வெற்றியின் தோல்வி

author
1
0 minutes, 54 seconds Read
This entry is part 6 of 7 in the series 24 நவம்பர் 2024

சசிகலா விஸ்வநாதன்

               கடற்கரை சாலையில் அமைந்த அந்த அரசு அலுவகத்தில் அன்று  பரபரப்பு  கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. பல்வேறு முயற்சிகள், வெகு வருட காத்திருப்புகள், அலுப்பூட்டும் தள்ளிவைக்கப்பட்ட தேர்வுகள்; இதை எல்லாம் கடந்து நேர்முகத் தேர்விற்குத் தேர்ச்சியான  இருபது பேர் வந்திருந்தனர். பத்து காலியிடங்களுக்கு இருபது பட்டதாரிகளுக்கிடையே போட்டி. அனுராதா ஆட்டோவில் இருந்து இறங்கின அதே தருணத்தில் தன் அண்ணனோடு கூட வந்து இறங்கிய சத்யாவைக் கண்டு சற்றே மனம் சுருங்கினாள். இருவரும் ஒரே பள்ளியிலும் கல்லூரியிலும் படித்தவர்கள். நெருங்கிய நட்பு,என்று சொல்ல முடியாது; எனினும்,ஒரு அளவு பழக்கம் இருக்கத்தான் இருந்தது.  ஒரிரு  முறை சிறு உதவிகள்  ஒருவருக்கொருவர் செய்திருந்திருந்த சந்தர்ப்பங்களும் உண்டு.

                        ஆக; சத்யாவும்  இந்த தேர்வு எழுதியுள்ளாள் என்பதும் தேர்ச்சி பெற்றுள்ளாள் என்பதும் அவளுக்கு ஒரு இனம் தெரியாத சங்கடத்தை உண்டு பண்ணியது.ஆனாலும்,புன்முறுவல்  பூத்த வண்ணம் சத்யா நெருங்கி வந்து, அனு! நீயும் தேர்வாகி வந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. நாம் இருவரும் ஒன்றாக வேலையும் பார்க்கப் போகிறோமா? என்னால் நம்பவே முடியவில்லை;” என்று சொல்லவும்; அனுராதாவும் புன்னகை பூத்தாள்” ஆமாம்!  உன்னை தேர்வு நடக்கும் இடத்தில் நான் பார்க்கவே இல்லயே!” என்றாள். ” ஆமாம்; அனு!  நான் திருச்சி மையத்தில் எழுதினேன். நான் திருச்சியில் ஒரு தனியார் பள்ளியில் தற்காலிகமாக  பயிற்சி ஆசிரியராக  பணிபுரிந்து வருகிறேன். இரண்டு நாட்கள் விடுப்பில் இந்த நேர்முகத் தேர்வுக்கு வந்துள்ளேன். பார்க்கலாம். என் அதிர்ஷ்டத்தை. என்றாள்

                    காலை பத்து மணிக்கு துவங்க வேண்டிய நேர்முகத்தேர்வு மதியம் பன்னிரெண்டு மணிக்குத் தான் ஆரம்பம் ஆகியது. அனுராதவிற்கு  மதியம் ஒரு மணிக்கே நேர்முகத்தேர்வு முடிந்து விட்டது. மாலையில் தான் முடிவு சொல்லப்படும் என்று சொன்னதில்  கொஞ்சம் நம்பிக்கையாக இருந்தாள். சில பேர்களை காத்திருப்பு பட்டியலில் வைத்திருப்பதாகவும்; அடுத்தடுத்து காலியிடங்கள் உனக்கு மதிப்பெண்ணில் அடிப்படையில் பணிநியமன உத்தரவு வரும் என்றும் அறிவித்தார்கள்.

                         மதியம் மூன்று மணி போல் சத்தியாவிற்கும் நேர்முகத்தேர்வு முடிந்து, அவளும்  உற்சாகமாக வெளியே வந்தாள். ” அனு! என்னையும் மாலை ஐந்து மணிவரை காத்திருக்கச் சொல்லி யிருக்கிறார்கள்”என்று  மலர்வாகக் கூறினாள்.”இவள் ஏது; எனக்குப் போட்டியாக இருக்கிறாளே,” என்ற நினைப்பு  அனுவின் மனதில் ஓடாமல் இல்லை.

                      ஆயினும், இருவருக்கும் ஒருவிதமான நம்பிக்கை இருந்தது.இருவரும் கடற்கரை சாலையில் காலாற நடந்து,ஒரு விடுதியில் காஃபி அருந்திவிட்டு ஐந்து மணிக்கு மீண்டும்  அந்த அலுவலகத்திற்கு வந்தார்கள். அறிவிப்பு பலகையில் தேர்வானவர்களின் பெயர் பட்டியலும், அவர்கள் வாங்கின மதிப்பெண்களோடு அறிவித்து இருந்தனர். பட்டியலில் முதலாவதாக பவன் குமார் என்ற பெயரும் அடுத்து சத்யாவின் பெயரும் அதற்கும் அடுத்தது அனுராதாவின் பெயரும் இருந்ததைக் கண்டு இருவரும்  மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். அங்கு இருந்த உதவியாளர் ” மேடம்! தேர்வான பேர்களை முதல் மாடியில் கான்பரன்ஸ் ஹாலுக்கு வந்து பணி நியமன உத்தரவு கடிதத்தை வாங்கிக் கொள்ள சொன்னார்கள்” என்றதும், உற்சாகத்துடன் இருவரும் சென்றார்கள். கான்பரன்ஸ் ஹாலில் அலுவலக உயர் அதிகாரியும் தேர்வான பத்து பேர்களும் அமர்ந்திருந்தனர். எல்லோருக்கும் சுவையான தேநீர் கொடுக்கப்பட்டது‌

                      பின்னர், அந்த உயரதிகாரி சிறிய வாழ்த்து செய்தியுடன்,அந்த அலுவலகம் பற்றி ஒரு அறிமுகம் செய்து, ஒவ்வொருவராக பெயர் விளித்து  பணி நியமன ஆணையை கொடுத்தார்.அந்த ஆணையில் அவரவர்  வாங்கின மதிப்பெண்களின் அடிப்படையில் பணிமூப்பு  நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது கண்டு, அனுராதாவிற்கு” “சுறுக்” என்று தைத்தது; மனதில் ஒரு முள். அவளால் பணி நியமனத்தில் முழுவதுமான மகிழ்ச்சி கிடைக்கவில்லை‌.”இனி வரும் வருடங்களில் சத்யா தன் “சீனியர்” என்ற எதார்த்தத்தை ஏற்றுக் கொள்வது, மனதில் கசப்பை உண்டாக்கியது‌ பொங்கும் உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொண்டு சத்யாவுக்கு வாழ்த்துகள் சொன்னாள். “அனு !  நான் திருச்சி போய்  எனது வேலையை ராஜினாமா செய்து விட்டு ,அத்தையிடம் விடைபெற்று வர ஒரு வாரம் ஆகும். அதற்கு அனுமதி  வாங்கி வருகிறேன். நீ என்று பணியில்  சேரப் போகிறாய்?” என்று கேட்டாள்.” நாளையே நான்  பணிக்கு அறிக்கை செய்ய எண்ணுகிறேன். இங்கு தானே நான் இருக்கிறேன்” என்று விடை பெற்று, மெட்ரோ நிலையத்திற்கு விரைந்தாள்.

              மனதில் என்னன்னவோ எண்ணங்கள். “சத்யா இந்த இரண்டு வருடமும் ஒரு வேலையில் இருந்து சம்பாதித்துக் கொண்டிருந்து இருக்கிறாள். நான் வெறுமே இங்கும் அங்கும்  பிரயாணம் பண்ணிக் கொண்டு நேரத்தை வீணாக்கி விட்டேனோ;” என்னும் வகையில் நினைப்பு  ஓடிக்கொண்டே இருந்தது என்பது மிகையாகாது‌

                    வீட்டில் எல்லோருக்கும் மிகுந்த மகிழ்ச்சி‌ அண்ணன் இனிப்பு வாங்கி வந்து மகிழ்ந்தான்‌. அப்பாவுக்கும் அம்மாவுக்குப் பெருமை: தாளவில்லை.‌ ஆளாளுக்கு அவளுக்கு வாழ்த்துகள்‌‌… ஃபோனிலும்; நேரிலும். அதை அனுராதா வினால் தான் அனுபவிக்க முடியவில்லை.

                     அனுராதாவிற்கு  தலை வலிப்பது போல் இருந்தது. மறுநாள் அவள் அலுவலகத்திற்கு அறிக்கை செய்ய செல்லும்போது,முதல் இடத்தில் இருந்த பவன்குமார், தான் அந்த வேலையில்  சேர முடியாததற்கு வருத்தம் தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளதாகவும், அதனால் காத்திருப்பு பட்டியலில் இருந்த அடுத்த நபருக்கு பணி நியமன உத்தரவு அனுப்ப ஏற்பாடு நடந்து கொண்டிருந்தை அறிந்து கொண்டாள். “ஏதாவது நடந்து சத்யாவும் பணியில் சேராமல் இருந்தால்…” இந்த நினைப்பே  அனுராதாவிற்கு இனித்தது.

                 அன்று இரவு சத்யா அவளிடம் பேசி அலுவலகத்தைப் பற்றி விசாரித்தாள். தான் வரும் ஞாயிறு அன்று கிளம்பி வருவேன் என்றும்; திங்கள் கிழமை பணிக்கு அறிக்கை செய்து கொள்ள இருப்பதாகவும், இருவரும் சேர்ந்து பணி செய்யும் நாட்களை தான் ஆவலுடன் எதிர்பார்ப்பதாகச் சொல்லி சந்தோஷப்பட்டுக் கொண்டாள்‌. அனுராதாவிற்கு மனது சற்றே குறுகுறுத்தது; எனினும்”இவள் தொல்லை விடாது போல் இருக்கிறதே” என்றும் நினைப்புடன் உறங்கச் சென்றாள்.

                     அந்த  வாரம் அலுவலகம் புது நண்பர்கள்; புது வேலை என்று இனிமையாகப் போயிற்று. நாளை வரும் திங்கள் கிழமையை நினைத்தாலே, வெறுப்பாக இருந்தது‌

                     அன்று இரவு இரவு  எட்டு மணி செய்தியில் திருச்சி சென்னை  நெடுஞ்சாலை விபத்து நடந்ததை தொலைக் காட்சியில் காண்பித்ததைப்  பார்த்து திடுக்கிட்டாள்‌. ஏதோ விபரீதம் நடந்திருக்குமோ என்ற துடிப்பு அவள் மனதில். எவரிடம் ‌‌ என்ன கேட்பது என்று புரியாமல் குழம்பினாள். அவளுடைய கல்லூரி நண்பர்களிடம் யதார்த்தமாக பேசிப்பார்த்ததில் எவரும் எதுவும் சொல்லாதது அனுவுக்கு அமைதியைத்தான் அளித்தது.

                திடீரென அலைபேசி ஃபோன் சிணுங்க;  சத்யாவின் பேர் ஒளிர; சற்றே பயத்துடன்” ஹலோ; சத்யா” என்று பேச முற்பட , பேசியது அவள் அண்ணன்‌ சத்யா இன்று நடந்த சாலை விபத்தில் சிக்கிக் கொண்டு கால் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்த்து இருப்பதாகவும். பணியில் சேர இன்னும் அவகாசம் வேண்டுவதாகவும் ; இதை எவருக்குத் தெரிவிக்க வேண்டும்  எனக்கு கேட்டது; அவளுக்கு நிம்மதியாக இருந்தது.அலுவலகத்தின் எண்ணையும்,உயர் அதிகாரியின் ஃபோன் எண்ணையும் கொடுத்தவள் நிம்மதி பெருமூச்சு  விட்டாள்

                 ” இந்த சத்யா நல்லபடியாக வந்து பணிக்கு சேரட்டும். அவரவருக்கு என்ன கொடுப்பினையோ அது அவருக்கே போய்ச் சேரட்டும்.  ஒருத்தர் கெடுதியில் எனக்கு ஒரு நல்லது என்றும் நடக்க வேண்டாம்;”என்ற எண்ணத்துடன் ஒரு வாரத்திற்கு அப்புறம் நிம்மதியாக உறங்கலானாள்.

 உண்மைதான்!தோல்வி எல்லாம் தோல்வியும் அல்ல. வெற்றியெல்லாம் வெற்றியுமல்ல. தோல்வியும் இனிமை. வெற்றியும் கைப்பு தரும்.

சசிகலா விஸ்வநாதன்

Series Navigationபரிதாபம்இழப்பு
author

Similar Posts

Comments

  1. Avatar
    Kalivanan Ganesan says:

    நல்ல கதை. ஆனால் புதுமை எதுவும் இல்லை. கதாசிரியர் பல தவறுகளை செய்து விட்டார். அவற்றை, வரும் கதைகளில் தவிர்த்தால் நல்ல கதாசிரியர் ஆகும் வாய்ப்பு உண்டு. இலக்கணப் பிழைகள்; கருத்துப்பிழை; சோம்பேறித்தனமான மொழி நடை (அதாவது பழைய என்றும் மாறா மொழி நடை) But one positive point: i.e. the flow of the story is in logical sequence. Smooth.

    கதாசிரியர் வேலை கதை மட்டுமே எழுதுவது. வாசகர்களுக்கு சன்மார்க்க வகுப்பு எடுக்க கூடாது. வாசகர்களே அவருக்குப் புரிந்த வண்ணம் கதை என்ன பாடம் சொல்கிறது என்று புரிந்து கொள்வார்கள். அவர்கள் சுதந்திரத்தில் கதாசிரியர் தலையிட்டு அவரே moral சொல்லிவிடுகிறார். கதையின் கடைசி வரியில். இது அதிகப்பிரசங்கித்தனம்.

    சிறுவர்களுக்கு கதை சொல்லும்போது பெரியவர்களும் ஆசிரியர்களும் சன்மார்க்கம் சொல்லி முடிப்பார்கள். காரணம். குழந்தைகளுக்கு எடுத்துச் சொன்னால்தான் புரியும். அந்தோ பரிதாபம்: இக்கதாசிரியர் திண்ணை வாசகர்களை பாப்பாக்கள் என நினைத்து விட்டார். Avoid it, please.

    கதையின் தொடக்கத்தில் சொல்வது: மதிப்பெண்கள் அடிப்படையில் மூப்பு கணிக்கப்படுகிறது. உண்மையில், மதிப்பெண்கள் அடிப்படையில் ரேங்க் கணிக்கப்படும். ரேங்க் அடிப்படையில் மூப்பு கணிக்கப்பட்டு வேலையில் இருக்கும் கடைசி காலம் வரை அந்த ரேங்க்-அடிப்படை மூப்பு தொடரும்.

    கதாநாயகியான அனுராதாவுக்கு சீனியர் ஆகிவிடுகிறார் சத்யா. அவர் விபத்தில் சிக்கி குணமாகி வேலையில் பின்னர் சேர்ந்தாலும் சத்யாவின் சீனியரிட்டி போகாது. அப்படியிருக்க, இந்த “இந்த சத்யா நல்லபடியாக வந்து பணிக்கு சேரட்டும். அவரவருக்கு என்ன கொடுப்பினையோ அது அவருக்கே போய்ச் சேரட்டும்” என்ன பொருள்? விபத்தை கொடுப்பினை என்கிறாரா? கொடுப்பினை என்றால் என்ன பொருள் சொல்கிறது இவர் அகராதி?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *