வெங்கடேசன் நாராயணஸ்வாமி
சொந்தமில்லை
பந்தமில்லை.
“நான்” விடும் மூச்சுக்காற்றும்
“என்” சொந்தமில்லை
பந்தமில்லை.
சொந்தமில்லை
இவ்வுடல்,
தாய், தகப்பன், பாட்டன், பாட்டி,
முப்பாட்டன், முப்பாட்டியிடமிருந்து
வந்ததென்பார்கள்.
அவர்களுடலும்
அவர்கள் சொந்தமில்லை.
நிரை நிரை செறியுமுடம்பு
நோய்படு முதுகாயம்.
கடைசியில் கட்டையில் போய்
வெந்து கருகி
நீறாகும் இவ்வுடல்.
தன்னதாகக்கொண்ட இவ்வுடலை
“அது” சூடு
செய்கிறது,
உச்சந்தலையிலிருந்து
உள்ளங்கால் வரை.
“நான்” இல்லா
உறக்கத்திலும் “அது” சூடு செய்கிறது.
ஆகையால் இந்த “நான்”
“அது” அல்ல.
எண்ணங்களாவது
“என்” சொந்தமா?
“அது” வும் இல்லை.
பின் ஏன் பின்தொடர வேண்டுமவைகளை?
எண்ணங்களற்ற
நிம்மதி நித்திரையில்
அனுதினமும்
“நான்” ஒடுங்கியெழும்
விழித்தவுடன்.
சொந்தம் கொண்டாடும்
மானாபிமான “நான்” ஏ
அப்பெருவெளியில் போக்கு-வரவு
போலிப் பொய்யென்றானபோது
அந் ”நான்” ஐ நம்பிய சுற்றமேது? பந்தமேது? பற்றேது?
வெறும் நினைப்புதானே?
வாசனையைப்
பற்றியோடும்
மோப்ப நாய்
“நான்”,
ஞமலியிற்க் கேடான இந் “நான்”.
“அது” விழைந்தால்
“இது” பிழைக்கும்,
பிழைப்பைக் கெடுக்கும்
நினைப்பு
சொந்தம்,
முனைப்பு
பந்தம்.
கெடுக்கிறது
பிழைப்பை
வெறும்
நினைப்பு.
ஸமுத்திரத்தில் அலைகளோய்வதெப்போ?
“நான்”
அழிந்து
“அது” வில்
ஸ்நானம் பண்ணுவதெப்போ?
நெடுஞ்சுவராய்க்
கிளம்பும்
நினைவலைகள்
“அது” வுள்
ஓய்வதெப்போ?
“நான்” புனித
நீராடுவதெப்போ?
ஜல ஸமாதி ஆவதெப்போ?
நினைவுகளே நினைவுகளே
நின்றழிய மாட்டீரோ!
நிம்மதியைத் தாரீரோ!
பேருணர்வே பேருணர்வே
உள்ளிழுத்து உண்பீரோ!
உள்விழி திறப்பீரோ!
அப்பிலுப்பென
“அது” வில் கரைப்பீரோ!
உள்ளொளி பெருக்கீரோ!
உள்-வெளி அறுப்பீரோ!