கண்ணுசாமியும் காத்தவராயனும்

author
0 minutes, 26 seconds Read
This entry is part 2 of 7 in the series 22 செப்டம்பர் 2024

கங்காதரன் சுப்ரமணியம்

கண்ணுசாமி, குமார், சீனு, ராமானுஜம், முரளி இவர்கள் அனைவரும் பள்ளியில் ஆறாம் கிளாஸ்ஸிலிருந்து ஒன்றாகப் படித்தவர்கள். இதில் கண்ணுசாமி இன்று குடும்ப பிஸினஸை நடத்தி வருகிறார். மற்றவர்கள் தனியார் கம்பெனி, பேங்க்  என்று வெவ்வேறு உத்யோகத்தில் இருந்து ஓய்வு பெற்றவர்கள். அனைவரும் அறுபது வயதைக் கடந்தவர்கள்; பேரன், பேத்திகளை எடுத்து வாழ்கையில் தங்களுடைய கடமைகளை முடித்து விட்டவர்கள். இதில் கண்ணுசாமியைப் பற்றி சொல்லியே ஆகவேண்டும். கிளாஸில் கடைசி பெஞ்ச்சில் தான் உட்காருவார். தான் ஒருவரையும் தொந்தரவு செய்ய மாட்டேன், மற்றவர்களும் தன்னை தொந்தரவு செய்யக்கூடாது – ஆசிரியர்கள் உட்பட – என்ற கொள்கையில் தீவிரமாக இருந்தவர். ‘போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து’ என்ற வாக்கை சிறுவயதிலேயே உள்வாங்கிக் கொண்டு எந்த சப்ஜெக்ட்டிலும் அதிக மார்க் வாங்க வேண்டும் என்று பேராசைப்பட்டதில்லை. அடுத்த கிளாஸிற்குச் செல்ல எவ்வளவு மார்க் தேவையோ, அதை மட்டும் வாங்கிக் கொண்டு, எந்த கிளாஸிலும் தேங்காமல், ஒருவாறு பள்ளிப்படிப்பை முடித்து விட்டார். ஆனாலும்,  எல்லோரிடமும் சகஜமாக பழகும் தன்மை, எதற்கும் அசராத மனோதிடம், எதையுமே பாஸிட்டிவ்வாக எடுத்துக் கொள்ளும் மனப்பாங்கு, கடுமையான உழைப்பு போன்ற அவரது குணாதிசயங்கள் அவருக்கு வாழ்க்கையில் வெற்றியை தேடித் தந்தது. அவருடைய தந்தையின் மறைவுக்குப் பிறகு, குடும்ப பிஸினஸை ஏற்று நடத்தி பெரிதாக டெவலப் செய்து, இன்று கார், பங்களா  என்று சகல வசதிகளுடன் வாழ்ந்து வருகிறார். மற்ற நண்பர்கள், வாழ்க்கையில் முன்னேற, சப்ஜெக்ட் நாலெட்ஜ் மட்டும் போதாது, ஒரு Street smartness’ம் வேண்டும் என்பதை புரிந்து கொண்ட போது, அவர்களுடைய கெரியர் கிட்டத்தட்ட முடிவடைந்திருந்தது. அந்த குணாதிசயம் கண்ணுசாமியிடம் இயல்பாகவே நிறையவே இருந்தது.

பள்ளிப்படிப்பு முடித்து வெவ்வேறு திசைகளில் சென்றவர்கள், உத்தியோகத்திலிருநது ஓய்வு பெற்றவுடன் ‘வாட்ஸ்ஸப்’ தயவில் மீண்டும் தங்கள் நட்பினை புதுப்பித்துக் கொண்டார்கள். மாதத்திற்கு ஒரு முறையாவது கண்ணுசாமி உறுப்பினராய் இருந்த கிளப்பில் சந்தித்து பியர் அடித்து, டின்னர் சாப்பிட்டு நன்றாக பொழுது போக்கினார்கள். ஒரு நாள் கண்ணுசாமி ஊருக்கு ஒதுக்கு புறமாக இருந்த இடத்தை சொல்லி, “டேய் அங்கே ஒரு சர்தார்ஜி தாபா நல்லா இருக்குன்னு கேள்விப்பட்டேன். நாம அடுத்த தடவை ஒரு சேஞ்ச்சுக்கு அங்கே போலாமா?” என்று கேட்டார். நண்பர்கள் அனைவரும் ஆமோதித்தனர்.

அடுத்த முறை கண்ணுசாமி தனது காரில் எல்லோரையும் சர்தார்ஜி தாபாவிற்கு அழைத்துச் சென்றார். கயிற்றுக் கட்டில், அங்கங்கே டேபிள் என தாபா ரொம்ப அமர்க்களமாக இருந்தது. சர்தார்ஜி வேறு சரளமாக தமிழ் பேசினார். உணவோ சூப்பர். விலை கிளப்பைக் காட்டிலும் ரொம்ப சீப்பாக இருந்தது. மொத்தத்தில் அனைவருக்கும் மிகவும் பிடித்துப் போயிற்று. இனி மேல் ரெகுலராக வரவேண்டும் என தீர்மானித்தனர்.

அப்பொழுது சீனு ரோட்டிற்கு எதிரே இருந்த டெண்ட் கொட்டகையை காட்டி, “டேய், அங்க பாருங்கடா, டெண்ட் கொட்டாயில ‘ஜெகன்மோகினி’ படம் ஓடிட்டிருக்கு” என்றார். “இன்னுமா இந்த படத்த ஓட்டிகிட்டிருக்கானுக? காலேஜ் படிக்கும் போது பாத்தது” என்றார் முரளி. “ஜெயமாலினிக்காகவே இந்த படத்தை மூணு தடவை பார்த்தேன்” ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார் குமார். “நான் இன்னும் இந்த படத்தை பார்க்கவேயில்லேடா” என்று வருத்தப்பட்டார் ராமானுஜம். “வாழ்க்கையையே வேஸ்ட் பண்ணிட்டீயேம்மா” என்று அனுதாபப்பட்டார் சீனு. “சரி வாங்கடா, படத்துக்குப் போலாம். டைம் தான் இருக்கே ” என்றார் கண்ணுசாமி.

ரோட்டை கடந்து டெண்ட் கொட்டகையை அடைந்தனர். “படம் ஏழு மணிக்கு ஆரம்பிச்சுரும் சார்” என்று பணத்தை வாங்கி ஒவ்வொருவராக எண்ணி உள்ளே அனுப்பினார் ஓர் ஆள். முக்கால்வாசி தரை டிக்கெட்டாக இருந்தது. கடைசியில் நான்கைந்து வரிசை பெஞ்ச் போட்டிருந்தார்கள். ஓரே பீடி சிகரெட் வாடை. சில குடிமகன்கள் பாட்டில் ஊறுகாய் சகிதம் ஆஜராயிருந்தனர். சிலர் அக்கடா என்று காலை விரித்து படுத்திருந்தனர். படம் சரியாக ஏழு மணிக்கு ஆரம்பித்தது. திரையில் ஜெயமாலினி தோன்றியவுடன் ஏகப்பட்ட ஆரவாரம். இந்த தொகுதியில் தேர்தலில் நின்றிருந்தால் போட்டியின்றி ஜெயித்திருப்பாரோ என்னவோ. ஒரு அரை மணி ஆகியிருக்கும். திடீரென்று இந்த படம் நின்று, வேறொரு படம் ஓடத்தொடங்கியது. ‘பலான’ படம். கூட்டம் இதற்கென்றே எதிர்பார்த்திருந்தார்ப்போல ஏகப்பட்ட விசில், உற்சாகம், கைதட்டல். “என்னடா திடீர்னு இந்த படத்த போட்டானுங்க?” அலறினார் சீனு. ராமானுஜம் ஒன்றும் புரியாமல் “இதுவும் ‘ஜெகன்மோகினி’ல வருதாடா? என்று அப்பாவியாக கேட்டார். “என்னடா பழைய படத்துக்கு இவ்ளோ கூட்டம் வருதேன்னு எனக்கு அப்பவே சந்தேகம்” என்றார் முரளி.

இந்த பதட்டம் அடங்குவதற்குள், திடீரென்று போலீஸ் விசில் சத்தமும், தடதடவென்று பூட்ஸ் கால்கள் ஓடும் சத்தமும் கேட்டது. என்ன ஏது என்று புரிவதற்குள் கூட்டம் தலைதெறிக்க நாலா பக்கமும் சிதறி ஓடியது. அந்த அமளி துமளியில் இந்த நண்பர்கள் குழாம் பெஞ்ச்சிலிருந்து கீழே தள்ளப்பட்டு, மிதிபட்டு, நிலைதடுமாறி விழுந்தார்கள். ஓரே நிமிடத்தில் மொத்த கொட்டகையும் காலி, இவர்கள் ஐவரைத் தவிர. சுதாரித்து எழுந்து கொள்வதற்குள் போலீஸ்காரர்கள் இவர்களைப் பிடித்துக் கொண்டு “நடங்க ஸ்டேஷனுக்கு” என்றனர்.

“அங்கே போய் உக்காருங்க. ஹெட் கான்ஸ்டபிள் இப்ப வந்துருவாறு” என்று உட்கார வைத்தார் போலீஸ்காரர். அரை மணி நேரம் கழித்து வந்தார் ஹெட் கான்ஸ்டபிள். பந்தோபஸ்திற்காக இன்ஸ்பெக்டர் வெளியே சென்றிருந்ததால், இன்று இவர்தான் ஸ்டேஷனுக்கு இன்சார்ஜ். ‘காத்தவராயன்’ என்று பேட்ஜ் குத்தியிருந்தார். உள்ளே வந்தவர் பெஞ்ச்சில் உட்கார்ந்திருந்தவர்களைப் பார்த்ததும் ‘என்ன’ என்பது போல கான்ஸ்டபிளைப் பார்த்தார். “டெண்ட் கொட்டாய்க்கு வந்திருந்தாங்க” என்றார் அவர். இவர்களை ஏற இறங்க பார்த்தவர், “பாத்தா டீசெண்ட்டா, படிச்சவங்க மாதிரி தெரியுது. இந்த வயசில உங்களுக்கு இதெல்லாம் தேவையா?” என்றார்.

“சார் சத்தியமா சொல்றோம், எங்களுக்கு ஒண்ணுமே தெரியாது ” என்றார் சீனு.

“எப்புடி சார் எல்லாரும் இதே டயலாக்கை தப்பாம சொல்றீங்க புதுசா ஏதாவது சொல்லுங்க” என்றார்.

“சார் நாங்க “ஜெகன்மோகனி” படம் பார்க்கறதுக்காகத்தான் வந்தோம், இந்த பிட்டு படம் போடுவாங்கன்னு எங்களுக்கு தெரியாது” என்று கதறினார் முரளி.

“ஆமாம், விரல் சூப்பக்கூடத் தெரியாது பாருங்க. ஜெகன்மோகனி படம் பார்க்கறதுக்காக ஸிட்டிலேர்ந்து இவ்ளோ தூரம் வந்திருக்கீங்க. அதை நான் நம்பணும்” என்றார் காத்தவராயன்.

“நீங்க நம்பினாலும் நம்பாவிட்டாலும் இது தான் சார் நிஜம்” என்றார் குமார் பொறுமையிழந்தவராக.

“நீங்க எங்கள ஏன் சார் பிடிச்சுட்டு வந்திருக்கீங்க. அந்த டெண்ட் கொட்டாய்க்காரனேதானே  புடிச்சிருக்கணும்” என்றார் முரளி.

“அவன்தான் ஊர்லயே இல்லியே. ஆறு மாசமா தேடிட்டிருக்கோம். நீங்க கம்ப்ளெய்ண்ட் குடுத்தா, தூக்கி உள்ளே வெச்சிருவோம் ” என்றார் காத்தவராயன்.

“கம்ப்ளெய்ண்ட் குடுத்தா நாங்க போலாமா சார்” நம்பிக்கையுடன் கேட்டார் முரளி.

“அவ்ளோ சீக்கிரம் போக முடியாது. நீங்களும் தப்பு பண்ணியிருக்கீங்க. ப்ரைவேட்டா  என்ன வேணா பண்ணிக்குங்க. பப்ளிக்ல பிட்டு படம் காட்டறதோ, பாக்கறதோ குற்றம். ஃபார்மாலிட்டீஸ் எல்லாம் முடிச்சுட்டு தான் அனுப்ப முடியும்.”

“அதெல்லாம் முடியாது. நாங்க போகணும். வீட்ல தேடுவாங்க” என்றார் ராமானுஜம்.

“அப்ப உங்க அட்ரஸ் குடுங்க. ஆள அனுப்பி ஐயா பிஸியா இருக்காரு வர லேட்டாகும்னு சொல்லி அனுப்பறேன்” என்றார் காத்தவராயன்.

“ஆக்சுவலி திஸ் ஈஸ்  நாட் எ காக்நிஸபிள் அஃபென்ஸ் அண்டர் தி இண்டியன் பீனல் கோட். யூ கென்னாட் டீடெய்ன் அஸ்” என்று லாபாயின்ட் பேசினார் குமார்.

“சார், நீங்க என்ன லாயரா?” என்று கேட்டார் காத்தவராயன்.

“இல்ல சார், பேங்க்லேருந்து ரிடயர் ஆனேன் ” என்றார் குமார்.

“அப்ப அந்த பெஞ்ச்சுல போயி உக்காருங்க. கூப்டா மட்டும் வாங்க போதும்” என்றார்.

அப்போது டீக்கடைப்பையன் டீயை தூக்கிக் கொண்டு உள்ளே வர, “தம்பி விருந்தாளிங்க வந்திருக்காங்க. டீ குடு எல்லாருக்கும்” என்றார்.

அனைவரும் டீயைக் குடிக்கலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருக்குகையில், முரளி மெல்ல அவரை நெருங்கி “சார் இந்தாங்க, வெச்சிக்கங்க” என்று சொல்லி இரண்டு ஐநூறு ரூபாய் நோட்டுகளை மடித்து சீக்ரெட்டாக அவர் கையில் திணித்தார். அதைத் திறந்து பார்த்த காத்தவராயன், “என்ன சார் இது, நேர்மையான போலீஸ் ஆபீசர்ஸ் சார் நாங்க. எஙகளை பத்தி அவ்ளோ சீப்பா நினைச்சீட்டீங்களா. ஆயிரம் ரூபா குடுக்கராரு. உப்பு, புளியெல்லாம் என்னா வெல விக்குது தெரியுமா சார்?” என்றார். தொடர்ந்து, காத்தவராயன் டீக்கடைப் பையனைப் பார்த்து “டீ என்ன விலைப்பா?” என்றார். பையன் “15 ரூபா சார்” என்றான். “போன மாசம் 10 ரூபாதானேடா இருந்தது?” என்றார். “பால், சக்கரை, டீத்தூள் எல்லாம் வெல ஏறிப்போச்சு சார்” என்றான் பையன்.

“பாருங்க சார். எல்லாமே வெல ஏறிப்போசாம்ல? ஜனங்க எப்புடி சார் குடும்பம் நடத்துவாங்க?” என்றார்.

“டேய், இவரோட டார்ச்சர் தாங்கலடா. ஏதாவது பண்ணுடா” என்றார் ராமானுஜம் மெல்லிய குரலில். “என்ன சொல்றாரு சாரு?” என்று கேட்டார் காத்தவராயன்

“ஒண்ணும் இல்ல சார், சீக்கிரம் இங்கேந்து போகணும்னு சொல்றாரு” என்றார் அதுவரை நடப்பதை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்த கண்ணுசாமி.

“அவ்ளோ சீக்கிரமா விட்டுட முடியாது. நீஙக பண்ணியிருக்கறது என்ன சாதாரண அஃபென்ஸா?”  என்றவர் பின்னால் இருந்த கான்ஸ்டபிளைப் பார்த்து “பாண்டி, இது வரைக்கும் எவ்ளோ வந்திருக்கு” என்று கேட்டார் காத்தவராயன். பாண்டி, “பிட்டு படத்துக்கு ஒரு மூணு வருஷம், நேர்மையான போலீஸ் அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதுக்கு மூணு வருஷம், ஆகமொத்தம் கிட்டத்தட்ட ஆறு வருஷம் சார்” என்றார்.

“இது ரொம்ப அநியாயம் சார்” என்றார் முரளி அழாத குறையாக.

அந்த சமயம் குண்டாக ஒரு அம்மா சாப்பாட்டுக் கேரியரை தூக்கிக் கொண்டு உள்ளே வந்தார். காத்தவராயன் “என் சம்சாரம் சாப்பாடு கொண்டாந்துருக்காங்க. உங்களை மாதிரி எல்லாரையும் டீல் பண்ணி பண்ணி எனக்கு அல்சரே வந்துட்டுது. டயத்துக்கு சாப்புடணும்னு டாக்டர் சொல்லிட்டாரு. அதான் ஊட்டுக்காரம்மாவே ஸ்டேஷன்க்கு சாப்பாடு கொண்டாந்து, சாப்டவுடன் கேரியரை எடுத்துட்டுப் போயிருவாங்க. இருங்க கொஞ்சம். சாப்படுட்டு வந்துற்றேன்” என்று சொல்லிவிட்டுப் போனார். சம்சாரத்திடம் “டெண்ட் கொட்டாய்க்கு வந்திருந்தாங்க” என்று இவர்களுடைய பூர்வீகத்தை விவரித்தார்.

நண்பர்கள் எல்லாரும் “இவரோட ரவுசு தாங்கல. ஏதாவது செய்டா” என்றனர் கண்ணுசாமியிடம்.

சிறிது நேரம் கழித்து சாப்பிட்டுவிட்டு கையை டவலில் துடைத்தபடி வந்தார் காத்தவராயன். “எங்கே விட்டேன்” என்றார். “ஆறு வருஷத்திலே விட்டுருக்கீங்க” என்றார் பாண்டி.

“ஆங், ஆறு வருஷம். என்ன பண்ணலாம் சொல்லுங்க” என்றார்.

“சார், நாம ஒரு பேச்சு வார்த்த நடத்தி, ஒரு அண்டர்ஸ்டான்டிங்குக்கு வருவோம். என்ன பண்ணணும் சொல்லுங்க” என்றார் கண்ணுசாமி.

“நீங்க தான் சார் இந்த குரூப்லேய கொஞ்சம் நிதானமான ஆளா தெரியுது. சரி, ஒண்ணு பண்ணுவோம். இது முதல் அஃபென்ஸ் என்கிறதால மன்னிச்சு விட்டுடறோம். எங்களுக்கு ஒண்ணும் வேண்டாம். ஆனா, இந்த டீக்கடைப் பையனுக்கு ஏதாவது உதவி பண்ணுங்க. நமக்கு தெரிஞ்ச பையன்தான். பாவம் ரொம்ப கஷ்டப்படறான். உங்கள மாதிரி நாலு பெரிய மனுஷனுங்க கைகொடுத்து தூக்கி விட்டீங்கன்னா முன்னுக்கு வந்துருவான். கெட்டிக்காரப்பய. நாங்க ஒண்ணும் உங்கள கம்பல் பண்ணல்ல.”

“பண்ணிடலாம் சார். எவ்ளோ குடுக்கணும்” என்று கேட்டார் கண்ணுசாமி.

“ஒரு அஞ்சாயிரம் குடுத்துடுங்க” என்றார்.

கண்ணுசாமி ஐயாயிரம் ரூபாயை கொடுத்தார். பணத்தை எண்ணிப் பார்த்து “என்னா சார் இது, அஞ்சாயிரம் ரூபா தான் இருக்கு. நா சொன்னது தலக்கு அஞ்சாயிரம் ரூபா சார்” என்றார் காத்தவராயன். கண்ணுசாமி அதிர்ந்து போனார்.  “திஸ் ஈஸ் டூ மச். ரொம்ப அக்கிரமம். அநியாயம்” என்று கொதித்தெழுந்தார் முரளி.

“அப்போ நியாயமாவே நடந்துக்கறேன். நீங்க உள்ளாற போய் இருங்க. இன்னிக்கி வெள்ளிக்கிழமை. சனி, ஞாயிறு உள்ளே இருங்க. திங்கக்கிழமை திறந்து விட்டுடுறேன். அப்படியே போயிருங்க”, என்றவர் திரும்பிப் பார்த்து, “பாண்டி, உள்ளாற அந்த டீலக்ஸ் ரூம்ல யாரு இருக்காங்க?” என்று கேட்டார் காத்தவராயன். “மாரிமுத்துவும், கண்ணாயிரமும் இருக்காங்க சார்” என்றார் பாண்டி.

“பயங்கரமான கேடிங்க சார் அவங்க. போன வாரம் ஒரு காது தோடுக்காக ஒரு பொண்ணோட காதையே அறுத்துட்டாங்க. நீங்க உள்ளாற போனீங்கன்னா, உங்களோட எந்த உறுப்புக்கும் நாங்க க்யாரண்டி கிடையாது, ஆமா இப்பவே சொல்லிட்டேன்” என்று கிலியூட்டினார் காத்தவராயன்.

வேறு வழியின்றி “சரி சார் நீங்க சொன்ன அமொண்ட்டை குடுத்துடறோம்” என்றார். நண்பர்கள் அனைவரும் அவரவர்களிடம் இருநத பணத்தை போட்டு அவர் கேட்ட தொகையை திரட்டினார்கள்.  “சார் இந்த பணத்தை பையனிடமே குடுத்துடுங்க” என்ற காத்தவராயன் பையனைப் பார்த்து “தம்பி, சார் குடுக்கற பணத்தை வச்சி பிசினஸை நல்ல டெவலப் பண்ணணும். புரிஞ்சுதா?” என்றார். “புரிஞ்சுது சார்” என்றான் பையன்.

“சார் திரும்பவும் கேக்கறேன். நா ஒண்ணும் உங்கள கம்பல் பண்ணலயே? நீங்களா விருப்பப்பட்டு தானே குடுத்தீங்க?” என்று கன்பர்ம் செய்து கொண்டார் காத்தவராயன்.

“சேச்சே, நீங்க எங்க சார் எங்கள கம்பல் பண்ணீங்க. நாங்களா விருப்பப்பட்டு தான் டோனேஷனா குடுத்தோம். அதுவும் பையன் வேற துடிப்பா இருக்கானா, அப்படியே டீக்கடைய நல்லா டெவலப் பண்ணா, அம்பானி, அதானி ரேஞ்சுக்கு வந்துருவான்னு தோணுது” என்ற கண்ணுசாமி, “அப்ப நாங்க கிளம்பறோம் சார்” என்றார்.

“இன்னோரு டீ சாப்டு போங்க. நாம தான் ப்ரெண்ட்ஸ் ஆயிட்டோமே” என்றார் காத்தவராயன்.

“இல்ல சார் லேட்டாயிருச்சு. கிளம்பறோம்”

“சரி, கிளம்புங்க. இனிமே உங்க வயசுக்கு தக்கன நடந்துக்கங்க” என்று அக்கறையாக வழியனுப்பி வைத்தார்.

அதன் பிறகு, கிட்டத்தட்ட ஒரு மாதம் வரை நண்பர்களிடம் எந்த வித தொடர்பும் இல்லை. ராமானுஜம் அவருடைய செல்போனை ப்ளாக் செய்து விட்டாரோ என்னவோ, அவரை தொடர்பு கொள்ளவே முடியவில்லை. இவர்களுடைய சங்காத்தமே வேண்டாம் என்று விட்டு விட்டார் போல.

தீடீரென்று ஒரு நாள் கண்ணுசாமி மற்ற மூவருக்கும் போன் செய்து, “எங்கேடா எல்லாரும் காணாம போயிட்டீங்க. வாலை சுருட்டிக்கிட்டு உக்காந்துகிட்டீங்களா. வாங்கடா, வெளியே போயி சாப்டுட்டு வரலாம் – தாபா’ல இல்ல, உடுப்பி ஓட்டல்லதான்”   என்று சத்தமாக சிரித்தார். அவரவர்கள் ஆளுக்கு ஒரு சாக்கு போக்கு சொன்னார்கள் – கெஸ்ட்ஸ் வராங்க, பர்சனல் வொர்க், வொய்ப்வோட ஷாப்பிங் போகணும் என்று.  “டேய், உங்கள இன்னக்கி நேத்திக்கா பார்க்கறேன். எனக்கு தெரியாதா உங்கள பத்தி. என்னோட வெட்டிங் ஆனிவர்சரி அடுத்த வாரம் வருது. பொண்டாட்டிக்கு சர்ப்ரைஸா ஒரு மோதிரம் வாங்கலாம்னு இருக்கேன். மோதிரம் செலக்ட் பண்ணத்தான் உங்களை கூப்டேன்” என்றார். ஒரு வழியாக மூவரும் வர சம்மதித்தனர்.

முதலில் ஓட்டலில் போய் ஒரு வெட்டு வெட்டி விட்டு, பிறகு நகைக்கடைக்கு படை எடுத்தனர். நகைக்கடை ஓனர் கண்ணுசாமிக்கு ஏற்கெனவே தெரிந்தவர் போல. அவரை பார்த்தவுடன் புன்சிரிப்புடன் வரவேற்று, “எப்படி சார் இருக்கீங்க, வீட்ல சௌக்கியமா” என்று வரவேற்றார். “டேய் முத்து, சாரை கவனி” என்று பணித்தார். முத்து இவர்களை பார்த்து “வாங்க சார், என்ன பார்க்கறீங்க” என்று கேட்டு விட்டு, மோதிர செக்சனில் கொண்டு போய் சேர்ப்பித்தார். கெத்தாக நால்வரும் உட்கார்ந்து கொண்டு மோதிரங்களை பார்க்க ஆரம்பித்தனர். சிறிது நேரம் கழித்து, யதேச்சையாக திரும்பிப் பார்த்த கண்ணுசாமி, “டேய், அங்க பாருங்கடா” என்று செயின் செக்சனைப் பார்த்து கையை காட்டினார். அவர் காட்டிய திசையில் பார்த்தவர்கள் அரண்டு போனார்கள். அங்கே மப்டியில் காத்தவராயன், மனைவியுடன்.

“டேய் வாங்கடா. வேற கடைக்கு போலாம்” என்று வெளியே நடக்க ஆரம்பித்தார் குமார். “காசி ராமேஸ்வரம் போனாலும் சனீஸ்வரம் விடாது போல இருக்கே” என்று அலுத்துக் கொண்டார் சீனு. “அவரு கண்ல பட்டா, அவ்ளோதான். பேண்ட் ஜட்டிய உருவாம விடமாட்டாரு” என்றார் முரளி. “அடச்சே, சும்மா இருங்கடா. ஒண்ணை கவனிச்சீங்களா. கூட வந்திருக்கறது அன்னிக்கி பாத்த அவரோட பொஞ்ஜாதி இல்ல. அவங்க நல்லா புஷ்டியா இருந்தாங்க. இவங்க வேற” என்றார் கண்ணுசாமி. “சொந்தக்காரங்களா இருக்கலாமே” வக்காலத்து வாங்கினார் குமார். “சொந்தக்காரங்களா இருந்தா இப்புடியா ஒட்டிகினு இருப்பாங்க. இது வேற மேட்டரும்மா. உங்களுக்கு விவரம் பத்தாது கண்ணுங்களா. இதை நான் டீல் பண்ணிக்கிறேன். வாங்க, என்னன்னு விசாரிக்கலாம்” என்றார் கண்ணுசாமி.  “நா இந்த விளையாட்டுக்கு வரலே” ஜகா வாங்கினார் குமார். “டேய் எனக்கு முட்டிட்டு வருது” என்று பாத்ரூமை நோக்கி ஓடப் பார்த்தார் சீனு. “வீட்ட விட்டு கிளம்பும் போதே, பூனை குறுக்காலே போச்சு. அப்பவே ஏதோ ஏடாகூடமா நடக்கப்போறதுன்னு எனக்கு தெரியும்” என்று புலம்பினார் முரளி. “பூனையாவது யானையாவது, ஏன்டா இப்புடி எல்லாத்துக்கும் பயந்து சாவுறீஙக. சும்மா என் பின்னாடி வாங்கடா” என்றவாறு காத்தவராயனை நோக்கி நடந்தார் கண்ணுசாமி. அவருக்கு பின்னால் இரண்டடி தள்ளியே மற்றவர்கள் பின்தொடர்ந்தனர், ஏதாவது அசம்பாவிதமாக நடந்தால் நாலு கால் பாய்ச்சலில் வெளியே தப்பியோடத் தயாராக.

“என்னா சார், எப்புடி இருக்கீங்க?” நலம் விசாரித்தார் கண்ணுசாமி. திடுக்கிட்டு திரும்பிய காத்தவராயனின் முகம் ஒரு கணம் பதற்றமடைந்ததை கண்ணுசாமி கவனிக்கத் தவறவில்லை.

சுதாரித்துக் கொண்ட காத்தவராயன் “எங்க இந்த பக்கம்? பக்கத்துல ஏதாவது பிட்டு படம் போடறாங்களா?” என்றார் நக்கலாக.

“அதெல்லாம் ஒண்ணும் இல்ல சார், உங்கள யதேச்சையா இங்க பாத்தேனா, நீங்க வேற எங்களுக்கு க்ளோஸ் ஃப்ரெண்டா, அதான் உங்களுக்கு ஒரு ஹலோ சொல்லிட்டு போலாம்னு வந்தேன்” என்றார் கண்ணுசாமி.

“சொல்லிட்டீங்க இல்ல” என்றார் காத்தவராயன், இங்கிருந்து கிளம்பு என்னும் தொனியில்.

“ஆனா பாருங்க, எனக்கு ஒரு டவுட்டு சார். அன்னிக்கி ஸ்டேஷன்ல பாக்கசொல உங்க வூட்டுக்காரம்மா நல்லா தாட்டியா இருந்தாங்களா, இன்னிக்கி இங்க பாக்கசொல மேக்கப் போட்டுக்கிட்டு, ஸ்லிம்மா பிலிம் ஸ்டார் மாதிரி இருக்காங்களா, அதான் சார் ஒரே கன்ஃப்யூஷன். இன்னா சார் விஷியம்? ” என்றார் கண்ணுசாமி.

“டேய், எட்டி ஒரு உத விட்டேன்னா, எட்டடி அப்பால போய் விழுவே” சீறினார் காத்தவராயன்.

“கோவிச்சிக்காதீங்க சார். நாம தான் ப்ரெண்ட்ஸ் ஆயிட்டோம்ல. ப்ரெண்டுக்கு ப்ரெண்டு உதவி பண்ணலேன்னா எப்புடி சார். நீங்க உங்க அட்ரஸ் குடுத்தீங்கன்னா, நா போயி உங்க வூட்டுக்காரம்மா கிட்ட, ஐயா பிஸியா இருக்காரு, வர லேட் ஆவும்னு சொல்லிட்டு வந்துடறேன் ” என்றார் கண்ணுசாமி.

“வேணா, இங்கேந்து போயிரு. இல்லாட்டி நடக்கறதே வேற” கடுப்பானார் காத்தவராயன்.

“போயிருவேன் சார். ஆனா பாருங்க, நா இங்க மோதிரம் வாங்க வந்தேனா, மோதிரம் செலக்சன் பண்ணிட்டு பாத்தா, அஞ்சாயிரம் ரூபா கொறயிது சார். அப்ப உங்கள பாத்தேனா, அதான் சார்…..” என்று நமுட்டுச் சிரிப்புடன் உள்ளங்கையை சொறிந்து கொண்டு சொன்னார் கண்ணுசாமி.

காத்தவராயன் அவருடைய சட்டை உள் பாக்கெட்டில் கையை விட்டு ஐயாயிரம் ரூபாயை எடுத்து கண்ணுசாமி கையில் திணித்தார்.

கண்ணுசாமி அதை எண்ணிப் பார்த்துவிட்டு, “இன்னா சார் இது? அஞ்சாயிரம் ரூபா தான் இருக்குது. நா சொன்னது தலக்கு அஞ்சாயிரம் ரூபா சார்” என்று திரும்பிப் பார்த்து “ஒண்ணு, ரெண்டு, மூணு, நாலு, அஞ்சு” என்று இல்லாத தலையையும் சேர்த்து எண்ணி “மொத்தம் அஞ்சு தல சார் ” என்றார்.

சர்ரென்று பேண்ட் பாக்கெட்டில் கையை விட்டு மிச்ச பணத்தையும் எடுத்து கண்ணுசாமி கையில் திணித்தார். “இதுக்கு மேலே இங்கிருந்தேன்னா உன்ன கொன்னுறுவேன். ஓடிப் போயிரு” என்றார்.

“ரொம்ப தேங்க்ஸ் சார். எங்க ஏரியாவுல இருக்குற ஏழை பொண்ணுங்க கல்யாணத்துக்கு நாங்க தாலி செயின் செஞ்சு குடுத்து சோஷியல் சர்வீஸ் பண்ணிட்டுருக்கோமா, அப்பப்போ உங்கள மாதிரி பெரிய மனுஷனுங்க விருப்பப்பட்டு ஏதாவது டொனேஷன் குடுத்தா வாங்கிப்போம் சார். ஆமா சார்,  நீங்க விருப்பப்பட்டு தானே குடுத்தீங்க? நாங்க ஒண்ணும் உங்கள கம்பல் பண்ணல்ல தானே?” என்றார் கண்ணுசாமி அப்பாவியாக முகத்தை வைத்தக்கொண்டு.

“டேய், டேய். போலீஸ்காரன் கிட்டயே உங்க டகால்டி வேலய காமிக்கிறீங்களாடா. வேற ஏதாவது கேஸ்ல மறுபடி சிக்காமயா போயிருவீங்க. அப்ப இருக்குடா உங்களுக்கு” என்று உறுமினார் காத்தவராயன்.

                                                            *********************

Series Navigationஅறுவடைக்கு ஆட்படாத அய்யாவின் கண்டுமுதல்.தீராக் கடன்.
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *