ என்னும் பட்சத்தில் ஒரு நாழிகை பந்தியில் இதையெல்லாம் சிரித்துக் கடந்து விடலாம். ஆனால் சகிப்புத்தன்மையை அளவற்ற சோதனைக்கு உள்ளாக்கும் இந்த ஒரு நாழிகை பந்தியை முழு வாழ்க்கை காலத்திற்கான குறியீடாகக் கருதிப் பாருங்கள். வாழ்க்கை நம்மை எவ்விடத்தில் எச்சூழலில் இருத்தி வைக்கும் எனத் தெரியாது. அப்போது நமக்கே நமக்கானவர்கள் பந்தியில்/வாழ்க்கையில் சில வரிசை தள்ளி இருக்கும் சூழ்நிலை அமையலாம். பணியினாலோ தொலைவினாலோ அவர்களுடனான ஆழமான கலந்துரையாடல்களுக்குப் பெரும்பாலும் வாய்ப்பில்லாமல் போகலாம். அச்சமயத்தில் ‘நாணாமை நாடாமை நாரிமை யாதொன்றும் பேணாமை’ ஆகியவற்றையே தொழிலாகக் கொண்டிருக்கும் (ஓட்டை உடைசல் பண்ட) பாத்திரங்கள் வாழ்நாள் முழுமைக்கும் நம்மைச் சுற்றிச் சுற்றி வருகிற போது ‘வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை’ எல்லாம் சுக்கு நூறாகிவிடும்.

            என் உலகை அப்படியே என்னோடு நகர்த்திச் செல்வது சாத்தியமற்றதாகிப் போகும் போது, சூழ்ந்திருப்போரிடம் எனக்கானவர்களைத் தேடித் தோற்கும் வேளைகளில் மனம் ஆங்காரத்தோடு கர்ஜிக்கும் – ‘தனித்திரு!’. தேர்ந்து தெளிந்த கேண்மையே சில சமயம் கழிவிரக்கத்தையோ ஏமாற்றத்தையோ தரும் போது ‘காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதலால்’ வந்தோர் அன்னாருடன் வரும் இலவச இணைப்புகள் பற்றிக் கேட்கவே வேண்டாம்.

இரு மனிதர்களுக்கு இடையில் பிணைப்பு என்பது அன்பு, புரிதல், மரியாதை, கருத்து ஒற்றுமை என ஏதோ ‘ஒன்றன்’ அடிப்படையில் உருவாகும். அப்படியான ஒன்று கூட இல்லாமல் திறந்த வீட்டில் நுழைந்த சிங்கங்களாக நம் உலகில் வளைய வருபவர்கள்தாம் இலவச இணைப்புகள். ஒரு மனிதரை நம் வட்டத்தினுள் மனதார வரவேற்கும்போது அவரிலிருந்து முற்றிலும் மாறுப்பட்ட அவரைச் சார்ந்த – அவ்விய நெஞ்சத்தவர்கள், நெஞ்சின் துறவார் துறந்தார்போல் பேசுபவர்கள், ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப் பேதைகள், கல்லாத மேற்கொண்டொழுகுவோர், ஏவவுஞ் செய்கலான் தான்தேறான் பிரிவினர், உலகத்தார் உண்டென்ப தில்லென்போர் ஆகியோரும் மிக இயல்பான நிகழ்வாக உடன் வந்து அமர்வதுதான் வாழ்க்கையின் அசட்டுத்தனமான வடிவமைப்பு!

தம்கணத்தார் அல்லாதாரால் சூழப்பட்டிருக்கும் காலத்தில்

அதைக் கட்டுப்படுத்துவது நம் கைகளில் இல்லாமல் போகும் கையறுநிலையில் பொறையுடைமை தீர்ந்து போகும் தருணத்தில்

மனநலத்தையும் உடல்நலத்தையும் காக்கவேண்டி ‘சிற்றினம் அஞ்சி தனித்திரு என் மனமே!’

மாண்டார்நீ ராடி மறைந்தொழு மாந்தர்களே! பெரியார் துணைகோடலுக்கு வழி விடவும்!

  • சோம. அழகு
Series Navigationமௌனம்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *