எட்டாங்கரை

author
2
0 minutes, 19 seconds Read
This entry is part 8 of 8 in the series 13 அக்டோபர் 2024

பாலன் ராமநாதன்

“என்ன மாமா கோயில் திருவிழா நெருங்குது ஊர் கூட்டம் போடலாம்ல”என்றான் கணேசன் ஊர்ல நல்லது கெட்டது எல்லாத்துலயும் முதல் ஆளா நிக்கிறவன் கணேசன் .

  “சீக்கிரமா போற்றுவோம் மருமகனே” என்றார் துரைப்பாண்டி .துரைப்பாண்டி ஊர் தலைவர் நல்ல மனிதர் பணம் காசு இல்லாட்டாலும் ஊர் மீது பற்று கொண்ட குடும்பத்தை சேர்ந்தவர். 25 வருடத்துக்கு முன்னாடி நடந்த கம்மா விறகு வெட்டின பிரச்சனையில் ஊருக்காக கொலை செய்துவிட்டு ஜெயிலுக்கு சென்ற வேல்சாமியோடு பையன் அப்பாவைப் போல ஊர் பற்று மிக்கவர்.

    திருவிழாவிற்கான நேரம் நெருங்கியது ஊர் பெரியவர்கள் எல்லாம் ஊர் பொது மடத்தில் கூடினார்கள்

  “எப்பவும் போல வெள்ளிக்கிழமை சாட்டிருவோம் வெள்ளியோட வெள்ளி எட்டு நாள் சுத்த பத்தமா இருந்து திருவிழா நடத்தனும்  நேத்திக்கடன் வர்றதை பொறுத்து அன்னதானம் போற்றலாம் அன்னதானத்தில் எந்த குறையும் வந்துரக்கூடாது சுத்து பத்து ஊர் சனமெல்லாம் வரும் “ என்றார் ஊர் தலைவர் துரைப்பாண்டி.

  எட்டு நாள் திருவிழா நடக்கும் எட்டாம் நாள் கிடாய் வெட்டு நேர்த்திக்கடன்  வரக்கூடிய கிடாய், கோழி, சேவல் எல்லாத்தையும் வெட்டி ஊர் சனங்கள் எல்லாம் ஒண்ணா உக்காந்து சாப்பிடக்கூடிய திருவிழா .

 ”வெளியூரிலிருந்து வர்ற சனங்களை ரொம்ப பொறுமையா கவனிக்கணும்” என்றார் துரைப்பாண்டி .

 ‘சரி சித்தப்பு அதெல்லாம் சிறப்பா பண்ணிடலாம்” என்றான் வீரணன் .

       வீரணன் காவக்கார குடும்பத்தைச் சேர்ந்தவன் தாட்டியமான வீரன்.ஊரோட காவல் பாக்குறவன் ஊருக்கு ஒண்ணுணா முதல் ஆள நிக்கக்கூடியவன்.

   “ராவுலேயே தண்ணி எடுத்துறணும் ,வீடு தவறாமல் வெறகு எடுத்துறணும் “என்றார் துரைப்பாண்டி.

  “வேற ஏதாவது நிகழ்ச்சி  இருக்காப்பா” என்றார் மூக்காண்டி மாமா.”

“எட்டு நாளும் தெரப்படம் இருக்கப்பா” என்றார் கணக்குப்பிள்ளை ராமசாமி தாத்தா .ரொம்ப சிக்கனமான பெரிய மனுஷன் ராமசாமி தாத்தா ஊர் கணக்கு வழக்கு பார்க்கக்கூடிய பெரியாம்பள.

   “வர வெள்ளிக்கிழமை ஊர்ல காப்பு கட்றோஞ் சாமியோ “என்றான் பெருமாள். ஊரோட நாளு தெரு முக்குல நின்னு சாட்டிட்டு ஊர் கணக்குல ஒரு டீ குடிச்சிட்டு போறது வழக்கம்.

  எட்டு நாளும் ஊரில் தடபுடலாக விழா ஏற்பாடுகள் நடைபெற்றது. வியாழக்கிழமை இரவு விழா ஏற்பாட்டில் மும்மரமாக இருந்தார் துரைப்பாண்டி.

      ‘சித்தப்பு இளவட்டங்கள் எல்லாம் தயார் தண்ணீர் எடுக்க போயிரலாம்” என்றான் வீரணண்.

  ஊர் கிணற்றில் தண்ணீர் எடுப்பது என்பது இளவட்டங்களுக்கு ரொம்ப குஷியான விஷயம் .அந்த நேரம் தான் ஊர் குமரி பெண்கள் எல்லாம் தண்ணீர் எடுக்க வருங்க.பெண்களிடம் தங்கள் வீரத்தை காட்ட சிலர் கிணற்றுக்குள் இறங்கி தண்ணீர் எடுத்து விடுவார்கள் காது குத்து கல்யாணம் போன்ற விசேஷ நாள்களில் விசேஷ வீட்டாருக்கு தண்ணி எடுத்து கொடுத்தா ஒரு டம்ளர் வர காப்பி போட்டு தருவார்கள். ஒரு டம்ளர் காபிக்காக 100 குடம் தண்ணி இரைப்பது என்பது அல்ல விஷயம்.  ஊரே ஒரு குடும்பமாக இருந்த காலம் அது. தண்ணி தூக்க வரக்கூடிய முறைக்கார பெண்களை கேலி கிண்டல் செய்வதும் அவர்கள் தண்ணீர் குடத்தை ஓங்கி காலில் போடுவதும் என்று ஒரே விளையாட்டாக செல்லும் கிணத்துக்கரை. விசேஷ நாட்களில் வேறு யாரும் தண்ணீர் எடுக்ககூடாது என்பது ஊர் கட்டு .ஊர்ல குடி தண்ணி கிணறு ஒன்றுதான் அதனால தண்ணி பிரச்சனை ஏற்படும் என்று  ஊர் கட்டு போடப்பட்டுள்ளது

பத்து வாளி, இருபது குடம், என வீடு வீடாக சென்று வாங்கினார்கள் இளவட்டங்கள் .எல்லாரையும் ஒண்ணா வரச் சொன்னான் வீரணண் “காசி மச்சான், குழந்தைச்சாமி, அண்ணே பெரியசாமி ,ராமு மச்சான் நீங்க தண்ணி எறச்சு விடுங்க ,கோயிந்தன் ,வேலு, மச்சகாள, பால்பாண்டி நீங்க தண்ணிய வாங்கி ஊத்துங்க சித்தப்பு மூக்கன் ,பாலு, போஸ்  நீங்க கொடத்த தலையில தூக்கி விடுங்க” என்று உத்தரவிட்டான் வீரணண்.

  “ 60 குடம் தண்ணி தான் போயிருக்கு அதுக்குள்ள கிணறு வத்தி போச்சு “என்றார் காசி.

  “சரி மச்சான் ஊறப் போடுங்க பிறகு எடுத்துக்கலாம்” என்றான் வீரணன் .

“தண்ணி ஊறதுக்குள்ள வெறகு எடுத்து போட்டுரலாம்” என்றான் வீரணன் .

“அண்ணன் பெரியசாமி வீட்ல மாட்டுவண்டி எடுத்துக்குவோம்” என்றான் வீரணண்.

“எப்படியும்  ரெண்டு வண்டி வெறகு வேணும்பா வீரணா”என்றார் கணேசன்.

“சரி மாமா சித்தப்பு மூக்கன் வண்டிய எடுத்துக்குவோம்” என்றான் வீரணண்.

இரண்டு வண்டியும் தயார்

“பகலெல்லாம் உழவுக்கு போயிட்டு வந்துருக்கு மாடுக ரொம்ப சிரமப்படும் அதனால நாமளே போய் இழுத்துட்டு வந்துருவோம்பா “என்றான் வீரணண்.

இளவட்டங்கள் வண்டியை இழுக்க ஒவ்வொரு வீடாக விறகு எடுக்கப்பட்டது  .மூக்கம்மா கிழவி வீட்ல மட்டும் யாரும் விறகு எடுக்கல .

“ஏம்பா நிக்கிறீங்க” என்றான் வீரணன் .

“போப்பா கெழவி அது பாட்டுல கத்தும்” என்றான் மச்சகாளை.

 “யார்ரா அது  ஏவீட்டுல வெறகு தூக்குறது”என்றது மூக்கம்மா கிழவி.

“யாத்தோ! வீரணே கோயில் திருவிழாவுக்கு விறகு எடுக்குறோம்” என்றான் வீரணன் .

“யாரு ஏ அண்ணன் பேரனா? எடுப்பா எடு கூட நாலு கட்டையா எடு” என்றால் கிழவி .

ஊர் முழுவதும் விறகு எடுக்கும் வேலை முடிந்து கையிழுவையாக இழுத்து   கோவில் அருகில் குவித்து வைக்கப்பட்டது.

கிணத்திலிருந்து மச்சான் காசி கத்தும் சத்தம் கேட்டது.

“ஏப்பா ஏய் தண்ணி ஊத்து நல்லா வந்துருச்சு வாங்கப்பா” என்றார் .

அனைவரும் கிணத்துக்கு வந்தார்கள் மீதமுள்ள தண்ணியும் எடுத்து நிரப்பினார்கள். குமரிகள் எல்லாம் தலைசுமையாக சுமந்து கோவிலுக்கு கொண்டு சென்றார்கள். சிலர் இரட்டை குடம் போட்டார்கள் இடுப்பிலும் தலையிலும் எல்லாம் வேண்டுதல் தான்.

“என்னடி பூங்கொடி ரெட்டை குடம் போடுறவ” என்றாள் பஞ்சு .

“அதில்ல மதினி சீக்கிரமா கல்யாணம் நடக்கணும்னு வேண்டுதல் தான்”என்றாள் பேச்சி. பேச்சிக்குப் பஞ்சு மதினிமுறை வேணும்.இப்படியாக கேளியும் கிண்டலுமாக தண்ணீர் எடுத்து முடித்தார்கள்  .

இரவு நிகழ்ச்சிக்கு நேரமானது ஒவ்வொரு நாளும் இரண்டு திரைப்படங்கள் போடுவார்கள் .வெள்ளை திரையை நீண்ட கம்புகளின் கட்டி மடத்தின் அருகே ஊண்டி விடுவார்கள். ரீல் பெட்டி கடைசி பஸ்ஸில் தான் வரும். ஊர் சிறுவர்கள் எல்லாம் கூட்டமாக ரீல் பெட்டியை தூக்க சென்று விடுவார்கள் .தொலைக்காட்சிகள் எல்லாம் பரவலாக இல்லாத காலம் ஊருக்கு ஒன்றோ இரண்டோ தான் இருக்கும். தங்கள் ஆதர்ச நாயகர்களை திரையில் காண்பதற்கு பகலெல்லாம் தயாராவார்கள். நடுவில் ஒரு கயிறு கட்டி ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக இடங்கள் ஒதுக்கப்படும்.

இரவில் கண்விழித்து பார்ப்பதற்கு பெண்கள் பகலெல்லாம் முறுக்கு பலகாரம் தயார் செய்வார்கள். பாய் தலகாணி சகிதமாக படம் பார்க்க வந்து விடுவார்கள்

முறையாக பக்தி பாடல் போட்டவுடன் திரைப்படம் போடப்படும். முதல் படமாக பக்தி படம் போடப்படும் அடுத்ததாக தாங்கள் விரும்பிய கதாநாயகர்களின் திரைப்படங்கள் போடுவார்கள். இரண்டு படத்திற்கும் இடையில் இடைவேளை விடப்படும் கடை மகமை எடுத்தவரின் கோரிக்கை அது.

விடிந்தால் கிடாய் வெட்டு ஊரே திருவிழா கோலம் பூண்டது.

“காலையில ஏழு மணிக்கெல்லாம் கிடாய் வெட்டிரனும்” என்றார் ஊர் தலைவர் துரைப்பாண்டி .

“எல்லாம் தயார் சித்தப்பு காலையில ஏழு மணிக்கு ஆரம்பிச்சிடலாம்”என்றான் வீரணண்.

ஆண்டுதோறும் கிடாய் வெட்டக்கூடிய பொறுப்பு வீரணனுடையது .இந்த ஆண்டும் அதற்காக தயாரானான் வீரணண்.

ஊர் வழக்கப்படி முதலில் பொதுக் கிடாய் வெட்டப்படும் அடுத்து ஒவ்வொரு கரைக்கும் ஒரு மரியாதை ஏழு கரைக்கும் ஏழு கிடாய்கள் வரிசையாக வெட்டப்படும் கரை என்பது கோயில் திருவிழாக்களில் கொடுக்கப்படும் மரியாதையாகும்.

புளிய மரத்தடியில் பந்தல் போட்டு சமையலுக்கான வேலையை தொடங்கினான்.சமையக்காரர் சுப்புராமு. சுத்து பத்துல கறி குழம்புக்கு பேர் போன ஆளு சமயக்கார சுப்புராமு.ருசியான கைப்பக்குவம் உள்ள ஆளு 50 கிலோ 100 கிலோ என்றாலும் அசராமல் சமைத்துக் கொடுப்பார் ஒத்தாசைக்கு நாலு ஆளுகளை கூட்டிட்டு வந்து சமையல் வேலை ஆரம்பிச்சாரு சுப்புராமு கல்ல அடுக்கி பத்தி,சூடங்காட்டி தேங்காய் உடைத்து தன் வேலையை முறைப்படி தொடங்கினார் சமையல்காரர். நேரம் நெருங்கியது எல்லா கரைக்குமான கிடாய்களும் வந்து இறங்கியது மஞ்சள் தண்ணீர் ஊற்றி கதம்பமும் மல்லிகை பூவும் கொம்பில் சுத்தி விடாப்பிடியாக இழுத்து வந்தார்கள். வேண்டாம் வேண்டாம்னா விடவா போறாங்க என்று கடைசியாக ஒருமுறை கத்தியும் பாக்குதுக கிடாய்க.

இழுத்து வந்து புளிய மரத்துக்கும் வேம்புக்கு இடையில கயிற கட்டி கிடாய்களை கட்டி போட்டார்கள்.

கிடாய் நேர்த்திக்கடன் செலுத்துவதற்கான நேரம் வந்தது.

“என்னப்பா எல்லாம் வந்தாச்சா” என்றார் ஊர் தலைவர்  துரைப்பாண்டி .

நம்ம ராமசாமி தாத்தாவை இன்னும் காணல வரட்டுஞ் சித்தப்பு” என்றான் வீரணண்.  

“அதோ வாராரப்பா மச்சான் ராமசாமி” என்றார் மூக்காண்டி.

“வெரசா வாருமய்யா புது மாப்பிள்ளை  கணக்கா சோடிச்சுக்கிட்டு”என்றார் மூக்காண்டி

மூக்காண்டியும் ராமசாமியும் மாப்பிள்ளை மச்சான் முறை.

“எல்லாரும் வந்தாச்சு கிடாய் வெட்டிடலாம் பா “என்றார் ஊர் தலைவர் துரைப்பாண்டி .

“பொதுக் கிடாய அவுத்துட்டு வாங்கப்பா” என்றார் ராமசாமி தாத்தா .

கட்டிப்போட்ட இடத்தில் பொதுக்கிடாயை காணவில்லை

அனைவரும் அதிர்ச்சியானார்கள்

“ரவையே கோயில்ல வந்து கட்டியாச்சப்பா” என்றார் ராமசாமி தாத்தா .

“ஊருக்குள்ள போய் தேடி பாருங்கப்பா எங்கிட்டாவது திரியும்” என்றார் ஊர் தலைவர் துரைப்பாண்டி .

வீரணன் தலைமையில் இளவட்டங்கள் ஊர் முழுவதும் தேடினார்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை கிடாய் வெட்டுவதற்கான நேரம் போய்க் கொண்டிருந்தது பெண்கள் கூட்டம் கூட்டமாக இருந்து ஏதோ சாமி குத்தம் ஆகிப்போச்சு என்று பேசிக் கொண்டார்கள்.

  வீரணனுக்கு மிகப்பெரிய அவமானமாக போச்சு இதுவரை எந்த பொருளையும் களவு போக விடவில்லை எத்தனை பேர் திருட வந்தாலும் ஒத்தையாலாக நின்று அனைவரையும் விரட்டி அடிக்க கூடிய தைரியம் படைத்தவன் பல திருடர்கள் வீரணணுக்கு பயந்து ஊர் பக்கமே வருவதில்லை

 .”இது திருட்டு பய வேலை கிடையாது வேறு ஏதாவது பிரச்சனை இருக்குமோ”என யோசித்தான் வீரணன்  

.விவசாய நேரத்துல ஆடு மாடுகளை பயிர்ல விட்டு மேய்ச்சதுக்காக பக்கத்து ஊரு காரனை மடத்துல கட்டி வச்சி அடிச்சது .வேலைக்கு போன நம்ம பொண்ணுகள பக்கத்து ஊர்க்காரன் கேளி பண்ணான்னு மண்டைய உடச்சது.ஊர் பகட பெருமாளை  வேலைக்கு வரலைன்னு அடிச்ச ஒத்த வீட்டு பாண்டிய கைய ஒடச்சதுனு.நிறைய பேர் பகையாளி இருக்கிறார்கள் இதில் யார் செய்த காரியம் இது என வீரணனுக்கு குழப்பம்.

‘முதல்ல ஒத்த வீட்டு பாண்டிய போய் கேட்போம்”என சென்றான் வீரணன்.

பாண்டியை பார்ப்பதற்கு ஒத்த வீட்டை நோக்கி சென்றான் வீரணன் .அங்கே பாண்டி மனைவி வீட்டு வாசலில் பாத்திரம் விளக்கிக் கொண்டிருந்தாள்.

“என்ன மதினி அண்ணன் வீட்ல இருக்கா” என கேட்டான் வீரணன் .

“.ரவைக்கு சாராயத்தை குடிச்சிட்டு வந்துச்சு இன்னும் தூங்குது, பிரச்சினை ஏதும் பண்ணிருச்சா”என்றாள் பாண்டி மனைவி .

“அதெல்லாம் ஒன்னும் இல்ல மதினி நான் வாரேன்” என்று கிளம்பினான் வீரணன் .

“பக்கத்து ஊரு காரய்ங்க தான் ஏதாவது செஞ்சிருப்பாய்ங்க” என்ற சந்தேகம் வந்தது .

வேல் கம்ப எடுத்துக்கொண்டு பக்கத்து ஊருக்கு கிளம்பினான் வீரணண். வீரணண் செல்வதை பார்த்து இளவட்டங்கள் அருவா கம்புகளை எடுத்துக்கொண்டு உடன் சென்றார்கள். பக்கத்து ஊர் எப்போது முட்டலும் மோதலும் இருக்கிற ஊர். சொந்தபந்த கிராமமா இருந்தாலும் விட்டுக் கொடுக்காத பயலுக. அந்த ஊரில் பல பேர் வீரணனிடம் முட்டியவர்கள்.ஆயுதங்களோடு சென்றதைப் பார்த்த பக்கத்து ஊர் பெருசுகள் பதட்டமானார்கள். பொண்டு,பொடுசுகள் அலறிக்கொண்டு கோவில் நோக்கி ஓடிவந்தது  . ஏதோ விபரீதம் நடக்கப்போகுது என்று எண்ணி ஊரே கூடியது.

  அங்கே, வீரணன் பத்து இளவட்டங்களை கூட்டிக்கொண்டு பக்கத்து ஊரை நோக்கி போவதை பார்த்த பெண்கள் பதட்டத்தோடு ஊர் தலைவர் துரைப்பாண்டியிடம் போய் சொன்னார்கள் .

 கிடாய் தேடிச் சென்ற வீரணன் ஊர் கோயில் முன்பாக நின்று.

 “ஏப்பா இதெல்லாம் நல்லா இல்ல சாமி கிடாய எவனோ தூக்கியாந்துட்டான் அவனா வந்து கொடுத்துட்டா நல்லது இல்லைனா “என்று சத்தமிட்டான்.  

 அந்த ஊர் பெருசுகளுக்கு வீரணணை பற்றி நன்றாக தெரியும் ரொம்ப நியாயமான ஆளு வீண் சண்டைக்கு போக மாட்டான்  வம்புன்னு வந்துருச்சுன்னா விடவே மாட்டான் என்று.

விபரீதம் ஏதும் நடந்து விடக்கூடாது என்று பக்கத்து ஊர் பெருசுகள் வீரணனை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார்கள் .பேசிக் கொண்டிருக்கும்போது கோயிலை நோக்கி ஒரு பெண் கிடாயை இழுத்துக் கொண்டு வந்தாள்.

“இந்தாப்பா ஓங்கிடாயி தெரியாம சாமி கிடாய தூக்கியாந்துட்டாய்ங்க மொதல்ல போய் கிடாய வெட்டுங்க அப்புறம் பேசிக்கலாம் “என்றாள்.

 “டேய் மச்சக்காளை கிடாய தூக்கிட்டு போய் ஊர்ல குடு” என்று உத்தரவிட்டான் வீரணன்.ஆள் உயர கிடாயை அளேக்காக தூக்கி தோளில் வைத்துக் கொண்டு ஓட்டமும் நடையுமாக ஊர் நோக்கி சென்றான் மச்சக்காளை.

 அங்கே கிடாய் வெட்டல போன இளவட்டங்களையும் காணல என ஊரே பதட்டத்தில் இருந்தது.

“மாமா நாம ஒரெட்டு போய் பாத்துட்டு வந்துருவோம்” என்றான் கணேசன்

“ஆமப்பா இளவட்டங்கள் ஏதாவது பண்ணிட்டா ஊர் சண்டையாகி போகும்”என்றார் மூக்காண்டி

பெண்கள் தெருமுனையில் கூட்டம் கூட்டமாக நின்று ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். திருவிழா மும்மரம் அப்படியே அடங்கிப் போய் கிடந்தது. எல்லா வேலையும் அப்படியே நின்று போயிருந்தது.

“அந்தத் தாயி ஏந்தான் இப்டி சோதிக்கிறாளோ “ என்று வேதனைப்பட்டார் ஊர் தலைவர் துரைப்பாண்டி.

திடீரென்று கீகாட்டுப்பக்கம் இருந்து சிறுவர்கள் ஓடிவந்தார்கள்.

“மச்சக்காளை கிடாயோட ஓடி வர்றாரு “என்று சத்தம் போட்டபடி ஓடி  வந்தார்கள்.

அவர்களின் சத்தத்தை கேட்ட ஊர் பெருசுகள் முகத்தில் பெரிய சந்தோஷம்

“ஆத்தா நீ தான் காப்பாத்துன”என்று கோவில் முன் நெடுஞ்சான் கடையாக விழுந்து கும்பிட்டார் ஊர் தலைவர் துரைப்பாண்டி.

எதுத்தாப்புல ஓடி மச்சக்காளை தோள் மாத்தி வாராங்க இளவட்டங்க.

“எங்கப்பா வீரனணையும் மத்த ஆளுகளையும் காணோம் “என்றார் ராமசாமி தாத்தா.

“அது வந்து தாத்தா” என்று மூச்சு வாங்கினான் மச்சக்காளை .

“ஏய் பொறுப்பா அவனுக்கு கொஞ்சம் தண்ணி கொடுங்கப்பா “

என்றார் மூக்காண்டி.

தண்ணீர் குடித்து அமைதியான மச்சக்காளை “கிடாய் கெடச்சதும் வேகமாக கொண்டு போய் ஊர்ல சேருனு சொன்னா வீரணே,நான் ஓடியாந்தேன்.பின்னால யாரும் வரல “என்றான் சிறிய மூச்சு வாங்கலோடு.

அங்கே வீரணன் “கிடாய் தூக்கிணவே ஆத்தா முன்னால வந்து மன்னிப்பு கேட்டா தான் விடுவேன் ,இல்லைனா நடக்கிறது வேற “என்று ஊர் பெரியவர்களிடம் கூறிவிட்டு கிளம்பினான்.

ஓட்டமும் நடையுமாக வீரணனும் இளவட்டங்களும் வந்தபோது பத்திருவது இளவட்டங்கள் ஒடங்காட்டுக்குள்ள இருந்து வந்து வழிமறித்தார்கள்.முதலில் வாய் தகராறாக ஆரம்பித்து பிறகு கைகலப்பில் முடிந்தது.ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டார்கள். திடீரென்று கோவிந்தனுடைய அலறல் சத்தம் கேட்டது. கோவிந்தனுடைய கையை ஒருத்தன் வெட்டியது தெரிந்து மறு நொடி வீரணன் ருத்ர தாண்டவம் ஆடினான். இரு கைகளிலும் வேல் கம்பும் வீச்சறிவாளும் விளையாடியது. எதுக்க துணிந்தவன் எல்லாம் நாலா புறமும் சிதறி ஓட ஆரம்பித்தார்கள்   .இளவட்டங்களை எல்லாம் ஊரை நோக்கி செல்ல உத்தரவிட்டான் வீரணண்.ஆனால் இளவட்டங்கள் யாரும் செல்லவில்லை.

பக்கத்து ஊரு இளவட்டங்கள் சிறிய வெட்டு காயங்களோடு தப்பி சென்றார்கள். வீரணன் இளவட்டங்களை முன்னே விட்டு ஓட்டமும் நடையுமாக ஊர்நோக்கி கிளம்பினான் .

ஒருவழியா எல்லாத்தையும் அடிச்சு விரட்டியாச்சு என்ற மன நிம்மதியோடு இளவட்டங்கள் ஊர்நோக்கிச் செல்ல. அங்கே எதிர்பாராமல் அது நடந்து விட்டது

ஒழிந்திருந்து ஒருத்தன் எறிந்த வேல் கம்பு வீரணணின் விலாவில் பாய்ந்தது .நேருக்கு நேராக நின்று எதிர்த்து வெல்ல முடியாது என்று நினைத்தவர்கள் மறைந்து நின்று தாக்கி நிலைகுலைய வைத்தார்கள்.

முன்னே சென்று கொண்டிருந்த இளவட்டங்களுக்கு எந்த சத்தமும் கேட்கவில்லை வீரணனும் சத்தம் போடவில்லை. தனியாளாக நின்று போராடத் துணிந்தான். தன்னை வெட்ட வந்த இருவரையும் சமாளித்து தனி ஒருவனாக போராடி இருவரையும் வெட்டி சாய்த்தான்.

எப்படியும் தன்னுடைய ஊரில் தான் தன் உயிர் போக வேண்டும் என்று நினைத்து அரை மயக்கத்தில் ஊர் நோக்கி செல்கிறான் வீரணண்.

“இன்னும் ரெண்டு வயத்தாண்டினா ஊர் எல்லை வந்துரும் அதுவரைக்கும் உயிர்க்காத்து உடம்புல தங்கனு ஆத்தா “என்று மனதில் நினைத்துக் கொண்டு நடந்தான் வீரணன் .

மயக்கம் தலை சுற்றியது ரத்தம் அதிகமாக வெளியேறியது வீரணன் மரணத்தை கண்டு அஞ்சவில்லை. ஆனால் மண் மீது கொண்ட பற்று ஊர் மீது கொண்ட மரியாதை  மரணத்தை கண்டு அஞ்சவைக்கிறது . இருந்தாலும் அவனால் மரணத்தை வெல்ல முடியவில்லை.

இறுதியில் மயங்கி கீழே சாய்கிறான். வீரணன்.

தன் மண்ணையும் மரணத்தையும் ஒருசேரத் தழுவிக்கொள்கிறான்.

அங்கே கோவிலில்” வீரணன் வந்தா தான் கிடாய் வெட்ட முடியும்”என்று பேசிக் கொண்டிருந்தார்கள் ஒரு எட்டு போய் பாத்துட்டு வந்துருவோம் என்று கிளம்பினார்கள் பெருசுகள்.

அங்கே வீரணன் விழுந்ததை பார்க்காத இளவட்டங்கள் நான்கைந்து வயல்கள் தாண்டி சென்று இருந்தார்கள்  .

“என்ன வீரணே அலுவாட்டத்தையே காணோம்” என்று திரும்பினான் பால்பாண்டி .

கண்ணுக்கெட்டிய தூரம் ஆள் ஆலுவாட்டமே இல்லை .பதறிப் போய் ஓடினார்கள்

“ஏ பால்பாண்டி மாப்ள எங்கயா ஓம்பங்காளி வீரனே” என்றான் வேல்சாமி.

அனைவரும் பதட்டத்தோடு வேகமாக ஓடினார்கள்.

இரண்டு வயக் கடப்பில் வீரணன் குப்புற விழுந்து கிடப்பதை பார்த்தார்கள் அலறி துடித்து ஓடினார்கள்

“ஏ மாப்ள வீரனா” என்று அலறினான் வேல்சாமி .

“யண்ணே” என்று அலறிக் கொண்டு ஓடினான் பால்பாண்டி.

அருகில் சென்று பார்த்த போது ரத்த வெள்ளத்தில் கிடந்தான் வீரணண்.அவனுடைய முகம் மண்ணை முத்தமிட்டபடி கிடந்தது  .அவனைத் தூக்கி மடியில் வைத்துக்கொண்டு அலறி துடித்தார்கள் இளவட்டங்கள்.

அருகில் யாரும் இருப்பார்களோ என்று எண்ணி ஓடிய ராசுவுக்கு அங்கே இருவர் வெட்டுப்பட்டு கிடந்தது தெரிந்தது.

வீரணணின் உடலை தூக்கிக்கொண்டு ஊர்நோக்கிச் சென்றார்கள் இளவட்டங்கள் அதற்குள் ஆடு மேய்க்கும் சிறுவர்கள் ஊருக்குள் தகவல் சொல்ல. ஊரே அலறல் சத்தம் கேட்டு பதட்டமாகி கிழக்குப் பக்கமாக ஓடியது கோவிலில் இருந்த பெருசுகளும் கிழக்கு நோக்கி ஓட ஆரம்பித்தார்கள்…

சரியாக ஓராண்டு முடிந்தது அந்த ஆண்டுக்கான திருவிழா ஆரம்பம் ஆனது முதலில் பொது கிடாய் வெட்டப்பட்டது அடுத்து ஏழு கரைக்கும் மரியாதை செய்யும் விதமாக ஏழு கிடாய்கள் வெட்டப்பட்டது .எட்டாங்கரையாக வீரணனுக்கு மரியாதை செய்யும் விதமாக எட்டாவது கிடாயாக அவனுடைய கிடாய்.. வெட்டப்பட்டது .

Series Navigation
author

Similar Posts

2 Comments

  1. Avatar
    Kalivanan Ganesan says:

    இதுவரை மூன்று சிறுகதைகளை இங்கு வாசித்திருக்கிறேன். இது நான்காவது. பெட்டர்.

    ஓரிடத்தில் “குமரி பெண்கள்” – சந்திப்பிழை போட்டே எழுதுகிறார்!- என்றும் இன்னொரு இடத்தில் ‘குமரிகள்’ என்றும் எழுகிறார். கிராமத்தில் பேச்சு வழக்கில் சரி. ஆனால் கதாசிரியர் தானே அப்படி எழுதக்கூடாது. ‘குமரிகள்’ என்பதை இழி சொல். The word குமரிகள் means they are sex objects only.

    ‘கேலி’ என்பதே சரி. இருவிடங்களிலும் ‘கேளி’ என்றெழுதுகிறார். ‘கேளி’ என்பது கேளிக்கை என்பதன் சுருக்கம். கேலி என்பது பரிகாசம். அந்த இருவிடங்களிலும் பரிகாசம் என்ற பொருளில்தான் எழுதுகிறார். இன்னொரு இடத்தில் கேலி என்று சரியாக எழுதுகிறார்.

    // “எப்பவும் போல வெள்ளிக்கிழமை சாட்டிருவோம் வெள்ளியோட வெள்ளி எட்டு நாள் சுத்த பத்தமா இருந்து திருவிழா நடத்தனும்//

    // “வர வெள்ளிக்கிழமை ஊர்ல காப்பு கட்றோஞ் சாமியோ “என்றான் பெருமாள். ஊரோட நாளு தெரு முக்குல நின்னு சாட்டிட்டு ஊர் கணக்குல ஒரு டீ குடிச்சிட்டு போறது வழக்கம்.//

    கதையில் வரும் உரையாடல்கள் எனக்கு பரிச்சமானதுதான். ஆனால், சாட்டிட்டு என்ற சொல்லை நான் கேள்விப்பட்டதே இல்லை. முதலில் வரும் சாட்டிட்டு என்பது பந்தல்கால் நடுதல் என்ற பொருளையும், இரண்டாவது அரட்டை என்ற பொருளையும் தருவது போலத் தோன்றுகிறது.

    இக்கதையில் ஒரு நகைமுரண்.

    கோயில் திருவிழாவின் கிடா வெட்டி படையல் போட விறகு தேவை. ஒவ்வொரு வீட்டிலுமிருந்து விறகு கேட்டு பெற்று மாட்டு வண்டியில் கொண்டுவர வேண்டும். அப்போது ஒருவர் சொல்கிறார்:

    “பகலெல்லாம் உழவுக்கு போயிட்டு வந்துருக்கு மாடுக ரொம்ப சிரமப்படும் அதனால நாமளே போய் இழுத்துட்டு வந்துருவோம்பா “என்றான் வீரணண். இளவட்டங்கள் வண்டியை இழுக்க ஒவ்வொரு வீடாக விறகு எடுக்கப்பட்டது”

    மாடுகளுக்குத் துயரம் வரக்கூடாதென்று நினைப்பவர்கள் ஏழு கிடா ஆடுகளை வெட்டிக்கொல்வதை பற்றி யாதொன்றும் நினைக்கவில்லை.

    கடவுள் பெயரால் கொலை செய்தால் அதன் பெயர் பலி. மனிதர்களையும் கடவுள் பெயரால் கொலை செய்தால் அதன் பெயர் நரபலி.

    கதையின் தலைப்பு சாலப்பொருத்தம்.

    நான் இக்கதைக்கு நரபலி என்று தலைப்பிட்டிருப்பேன். கதாசிரியர் அத்தலைப்பை கொடுக்கப் பயந்து ‘எட்டாம் கரை’ என்று பூடகமாக சொல்லிவிட்டார்.

    எட்டாம் கரை என்பது எட்டாவது பலி. அது நரபலியே என்பது கதை காட்டும் பயங்கரம். கதாசிரியர் நினைத்தாரோ இல்லையோ, கடவுள் பெயரால் மனிதர்கள் பலியாகிறார்கள் என்பது நான் எடுத்த முடிவு.

    தமிழரின் கிராம நாகரிகம் திண்ணையில் – அல்லது சந்தியிலா? – சிரிக்கிறது. :-(

  2. Avatar
    Kalivanan Ganesan says:

    இக்கதை கிடாவெட்டு பற்றி அன்று. கிடா வெட்டு என்ற போர்வையில் இது சொல்லும் செய்தி இதுதான்:

    கதையில், கடவுள் பெயரால் மூன்று மனிதர்கள் கொல்லப்படுகிறார்கள். ஏராளம் இளைஞர்கள் படுகாயமடைகிறார்கள். அப்படி சாவதை வீரமரணம் என்று எடுத்து மகிழ்கின்றன கிராமங்கள். இக்கதையில் கொலைசெய்யப்பட்டவன் ஊர்ப்பெருமைக்காக தியாகம் பண்ணினான் என்கிறார் கதாசிரியர். அவன் வீரமரணத்தின் சாட்சியாக எட்டாம் கிடா பலியிடப்படுகிறது. பரம் வீர் சக்ரா என்ற பதக்கம் அரசு கொடுப்பதை போல.

    புனைகதை என்று எடுத்தாலும், ஆடிமாதம் கிராமங்களில் நடக்கும் கொடைவிழாக்களின்போது இப்படிப்பட்ட அடிதடி, கொலைகள் நிதர்சனம். அற்பத்தனமான ஈகோ சண்டைகள் இறுதியில் கொலைகளில் முடியும். தீராப்பகையை உருவாக்கும். இக்கதையில் தீராப்பகை இருக்கிராமங்களுக்கிடையில் ஏற்கனவே உருவாக்கப்பட்டதை வாசிக்கலாம்.

    ஆடி மாதத்தில் அல்லது கோடை காலத்தில் தமிழ் நாளிதழ்கள் அன்றாடம் இக்கொலைகள் பற்றிய செய்திகளை போடும்.

    இக்கதை கிராம வாழ்க்கையின் அருவருக்கத்தக்க முகத்தின் பிரதிபலிப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *