கனடாவில் மார்க்கம் விவசாயக் கண்காட்சி – 2024

கனடாவில் மார்க்கம் விவசாயக் கண்காட்சி – 2024
This entry is part [part not set] of 8 in the series 13 அக்டோபர் 2024

குரு அரவிந்தன்

சென்ற வாரம் ரொறன்ரோவில் மார்க்கம் விளையாட்டரங்கில் கண்காட்சி ஒன்று இடம் பெற்றிருந்தது. கனடாவில் கோடைகாலம் முடிந்து இலையுதிர் காலம் ஆரம்பமாகி இருக்கின்றது. அத்துடன் குளிரும் வந்துவிட்டது. மரங்கள் எல்லாம் நிறம் மாறி இலைகளை உதிர்க்கத் தொடங்கி விட்டன. இலை உதிர்க்குமுன் பச்சை, மஞ்சள், சிகப்பு, ஒரேன்ச் என்று பலவிதமாக மரங்களின் இலைகள் மாறி இருப்பதைப் பார்ப்பது மிக அழகாக இருக்கும். இயற்கையை ரசிப்பவர்களுக்கு இது ஒரு மாறுபட்ட காட்சியாகத் தெரியும். இங்கே உள்ள ஊசியிலை மரங்கள் பனிக்காலத்தில் இலை உதிர்ப்பதில்லை, அவை மாற்றமின்றி அப்படியே இருக்கும்.

வெளியரங்குகளில் நடக்கும் இது போன்ற நிகழ்வுகள் இனி பனிக்காலம் முடியும் வரை அனேகமாக நடைபெற மாட்டாது. மீண்டும் ஏப்ரல் மாதத்தில்தான் வெளியரங்கு நிகழ்ச்சிகள் நடைபெறும். சிறுவர்களுக்கான உள்ளக அரங்குகள் பல இருந்தன. விவசாயத்தை முதன்மைப் படுத்தி, அது சார்ந்த காட்சிப் பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. இங்குள்ள இளைய தலைமுறையினர் விவசாயம் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதால், அவர்களுக்கு ஏற்றது போல காட்சிகள் அமைந்திருந்தன. இங்கு உற்பத்தியாகும் காய்கறிகளையும், மற்றும் விவசாய உற்பத்திப் பொருட்களையும் காட்சிக்கும், விற்பனைக்கும் வைத்திருந்தனர். குறிப்பாக மேப்பிள் மரத்திலிருந்து பெறும் மேப்பிள் பாணியைப் பலரும் வரிசையில் நின்று வாங்கினார்கள். நன்றி சொல்லும் நாள், கலோவீன் தினம் போன்றவை வருவதால் பூசணிக்காயும் விற்பனையாகியது.

ஒரு கிராமத்து விவசாயிக்கு எப்படித் தண்ணீர் கிடைக்கிறது, எப்படி பயிர் செய்கிறார்கள், அவர்களின் வளர்ப்புப் பிராணிகள் எவை என்பன போன்றவற்றைப் பார்க்க முடிந்தது. மாட்டுப்பண்ணை, கோழிப்பண்ணை, குதிரைப்பண்ணை போன்றவற்றை வைத்திருப்பவர்களும் அவற்றைக் காட்சிப்படுத்தி இருந்தனர். மாடு, ஆடு, குதிரை, பன்றி, கோழி வகைகள், வாத்துக்கள், முயல்கள், நாய்கள் என்று அவற்றை அருகே சென்று குழந்தைகள் தொட்டுப் பார்க்கவும் வசதிகள் செய்திருந்தனர். சோளம் பயிர் செய்யும் முறைகளையும், சோளத்தில் இருந்து பெறப்படும் உப உணவு வகைகளையும் செய்து காட்டினார்கள். அதேபோல பசு மாடுகளில் இருந்து பால் கறப்பது, அதன் உப உணவுகள் போன்றவற்றை எப்படிப் பெறுவது போன்ற முறைகளைச் செய்து காட்டினார்கள்.

பழைய காலத்து விவசாய முறைகளை மட்டுமல்ல, விவசாயத்திற்குப் பாவிக்கப்படும் நவீன இயந்திர வகைகளையும் ஒரு பகுதியில் காட்சிப்படுத்தி இருந்தனர்.

வளர்ப்புப் பிராணிகளான நாய்களின் விளையாட்டுக் காட்சிகளும் ஓரிடத்தில் இடம் பெற்றிருந்தது. பிள்ளைகள் ஆர்வத்தோடு அதைப் பார்த்து ரசித்தார்கள். சிறுவர்களுக்கான விளையாட்டு அரங்குகளும், இதைவிட சிற்றுண்டி, உணவுச் சாலைகளும் நிறையவே இருந்தன. எங்களுடன் வந்த சிறுவர்கள் அங்கே நின்ற விவசாயிகளிடம் சில கேள்விகளைக் கேட்டார்கள், அது என்னையும் சிந்திக்க வைத்தது.

ஏன் சில மிருகங்கள் புல், இலை போன்ற தாவரங்களையும், சில மிருகங்கள் மாமிசத்தையும் உணவாகக் கொள்கின்றன? அவற்றை எப்படி அடையாளம் காண்பது?

ஏன் சில மிருகங்களின் கண்கள் எங்களைப் போல முன்பக்கம் இல்லாமல், பக்கங்களில் இருக்கின்றன? ஏன் மிருகங்களுக்கு வால் இருக்கின்றது?

Series Navigationநீளும் நீர் சாலை

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *