மலைபடுகடாம் காட்டும் வாழ்வியல்

author
0 minutes, 48 seconds Read
This entry is part 4 of 7 in the series 22 செப்டம்பர் 2024

மீனாட்சி சுந்தரமூர்த்தி.

                    

பாட்டும் தொகையுமான  சங்க இலக்கியத்தில் பத்துப்பாட்டில் மலைபடுகடாம்  இரண்டாவது பெரிய நூல். 583 அடிகளால் ஆனது. பாட்டுடைத் தலைவன் நன்னன் வேண்மாள். பாடியவர் இரண்ய முட்டத்துப்  பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்.

திணை பாடாண் ,துறை ஆற்றுப்படை.. ஆசிரியப்பாவால் ஆனது .

தன் வறுமை தீர வள்ளல் ஒருவனை நாடிப் பாடிப் பரிசில் பெற்று வரும் கூத்தர் , தன் எதிர்ப்படும் இரவலனை அந்த வள்ளலிடம் செல்ல விடுப்பது ஆற்றுப்படை  என்பதாகும்.

அவ்வகையில். தன் வறுமை தீர நவிரமலைத் தலைவன் நன்னன் சேய் நன்னனை நாடிக் கூத்தன் ஒருவன் தன் கூட்டத்தினருடன் சென்று  பாடிப் பரிசில் பெற்றுத் திரும்புகிறான். அவ்வாறு திரும்பும் வழியில் விறலியர் முதலான கூட்டத்தினருடன் கூத்தன் ஒருவன் எதிர்ப்படுவது கண்டு நன்னனிடம் சென்று பரிசில் பெற்று உன் வறுமை தீர்த்துக்கொள் என்று சொல்லி செல்வதற்கான வழிமுறைகளை விரிவாக எடுத்துச் சொல்வதே இந்நூல் நுவலும் பொருள் ஆகும்.

‘திருமழை தலைஇய இருள்நிற விசும்பின்

விண்அதிர் இமிழிசை கடுப்பப் பண்ணமைத்துத்

திண்வார் விசித்த முழவோடு “ – 1-3 

என மழைக்காலத்தின் இடியோசைபோல் முழங்கும், முழவு முதலான பல இசைக்கருவிகளுடன்  என்று தொடங்குகிறது. இந்நூல்.

கடாம் என்பதை மதநீர் எனக் கொண்டால் யானைக்கு மதநீர் ஒழுகுதல் போல் மலையில் அருவிகள் வழிந்தோடுகின்றன என்றொரு பொருளும், கடாம் என்பதனை ஒசை எனக் கொண்டால் மலையில் எழுகின்ற பலவிதமான ஓசைகள் எனவும் பொருள்படும்படியாக இந்நூல், ‘மலைபடுகடாம்’ எனப் பெயர் பெறுவது சிறப்பு. அதோடு கூத்தரை ஆற்றுப்படுத்துவதால் ‘ கூத்தராற்றுப் படை’ எனவும் வழங்கப்படுகிறது

வாழ்வியல் சிந்தனைகள்.

1.உற்றார் உறவினர் மட்டுமல்லாது எல்லோரும் இனிது வாழ்தல் வேண்டும்  என்ற பொதுநலம் ஆற்றுப்படை நூல்களின் தனிச்சிறப்பு

‘மீமிசை நல்யாறு கடல்படர்ந்தாங்கு

யாம் அவணின்று வருதும் நீயிரும்’ 52-53.

எதிர்வரும் கூத்தனை ஆறு கடலில் சேர்வது போல் நாங்கள் நன்னனை அடைந்து பொருள் பெற்று வருகிறோம். நீயும் அவனிடம் செல் என்கிறான்.

2. இரவலர்  புரத்தல் கடனெனும்  வள்ளல்கள் இருந்தார்கள்

ஆற்றுப்படை நூல்கள் எழுந்ததே இதற்குச் சான்றாகிறது.

3, கொடுப்பவர் மனம் கொளும் அளவு அல்லாது பெறுபவர் மனம் கொள்ளும் அளவு கொடுத்தல்

 புலவோர்க்குச் சுரக்கும் அவன் ஈகை மாரியும்

      … … …. …. ….                                          புகழுநர்க்கு
அரசு முழுது கொடுப்பினும் அமரா நோக்கமொடு

தூதுளி பொழிந்த பொய்யா வானின்’72-75.

. நன்னன் இரவலர்க்கு தன் அரசையே தந்தாலும் போதாது என்று எண்ணுபவன்.

4.  கூத்தர், பொருநர், பாணர்  இவர்களால் பல இசைக்கருவிகள் இசைக்கப்பட்டு, பாட்டும் கூத்தும் வளர்ந்தது,

.திண்வார் விசித்த முழவு( மேளம் போன்றது) ஆகுளி,( உடுக்கை போன்றது).நுண் உருக்குற்ற விலங்கடர் பாண்டில்(  தாளம் போன்றது),கொம்பு, யாழ் முதலான பல இசைக்கருவிகள் இந்நூலில் சொல்லப்படுகின்றன.

5. கலைஞர்கள் மன்னர்களால் ஆதரிக்கப்பட்டாலும் வறுமையிலேயே இருந்தனர். இதற்கான காரணம் பெற்றுவரும் பொருளை தனக்கென வைத்துக் கொள்ளாத மனநிலை, இரக்கம் வறியவரிடமும் இருந்ததுதான்.

6. தெரிந்தவர், தெரியாதவர் என்று பாராது வழிப்போக்கர்களுக்கு உணவும் படுக்க இடமும் தந்த உயரிய விருந்தோம்பல் , இந்நூலில் விரிவாகக் காணக் கிடைக்கிறது.

‘தூவொடு மலிந்த காய கானவர் . . ..
செழும் பல் யாணர் சிறு குடி படினே
இரும் பேர் ஒக்கலொடு பதம் மிக பெறுகுவிர் ‘ 155– 157.

கானவர் சிறுகுடியில் தேனும் கிழங்கும்  பன்றி இறைச்சியும் தருவர்.யானைத்தந்தத்தில் உறி கட்டித் தோளில் சுமந்து வருவர் இவற்றை.

கானவர் குடிலில் இரவு தங்கி, ஆரியப் படுகர் வாழும் பாக்கம் சென்று

‘அலங்கு கழை நரலும் ஆரி படுகர்
சிலம்பு அடைந்து இருந்த பாக்கம் எய்தி.’ 161–162.

நன்னனைப் பார்க்க வந்தோம் என்றால், உங்கள் இல்லம்போல் நினைந்து இனிதிருப்பீர் என்றே ஆட்டுக்கறி [பரூஉக்குறை] போட்டு நெய் ஊற்றிச் சமைத்த தினையரிசிப் பொங்கல் சோறும் உண்ணத் தருவார்கள் என்கிறான் கூத்தன்.

7.மலை நாட்டில் வழிச்செல்வோர் பெறும் பொருள்கள்;

தேறல் தேனை மூங்கில் குழாய்களில் அடைத்து  வைத்து உண்டாக்குவது,

கடம்பு மான்,முள்ளம் பன்றியின் ஊன், நெருப்பில் வாட்டியது, மூங்கிலரிசி, மாங்காயிட்டுச் செய்த புளிக் குழம்பு, தினையரிசிச் சோறு.

‘குறமகள் ஆக்கிய வால் அவிழ் வல்சி

அகம் மலி உவகை ஆர்வமொடு அளைஇ

மகமுறை தடுப்ப மனைதொறும் பெறுகுவிர்’ 183—185.

 குறப்பெண்  தன் பிள்ளைகளுக்கு இன்னும் இன்னும் என்றிட்டு தருவது போல் தருவாள்.

இவர்கள் விருந்தோம்பலில்,

 ‘குருசில் முன்னிய

பரிசில் மறப்ப நீடலும் உரியிர்

அனையது அன்று அவன் மலை மிசை நாடே’ 186–188.

நன்னனைச் சென்று பார்க்கவேண்டும் என்பதே மறந்து போகும்.

8..வழி தெரியாதவர்களுக்கு வழி காட்டி உதவும் குணம்;

‘குறவரும் மருளும் குன்றத்து படினே’ -275.

‘காடு காத்து உறையும் கானவர் உளரே’ -279.அவர்கள்  அஞ்சாதீர்  என்பது போல் குரலெழுப்பி  வந்து,

‘உண்டற்கு இனிய பழனும் கண்டோர்

மலைதற்கு இனிய பூவும் காட்டி

ஊறு நிரம்பிய ஆறு அவர் முந்துற’-282-284

கனிகள் தந்து பசியாற்றி, சூடிக்கொள்ள மலர்கள் தந்து அச்சம் தரும் வழியில் தாம் முன்னே சென்று வழிகாட்டுவர்.

‘இம்மென் கடும்போடு இனியிர் ஆகுவிர் .’

 அதுமட்டுமன்றி தம் இல்லங்களில் இரவு தங்க வைத்திடுவர், அவர்களின் சுற்றத்தவர்க்கும் இனியவர் ஆவீர்.

9.முல்லை நிலத்தில் கோவலர்கள் குடியிருப்பில்,

‘பல்யாட்டு இனநிரை எல்லினிர் புகினே

பாலும் மிதவையும் பண்ணாது பெறுகுவிர்’416-417.

இன்று அருகிப்போன திண்ணைகள் வைத்து வீடுகள் கட்டிய பழக்கம் இந்த விருந்தோம்பலின் எச்சம்தான்.

10. வேளாண்மை: குறிஞ்சி,முல்லை, மருதம் இவற்றில் மழைவளம் குறையாததால், பல பொருட்கள் விளைந்தன:

வாலிதின் விரிந்த புன்கொடி முசுண்டை, கைப்படியில் அடங்காதெழும் திரண்டு வெடிக்கும் பதத்து காய்களைக் கொண்ட எட்செடிகள், யானைக் கன்றின் துதிக்கைபோல் பருத்து வளைந்து விளைந்த தினைக் கதிர்கள்.

தினை மெல்லியது ஆனால் நீர்வளம் மிகுதியால் இங்ஙனம் பருத்தது.

வரகு , அவரை ,முல்லை நிலத்தில், ஐவன வெண்ணெல், துவரை,,மருதத்தில் நெய்தல் பூக்கள், ,  கரும்பு, இஞ்சி( செய்யாப் பாவை வளர்ந்து கவின் முற்றி காயம் கொண்டன.) வள்ளிக் கிழங்கு, மலைவாழை( யானை முகத்துப் பாய்ந்த வேல் போல் துறுகல்லைச் சுற்றி ) உயவைக் கொடி, விளைந்த சோளக் கதிர்கள்

நூற்றுக் கணக்கில் பழுத்திருந்த பழங்கள் கொண்ட கூவைக் கொடி,

தீம்பழம் நிறை மா, ஆசினி எனும் பலா,

‘சுரம் செல் கோடியர் முழவின் தூங்கி

முரஞ்சு கொண்டு இறைஞ்சின அலங்கு சினை பலவே .’

தலையிலும்,தோளிலும் முழவு போன்ற இசைக்கருவிகளைச் சுமந்து செல்லும் கோடியர் போல் கனிகளைத் தாங்கின பலா மரங்கள்.

சிவந்த காந்தள் பூக்களை நிணத்துண்டுகளென நினைந்து எடுத்துச் சென்ற கழுகுகள்,  உண்ணாது வீசின அவை தணல் கங்குகளென பாறையில் கிடந்தன. . .

இவற்றால் நன்னனின் நாட்டில் வேளாண்மை செழிப்புற்றிருந்ததை அறியலாம்.

11. பகைவரும் வழிப்போக்கர்களுக்கு ஊறு செய்யாத மனிதாபிமானம்.

நன்னனின் பகைவர்கள் வாழும் பகுதியைக் கடக்க முற்பட்டாலும் அஞ்ச வேண்டுவதில்லை, ஏனெனில் வழிப்போக்கர்களுக்கு தீங்கு விளைவிக்காத பண்புடையோர் அவர்கள்.

12. குறிஞ்சித் தெய்வம் முருகன், மற்றும் சிவ வழிபாடு இருந்தது.

‘இறும்பூது கஞலிய இன்குரல் விறலியர்

நறுங்கார் அடுக்கத்துக் குறிஞ்சி பாடி

கைதொழூஉ பரவி பழிச்சினிர் கழிமின்.’358-360.

விறலியர் இன்குரலில் குறிஞ்சிப்பண்பாட, முருகனை வணங்கிச் செல்லுங்கள்

‘நீரகம் பனிக்கும் அஞ்சுவரு கடுந்திறல்

பேரிசை நவி ரமேஎயுறையும் காரி உண்டிக் கடவுள்’ 81-82.

நவிரமலையில் கோவில் கொண்ட சிவபெருமான்.

13.அணங்கு, மோகினி அச்சமிருந்தது.

‘வரையர மகளிர் இருக்கை காணினும்..

உயிர் செல வெம்பி பனித்தலும் உரியிர்’. 190-191.

அணங்குகள் உறையும் இடங்களில் செல்ல நேர்ந்தால் உயிர் கலங்கி, அஞ்சி நடுங்குவீர்’

14. தேவ மங்கையர் உலாவுவர் என்ற நம்பிக்கை இருந்தது.

 ‘அருவி நுகரும் வானர மகளிர்

வருவிசை தவிராது வாங்குபு

குடைதொறும்’ 293-295.

கொட்டும் அருவியின் வேகத்தைத் தாங்கி நீராடும் வானுலக மங்கையர்

அரம்பையர்.

15.வழுக்குப் பாறைகளில் ஊன்றி நடக்க எருவைக்கோல்  பயன்பட்டது.

‘விழுந்தோர் மாய்க்கும் குண்டு கயத்து அருகா’. 220.

‘எருவை மென்கோல் கொண்டனிர் கழிமின்’.224.

 விழுந்தவர்களை மாய்த்திடும் குளக்கரைகள் வழுக்கும் அதனால் எருவைக்கோல் பற்றி ஊன்றி நடந்திடுங்கள்.இந்தக்கோல் தரையில் ஊன்றும் பகுதியில்பருந்தின் கால் விரல்களைப்போல் நான்கு பிளவுகளைக்கொண்டிருக்கும்.

16. கைகாட்டிகள் போல ஊர்ப்பெயர் மரங்களில் எழுதி வைக்கும் வழக்கம் இருந்தது.

‘செல்லும் தேஎத்து பெயர் மருங்கு அறிமார்
கல் எறிந்து எழுதிய நல் அரை மராஅத்த .’  394-395.

17, போரில் வீரமரணம் அடைந்தவர்க்கு நடுகல் வைப்பது மரபாக இருந்தது..

‘நல் வழி கொடுத்த நாண் உடை மறவர்
செல்லா நல் இசை பெயரொடு நட்ட
கல் ஏசு கவலை எண்ணு மிக பலவே ‘ 387-389

18. தினைப்புனம் புகும் யானைகளை விரட்டக் கானவர் சங்கெடுத்து ஊதும் வழக்கமிருந்தது.

‘இலங்கு ஏந்து மருப்பின் இனம் பிரிஒருத்தல்

விலங்கல், மீமிசைப் பணவைக்கானவர்

புலம்புக்கு உண்ணும் புரிவளைப் பூசல்’  

(‘தன் இனத்தைப் பிரிந்த யானை தினைப்புனம் புக அதை விரட்டக் கானவர் ஊதும் சங்கொலி,

19. பல்வேறு நிலைகளில் பாடும் வழக்கமிருந்தது.

1. வருத்தம் தீர்ந்திட,

‘கொடுவரி பாய்ந்தெனக் கொழுநர் மார்பின்

நெடுவசி விழுப்புண் தணிமார் காப்பென

அறல் வாழ் கூந்தற் கொடிச்சியர் பாடல்.’ 301-304.

புலி தாக்கி மார்பில் புண்பட்ட கணவரின் வருத்தம் தீர, கொடிச்சியர் பாடும் பாடல் ஒலி.

2. களைப்புத் தெரியாமலிருக்க,

.’தினைக்குறு மகளிர் இசைபடு வள்ளையும்’ 342.

சோறு சமைக்க தினையை உரலில் இட்டு மகளிர் குற்றுகின்றனர்.களைப்பு தெரியாதிருக்க வள்ளைப் பாட்டுப் பாடுகின்றனர். அவர்கள் பாட்டுக்கு தினை குற்றும் ஓசை தாளமாகிறது.

20. குறவர்கள் மகிழ்ந்தாடும் குரவைக்கூத்து வழக்கிலிருந்தது.

‘திருந்து வேலண்ணற்கு விருந்துஇறை சான்ம் என,

நறவுநாள் செய்த குறவர், தம் பெண்டிரோடு

மான்தோல் சிறுபறை கறங்க்க் கல்லென

வான்தோய் மீமிசை அயரும் குரவை’.

அரசனுக்குத் தரவேண்டிய திரைக்காக சிறுகச்சிறுகச் சேர்த்த தேன் நிரம்பிய மகிழ்வில் தம் மகளிரொடு மான்தோலினாலான சிறுபறை முழக்கிக் குரவை  ஆடினர் குறவர்.

21.யானைப் பாகர்கள் யானை மொழி பேசினர்.

‘நெடுஞ் சுழிப்பட்ட கருங்கண் வேழத்து

உரவுச் சினம் தணித்துப் பெருவெளில் பிணிமார்

விரவு மொழி பயிற்றும் பாகர் ஓதை’. 325-327.

சினந்தோடி நீர்ச்சுழலில் சிக்கிய யானையை மீட்டுக் கட்டுத்தறியில் கட்டப பாகர்கள் யானை மொழியில் உரத்துப் பேசும் ஓசை.

22.. மகளிர் தினைப்புனம் காக்கும் வழக்கமிருந்தது.

‘ஒலிகழைத் தட்டை புடையுநர் புனந்தொறும்

கிளிகடி மகளிர் விளிப்படு பூசல்’. 328-329.

தினைப்புனம் சேரும் கிளிகளை விரட்ட கானவ மகளிர் மூங்கில் தட்டையை அடித்து, குரல் ஒலியும் எழுப்புதல்.

23. சிறுவர்கள் கன்றுகளோடு விளையாடினர்.

‘காந்தள் துடுப்பின் கமழ் மடல் ஓச்சி

வண்கோள் பலவின் சுளைவிளை தீம்பழம்

உண்டு படும் மிச்சில்காழ்பயன் கொண்மார்

கன்று கடாஅ வுறுக்கும் மகாஅர் ஓதை’.336- 339.

பலாச் சுளைகளை மிகுதியாகத் தின்றது போக  மீதமிருந்த சுளைகளைப் பரப்பி கொட்டைகளை எடுக்க கன்றுகளைப் பிணைத்து காந்தள் மடலால் அடித்து ஓட்டும் சிறுவர்களின் ஆரவாரம்.

24. கரும்பு ஆலைகள் இருந்தன.

‘மழைகண்டன்ன ஆலைதொறும் ஞெரேர் எனக்

கழைகண் உடைக்கும் கரும்பின் ஏத்தமும்’. 340-341.

மழைமேகமென விளங்கும் கரும்பாலைகளில், மூங்கிலென நெடிது வளர்ந்திட்ட கரும்புகளை உடைக்கும் ஓசை.

25. பறைகளை அடித்து விலங்குகளை விரட்டினர்.

1.‘சேம்பும் மஞ்சளும் ஓம்பினர் காப்போர்

பன்றிப் பறையும்“ 343-344.

தம் விளைநிலங்களில் விளைந்த சேம்பு, மஞ்சள் கிழங்குகளைஅகழ்ந்து  உண்ண வரும் பன்றிகளை விரட்ட  பறையடித்தனர்.

2..நெல்லறுக்கும் உழவர் தண்ணுமை முழக்கினர்.

‘வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇ’. 471.

நெல்லறுக்கும் உழவர்கள் தண்ணுமை  முரசை முழக்கினர்.

26.. கட்டடக்கலை பற்றிய செய்திகள்,

1.முதலைகள் உறையும் ஆழமான அகழி ,நெடிதுயர்ந்த மதிலைச் சூழ்ந்திருந்தது.

‘திரை பட குழிந்த கல் அகழ் கிடங்கின்
வரை புரை நிவப்பின் வான் தோய் இஞ்சி’. .91-92.சேயாற்றங்கரையில் இருந்த செங்கண்மா இவன் தலைநகராகும். இங்கு அரண்மனையைச் சுற்றிலும் அகழியும், உயர்ந்த மதிலும்  இருந்தது.

2. காடு மலை கடந்து மருத நிலமான ஊர்களில் மலைபோலுயர்ந்த மாடங்கள் வைத்துக் கட்டிய வீடுகளும் ,ஆறு போல் பரந்த, வீதிகளும் இருந்தன

‘ ‘வியலிடம் பெறாஅ விழுப்பெரு நியமத்து

யாறு எனக் கிடந்த தெருவின்’ 480-481.

27. புல்முடிந்து செல்தல் , இனி வருபவருக்கு வழி தெரிந்து கொள்ள உதவுதல்,

‘பண்டுநர்க்கு அறியா புலம்பெயர்ப் புதுவிற்

சந்து நீவிப் புல்முடிந்து இடுமின்’. 392-393.

28.பிறரை அவமதிக்காத தன்மை. நன்னனின் அவைக்களச் சான்றோர் புதிதாக வருபவரிடம் குறை காண மாட்டார், மாறாக அவரது நிறைகளையேப் பாராட்டும் இயல்பினர்.

‘நல்லோர் குழீஇய நா நவில் அவையத்து
வல்லார் ஆயினும் புறம் மறைத்து சென்றோரை
சொல்லிக்காட்டி சோர்வு இன்றி விளக்கி
நல்லிதின் இயக்கும் அவன் சுற்றத்து ஒழுக்கமும் ‘. .77-80.

29.. ஒருவருக்கொருவர் உதவியும், குற்றம் காணாது குணம் மட்டும் கண்டு வாழும் பண்புடைய மக்கள் நானிலங்களிலும் வாழ்ந்தனர்.

‘மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி ‘ என்பதுபோல் மன்னனே வழி காட்டுபவனாகிறான்.

‘இலம்என மலர்ந்த கையர் ஆகித்

தம்பெயர் தம்மொடு கொண்டனர்மாய்ந்தனர்’ 552-553.

‘ வடுவாழ் எக்கர் மணலினும் பலரே’-556.

இரவலருக்கு இல்லை என்று சொல்லி இங்கு புகழ் பெறாது போனவர்கள்

சேயாற்று மணலைக் காட்டிலும் பலர்.

நன்னன்,

‘அதனால் புகழொடும் கழிக நம்வரைந்த நாள்என

பரந்து இடம் கொடுக்கும் விசும்புதோய்

உள்ளம்…………..’.557-559.

வானமென உயர்ந்த  பரந்த உள்ளத்தினன்.

‘மழை சுரந்தன்ன ஈகை நல்கி’580.

மழைபோல் கொடை வழங்குபவன்,

சேயாற்று வெள்ளம்போல் எல்லோருக்கும் பயன்படுபவன்.

‘நாடாகொன்றோ காடாகொன்றோ

அவலா கொன்றோ மிசையா கொன்றோ

எவ்வழி நல்லவர் ஆடவர்

அவ்வழி நல்லை வாழிய நிலனே” புறநானூறு 187.

நாடோ காடோ, மேடோ பள்ளமோ எந்தநிலமாக இருப்பினும் அங்கு வாழும் மக்கள்  நல்லவர்களாக இருந்தால் நலம்பெறும், மேன்மையுறும். ஔவையாரின் இந்தப்பாடல் மலைபடுகடாம் காட்டும் மக்களின் வாழ்வியலுக்குச் சான்றாகிறது. இவ்வகையில் நானில மக்களும் நல்லவர்களாக இருந்ததால் நன்னனின் நாடு  நன்மையுற்றது, நன்னன் வேண்மாள் புகழ்பெற்றான், மலைபடுகடாம் இடம் பெற்றது, பெருங்கௌசிகனார் பெயர் பெற்றார்.

Series Navigationதீராக் கடன்.கனடாவில் கவிஞர் ஆரணியின் நூல் வெளியீடு
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *