நிழலாடும் நுரைமங்கள்.
தேநீரின்
உறிஞ்சு சுகத்திற்கிடையில்
மீளும்
இந்நினைவினை
வானொலியில்
ஒலித்த
பாடல் தான்
மீளருவாக்கியது
ஆற்றில்
குளிக்க வந்த
இவ்வேளையில்.
அநேக கற்பிதங்களில்
ஆட்பட்டுக்கிடந்த
அன்றைய நாளில்
பார்வைகளைத்தவிர
பெரிதாக
பரிமாறியதில்லை
காதலில்
கசிந்துருகினாலும்.
கையொடிய
காலையில்
கடலை கொல்லைக்கு தண்ணீர் இறைத்தது
கண நேரம் தரிசனம்
கண்டுவிடத்தான்
என்பதை
முதல் வகுப்பில்
வாங்கும்
பிரம்படியின்போதான
வேதனை தாழாது
துடித்தழும் உன்
முக வாடல்
நிழலாடுகிறது
நீ சென்ற பாதையை
பார்த்தவாறு
இப்பொழுதும்.
வறுமையின் கோலமென
வருந்தினார்கள்
எனக்கெனவென
அறியாத அநேகர்கள்
ஆறு நாளும்
அதே பாவாடை தாவாணியில்
வருவதை
வாஞ்சையுடன்
நினைத்து.
சிதிலமடைந்த படித்துறையில்
முத்தமிடும் பெயர்களின்
முதலெழுத்து அணுக்கம்தவிர
வேறெதுவும் நடக்கவில்லை
காதலில்
கண்ணியம் கொண்டதனால்.
தனித்தோடி தலைமறைவாக
வாழ்ந்து
சுயாதீன காதலென
சுடரொளி காட்டி இருக்கலாம்தான்
படி தாண்டாத
வாழ்க்கையை
பழகித் தொலைக்காமல்
இருந்தாலென
மருகுகிறது
மனம்
தாமிரபரணியில்
தலைமுழுக
வரும்பொழுதெல்லாம்
தவிப்பாக
கரையேற முடியாமல்
மூழ்கி.
மீட்டலின் பொருட்டான கரிசனம்.
மறு கன்னத்தை
திருப்பிக்காட்டாதபொழுது
பரிவுகளை பேசுவது
பயனற்றது
புரிதல் நிகழ்வதற்கு முன்னால்.
கவனம் பெறுவதற்காக
காட்டப்படும்
கன்னமென
கடிந்தாலும்
சிவந்து கொண்டே
இருக்கிறது
செய்வதறியாது
அன்றாடம்
மேலதிக நம்பிக்கைகள் கொண்டு.
நீங்கள்
சிந்தை கலங்கியவனென
சொன்னாலும்
புரியுமொரு
கணத்திற்கான
காத்திருப்பென
அறியும் பொழுது
வழியும்
கண்ணீர் துடைக்காமல்
வெகு தூரம் சென்றிருப்பேன்
வேறொரு
கைகள் தேடி
என்பதை மட்டும்
என்னால்
இப்பொழுது
சொல்ல முடியும்.
துடித்தெழும் துக்கம்.
தோட்டக்காரரின் மெனக்கெடலில்
வளமை கூடிய செடிகள்
யாவிலும்
பூக்கள் அசைந்தாடியது
பனிக் காற்றில் அழகாக.
எழ முடியாது
இழுத்து போர்த்தி
கதகதப்பில் சுகம் தேடும்
விடியும் வேளையில்.
வலிமை கூட்டி
முன்னங்கால்கள் தூக்கி
முகத்தை
உள் நுழைத்துவிட்ட
ஆட்டிற்கு
அடிக்கின்ற காற்று
ஏதுவானல்
பூக்களை தின்றுவிடுவதில்
தடைகளேதுமில்லை
தோட்டக்காரர்
வராத பொழுது.
கூப்பிடு தூரத்தைவிட
கொஞ்சம் கூடுதலென்றாலும்
சத்தமிட தோன்றவில்லை
சலசலப்பாகிவிடும் என்பதால்.
தளிர்த்து உயரமாக
வேலியோரம் பூத்திருக்கும்
இதன் மேல்
காலையில் என் கரிசனத்தின்
காரணம் அறியவில்லை
அசைந்தாடுவதில்
மனமாடுவதால்.
நீட்டிய நாக்கில்
பூவிதழ் பட்ட
ருசியில்
முழு பலத்தையும்
கூட்டி
வேலியில் நுழையும்பொழுது
கழுத்தைப் பிடித்து
இழுத்துவிட்டார்
கசாப்புக்கடைக்காரர்
கலவரம் கொள்ளுமாறு.
கடைசி ஆசையை
நிறைவேற்ற
காற்று கொஞ்சம்
கருணை காட்டி இருக்கலாம்.
காதர் அண்ணன்
காலதாமதமாகவாவது
வந்திருக்கலாம்.
காலை சோம்பலில்
சுகம் காணாமல்
கொஞ்சம்
நான்
கரிசனம் கொண்டிருக்கலாம்
மறுமை நாளின்
அச்சத்திலாவது
மனமிரங்கி.