வசந்ததீபன்
உயிருக்குள் உயிர் என்றாய்
உடலின் பாதி என்றாய்
உதிர்த்த இறகாக்கி
நீ பறந்தாய்
அவரவர்க்கு அவரது நியாயம்
எனக்கும் இருக்கிறது
உனக்கும் உள்ளது
அறம் குறித்தோ அவகாசமில்லை
சிறு நாவாய் அசைந்து போகிறது
நீர்ப்பாலை விரிந்து கிடக்க
கரை தொடும் ஏக்கம்
கொடுங்காற்றாய் வீசுகிறது
காற்றில் கண்ணீர் வாசம்
இறக்கை முளைக்காத
புறாக்குஞ்சுகளின் ரத்தக்கவிச்சியில்
நனைந்தபாடல் கடந்து செல்ல…
மிதந்து செல்கின்றன வார்த்தைகள்
கனிந்து உதிரப்போகிறது வாழ்க்கை
உயிர்காற்றே என்னோடு
சற்று பேசிவிடு
நீந்திப் போகிறேன்
நீளும் நீர் சாலை
நிறம் மாறிக் கொண்டிருக்கிறது தொடுவானம்
என்னைக் கடந்து செல்லும் காற்றில் கண்ணீர் வாசம்
என்நிழலில் வந்து பதுங்குகின்றன இறக்கை முளைக்காத புறாக்குஞ்சுகள்
ரத்தகவிச்சியில் நனைந்த பாடல்
என் செவிப்பறையில் மோதுகிறது
என் இதயம் மெழுகாய் உருகி வடிந்து கொண்டிருக்கிறது
என் உயிர் பறவையாய் பறந்து போகிறது
நான் மெளனமாய் யாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.