ஜீவனோ சாந்தி

This entry is part 6 of 7 in the series 22 செப்டம்பர் 2024

ஜெயானந்தன்

மரத்தின் மடியில் 

படுத்துக்கிடந்தேன். 

முகத்தை மூடிய புத்தகம் 

கனவால் அலைந்த மனசு. 

சூரியனோடு 

இலைகள் கொண்ட ஸ்பரிச 

ஆலோபனைகளின் சங்கீதம் 

காது மடல்களில் பட்டு 

உலக மனிதர்களோடு 

உறவுக்கொள்ள அழைக்கின்றது.

விரைந்தோடும் மனிதக்கூட்டம் 

வணிகப் பாடல்களில் 

செத்து முடிகின்றது. 

நடந்து சென்ற 

தாகூர்தான் 

என்னை அணைக்க ஓடிவந்தார்.

அவர் உடல் முழுக்க கவிதை தோட்டம்.

உள்ளத்திலோ ரவீந்திர சங்கீதம்.

“நளந்தா அழிந்து விட்டதா”

எனக்கேட்டு அழுதார்.

சாந்தி நிகேதன் கதி என்னவோ 

எனக்கு தெரியாது. 

நான் உள்ளூர் மரக்காரன் 

குமரியும், வேங்கடமும் அறிந்தவன்.

தேடலில் என்னை தொலைத்தவன் 

தேம்பி அழும் குழந்தைக்கு 

அரசியல்வாதிகளின்

வீடுகளில் பிச்சை எடுப்பவன் 

சாதி பெயர்களை சொல்லி

பட்டதாரி ஆனவன். 

புத்தகச் சாலையை 

எட்டிப்பார்க்காதவன். 

வேலை தேடி அலையும் விபச்சார மூடன்.

இயற்கையை ரசிக்க 

கற்க மறந்தவன்.

இல்லை  ,

,”மறக்கடிக்கப்பட்டவன் “,

மணி அடித்தால் 

ஆடும் குரங்கு  .

வெள்ளை துரைமார்களின் 

கணனி அடிமை.

பாரதியும், வ.உ. சி யின் 

அழுகுரல் கேட்கின்றது.

என்ன செய்ய. 

தெரிய வில்லை.

    ஜெயானந்தன். 

Series Navigationகனடாவில் கவிஞர் ஆரணியின் நூல் வெளியீடுஆய்ச்சியர் குரவை – பாகம் இரண்டு
author

இரா. ஜெயானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *