கிரிவலம்

author
0 minutes, 0 seconds Read
This entry is part 6 of 8 in the series 13 அக்டோபர் 2024

கங்காதரன் சுப்ரமணியம்

நான் ரொம்ப நாளாக நினைத்துக் கொண்டிருக்கிறேன் கிரிவலம் போக வேண்டுமென்று. ரொம்ப நாளாக என்றால், கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு மேலாக. போய் அருணாச்சலேஸ்வரனையும், உண்ணாமலையையும் தரிசித்து விட்டு வர வேண்டும் என்று ஆசை. என்ன காரணமோ தெரியவில்லை, தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது. எல்லாவற்றிற்கும் வேளை வர வேண்டுமே?

ஐந்து வருடங்களுக்கு முன், ஒரு சித்ராபவுர்ணமியன்று கிரிவலம் போய் வந்த என் நண்பர், அந்த அனுபவத்தை மெய்சிலிர்ப்புடன் விவரித்திருந்தார். அந்த மலை முழுக்க நிலவொளியில் ஜொலித்து, அமானுஷ்ய சூழலுடன் இருக்கும். மலையிலிருந்து வீசும் மூலிகை வாசம் கலந்த காற்று, நம்மை தேவலோகத்திற்கே அழைத்துச் செல்லும். நம்முடன் சித்தர்களும் அரூபமாக வருவார்களாம் என்றெல்லாம் சொன்னார். அன்றிலிருந்து கிரிவலம் போயே தீர வேண்டும் என்று ஆசை வந்தது. அப்போதிலிருந்து பிளான் செய்து கொண்டிருக்கிறேன் திருவண்ணாமலை போக வேண்டுமென்று.

கூடவே, அவ்வப்போது நிறைய சந்தேகங்களும் வந்து கொண்டிருந்தது

மலையைச் சுற்றி வர பதினாலு கிலோமீட்டர் எனப் படித்தேன். அவ்வளவு தூரம் ஒருசேர நான் நடந்ததில்லை. கால் வலிக்காதோ? ஏற்கெனவே இடது கால் கொஞ்சம் வலித்துக் கொண்டிருந்தது. இடது பக்கம் நம் இதயம் சம்மந்தப் பட்டதாமே? சரி, எதற்கும் போவதற்கு முன் ஒருமுறை ஃபுல் பாடி ஸ்கேன் செய்து கொண்டுவிட வேண்டும். வோலினி ஸ்ப்ரேயும், பெயின் கில்லரும் கைவசம் வைத்திருக்க வேண்டும்.

இரவு வேளையில் நடந்தால் குளிருமோ? எதற்கும் ஒரு மஃப்ளரும், தொப்பியும் எடுத்து வைத்துக் கொள்வது நல்லது. வெயிலை எப்படியாவது தாங்கிக் கொள்ளலாம், ஆனால் இந்த குளிர் இருக்கிறதே, அது நமக்கு முற்றிலும் ஒத்துவராத சமாச்சாரம்.

மற்ற சமயங்களிலெல்லாம் வானிலை சரியாக இருக்கும். நாம் எங்காவது போக வேண்டும் என்று பிளான் செய்தால், அப்போதுதான் மழைவரும். எதற்கும் கிளம்பும்முன் ஒரு தடவை வானிலை அறிக்கையையும் செக் செய்து விட வேண்டும். குடை ஒன்று கொண்டு செல்வது புத்திசாலித்தனம்

ஆமாம், கிரிவலம் போகும்போது பேண்ட் போட்டுக் கொண்டு போவதா இல்லை, பராம்பரியமாக வேஷ்டி கட்டிக்கொண்டு போவதா? பதினான்கு கிலோமீட்டர் நடக்கும்போது வேஷ்டி அவிழ்ந்து விடாமல் இருக்க வேண்டுமே? பேண்ட்தான் சௌகரியம். பர்ஸ், மொபைல் வைத்துக் கொள்ளவும் வசதியாக இருக்கும். இல்லையென்றால் இதற்காக ஒரு ஜோல்னா பையையும் தூக்கிக் கொண்டு போக வேண்டியதிருக்கும். கோவிலுக்கு போகும்போது வேண்டுமானால் வேஷ்டி கட்டிக்கொண்டு போகலாம்.

இரவு வேளையில் நடக்கும் போது வழியில் பாம்பு, பூரான் என்று எதையாவது மிதித்து விட்டால்? ஒரு டார்ச் லைட் பாதுகாப்புக்கு நிச்சயம் தேவை.

முக்கியமான விஷயம் மறந்துவிட்டேனே? எங்கே தங்குவது? லட்சம் பேர் கூடுவார்களாமே? தங்குவதற்கு ஒரு நல்ல ஹோட்டல் ரூம் கிடைக்குமா? கோவிலுக்கு சமீபத்திலும் இருக்க வேண்டும், அதேசமயம் ரூம் வாடகை என்கிற பெயரில் பகல்கொள்ளையடிக்கப்படாமலும் இருக்க வேண்டும். முன்பதிவு செய்வது அத்தியாவசியம். அங்கே ப்ரோக்கர்களிடம் மாட்டினால் அவ்வளவுதான். பேண்ட், சட்டையை உருவி விடுவார்கள்.

காலிங்பெல் சத்தம் கேட்டது. போய்க் கதவைத் திறந்தேன். பக்கத்து வீட்டுக்காரர் குமாரசாமி நின்று கொண்டிருந்தார். “வாங்க சார், எப்படி இருக்கீங்க?” என்று உள்ளே அழைத்தேன்.

சோபாவில் உட்கார்ந்தவர், “ஒண்ணும் இல்லை. நேத்திக்கு திருவண்ணாமலை போயிட்டு வந்தேன். அதான் உங்களைப் பார்த்து விபூதி, குங்குமம் பிரசாதம் குடுத்துட்டு போகலாம்னு வந்தேன்” என்றார்.

“திருவண்ணாமலை போயிருந்தீங்களா? எப்போ பிளான் பண்ணீங்க? கிரிவலம் போனீங்களா?” என்று கேட்டேன்.

“இதெல்லாம் பிளான் பண்ணிட்டு இருக்க முடியுங்களா? முந்தாநாள் திடீரென்று போகணும்னு தோணிச்சு. ஒரு வேஷ்டி, டவல் எடுத்து வைச்சுக்கிட்டு, தோள்ல ஒரு பையை மாட்டிக்கிட்டு கிளம்பிட்டேன். அங்கே போய் கிரிவலம் போகலேன்னா எப்படி?”

என் மனைவி, “இருங்க, காபி கொண்டு வரேன்” என்று உள்ளே போனாள்.

“நேத்திக்கு பவுர்ணமி இல்லையே? பகல்லே கூட கிரிவலம் போகலாமா என்ன?”

“பவுர்ணமியன்னிக்குத்தான் போகணும், ராத்திரிதான் போகணும்னு ரூல்ஸ் இருக்கா என்ன? நமக்கு எப்போ போகணும்னு தோணுதோ அப்போ போகலாம். அண்ணாமலையான் வேணாம்னா சொல்லுவாரு?” என்றார் குமாரசாமி.

காபி கொண்டு வந்து கொடுத்தாள் என் மனைவி.

“எங்கே தங்கினீங்க? ஹோட்டல் ரூம் கிடைச்சுதா?

“போக வர பஸ்ஸுலேயே தூங்கிட்டேன். காலையிலே அங்கே ஒரு ஹோட்டல்லே நூறு ரூபாய்க்கு, ஒரு மணிநேரம் ரூம் எடுத்துக்கிட்டு, காலைக்கடன்களை முடிச்சு, டிரஸ் சேஞ்ச் பண்ணிக் கொண்டு கோவிலுக்குக் கிளம்பிட்டேன். தரிசனம் முடிஞ்சு கிரிவலம் போனேன். பிறகு ஹோட்டல்லே சாப்பாடு. அப்புறம் கோவில்லேயே ரெஸ்ட் எடுத்துட்டு கிளம்பிட்டேன்” என்றார் குமாரசாமி.

“அட பரவாயில்லையே. எல்லாமே சுலபமாக முடிச்சுட்டீங்களே” என்றேன்.

“என்ன சார். இதுக்கெல்லாம் போய் மண்டையைப் போட்டு குழப்பிக்கிட்டு இருப்பாங்களா?” என்றார்.

என் மனைவி என்னை பார்த்து ஏளனமாகச் சிரித்தாள்.

காபியை குடித்துவிட்டு “நான் வரேன். கொஞ்சம் அவசர வேலையிருக்கு” என்று இருவரிடமும் விடை பெற்றார்.

குமாரசாமி போனதும், நான் மீண்டும் யோசனையில் ஆழ்ந்தேன். காபி டம்ளரை எடுத்துக் கொண்டு போக வந்த என் மனைவி, என்னைப் பார்த்து “என்ன யோசனை?” என்று கேட்டாள்.

“இல்லை. கிரிவலம் போகும்போது செருப்பு போட்டுக் கொண்டு போகலாமா, இல்லை வெறுங்காலில் நடக்க வேண்டுமா என்று கேட்க மறந்து விட்டேன்” என்றேன்.

“நீங்கள் எங்கேயும் போகப் போவதில்லை. இங்கேயேதான் இருக்கப் போகிறீர்கள்” என்றாள் என் மனைவி.


Series Navigationபைத்தான்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *