என் தாய் நீ

author
0 minutes, 41 seconds Read
This entry is part 1 of 6 in the series 30 ஜூன் 2024

               ஆ.மீனாட்சி சுந்தரமூர்த்தி

                                                                .

                வேப்ப மரத்துக் குயில் கூவியது. அலாரமே தேவையில்லை. இதையாவது நிறுத்தி விட்டுத் தூக்கத்தைத் தொடரலாம் ஆனால் இந்த பொல்லாத பூங்குயிலை ஒன்றும் செய்ய முடியாது. சரியாக ஐந்து மணிக்கெல்லாம்  கச்சேரியை ஆரம்பித்துவிடும். யாராவது கேட்கிறார்களா, இரசிக்கிறார்களா என்றெல்லாம் பார்ப்பதில்லை.ஆளில்லாத டீக்கடையில் டீ ஆற்றுபவர் போல என்று சொல்லலாமா? ரஞ்சனிக்கு என்னவோ அது தன்னை எழுப்புவதற்கே நாள் தவறாமல் வருவதாக எண்ணம். எந்தபக்கமும் திரும்ப முடியாதபடி ஆளுக்கொரு காலைத் தூக்கிப் போட்டுக்கொண்டு ஆளுக்கொரு கையைப் பிடித்துக்கொண்டு உறங்கிக் கொண்டிருந்த குழந்தைகளை மெதுவாக விலக்கிப் படுக்க வைத்துவிட்டு எழுந்தாள். பெரியவளுக்கு ஆறு வயது, இளையவளுக்கு ஐந்து வயது.  இன்று மிலாடிநபி  விடுமுறைதான். ஆனாலும் இந்த நலம்விரும்பி எல்லா நாளும் ஒரு நாள் போல் இரு என்று தவறாது குரல் கொடுக்கிறது. குறட்டை விட்டுத் தூங்கும் கணவனுக்குப் போர்த்திவிட்டு ஹாலுக்கு வந்தாள். 

கீழே இறங்கி வந்தாள். மாமி இன்னும் எழவில்லை. கர்பப்பை எடுத்திருக்கிறது. குடலிறக்கத்திற்கு,  மூக்கில் ஒரு தொந்திரவு என்று  இரண்டு அறுவை சிகிச்சைகள், போதாது என்று அவ்வப்போது ஒற்றைத் தலைவலி  வேறு,. உடல் வலிமை என்பதை விடவும் மனவலிமை அதிகம் என்பதால் ஆறு மணிக்கு எழுந்து பம்பரமாகச் சுழலுபவள் மாமி.

இப்படி ஒரு புகுந்த வீடு கிடைக்க எத்தனை தவம் செய்தேனோ என்று நினைத்தாள்  சொந்தத் தாய்மாமன் மகனை மணந்திருந்தாள் ரஞ்சனி. மாமன் மாமி  வீட்டையும் ,குழந்தைகளையும் கண்ணாகப் பார்த்துக் கொள்கின்றனர்.  சொந்தமே என்றாலும் எத்தனை பேர் இப்படி இருக்கிறார்கள்?, 

. சரி இதுவும் நல்லதுதான், இன்று ஓய்வு தரலாம், வீட்டு வேலைக்கு சுந்தரி வருகிறாள். இருந்தாலும் மூன்று வேளையும் சமைத்து  குழந்தைகளைப்  பள்ளிக்கு அனுப்பத் தயார் செய்து, என்று எல்லா வேலைகளையும் பார்த்துக் கொள்கிறாள் மாமி. காவல் ஆய்வாளர் பணியிலிருக்கும் இவளது வேலை அப்படி எந்த நேரம் , என்னவேலை வருமெனத் தெரியாது.அதனால் இவளை எதிர்பார்க்க மாட்டாள். குழந்தைகளைக் காலையில் பள்ளியில் விட்டுச் செல்வான் இராகவன். மாலையில் ஆட்டோவில் சென்று அழைத்துக்கொண்டு வருவார் மாமா.

‘ரஞ்சனி இன்னக்கி ஏம்மா சீக்கிரம் எழுந்தே’

‘ தூக்கம் வரலை மாமி..  இருங்க காபி எடுத்திட்டு வரேன்.’

இருவருக்கும் காபி கோப்பைகளை நிரப்பிக் கொண்டு வந்தாள்.

.இன்னக்கி நான்தான் சமைக்கப் போறேன்.

உங்களுக்குப் பிடிச்சது, மாமாவுக்குப் பிடிச்சது.

டிரைவரை வரச் சொல்லிருக்கேன். ரெண்டு பேரும்  கோவிலுக்குப் போயிட்டு வாங்க.’

‘தனியா எப்படி ரஞ்சனி சமாளிப்ப?’

‘அம்மா நானிருக்கேன் காய்கறி நறுக்கித் தரேன்.’

அப்போ சரி , நானும் அம்மாவும் சாயந்திரம் பீச்சுக்குப் போறோம்.

நானும்.நானும்தான் குழந்தைகள் எழுந்து விட்டார்கள். குழந்தைகளுக்கு நூடுல்சும், மற்றவர்களுக்குப் பொங்கல், வடை , தேங்காய் சட்டினி செய்து பறிமாறினாள். கோவிலுக்குப் புறப்படும்போது,

‘ரஞ்சனி நேத்து சாயந்திரம் அபி பேசினா, காய்ச்சல்னு சொன்னா,

நான் சொல்ல மறந்திட்டேன்’ ‘ பரவாயில்ல மாமி. , நான் பேசறேன்’

‘ அபி எப்படி இருக்கே? ‘

‘நல்லாதான் இருக்கேன், நீ இந்த வாரம் ரெண்டு நாள் லீவு போட்டுட்டு வரியா ரஞ்சனி.’

‘ ஏம்மா என்ன ஆச்சு ? போன மாசம்தானே வந்தோம்’

‘எனக்கு உன்னை விட்டா யாரிருக்கா’ குரல் உடைந்து போனது.

‘என்ன பிரச்சனை? தீபக் சண்டை போட்டானா?’

நெறைய குடிக்கிறான், எப்பவும் நிதானத்தில்  இருக்கறதில்ல,

வேலைக்குப் போறானா,இல்லையா?

‘இல்லை’ ‘சரி இந்த வாரம் நானும், இராகவனும் வரோம் தைரியமா இரு,’

அன்று முழுவதும் அபியின் நினைவாகவே இருந்தது.

ரஞ்சனியின் அப்பாவின் தங்கை மீரா கல்லூரியில் படிக்கும்போதே ஒரு பையனைக் காதலித்தாள். இருவரும்  வெவ்வேறு இனம் என்பதால்  பெற்றோரின் எதிர்ப்பு அதிகமாக இருந்தது. அதனால் இருவரும் கோவிலில் மாலை மாற்றிக் கொண்டு நண்பர்கள் உதவியோடு பெங்களூர் சென்று விட்டனர். அங்கே அந்தப் பையன் வேலை தேடிக் கொண்டான். ஆறு மாதம்தான் ஆனது.ஒருநாள் வீட்டு வாசலில் வந்து நின்றாள் மீரா. மூன்று மாதமாக அவன் வீட்டிற்கு வரவில்லை என்று சொல்லி மன்னிப்பு  கேட்டு அழுதாள்.  அபி வயிற்றில் இருந்தாள். ரஞ்சனியின் அப்பா தங்கையை ஏற்றுக் கொண்டார். அவனைத் தேடிய போது விவரம் தெரிந்தது, அவன் பெற்றோர் சொன்னபடி வேறு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டிருந்தான் அரசியல் பின்புலம் இருப்பதனால் அவர்கள்  50000 ரூபாய் தருகிறோம் என்றனர். 

நம்பிக்கை துரோகத்தில் மனம் உடைந்து போனாள் மீரா எத்தனையோ முயற்சிகள் எடுத்தும் மீரா தேறவில்லை, ..அபியைப் பெற்றெடுத்த ஆறாம் நாள் ஜன்னி கண்டு இறந்து போனாள். ஒரே ஊரில் இருந்தும் வரவில்லை அவன். தன் குழந்தையைக் கூட வந்து ஒரு முறை பார்க்கவில்லை. ரஞ்சனியின் பாட்டியும் அம்மாவும் கைக் குழந்தையை வளர்த்தெடுத்தனர்.  

   ரஞ்சனிக்கு மூன்றரை வயதாகிப் பள்ளியில் அடியெடுத்து வைத்தபோது ஒரு விபத்தில் ரஞ்சனியின் அப்பா இறந்து போகிறார்.  ஏற்கெனவே மாமியாருக்கும் மருமகளுக்கும் சுமுகமான உறவில்லை, அதனால் ரஞ்சனியின் அம்மா மகனையும், மகளையும்  அழைத்துக் கொண்டு தன் அம்மா வீட்டிற்குச் செல்ல முடிவெடுத்தாள்.  பாட்டி இவளை அனுப்ப மறுத்து விட்டாள். மகன் நினைவாக இவள் தன்னோடு  இருக்க வேண்டுமென்றாள். அண்ணன் ஹரி அம்மாவோடு சென்றுவிட இவளும் அபியும் ஒன்றாக வளர்கின்றனர். ரஞ்சனி பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும்போது பாட்டி இறந்து போகிறாள். அதற்கு வந்தபோது அம்மா,

‘ரஞ்சனி எங்களோடு வந்திடும்மா, ‘

‘பாப்பா வந்துடு ‘

‘இல்ல ஹரி , தாத்தாவும் , அபியும் ரொம்ப வருத்தப்படுவாங்க,

அவங்கள நான்தான் பார்த்துக்கணும், நீ அம்மாவப் பார்த்துக்கடா’

கண்கலங்கிச் சென்றாள் அம்மா.

தாத்தா சமையல் செய்வார்,பெண்களைத் தாயைப்போல் வளர்த்தார். இவள் கல்லூரியில் சேர்ந்தாள், அபிக்குப் படிப்பு வரவில்லை, பன்னிரண்டாம் வகுப்பில்  தோல்வி, டுடோரியலில் சேரச்சொல்லியும் மறுத்து விட்டாள். டைப்ரைட்டிங் கற்றுக் கொண்டாள்.ரஞ்சனி கல்லூரி இரண்டாம் ஆண்டில் இருந்தபோது தாத்தாவும் போய்ச் சேர்ந்தார். இப்போது அம்மா இருவரையும் தன்னோடு அழைத்துக் கொள்ள நினைத்தாள். ரஞ்சனிக்கு அபியை எப்படி நடத்துவார்களோ என்ற அச்சம் இருந்தது. அதனால் மறுத்து விட்டாள். 

வீட்டிலிருந்து ரஞ்சனியை அபி கவனித்துக் கொண்டாள். தாத்தாவின் ஓய்வூதியம், கருணை அடிப்படையில் காவல்துறைத் தலைமை அலுவலகத்தில் எழுத்தராகப் பணிபுரிந்து வந்த அம்மா மாதந்தோறும் தரும் பணம் இவை உதவியது. படிப்பை முடித்து இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் ரஞ்சனி காவல்துறை ஆய்வாளராகத் தேர்வானாள். இவளுக்கு அம்மா மணம் செய்ய முயன்றபோது உறுதியாகச் சொல்லி விட்டாள். அபிக்கு திருமணம் செய்த பின்தான் தனக்குத் திருமணம் என்று.

‘ பாப்பா நான் அபிய கல்யாணம் பண்ணிக்கறனே’

‘இல்ல ஹரி அவளுக்கு உன்ன புடிக்கலையாம்’ 

   கடைசியில் பாட்டியின் தூரத்துச் சொந்தக்காரன் தீபக்கை ஒரு விழாவில் பார்த்துப் பிடித்து விட்டது அபிக்கு. அவனுக்கும்தான். ஆனால் அவனை ரஞ்சனிக்குப் பிடிக்கவில்லை, ‘அரைகுறையாகப் படித்தவன், நிலையான வேலை இல்லாதவன். வேண்டாம் அபி’ சொல்லிப் பார்த்தாள் .

‘அவனப் பத்தி விசாரிச்சுப் பாத்துட்டேன் அபி, நல்ல பழக்கம் ஒண்ணுகூட இல்ல.’

‘உனக்கு அவனைப் பிடிக்கலைணுதானே இப்படி சொல்றே ரஞ்சனி’

இவளுக்கு எப்படிப் புரிய வைப்பது,

‘ அபி நானே சொல்றேன் ஹரியைக் கல்யாணம் பண்ணிக்கோ, உன்னைக் கண்ணுல வச்சிப் பாத்துப்பான்’

‘ ஓ நீ அதுக்குதான் தீபக் மேல கொறை சொல்றியா?’

அபி உறுதியாக இருந்தாள். 

தீபக் தனக்கு மெக்கானிக் கடை ஒன்று வைத்துத் தரவேண்டும் என்றான் அவன் வீட்டில் முப்பது சவரன் கேட்டனர்.

ரஞ்சனி அம்மாவிடம் சொல்லி ஏற்பாடு செய்து வீட்டை நாற்பது இலட்சத்திற்கு விற்றாள், அபிக்கு விமரிசையாக மணம் செய்து வைத்தாள்.

ஆறு மாதங்கள் ஒழுங்காக இருந்தான், அதற்குப் பிறகு மனம் போனபடிதான், கடையை ஒழுங்காக நேரத்திற்குத் திறப்பதில்லை, உதவிக்கு இருந்த பையனைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு நண்பர்களோடு சென்று விடுவான். இது போதாதா? கடை வாடகை வேறு தராமல் சேர்ந்திருந்தது. ஒருநாள்,

‘ தீபக் நீ செய்யறது உனக்கே நல்லா இருக்கா?  கடைய சரியா கவனிக்கமாட்டியா?’

‘ அட நீ எனக்குப் புத்தி சொல்றியா,என்னோட இஷ்டம் நீ கேக்கக் கூடாது’

‘ஏன் கேட்டா என்ன?, வேற யார் கேப்பா?’

பளாரென கன்னம் வீங்கியது, சுருண்டு விழுந்தாள்.

ரஞ்சனியிடம் சொல்லி அழுதாள், ‘ நீ சொன்னத கேக்காம இருந்ததற்கு நல்ல தண்டனை கெடைச்சுடுச்சி’

‘சரி அபி, நடந்ததை விடு, எல்லாம் சரியாகும்’

ஏழு ஆண்டுகள் ஓடிவிட்டது.   தீபக் கடையை விற்றுச் செலவு செய்து விட்டான். அடிக்கடி தகறாறு. இராகவன் சொல்லிப் பார்த்தும் பலனில்லை,

இரண்டு பிள்ளைகளின் படிப்புச் செலவை, குடும்பத் தேவையை ரஞ்சனிதான் செய்கிறாள். அம்மா சலித்துக் கொள்வாள். 

‘இதெல்லாம் ரொம்ப அதிகன்டி , எத்தன நாளக்கி இப்படியே செய்வே’

நினைவு கலைந்தது. 

இதற்கு ஒரு தீர்வு கண்டே ஆக வேண்டும் என்ற முடிவுக்கு வந்தாள்.

இரண்டு நாள் விடுப்பு எடுத்துக்கொண்டு குழந்தைகளை விட்டுவிட்டுத் திண்டுக்கல் வந்திருந்தனர் இராகவனும்,ரஞ்சனியும்.

அபியும், குழந்தைகளும்  துவண்டு போயிருந்தனர்.

மூவரையும் மருத்துவரிடம் காட்டி  மருந்துகள் வாங்கிக்கொண்டு வந்தனர்.

இரண்டு நாட்களாக வராதிருந்த தீபக் வந்தான்.

‘ தீபக் உட்காரு, உனக்கு என்ன பிரச்சனை?’

‘ஒண்ணும் பேசாம இருந்தா என்ன அர்த்தம்?’

நீ கேட்டேனு உனக்கு வீடு கட்டித் தந்தேனா?

‘ஆமாம் எல்லாருந்தான் செய்வாங்க’

‘டேய் இங்க பாரு, சோம்பேறியா சுத்திக்கிட்டிருக்கற உனக்கு இத்தனை நாள் செய்ததே அதிகம்’

‘அபி நீ சொல்லு, இவனோட வாழணுமா இன்னும் நீ’

‘ இல்ல ரஞ்சனி எங்கள அழைச்சிட்டுப் போயிடு, அதுக்குதான் உன்ன வரவழைச்சேன்.’

‘ரஞ்சனி ஒரு மெக்கானிக் கடை வச்சு கொடு  சரியா இருக்கேன்’

‘இனி எதுவும் செய்ய முடியாது,  உம்மேல இவள கொடுமை பண்ணதுக்காக புகார் தந்து உள்ளே தள்ளப்போறேன்.’

அடுத்த பத்தாவது நிமிடம் அபி, குழந்தைகளோடு புறப்பட்டனர் இராகவனும் ரஞ்சனியும்.

மூன்று மாதங்களுக்குப் பிறகு ஒரு நாள் திருந்திய புது மனிதனாக ஒரு கம்பெனியில் எலெக்ட்ரீஷியனாக வேலையில் சேர்ந்திருந்த தீபக் மனைவியையும், குழந்தைகளையும் அழைக்க வந்தான்.

எனக்குத் தாயில்லை என்று  ஊர் சொல்லவதென்ன?

‘என்தாய் நீ’ என்று விழி நீரோட  ரஞ்சனியைக் கட்டிக் கொண்டாள் அபி. படுக்கையிலிருந்த பாட்டியிடம் தாயாக இருந்து அபியைப் பார்த்துக் கொள்வேன் என்று சொன்னது நிழலாடியது ரஞ்சனிக்கு.

Series Navigationமோகமுள்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *