அன்பு* ( * – நிபந்தனைகளுக்குட்பட்டது ! )

This entry is part 1 of 5 in the series 23 ஜூன் 2024

சோம. அழகு

எச்சரிக்கை : கடுமையான ஒவ்வாமை மனநிலையில்தான் எழுதத் துவங்கினேன். In my defense, எல்லோருமே வாழ்வில் ஏதோ ஒரு கட்டத்தில் இந்தப் புள்ளியில் கொஞ்ச நேரமேனும் சஞ்சரித்திருப்போம்.

‘அன்பு* (* – நிபந்தனைகளுக்குட்பட்டது)’ என்று வகைப்படுத்தினால் எளிதாய் இருக்குமோ? ஏனோ அதுதான் சிறந்ததாகத்தான் படுகிறது. கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் யாராக இருந்தாலும் “உன் வெளியில் நான் உன் அனுமதியின்றி நுழைய மாட்டேன். என் வெளியில் நீயும் அத்து மீறாதே! ஆனால் உனக்கு உதவி தேவைப்படும் நேரத்தில் உன் வேண்டுகோளுக்கெல்லாம் காத்திராமல் முன் வந்து நிற்பேன்” என்னும் அவ்வகை அன்புதான் சீர்மை பொருந்தியதாக இருக்கின்றது. இப்படியெல்லாம் எல்லோரும் இருந்துவிட்டால் அன்பின் வழியது நிச்சயம் உயர்நிலைதான். ‘என் அன்பிற்குரியவர்கள்’ அனைவருமே இவ்வுயர்நிலையில்தான் இருக்கிறார்கள். அல்லது அதனால்தான் என் அன்பிற்குரியவர்களாக இருக்கிறார்கள். எப்போதோ உதவிக்கு வர வேண்டுமெனில் அதன் பொருட்டு சர்வ காலமும் நம் எல்லைகளை மதிக்காமல் மிதிக்கும் உரிமை கோரும் அன்பிற்குரிய வெறுப்புக்குரியவர்கள் தள்ளி இருப்பதே மாபெரும் உதவி.
வாழ்வின் அடிப்படை ‘அன்பு’தான் என்று கேட்கும்போதெல்லாம் வேடிக்கையாக ஒன்று தோன்றும்…. இவ்வுலகில் ‘அன்பு’ மிகைப்படுத்தப்பட்ட ஒரு வஸ்து! ‘இந்த உறவுமுறையில்(தாய்-சேய் உட்பட) திளைப்பது தூய்மையான(அசுத்தமான அன்பு என்றால்?) அன்பு’ என்று ஒரு உறவைக் கூடச் சொல்லிவிடவே முடியாது. அதுவெல்லாம் தனிநபர் சம்பந்தப்பட்டது. அவ்வளவு ஏன்? தனிநபர்களுக்கிடையிலே கூட நிபந்தனையற்ற அன்பு என்பது நிலைபேறு பெற்றதல்ல. ‘ஒருவரின் குறைகளோடு அன்னாரை அன்பு செய்தல்’ என்ற வாக்கியமே முரணானதுதானே! அன்பு மிகுந்திருக்குமிடத்தில் எதுவுமே குறையாகவே தெரியாதே? அல்லது அக்குறைகள் பெரிதாகத் தெரியாமல் இருக்கும் காலத்திற்கும் ஒரு காலாவதி தேதி உண்டு.
ஆனால் ‘தூய்மையான’, ‘பரிபூரண’, ‘நிபந்தனையற்ற’ போன்ற சொற்கள் வெறுப்புடன்
முழுமையாகப் பொருந்திப் போவன. ‘வெறுப்பு’ என்னும் உணர்விற்குத்தான் நாம்
உண்மையாக நடந்து கொள்கிறோம். சில நேரங்களில் அன்பு இழைத்து விடும் அநீதி நம்முள் வடுவாகிப் போகும் போது அதே/இன்னொரு அன்பின் இடம் தேடி ஆறுதல் அடைய முனையும் அசட்டுத்தனத்தை என்னவென்று சொல்ல? அப்போதெல்லாம் வெறுப்புதானே மருந்திட்டு மறக்கவும் விலகிச் செல்லவும் கற்றுத் தருகிறது. நம் மனம் தளர்ந்து விடாமல் பார்த்துக் கொள்வதும் அதுதானே? அன்புநிலையில் இடையிடையே வெறுப்பு வந்து போகலாம். வெறுப்பில் அன்பெல்லாம் எட்டிக் கூடப் பார்க்காது. அன்பினால் கட்டுண்டு கிடப்பதை விட வெறுப்பு தரும் சுதந்திரம் சில சமயங்களில் ஆசுவாசமளிக்கிறது.
வெறுப்பின் அடுத்த கட்டம்தான் அமைதியைத் தருகிறது(இதுதான் நான்
கண்டுபிடிச்சது!). ஏனெனில் அத்தனை நாள் பிறர் மீதிருந்த வெறுப்புணர்வையும் தாண்டி நம்மீதே நமக்குக் கோபம் இருந்திருக்கும், நம்மைப் பயன்படுத்த அனுமதித்ததற்காக.
வெறுக்கப்படுபவரைப் பற்றி ஏதேனும் காதில் விழும் போதோ நேரில் பார்க்க நேர்கையிலோ எவ்வித உணர்வுமின்றி ஓர் அந்நியரைப் போல் இயல்பாகக் கடந்து செல்லும் நிலையை அடைந்து விடவேண்டும். அது தரும் மன அமைதி நம்மை நாமே மன்னிக்க உதவும்.

அன்பின் பெயரில்தான் எத்தனை முறை பெயக்கண்டும் நஞ்சுண் டமைவது?
ஒவ்வொரு முறையும் அருந்த வைத்த பின் வெளியேவும் வர விடாமல் உள்ளேயும் செல்ல விடாமல் என் கழுத்தைப் பிடிக்காமலேனும் இருங்கள். ஒரு முறையேனும் உடலில் கலந்து விடட்டும். இன்னும் வலிமையாக மீண்டு வந்து உலகை அதிரச் செய்வேன், அடுத்த முறை அதனினும் வீரியம் மிக்க நஞ்சு காத்திருப்பதை அறிந்த போதும்….
ஏதோ ஓர் அன்பு உங்களைச் சுக்கு நூறாக்கிய பொழுதில் மிகச் சரியாக மழை
பெய்திருக்கிறதா? உணர்வற்ற நிலையில் அதை வெறித்து நோக்கியிருக்கிறீர்களா? நமது மனது உடைந்து உருகி கன்னங்களில் வழிய மறந்ததை நினைவூட்டியபடி ஜன்னலில் மழைத்துளிகள் வழிந்தோடுவதைப் பார்த்திருக்கிறீர்களா? ஜன்னல் கம்பிகளில் இருந்து ஒவ்வொரு சொட்டாகக் கீழே விழும்போது எழும் சப்தத்தில் கொஞ்சம் கொஞ்சமாக தொண்டை அடைக்கத் துவங்கியிருக்கிறதா? அழுது முடித்து எழும் வெறுப்புதானே இயக்க நிலைக்கு மீட்டு வருகிறது?
அன்பு தராத ஆறுதலைப் பல சமயங்களில் வெறுப்பே வழங்குகிறது. அன்புதானே உணர்வுச் சார்புடைய (emotionally dependent) நிலைக்கு இட்டுச் சென்று எதிர்ப்பார்ப்புகளுக்கும் ஏமாற்றங்களுக்கும் வழிகோலுகிறது. அன்புதானே வலியைத் தருகிறது. அன்பினால் உண்டாகும் உணர்வுச் சிக்கல்களிலிருந்து விடுபட வெறுப்புதானே உதவுகிறது.
இப்படியாகவே மனதினுள் ஓடிக் கொண்டிருக்க ரொம்ப ‘வெறுத்துப்’ போய் எழுந்து சென்று விட்டேன். அடுத்ததாக இவ்விடத்தில் ஒரு சிகரெட்டோ தேநீரோ வருவதுதான் மரபு.
ஆனால் என்ன செய்ய? அந்த நல்ல பழக்கங்கள் ஏதும் இல்லாததால் வெறுமனே நடந்து கொண்டிருந்தேன். ஒரு பூங்காவின் பெஞ்ச் அன்போடு(!) அழைத்தது. “வெறும் என்புதோல் போர்த்த உடம்பா இது? என்னிடம் ‘அன்பு’ காலியாகிவிட்டதா? அன்பு செய்வது எப்படி என மறந்துவிட்டேனா?…” இன்னும் பலவாறாக யோசிக்கவும் “ஒரு கலரிங் புக் வாங்கிக்கிறியா அக்கா?” என்ற குரல் வாஞ்சையாக மனதை வருடிக் கொடுத்தது. “இல்ல டா மா… வேண்…. சரி குடு” என வாங்கிக் கொண்டேன். “படிக்கிறியா?” என்று கேட்டுக் கொண்டே கைப்பையிலிருந்து பணம் கொடுத்தேன். மீதி சில்லரை கொடுத்தவாறே “ஆமாக்கா… ஆறாப்பு” என்றாள் புன்னகைத்துக் கொண்டே. “இது என்ன தழும்பு புருவத்துல?” எனக் கேட்டவாறே தொட வந்தவள் தயக்கத்தில் விரல்களால் முன்னும் பின்னுமாக அபிநயம் பிடித்துக் கொண்டிருந்தாள். “ரெண்டு வயசுல ஊஞ்சல்ல இருந்து விழுந்தது. ஆறிடுச்சு.
இப்போ வலிக்காது” என்றவாறே என் முகத்தை கொஞ்சம் முன் நகர்த்தி அவள் தொட்டுப் பார்க்க அனுமதித்தேன். தடவிப் பார்த்துச் சிரித்தாள். அம்மாடி! எவ்வளவு பரிசுத்தமான முகம்!
திராவிட நிறமும் குதிரை வால் இட்ட கூந்தலும் அவளது வசீகரமான முகத்திற்கு இன்னும் அழகு சேர்த்தது. கொஞ்ச நேரம் சும்மா பேசிக் கொண்டிருந்துவிட்டுக் கிளம்பினாள்.


கல்யாண்ஜி அவர்கள் எழுதியதைப் போல் இப்படிச் சும்மா வருபவர்களும்
பேசுபவர்களும்தான் முக்கியம். மனதை முற்றிலும் துடைத்துச் சுத்தமாக்கினாள் மிகச் சாதாரண உரையாடலில். ‘எப்படி நிகழ்ந்தது?’, ‘அப்படி என்ன நிகழ்ந்துவிட்டது?’ என இப்போது யோசித்துப் பார்த்தாலும் வியப்பே மிஞ்சுகிறது. அதன் பின் சுற்றித் திரிந்த பட்டாம்பூச்சிகளும் துள்ளி விளையாடிக் கொண்டிருந்த மழலைகளும் மீண்டும் எப்போதும் போல ரொம்பவே அழகாகத் தெரியத் துவங்கின.
அன்பை மொத்தமாக வறண்டு போகச் செய்பவர்கள் எத்தனை பேர் சூழ்ந்திருந்தாலும் அதனைச் சுரக்கச் செய்யவென மனிதர்கள் வந்து கொண்டே இருப்பார்கள். எனில், அன்பின்மை என்பது அன்பைச் ‘சரியான’ மனிதர்களிடம் ஒப்படைத்துவிடுவதற்கான காத்திருப்பே தவிர வறட்சி என்று ஒன்று கிடையவே கிடையாது.

எத்தனை முறை உடைக்கப்பட்டாலும் எல்லோரும் அன்பைப் பற்றியே பேசுகிறோம், நம்பிக்கையைப் பற்றியே எழுதுகிறோம். மானுடத்தை நோக்கி இன்னும் இன்னும் நெருங்கிச் செல்லும் விழைவு தரும் நம்பிக்கைக்காகத்தானே?

  • சோம. அழகு
Series Navigationஉருளும் மலை
author

சோம. அழகு

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *