புறப்பட்டது முழுநிலா

புறப்பட்டது முழுநிலா
This entry is part 3 of 3 in the series 4 ஆகஸ்ட் 2024

மீனாட்சி சுந்தரமூர்த்தி

                        

     

  மழைமேகம் இருண்டு திரண்டு கொண்டிருந்தது.குண்டூசி இலேசாகப் பட்டால் போதும் படாரென வெடிக்கும் பலூன்போல சடசடவெனக் கொட்டக் காத்துக் கொண்டிருந்தது. வினாயகம். மழை வருவதற்குள் வீடு சேர  அலுவலகத்திலிருந்து புறப்பட்டிருந்தார். பள்ளி, கல்லூரி, அலுவலகம் சென்று எல்லோரும் திரும்பும் நேரமென்பதால்  போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது. தனியார்  வங்கி ஒன்றில் கிளை மேலாளராகப் பணிபுரிகிறார்.ஆறு மாதத்தில் ஓய்வு பெறப் போகிறார்.  சிக்னலில் நிற்கும்போது அலைபேசி சிணுங்கியது. வண்டி ஓட்டும்போது  பேசும் வழக்கம் இல்லை இவருக்கு.   கடைவீதி வந்தபோது மறுபடியும் அலைபேசியின் சிணுங்கல், மகன் பிரபுதான் அழைக்கிறான் என்று தெரியும்.

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வாயிலில்  பிள்ளைகள் சாரிசாரியாக வந்துகொண்டிருந்தனர். நினைவு பின்னோக்கி ஓடியது .பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது  ஒரு நாள் இரவு வயலுக்கு நீர் பாய்ச்சச்  சென்ற இவருடைய தந்தையாரைக்  கட்டுவிரியன் தீண்டிவிட்டது. நாட்டு வைத்தியராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை, நகரத்து மருத்துவ மனையாலும்  காப்பாற்ற இயலவில்லை. அம்மா கனகம் நிலத்தை குத்தகைக்கு விட்டு பிள்ளைகளைப் படிக்க வைத்தாள். கல்லூரியில் சேர்ந்து இளங்கலை படித்து முடித்து வேலைக்கு அலைந்து திரிந்திருக்கிறார். எளிதாக வேலை கிடைத்துவிடவில்லை.பெட்ரோல் பங்க்கில் வேலை பார்த்தார். தூரத்து உறவினர் ஒருவரின் வழிகாட்டுதலில்  தேர்வு எழுதி இந்த வங்கியில் எழுத்தராகச் சேர்ந்தார்.  அதன்பின் படிட்படியாக உயர்ந்திருக்கிறார். இரண்டு தங்கைகளையும், ஒரு தம்பியையும்  கரையேற்றும் பொறுப்புஇருந்ததால்   திருமணத்தைப் பற்றி நினைக்கவே இல்லை . ஆனால் கனகம் விடவில்லை. தூரத்து உறவுப் பெண்ணான  மேகலாவைத் திருமணம் செய்து வைத்தாள். தம்பி தங்கைகளுக்குத் திருமணம் முடியும்வரை  கிராமத்திலிருந்துதான் பணிக்கு வருவார். வங்கியில் வேலைக்குச் சேர்ந்த  புதிதில் பேங்க் காலனியில்  மனைகள் போட்டு விற்றார்கள்,அப்போது  மூன்று மனைகள் வாங்கிப் போட்டிருந்தார். அம்மாவிற்குப் பிடித்தமாதிரி சுற்றிலும் மா, வாழை, தென்னை ,பூச்செடிகள் என வைத்து சொந்தபந்தங்கள் வந்து தங்குவதற்கு வசதியாக இரண்டு தளம் அமைத்து வீடு கட்டினார்.

இருபத்தைந்து ஆண்டுகள் ஓடிவிட்டது வங்கிக் காலனியில் குடியேறி. மகன் பிரபுவையும், மகள் நீலாவையும் அம்மாதான் வளர்த்தாள். நீலா  தேர்வு எழுதி நேரடியாக அரசு வங்கியில் மேலாளராகி விட்டாள். அவளுக்கு மணம் முடித்து மூன்று ஆண்டுகளாகிறது. செகந்திராபாதில் இருக்கிறாள். பிரபு ஐ.டி நிறுவனம் ஒன்றில் இருக்கிறான். முருகன் கோவிலருகில் வந்தபோது மழைத்தூறல் கற்கண்டு போல் விழ ஆரம்பித்துவிட்டது.சரசரவென இருசக்கரவாகனங்கள் சென்று கொண்டிருந்தன.  இவரும் தனது ஜாவாவில் வேகம் கூட்டினார். வீட்டிற்கு வந்து சேர்ந்தபோது தெப்பமாக நனைந்து விட்டிருந்தார்.

‘ என்னங்க வழியில எங்கேயாவது நிண்ணுட்டு மழை விட்டபிறகு வரக்கூடாதா?’

‘ சரி சரி மெதுவாப் பேசு , அம்மா சத்தம் போடப்போறாங்க’

‘இந்தாங்க தலையை நல்லா துவட்டிட்டு துணிய மாத்திட்டு வாங்க’

மேகலா காபிக் கோப்பைகளை எடுத்துக்கொண்டு வரவும் விநாயகம் வரவும் சரியாக இருந்தது. முன்னறைக்கு வந்தார்.

‘ வந்துட்டியாப்பா, நனைஞ்சுட்டியா?’

‘இல்லேம்மா, இப்ப எப்படி இருக்கு?’

‘ரெண்டு நாளா மேகலா கவனிச்சதுல காய்ச்சல் ஓடியே போச்சு’

‘அத்தே, இந்தாங்க காபியக் குடிங்க ‘

‘ கல்யாண வேலைக்கு ஒத்தாசைக்கு சின்னவனை மொதல்லயே வரச் சொல்லிடு’

‘சரீம்மா நீ கொஞ்சம் ஓய்வெடு’

குழப்பத்தோடு ஹாலுக்கு வந்தார்.

பிரபுவிற்கு இருபத்தெட்டு வயதாகிறது. எல்லோருக்கும் இளமதியைப் பிடித்துப்போனது . காஞ்சியில் நிச்சயதார்த்தம் சென்ற மாதம் கோலாகலமாக நடந்தேறியது. இன்னும் சரியாக ஐம்பது நாட்களே உள்ளன கல்யாணத்திற்கு.

‘ என்னங்க பிரபு பேசினானா?

‘ காலையில பேசினான்’

‘ என்னதான் முடிவு சொன்னீங்க?’

‘ என்ன சொல்லச் சொல்றே நீ?’

‘ ஏங்க நாம  அவன் சொல்றதைக் கேக்கலாமே’

‘ ஏண்டி நீ எல்லாந் தெரிஞ்ச மாதிரி பேசாதே’

‘ பையனோட மனச நாமதானே புரிஞ்சுக்கணும்’

‘ அவனும் தெரிஞ்சுக்கணும் , நாம நல்லதுதான் செய்வோம்னு’

‘ அம்மாகிட்ட சொன்னியா என்ன?’

‘அவங்களுக்கு எப்படியோ தெரிஞ்சிருக்கு, கேட்டாங்க சொன்னேன்’

‘ என்ன சொன்னாங்க?’

‘காலத்துக்கேத்தமாதிரி நடந்துக்கணும்னாங்க’

   பெற்றோருக்கு ஒரே மகள் இளமதி, பொறியியல் படித்திருக்கிறாள், கல்லூரியில் விரிவுரையாளராக இருக்கிறாள். வசதி நிறையவே உள்ளது. எல்லாம் பிடித்துதான் முடிவு செய்தார்கள், பத்து நாட்களுக்கு முன்னர் திடீரென இளமதியின் அப்பாவிற்கு நெஞ்சுவலி  வந்து இதயத்தில் அடைப்பு உள்ளதென்று அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இதுவரையில் அவர்களைப் பற்றி இளமதி கவலைப்படவில்லை. இப்போது அவர்களைத் தனியாக விட்டுவிட்டு வரமுடியாது என்று சொல்கிறாள். இப்போது இதுதான் பிரச்சனையே !.

பிரபு யோசித்துப் பார்த்ததில் அவள் சொல்வது சரியென்றே படுகிறது. இத்தனைப் பெரிய வீட்டில அவர்களும் வந்து இருக்கட்டுமே, இளமதிக்கு  வேலைக்குப் போகும் எண்ணமில்லை, அம்மாவுக்கு உதவியாக இருப்பாள் என்று நினைத்தான்.விநாயகத்திற்கு இதில் விருப்பமில்லை.

பெண்ணைப் புகுந்த வீட்டிற்கு அனுப்பி விட்டு கூடவே வருவது நியாயமில்லை, அவர்கள்  வேறு மாற்றுவழி பார்த்துக் கொள்ள வேண்டியதுதான் முறை என்கிறார். ஒரு வாரம் அலுவலக வேலையாக கனடா சென்றிருக்கிறான் பிரபு. விநாயகம் அன்று இரவு மகனிடம் பேசினார்,

‘பிரபு இளமதியிடம் இது சரிவராது என்று சொல்லிப்பார். கேட்காவிட்டால்  விட்டுவிடு நாம் வேறு பெண்ணைப் பார்க்கலாம்’

‘ அப்பா நீங்க மறுபடியும் அம்மாகிட்டயும் ,பாட்டிகிட்டயும் கேட்டுட்டு சொல்லுங்க, பாவம்பா’

‘ சரி சரி,  இதப்பத்திக் கவலைப்படாம வேலையைப் பாரு.’

என்று சொல்லி அலைபேசியை வைத்தார்.

மறுநாள் அதிகாலையில் சென்னைக்கு நண்பர் வருவரின் மகளின்  திருமணத்திற்குச் செல்லவேண்டும்.

‘ மேகலா வேலைக்காரம்மாவ சீக்கிரமா வரச் சொல்லிட்டியா?’

‘ சொல்லிடடேங்க, நாம வரவரைக்கும் இங்கேதான் இருப்பாங்க’

மறுநாள் மதியம்வரையில் திருமண வீட்டில் வெகுநாட்கள் கழித்துச் சந்தித்த நண்பர்களுடன் ஒரே கலகலப்பு. புறப்படும் வேளையில் ஒருவர்,

‘ ஏம்பா இங்கே தாம்பரத்துலதான் வீடு, வந்துட்டுப் போயேன்’

‘ இன்னொரு முறை வரேனே’ வெங்கு’

‘ இல்லேண்ணா, அப்படிதான் சொல்வீங்க, வாங்க ‘ என்றாள் நண்பரின் மனைவி.

அடுத்த இருபது நிமிடத்தில் வெங்கிட்டுவின் அடுக்குமாடிக் குடியிருப்பில்,

இரவிவர்மாவின் ஓவியம்போல் இரண்டு பெண்களை அறிமுகப்படுத்தினார்.  ஒரு மகள் நாட்டியமும். ஒருமகள் இசையும் பயின்றவளாம்.

‘ வணக்கம் மாமா,வணக்கம் மாமி’ என்று  காபிக் கோப்பைகளை ஏந்தியபடி மருமகள் வந்தாள்.

‘ நல்லா இருங்கம்மா’

‘ வாங்க சம்பந்தி, இவரு என்னோட நண்பர் விநாயகம்’

அறையிலிருந்து வந்து சோபாவில் அமர்ந்தனர்  மருமகளின் பெற்றோர்.

‘ சார் வணக்கம், உங்களை பற்றி நெறையச்  சொல்லுவார் வெங்கிட்டு’

அடுத்த அரைமணி நேரத்தில் எல்லோரிடமும் விடைபெற்று புறப்பட்டனர். வெளியில் வந்து  வெங்கிட்டுவிடம் பேசினார் விநாயகம்.

‘ இவங்க என் மகனின்  மாமனார், மாமியார். இவங்களுக்கு ரெண்டு  பொண்ணு, பெரியவ என்னோட மருமகள், சின்னவ நார்வேல இருக்கா’

திருவண்ணாமலை சொந்த ஊர். அவங்களை எதுக்குத் தனியா விடணும்னு இங்கேயே அழைச்சுகிட்டு வந்துட்டோம். பக்கத்து வீட்டையும் வாங்கி கொஞ்சம் மாற்றி வசதியாக்கிகிட்டோம். எல்லோருக்கும் தனித்தனி அறைகள் இருக்கு. சம்மந்தி அம்மாக்கு மூட்டுவலிக்கு அறுவை சிகிச்சை பண்ணியிருக்கு  அதிகமா வேலை செய்ய முடியாது. என் மனைவியும் மருமகளும் பார்த்துக்கறாங்க.

குறை ஒன்றும் இல்லை, நாங்க சந்தோஷமா இருக்கோம்’ என்று சொல்லி முடித்தார் வெங்கிட்டு.

‘சரிப்பா, அடுத்த மாசம் பையனுக்குக் கல்யாணம் வச்சிருக்கேன், பத்திரிகை அனுப்பறேன், எல்லாரையும் அழைச்சிகிட்டு குடும்பத்தோட வரணும்’ என்று சொல்லிவிட்டு ஏறினார் விநாயகம். கார் புறப்பட்டது, வானில் கார்மேகம் விலக்கி முழுநிலாவும் புறப்பட்டது.

Series Navigationதொட்டால்  பூ மலரும்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *