ரவி அல்லது.
சூழும் கருமேகம்
விரைந்தோட வைத்தது
யாவையும்
அதனதன்
காரணங்களுக்கு
அச்சம் மேலிட.
பொழிந்து விடும்
கன மழைக்கான
குளிர் காற்றை
வெளியிலிருப்பவர்கள்
ரசிப்பதாக இல்லை
குளிர்மை கூடியிருந்தாலும்.
வீழ்ந்து கிடக்கும்
விவசாயிகள்
சாலையோரம்
தானியங்களை
கூட்டுவதில்
மும்முரமாக இருந்தார்கள்
ரவறண்ட வாழ்க்கையில்
ஈரப்பதமற்று
கண்டு முதலாக்கிவிட.
இரை
எடுத்துச்சென்ற
ஏதோவொன்று
தவறவிட்ட
தட்டைக்கார மீனை
சேமிப்பாக்கிக் கொண்டிருந்தது
சிற்றெறும்புகள்
நிதானமாக.
பிய்தெடுத்த
சதைகளற்ற
முள் கூடு
வசீகர அழகு கூட்டியது
மழைக் கணத்தை
மறக்க வைத்து
வேடிக்கை பார்க்குமாறு.
யாவும்
எடுத்து
கடைசி எறும்பு
அதன்
வீடடையும் வரை
தாமதாக
பெய்த மழைக்கு
அறிவியல் காரணங்கள்
ஆயிரமிருக்கலாம்
அதன் பொருட்டாக.
இயல்பின் மழையில்
நனையும்
எனக்கு
பரிவெனும்
ஒற்றைக் காரணம்போதும்
இத்தருண மகிழ்விற்கு.
***
-ரவி அல்லது.