மீனாட்சி சுந்தரமூர்த்தி
பனி படர்ந்த குன்றுகளின் அருகிலிருந்த அடர்ந்த அந்த வனப்பகுதியில் கோபாலனின் கார் விரைந்துகொண்டிருந்தது. பெரிய வேன் ஒன்றும் உடன் வந்தது. வனத்தில் அவரது குலதெய்வக் கோவில் உள்ளது, வருடம் தவறாமல் சொந்தங்களோடு அங்கு வந்து பொங்கல் வைத்து கிடா வெட்டி படையலிடுவது அவரது வழக்கம். அம்மா இருந்த வரையில் தவறாமல் நினைவூட்டுவாள். தைமாதத்தில் இங்கு வந்து விடுவார்கள். தொண்ணூற்றைந்து வயது வரை அவளது வழிகாட்டலில் பூஜைகள் நடந்து வந்தது. அவள் போனபிறகு கோபாலன் தானே அந்த பொறுப்பைச் செய்து வருகிறார்.எதை மறந்தாலும் இதை மறக்க மாட்டார். ஏனென்றால் அம்மாவின் வேண்டுதல் அது.
அவர் மூன்று வயதுக் குழந்தையாக இருந்தபோது ஊரில் வைசூரி நோய் கண்டிருந்தது. சாலை, மின்சாரம் மற்றும் மருத்துவ வசதிகள் எதுவும் வந்து சேராத மலைக்கிராமங்களில் ஒன்றுதான் இவரது சொந்த ஊர். கொத்துகொத்தாக பலரைப் பலிகொண்டாள் மகமாயி. ஊரை விட்டுப்போக முயன்றவர்களையும் விடவில்லை. ஊரே சுடுகாடானது. மூன்று பிள்ளைகளையும், கணவனையும் தொலைத்து விட்டு,
‘ இந்தப் பிள்ளையை மட்டுமாவது விட்டுவிடு தாயே, உனக்கு வருசாவருசம் பொங்கல் வைக்கறேன், தயவு காட்டு’ என்று வேண்டிக் கொண்ட மாதிக்குக் கருணை காட்டினாள் அம்மன்.நல்ல உழைப்பாளி, இருந்த ஒரு துண்டு நிலத்தில் கிழங்கு, மொச்சைப் பயிரிட்டு எப்படியோ மகனை வளர்த்து விட்டாள். அவர்கள் குலவழக்கப்படி வேறொரு மணத்திற்கு இசையவில்லை.
ஐந்து மைல் தூரம் நடந்து சென்று பள்ளிப் படிப்பை முடித்தார் கோபாலன்.படிப்பில் கெட்டிக்காரராக இருந்ததால் அரசின் உதவித்தொகை பெற்று கல்லூரிப் படிப்பைத் தொடர்ந்தார்.வேளாண் துறையில் எழுத்தராகச் சேர்ந்து துறைத் தேர்வுகள் எழுதி பெரிய அதிகாரியாக உயர்ந்தார். ஓட்டுனரின் அருகில் முன்னிருக்கையில் அமர்ந்திருந்த கோபாலனுக்கு இளைய மகன் வாசுவின் குரலில் நினைவு கலைந்தது.
‘அப்பா இன்னைக்கே திரும்பிடலாமா?
‘ஏன்’ என்று திரும்பிப் பார்த்தார், மனைவி கிரிஜை பெரியவன் ரகுவின் தோளில் சாய்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள்.
‘எப்படிடா முடியும், நம்ம பூஜை முடியவே நாலு மணியாகிடும்.’
இப்ப சொன்னா அப்பா என்ன செய்வார் நீ ஊர்லயே சொல்லியிருக்கணும் ‘நாளன்னிக்கு ஒரு இன்டர்வியூ வந்திருக்குது ரகு, இப்போதான் மெசேஜ் வந்தது’
இவர்கள் பேச்சில் எழுந்துகொண்டாள் கிரிஜை.
‘ பூஜைய முடிச்சிட்டு ஊர்ல போய் தங்கிட்டு நாளைக்கு மதியம் கெளம்பலாம் இல்லிங்க’
‘ ராத்திரி ஒருமணி போல சென்னைக்குப் போயிடலாம், சரி அப்படியே செய்வோம்’ என்றார் கோபாலன்.
மனைவியின் சாதுரியம் அவருக்குப் பல நேரங்களில் உதவும். தங்கள் இனத்தில் பெரும்பாலும் ஓவல் முகம்தான் , ஆனால் கிரிஜைக்கு மட்டும் அழகான வட்டநிலா முகம்.
கோபாலன் வேலையில் சேர்ந்ததும் திருமணப்பேச்சை எடுத்தாள் மாதி. அத்தை மகள் ரங்கி இருந்தாள் தயாராக.இவருக்கு அவளைப் பிடிக்கவில்லை, சொன்னால் அவள் மனம் நோகும் என்பதால் இன்னும் மூன்று வருடம் போகட்டும் என்று சொல்லிவிட்டார். இவரது நல்ல நேரம் வற்புறுத்தும் முன் ரங்கியை இன்னொரு மாமன் மகனுக்கு கேட்டார்கள் நல்லபடியாக மணம் முடிந்தது. அம்மாவைத் தனியாக விட மனமின்றி எவ்வளவோ சொல்லிப் பார்த்தார் மாதி கேட்கவில்லை, ஊரும் உறவும், துண்டு நிலமும் பார்க்காமல் இருக்க முடியாது என்று சொல்லி விட்டாள்.
‘ உனக்கென்ன ராசா கவலை? , முடியாதப்போ உன்னோட வந்துடறேன் ‘
என்றாள். கோவைக்கு மாற்றலாகி வந்தபின் நகரத்துச் சந்தடியிலிருந்து மீண்டு எழில் கொஞ்சும் இயற்கை அன்னையின் வாசத்தை நுகர ஒவ்வொரு வாரமும் ஊருக்கு வந்துவிடுவார். அப்படி வந்திருந்தபோது ஒரு நாள் சாயந்திரம் வைத்தியரிடம் அம்மாவின் காய்ச்சலுக்கு மருந்து வாங்கிக்கொண்டு திரும்புகிறார்.அருவிக்கரை வந்தபோது கண்கள் எதேச்சையாக கீழே பார்க்கின்றன. நான்கைந்து பெண்கள் நீராடிக் கொண்டிருந்தார்கள்.கல்லில் மஞ்சளை உரசி முகத்திலும் தோளிலும் பூசிக்கொண்டு நிமிர்ந்தவள் கோபாலனைப் பார்த்துகொண்டே நடந்து கல்தடுக்கி விழுந்து சுழலில் சிக்கிக் கொண்டாள். மற்றபெண்கள் இட்டகூச்சலில் அப்படியே நீரில் குதித்து அவளைக் கரைசேர்க்கிறார் இவர். அப்புறமென்ன?அவளையே பேசிமுடித்து மனைவியாக்கினாள் மாதி.
கிரிஜையின் நல்லகுணம் இன்றுவரை மாறவில்லை மாமியார் மெச்சும் மருமகளாகவே இருந்தாள்.
கோவிலுக்கு வந்து சேர்ந்தார்கள். அத்தை, மாமன்,மைத்துனன், சித்தப்பன், பெரியப்பன் குடும்பங்கள் என்று முப்பது பேருக்குக் குறைவில்லை. கோவில் அப்படி ஒன்றும் பெரியதில்லை, கோபுரம், மண்டபம், கொடிமரம் இவை எதுவும் இல்லாத சிறிய கோவில்.சுற்றிலும் உள்ள பலகிராமங்களுக்கு இவள்தான் குலதேவதை.இத்தனை ஆண்டுகளில் கோவிலைப் பெரிதாகக் கட்டி இருக்கலாம்.ஆனால் எதுவும் செய்யவில்லை, இதற்கு ஒரு கதையும் சொல்லி வந்தார்கள். முன்னொரு காலத்தில் தாருகாசுரன் என்ற அரக்கன் கடுந்தவம் செய்து சிவபெருமானிடம் சில வரங்கள் கேட்டான்.அதிலொன்று சாகாவரம். அது சாத்தியமில்லை என்றாராம் ஈசன்., அப்படியென்றால் யோசித்த அரக்கன் பெண்கள் பலவீனமானவர்கள், அதனால் பெண்ணொருத்தியின் கையால் மட்டுமே மரணம் ஏற்படவேண்டும் என்று கேட்டுக் கொண்டானாம். அதன்பின் தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் அளவற்றத் துன்பங்கள் தந்து வாழ்கிறான்.அவனது கணக்கு முடிக்க வேண்டிய தருணம் வந்ததும் ஈசன் உமையவளுக்கு ஆணையிடுகிறார். அம்பிகையின் கண்களிலிருந்து நஞ்சைவிடக் கொடிய ஒரு கனல் தோன்றுகிறது அது அவனை எரித்துச் சாம்பலாக்குகிறது. அவளுடைய கோபாக்கினி திரண்டு ஒரு குழந்தையாகிறது. இன்னும் உக்கிரம் தீராமல் விஷப்பாலையே அதற்கு புகட்டுகிறாள் அம்பிகை.இதைக்கண்ட ஈசன் அது வளர்ந்தால் உலகிற்குப் பெரிய தீங்காகும் என்று அந்தக் குழந்தையையும், விஷக்கனலையும் தன்னுள் ஒடுக்கிக் கொள்கிறார். குழந்தையின் அழுகுரல் கேட்டுக்கொண்டே இருந்ததைத் தாங்க முடியாது வழியும் கண்ணீரோடு வனத்தில் வந்து அமர்ந்துவிட்டாள். புற்று வளர்ந்து மூடிக்கொண்டது..
பெரும் வணிகர் ஒருவர் தனது மகளை மணம் செய்து கொடுக்க மணமகனின் ஊருக்கு சொந்த பந்தங்களோடு ஆறு வண்டிகளில் புறப்படுகிறார், உடன் ஏவலர்களும் வருகிறார்கள். இரவாகிவிட்டது, இந்த வனத்தைக் கடந்துவிட்டால் போதும் பயமில்லை.மாடுகளை விரைவாக ஓட்டுகின்றனர்.ஆனால் அதற்குள் கள்வர் கும்பல் ஒன்று அவர்களை வழிமறிக்கிறது. மாடுகள் மிரள்கின்றன.பெண்களைத் துரத்துகிறார்கள், மணப்பெண்ணும், இன்னும் சிலரும் புற்றுக்கு அருகில் தடுக்கி விழுகிறார்கள். எங்கிருந்து வந்தாள் என்றே தெரியாமல் காட்டுவாசிப் பெண்ஒருத்தி கையில் வில் அம்பு ஏந்தி வருகிறாள். கண்ணிமைக்கும் நேரத்தில் கள்வர்கள் அடிபட்டு அஞ்சி ஓடுகிறார்கள். காட்டு எல்லை வரையில் காவலாக வருகிறாள் அவள். அங்கேயே நின்றுவிடுகிறாள். அதற்குப் பிறகு புற்று சரிந்து பெரிய தெய்வீகமான அம்மன்சிலை அங்கிருப்பது தெரியவருகிறது.கோவில் கட்ட முனைகிறார் வணிகர்.’தனக்குப் பெரிய ஆலயம் கட்டவேண்டியதில்லை வழிபட்டால் போதும், வனதேவியாக அருள்பாலிப்பேன்என்று அருள்வாக்கு தந்துவிட்டாள்.அதனால்தான் தலைமுறை ,தலைமுறையாக இப்படியே வழிபாடு செய்கிறார்கள்
சுற்றிலும் பெரிய திடல், அருகில் மரங்கள், சற்றுத் தொலைவில் ஒரு நீரோடை, மலையிலிருந்து வருவது, நல்லகோடையில் கூட நீர்வரத்து இருக்கும். ஏற்கெனவே பூசாரி எல்லா ஏற்பாடுகளும் செய்திருந்தார். கற்களை அடுக்கிப் பொங்கல் வைத்தார்கள். கிடா வெட்டியதும் பெரிய படையல் இடப்பட்டது. எல்லோரும் உண்டு முடித்து கலகலப்பாகப் பேசி விடைபெற்று வேனில் ஏறினார்கள்.அவர்களை அனுப்பிவிட்டு சொந்த ஊருக்கு வந்து இரவு தங்கி விட்டு மறுநாள் சென்னை புறப்பட்டது கோபாலன் குடும்பம். பிள்ளைகளின் படிப்பிற்காக சென்னைக்கு மாறுதல் வாங்கிக் கொண்டு அங்கேயே சொந்த வீடும் வாங்கிவிட்டார் கோபாலன்.
எட்டு வருடங்களுக்கு முன்னர் பள்ளிக்கூடம் கட்டவேண்டும் என்று அரசாங்கத்தினர் மாதியின் நிலத்தையும் கேட்டனர். உயிராக இருந்த மண்ணைப் பிரிய மனமில்லை, ‘இருந்தாலும் நாலு புள்ளைங்க படிக்கத்தானே தரோம்’ என்று சம்மதித்தாள்.அதற்கப்புறம் சென்னையிலேயே தங்கிவிட்டாள். இவரும் பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.பெரியவன் ரகு பொறியியல் படித்துவிட்டு பெரிய நிறுவனங்கள், அலுவலகங்களுக்கு ஏ.சி. பொருத்தும் ஒப்பந்தம் எடுத்துச் செய்து வருகிறான்.மூன்றாண்டுகளில் நல்ல வளர்ச்சி. இளையவன் வாசு கேட்டரிங் எடுத்துப் படித்து முடித்திருக்கிறான். தன்னோடு இருந்து தொழிலைப் பார்த்தால் உதவியாக இருக்கும் என்கிறான் ரகு. ஆனால் இவனுக்குப் பெரிய நட்சத்திர உணவகங்களில் பணிபுரிய ஆசை. அதற்கான இன்டர்வியூவிற்குதான் செல்கிறான் இப்போது.
‘அம்மா கெளம்பறேன்’ ‘நல்லது வாசு, பத்திரமா போயிட்டு வா’
‘ ஏங்க வாசுவை விட்டுட்டு வரும்போது காய்கறி வாங்கிட்டு வந்துடுங்க’
சரி சரி எனப் புறப்பட்டார் மகனோடு.
மாலையில் வீட்டிற்கு வரும்போது சந்தோஷத்தில் மிதந்துகொண்டிருந்தான் வாசு.
‘ அப்பா எனக்கு வேலை கெடைச்சிடுச்சி’
‘நல்லது, எல்லாம் பாட்டியின் ஆசீர்வாதம்’
‘அம்மா, எங்கே தெரியுமா?’
‘ எங்கே வாசு?’
கையை விமானம் பறப்பதுபோல் காட்டி மலேசியாவில் என்றான்.
ஐந்து நட்சத்திர உணவகம் ஒன்றிற்கான நேர்காணல் ஏஜென்ட் வைத்து நடத்தியிருந்தார்கள்.அதில் தேர்வாகியிருந்தான் வாசு.
‘அப்பா பாஸ்போர்ட்டும் ஏழுஇலட்சம் பணமும் தரவேண்டும்’
‘ எதற்குடா, டெபாசிட் கேக்கறாங்களா?’
‘ஆமாம் ரகு, டெபாசிட் ஆறு இலட்சம், தங்குமிடம்,பயணம் இதற்கான ஏற்பாட்டுக்கு ஒரு இலட்சம்.”
‘நல்லா விசாரிச்சியா, ஏமாத்த மாட்டாங்களே?’
‘இல்லைப்பா, அருணும் ( வாசுவின் நண்பன்) வரான்’
‘உடனே எப்படிடா இவ்ளோ பணம் ஏற்பாடு பண்றது?’
‘அப்பா தம்பிக்கு நான் தரேன், நல்லபடியா அனுப்பி வைப்போம்’
‘சரி ரகு, எதுக்கும் நீ இவனோடு போய் விசாரிச்சிட்டு பணம் கட்டிட்டு வா’
‘சரிப்பா’
அடுத்த இருபதாவது நாள் சந்தோஷமும், கவலையுமாக வாசுவை விமான நிலையத்தில் வழியனுப்பி வைத்தது கோபாலனின் குடும்பம்.
‘ வாசு பத்திரமா இரு, போய் சேர்ந்ததும் பேசு’
‘சரிமா. நீ கவலைப்படாதே.’
அந்த நிறுவனத்தின் மேலாளர் வெவ்வேறு உணவகங்களுக்குத் தேர்வாகியிருந்த இருபது பேரையும் வாழ்த்தி வழியனுப்பினார்.
முதல்முறையாக விமானப்பயணம். குதூகலமாக விதவித கனவுகளில் பாதி உறக்கத்தில் கழிந்தது.கோலாலம்பூர் பன்னாட்டு விமான நிலையத்தில் இறங்கியதும் பிரமித்துப்போனார்கள். அங்கு இவர்களுக்காக ஒரு அலுவலர் வேனோடு காத்திருந்தார் அன்போடு வரவேற்று ஆங்கிலத்தில் உரையாடினார். நகரின் அழகு அற்புதம், ஐந்து மணிநேரம் போனதே தெரியவில்லை. வழியில் ஒரு பெரிய உணவகத்தில் இவர்களுக்கு உணவு வழங்கினார்கள். தங்குமிடத்திற்கு வந்து சேர்ந்தபோது நள்ளிரவாகி விட்டது. நெரிசலான கடைவீதியில் ஒரு கட்டிடம். அதில் மூன்றாவது மாடியின் ஒரு அறையில் தங்க வைத்தார்கள். பத்து பேர்தான் தங்க முடியும். அதில் நெருக்கமாக அவரவரின் படுக்கைகளை விரித்துப் படுத்தார்கள். இரண்டு நாளில் வேலையில் சேர்ந்ததும் வேறு இடம் தருவோம் என்று சொல்லிச் சென்றார் வந்தவர்.
சரி பரவாயில்லை என்று நினைத்தான் வாசு. மறுநாள் காலையில் அனைவரும் தயாராகி வேனில் ஏறினர்.அனைவரின், பாஸ்போர்ட், அலைபேசிகளை இரவு பெற்றுக் கொள்ளலாம் என்று வாங்கிக் கொண்டார்கள். ஒவ்வொருவரும் ஒரு இடத்தில் இறக்கி விடப்பட்டனர். வாசு ஒரு சந்திலிருந்த சிறிய தெருவோரக் கடைக்கு அழைத்துச் செல்லப்பட்டான்.
மலாயா மொழியில் இவனை வரவேற்று அடுப்படிக்கு அனுப்பினார் முதலாளி. திகைத்துப்போனான். இவன் நட்சத்திர ஹோட்டல் பணிக்கு வந்ததாக ஆங்கிலத்தில் சொன்னான். அவருக்குப் புரியவில்லை. பரோட்டா போடவேண்டுமென்று அழைத்துச் சென்று காட்டினார்.வேறு வழியில்லை, மாவு பிசைந்தான், இரவு எட்டு மணிக்கு வேன் வந்து அழைத்துச் சென்றது அதே அறைக்கு. அலைபேசியும், பாஸ்போர்ட்டும் கிடைக்கவே இல்லை. நட்சத்திர விடுதி தெருவோரக் கடையானதில் ஏமாற்றப்பட்டது புரிந்தது. தப்பித்துப் போகவும் வழியில்லை, கிங்கரர்கள் போல் காவலிருந்தார்கள் இருவர். பத்தே நாளில் வாசு பாதியாகிப் போனான்.
ஒரு நாள் கடை வழியாகச் சென்ற ஒரு முதியவர் அலைபேசியில் ஆங்கிலத்தில் பேசிக்கொண்டு சென்றதைப் பார்த்தான், ஓடோடிச் சென்று அவரிடம் கெஞ்சி அலைபேசியை வாங்கி ரகுவிற்குத் தன் நிலைமையைச் சொல்லி விட்டான். இதைப் பார்த்துவிட்ட கடை உரிமையாளர் விட்ட அறையில் சுருண்டு விழுந்தான்.
கோபாலனும். ரகுவும் செய்த பெரு முயற்சியில் இருபது நாட்களுக்குப் பிறகு அனைவரும் மீட்கப்பட்டனர்.
வாசு இப்போது அண்ணனுக்கு உதவியாக இருக்கிறான். அவனது கனவு கலைந்ததில் அவனுக்கு வருத்தம் துளியும் இல்லை. மீண்டு வந்ததே போதுமென்று நினைத்திவிட்டான்.