வெங்கடேசன் நாராயணஸ்வாமி
[ஶ்ரீம.பா.10.30.1]
ஶ்ரீ ஶுகர் கூறுகிறார்:
மாதவன் திடீரென மறைந்ததும்
கோபியர் கண்ணனைக் காணாமல்
களிற்றைத் தொலைத்த காதல் மடப்பிடிகள் போல்
தவியாய் தவித்து நின்றனரே!
[ஶ்ரீம.பா.10.30.2]
திருமகள்கேள்வனின் பீடுநடை,
காதல் ததும்புமின் முறுவல்,
சுழன்று வீசும் கடைக்கண்ணாடல்,
உள்ளங்கவர் உவகைமிகு சொல்லாடல் முதலிய
திருவிளையாடல்களால் தங்களையே பறிகொடுத்து,
மனதால் அவனையே வரித்து, அவனாகவே மாறி,
அவனது லீலைகளை அப்படியே நடித்தும்
ஆடியும் பாடியும் ஆனந்தித்தனர் கோபியரே!
[ஶ்ரீம.பா.10.30.3]
தமதன்பனாம் அச்சுதனின் நடையுடை பாவனை,
புன்னகை, பேச்சு, பார்வை
முதலியவற்றில் மூழ்கித் திளைத்த அக்கோபிகைகள்
கிருஷ்ணனாகவே மாறி கிருஷ்ண பைத்தியம் பிடித்து
‘நானே கண்ணன்’ ‘நானே முகுந்தன்’ என்றரற்றியவாறு
அண்ணலின் லீலைகள்தம்மை
அப்படியே பின்பற்றிச் செய்தனரே!
[ஶ்ரீம.பா.10.30.4]
ஒரே குழுவாய் ஒருவரோடு ஒருவரிணைந்து
ஒருவனாம் கண்ணனவன் திறமுரத்த குரலிலே பாடி,
ஒருகானகம் விட்டு மற்றோர் கானகமேகி,
உன்மத்தர்களாய் எங்குமவனை அலைந்தே தேடி,
உள்வெளியென வியோமமாய் வியாபித்து
ஒவ்வோர் பொருளிலும் ஒவ்வோரிடத்திலும் விளங்கும்
உம்பர்கோன் கோமானின் விவரம்தனை ஆங்கே
உள்ள மரங்களிடம் உசாவிக் கேட்டனரே!
[ஶ்ரீம.பா.10.30.5]
“அத்தியே! ஆலே! அரசே! தன்
காதற்பார்வையாலும் கபடச்சிரிப்பாலும்
எமதுள்ளம் கவர்ந்து சென்ற கள்வனாம்
நந்தகோபத் திருக்குமாரரைக் கண்டீரோ?”
[ஶ்ரீம.பா.10.30.6]
“அழவணமே! அஶோகமே! நாகமே! புன்னையே! சம்பகமே!
அழகிகளின் செருக்கைத் தன் மோஹனப் புன்னகையால்
அகற்றும் இளையபெருமாள் இவ்வழியாய் வந்தாரா?”
[ஶ்ரீம.பா.10.30.7]
“கோவிந்தன் கழலடிதனில் பேரன்புகொண்ட துளசீ! கல்யாணீ!
காமரங்கள் மொய்க்கும் வண்துழாய் மாலையணிந்த வாஸுதேவனைக் கண்டாயா?
அச்சுதனாமவர் நினதாருயிர் அன்பராயிற்றே!”
[ஶ்ரீம.பா.10.30.8]
“அன்பே மாலதிப் பூவே! மல்லிகையே! ஜாதிப் பூவே! பிச்சிப்பூவே!
அன்பாயுங்களை வருடிக் கொண்டே நீங்கள் களிப்புற
அம்மாதவன் இவ்வழியே சென்றிருப்பாரே!
கண்டீர்களோ அவரை?”
[ஶ்ரீம.பா.10.30.9]
“யமுனைக் கரையில் வாழும் ரஸாலமே! மா, முரள், பலா, வேங்கை, மலையகத்தி, நாவல், எருக்கு, வில்வம், மகிழம், கடம்பு மற்றும் பெருங்கடம்பு மரங்களே!
பிறர்க்கு உதவவே வாழும் நீங்கள்,
மனதைப் பறிகொடுத்து பிரிவால் வாடுமெமக்கு
மணிவண்ணன் சென்ற பாதையைக் கூறுமீன்!”
[ஶ்ரீம.பா.10.30.10]
“என்ன தவம் செய்தனை பூதேவியே?
ஶ்ரீ கேஶவனின் திருவடித் தீண்டலால்
நின்னுடல் உரோமங்களாம் மரம்-செடி-கொடிகள் புல்லரித்துப் புதுப் பொலிவுடன் விளங்குகின்றனவே! அஃது,
திருமாலின் திருவடித் தீண்டலாலா?
முன்பு, வாமனராய் இரண்டடியால் மூவுலகும் இருள்தீர
நடந்து, திருவிக்கிரமராய் உன்னை அளந்ததாலா? அல்லது,
பூவராகராய் உன்னைத் தழுவித் தாங்கினதாலா?”
[ஶ்ரீம.பா.10.30.11]
“தோழியே! கலைமானே! தனதன்புக் காதலியுடன்
இணைந்து சென்ற அச்சுதன் நின் விழிகளுக்கு
விருந்தாகிச் சென்றாரோ?
இங்கு நம் குலத்தலைவனாம்
மாதவன் மார்பில் தவழும் மாதவிமாலையின் மீதவர்
மான்விழியாளின் அணைப்பாலவளின் மார்பகக் குங்குமத்தின்
நறுமணம் கமழ்கின்றதே?”
[ஶ்ரீம.பா.10.30.12]
“தலை தாழ்த்தி வணங்கி நிற்கும் தருக்களே!
தன் காதலியின் தோளில் கைபோட்டு, மற்றோர் கரத்தில்
தாமரையேந்தி பலராமனின் தம்பி இவ்வழியே சென்றார் போலும்!
தன் கனிவுப் பார்வையாலே ஆமோதித்துச் சென்றாரோ
அன்புடன் நும் நமஸ்காரங்களை?
அவர் தரித்த வண்துழாய் மாலையை மொய்த்து
மதுவுண்ட மதங்கொண்ட மதியிழந்த காமரங்கள்
அம்மாயவனைத் தொடர்ந்து இவ்வழியே
சென்றனவா, இல்லையா?”
[ஶ்ரீம.பா.10.30.13]
“தோழீ! இவ்வல்லிகள் புல்லரித்தும் பூரித்தும் காண்பதேனோ?
தங்கள் மணாளர்களாம் தருக்கிளைகளின் தழுவல்களாலா? ஒருகால் கண்ணனிட்ட கைநகத் தீண்டலாலா?
கேட்டுத்தான் பார்ப்போமே!
என்ன பாக்கியம் செய்தனவோ இக்கொடிகள்?”
[ஶ்ரீம.பா.10.30.14]
இவ்விதம் பித்தாகிப் புலம்பி நிற்கும் கோபிகைகள்,
கானகமெங்கும் கண்ணனைத் தேடித்தேடிக் கலக்கமுற்று,
கண்ணனையே நினைந்து நெஞ்சமுருகி கிருஷ்ண பிரமை பிடித்து
கண்ணனாகவே மாறி, ஒவ்வொருவரும்
கண்ணன் புரிந்த திருவிளையாடல்கள் தம்மை
நடித்துக் காட்டினரே!
[ஶ்ரீம.பா.10.30.15]
பூதனையாய் ஒருத்தி மாற
குழவிக் கண்ணனாய் மற்றொருத்தி மாறி
முன்னவளின் முலை நஞ்சுண்டாள்.
குழவியைப் போல் நடித்தழுபவள்
கள்ளச் சகடன் போல் நடிப்பவளைக்
கலக்கழியக் காலோச்சினாளே!
[ஶ்ரீம.பா.10.30.16]
சூறாவளிக் காற்றஸுரனாய் நடித்த ஒருத்தி
தூக்கிச் சென்றாள் குழவிக் கண்ணனைப் போல்
குத்திட்டு அமர்ந்திருந்த கோபிகையை.
கால்களில் சலங்கை கொஞ்ச
முட்டியை மடக்கி முழங்காலிட்டு
இழுத்திழுத்து குழந்தைக் கண்ணனாய் தவழ்ந்து சென்றாள் மற்றொருத்தியுமே!
[ஶ்ரீம.பா.10.30.17]
கண்ணனாக ஒருத்தியும் பலராமனாக ஒருத்தியும் வேடமிட,
கோபர்களாய் ஆனோர் ஆநிரைகளாய் நடிப்போரை மேய்த்துச் சென்றனரே!
வத்ஸாஸுரனாய் மற்றும் பொல்லா புள்ளஸுரனாய் நடிக்கும் கோபியரை கோவிந்தன் வேடமிட்ட கோபியர் வதைப்பது போல்
நடித்தனரே!
[ஶ்ரீம.பா.10.30.18]
தூரத்தே செல்லும் ஆநிரைகளாய் நடிப்போரை
ஶ்ரீ கிருஷ்ணன் ஆனவள் கூவியழைத்து வேணுகானஞ்செய்து
கண்ணனின் திருவிளையாடல்கள் தம்மை நடித்துக் காட்ட,
கோபரகளாய் நடிப்போர் ‘நன்று, நன்று’ எனப் புகழ்ந்தனரே!
[ஶ்ரீம.பா.10.30.19]
ஒய்யாரமாய்த் தன் தோழியின் தோள் மீது
கைபோட்டுச் செல்பவள்,
தன்னைக் கண்ணனாகவே பாவித்துக் கூறினாள்:
“அடீ! திருக்கண்ணபிரான் யாமே,
பாருங்கள் எம் நடையழகை”.
[ஶ்ரீம.பா.10.30.20]
“பேய்க்காற்றையும் பெருமழையையும்
கண்டு அஞ்சாதீர்!
பாதுகாக்கப்படுவீரெம்மால்” எனக் கூறியவள்,
பாழியந்தோளால் வரையெடுத்த பரந்தாமனைப் போல்
ஒரு கரத்தால் தன் மேலாடைதனை உயரத்
தூக்கிப் பிடித்தனளே.
[ஶ்ரீம.பா.10.30.21]
அரசே! கண்ணனாக நடிப்பவள் காளியனாக நடிப்பவளின் தலைமீது
ஏறி நின்று தன் ஒரு காலால் ஊன்றியழுத்திக் கொண்டு,
“ஏ! துஷ்ட நாகமே! யமுனையைவிட்டு அப்பால் சென்றுவிடு!
தீயோர்களை அடக்கவே அவதரித்துள்ளோம் யாம், அறிவாயோ நீ?”
என்றுரைத்தனளே.
[ஶ்ரீம.பா.10.30.22]
“ஹே கோபர்காள்! ஆங்கே பாருமீன்! கொடுங்காட்டுத்தீ பற்றியெரிகிறதே!
கண்களை சட்டென மூடுமீன்!
காப்போம் எளிதில் உங்களை யாம்” என்றனள் ஒருத்தி.
[ஶ்ரீம.பா.10.30.23]
ஒண்மலர்ச் சரங்கொண்டு கல்லுரலில் கட்டினள்
ஒருத்தி மற்றொருத்தியை! ஆட்பட்டவளோ
அஞ்சினவள்போல் வஞ்சிதனழகிய விழிகள்தனைத்தன்
கெஞ்சும் மென்மலர்க் கரங்கொண்டு மூடினளே!
[ஶ்ரீம.பா.10.30.24]
ஆடினர் பாடினர் அழுதனர் தொழுதனர் நடித்தனர் மற்றும் கேட்டனர்
விருந்தாவனத்துக் கொடிகள் மற்றும் தருக்களிடம் அவ்விமலநாதன் விவரம் பற்றி.
அலைந்தனர் எட்டுத்திக்கும் அக்கொண்டல் வண்ணனைத் தேடித்தேடி.
கண்டனர் அக்கமலநாதன் திருவடிச்சுவடுகள் தன்னை
ஆங்கே அக்கானகத்தே ஓரிடத்தில்.
[ஶ்ரீம.பா.10.30.25]
“நிச்சயமாயிவை நந்தகோபத் திருக்குமாரர்
திருக்கண்ணபிரான் திருவடிச்சுவடுகளே!
கொடி, கமலம், வஜ்ராயுதம், துரட்டி, யவம் முதலிய
ரேகைகளிதில் உள்ளனவே!”
[ஶ்ரீம.பா.10.30.26]
அத்தெய்வீகத் திருவடித்தடங்களைத் தொடர்ந்து
கூர்ந்து கவனித்துச் சென்ற கோபியரனைவரும்,
ஓராருயிர்க் காதலியின் காலடிச் சுவட்டுடன்
அத்தெய்வீகச் சுவடுகள் முற்றிலும் கலந்திருப்பக் கண்டு கலக்கமுற்று பேசிக்கொண்டனரே பின்வருமாறு.
[ஶ்ரீம.பா.10.30.27]
“நந்தகுமாரருடன் கலந்து சென்றது எவளது காலடிச்சுவடுகள்?
அப்பாழியந்தோளில் பாவியவள் கைபோட்டு
இளமண நாகு தழுவி ஏறுடன் போந்தாற்போல்
போனாள் போலும்!”
[ஶ்ரீம.பா.10.30.28]
“நிச்சயமாய் நன்கு ஆராதித்துளாளிவள்
ஈஶனாம் நம் கறுமாணிக்கத்தை! ஆதலின்,
இவளை இரஹஸ்யமான தனித்த இடம்தேடி
கோவிந்தன் நம்மைவிடுத்து அழைத்துச் சென்றுளாரே!”
[ஶ்ரீம.பா.10.30.29]
“தோழிகாள்! கண்ணனின் கமலச்சீரடி பதிந்த
இப்புழுதி மண் மிகப்புனிதமே! புண்ணியமீவது!
அயனும் அமரேஶனும் அலைமகளும்
அவரவர் பிழையகல இப்பாததூளியை
தங்கள் தலையில் தரிப்பாரே!”
[ஶ்ரீம.பா.10.30.30]
“நம்மவளில் யாரோ ஒருத்தி
நம்மெல்லோர்க்கும் பொதுவான பரந்தாமனை
நம்மிடமிருந்து பிரித்து அழைத்துச் சென்று
தனிமையில் அவர்தம் திருக்கனிவாயமுதம் பருகுகிறாள்.
நமுளத்தில் கடும் வேதனையீவது
அவளது இக்காலடிச்சுவடுகளே!”
[ஶ்ரீம.பா.10.30.31]
“இதோ! இங்கே அவளது காலடிகளைக் காணோமே!
முட்கள் தைத்தவளின் மென்மலர்ப் பாதம்
நோகுமேயென்று தனதன்புக் காதலியை
அன்பான மாயவன்தன் தோளில் சுமந்து சென்றார் போலும்!”
[ஶ்ரீம.பா.10.30.32]
“மையலால் அத்தையலைத் தன் தோளில்
தூக்கிச் சுமந்து சென்றுளாரே!
ஆழமாகப் பதிந்துளன அவர்தம் திருவடிச்சுவடுகள்
அப்பாரத்தினால்! இல்லையா? இதோ பாருங்கள் தோழியரே!”
[ஶ்ரீம.பா.10.30.33]
“இங்கவளை இறக்கிவிட்டுள்ளார் பூப்பறித்துச் சூடுவதற்காக
அந்த மகாத்மா! தனதன்புக்குரியவளுக்காக
அவர் இங்கு பூப்பறித்திருக்கிறார்!
எழும்பிப் பறிக்க நேர்ந்ததால்
முழு பாதமும் நிலத்தில் பதியாது
முன்பாதங்கள் மட்டும் அழுந்தப் பதிந்துளதைப் பாருங்கள்!”
[ஶ்ரீம.பா.10.30.34]
“மாறனீஶனாம் மாதவன் தன் பிரிய மாதவிதனைத்
தான் பறித்த மலர்கள் கொண்டலங்கரித்து
தலைவாரிப் பின்னிப் பூச்சூட
உறுதியாய் அமர்ந்திருந்தது இங்குதானே!”
[ஶ்ரீம.பா.10.30.35]
“தன்னிலே தானாய் தனித்து இரமிக்கும்
ஆத்மாராமனாம் ஆனந்தக் கண்ணன்
அனைத்து உணர்ச்சிகளின் ஒருமித்த அகண்ட ஏக உணர்வுக் கருவூலன்!
அகத்தில் பேரின்பப் பொருண்மையாய் பரமான்மாவாய்
அமர்ந்த அவனையன்றி வேறாய் வெளியில் இல்லை இன்பம்.
எங்ஙனம் காமம் அடிமை கொள்ளுமவனை? எனினும்,
காதல் வயப்பட்டோனின் கீழ்நிலை இகழ்ச்சியும்,
காதலிதன் பிடிவாத ஊடலின் உயர்நிலை புகழ்ச்சியும் உலகிற்கு எடுத்துக் காட்டவே தனித்து இவளுடன்
இவ்வின்பத் திருவிளையாடல் புரிந்துளான்!”
[ஶ்ரீம.பா.10.30.36-37]
கண்ணன் சென்ற வழியெலாம் விழிவைத்து
தன் வஶமிழந்த கோபிகைகள் திக்குத் தெரியாத காட்டில்
இங்குமங்கும் தேடியலைந்து திரிந்தனரே!
கோவிந்தன் மற்ற கோபியரை விடுத்து எந்த கோபியைத்
தனித்தழைத்துச் சென்றாரோ, அவளும்
“தன்னிடம் ஆசைவைத்த மற்றனைவரையும் விடுத்து
எம்மையே எம் காந்தனதிகம் காதல் புரிந்தார், ஆதலின்
யானே சிறந்தவள் அவர்களைவிட” என எண்ணினாளே!
[ஶ்ரீம.பா.10.30.38]
கானகத்தின் வேறோர் இடத்தையடைந்த அவள்
செருக்குற்றுக் கேஶவனிடம்,
“ஓரடியும் நகர இயலாது எம்மால், நீர் எங்கு செல்ல விருப்பமோ,
அங்கு எம்மையும் தூக்கிச் செல்வீரே!” என்றாள்.
[ஶ்ரீம.பா.10.30.39]
“ஏறுக எம் தோளில்!” என்றுரைத்தான்
கண்ணன் தன் காதலியிடம்.
சட்டென மறைந்தான் அவள் ஏற எத்தனித்தபோதே!
வனிதையவள் வருந்திப் பரிதவித்தாளே!
[ஶ்ரீம.பா.10.30.40]
“ஹே, நாதா! அன்புக் காதலா! மா ரமணா! பாழியந்தோளா!
எங்கு உள்ளீர்? எங்கு உள்ளீர்?
அவல அடிமையாமெம்மை உமதருகில்
அழைத்துப்போங்கள் அன்பரே! வாருங்களெம் முன்னே!”
எனக் கதறினாளே!
[ஶ்ரீம.பா.10.30.41]
ஶ்ரீ ஶுகர் கூறுகிறார்:
பரமன் சென்ற பாதைதனைத்
தேடி அலைந்து திரிந்து வந்த மற்ற கோபிகைகள்,
தமது காதலன் பிரிவால் கலங்கி வருந்தும்
தோழியைக் கண்டனர் அருகிலேயே!
[ஶ்ரீம.பா.10.30.42]
மிஞ்சினால் கெஞ்சும் கெஞ்சினால் மிஞ்சும்
மாதவன் முன்பு காட்டிய அன்பையும்,
பின் தன் தவற்றால்
அடைந்த அவமானம்தனை
அவள் கூறக்கேட்ட ஏனைய கோபிகைகள்
பெரிதும் வியந்தனரே!
[ஶ்ரீம.பா.10.30.43]
வீசிப் படர்ந்த நிலவொளி விளிம்புவரை
கண்ணனைக் கானகத்துள் தேடிச் சென்ற கோபிகைகள்,
பின் இருள் சூழ்வதை உணர்ந்து
யமுனைக்கரை திரும்பினரே!
[ஶ்ரீம.பா.10.30.44]
நீலவண்ணனை மனத்தாலுருகி நினைந்து
பாலக்கண்ணனை போற்றிப் பேசியே மகிழ்ந்து
நந்தகுமாரனை நண்ணி நடித்தே நெகிழ்ந்து
உம்பர்கோமானை உயிரினும் உயர்வாய் உய்த்து
காந்தனின் கல்யாண குணங்கள் கூவியேத்தி
தன்னையும் வீட்டையும் மறந்து
பாடினரே! குரவைக் கூத்தாடினரே!
[ஶ்ரீம.பா.10.30.45]
காளிந்தியின் கரையை மீண்டும் கண்டடைந்து
கண்ணனின் நினைவிலே கடிதாழ்ந்து
வரதனின் வரவிலே விழிவைத்து ஒன்றுகூடி
வைகுந்தனை வாயாரப் பாடினரே!
குரவைக் கூத்தாடினரே!