எனக்கு ஒரு கோப்பை மது கொடுங்கள்

author
0 minutes, 0 seconds Read
This entry is part 3 of 10 in the series 22 டிசம்பர் 2024

ப.மதியழகன்

1

சிறுசிறு துயரங்கள் என்னை

வேதனையின் அடிஆழத்திற்கு

இழுத்துச் செல்கின்றன

ஒரு கோப்பை மதுவோடு

ஒரு துளி விஷத்தைக் கலந்து

எனக்குக் கொடுங்கள்

என்னை மறந்திருக்க

என்னென்ன செய்ய வேண்டுமோ

அதையெல்லாம் நான்

செய்து கொள்கிறேன்

எனது பகுத்தறிவு

எப்போதும் கடவுளுக்கு

இடம் கொடுத்ததில்லை

எனது மனதின் அறைகூவல்கள்

பிரபஞ்சத்தில் எதிரொலித்துக்

கொண்டுதான் இருக்கின்றன

இவர்களையெல்லாம் சந்திக்க

வைத்த விதியை

நான் நொந்து கொள்வதைத்தவிர

எனக்கு வேறு வழியில்லை

இறக்கும் வரை பிறரிடம்

இரந்து பெறவேண்டிய அவலமே

எனக்கு வாய்த்திருக்கிறது

பாகுபாடுகளை வானத்திலிருந்துதான்

அமல்படுத்துகிறார்கள் பூமியிலிருந்தல்ல

மனித சுதந்திரம் கூட

எல்லைக்கு உட்பட்டதுதான்

எனது முயற்சிகள்

படுதோல்வியடையும் போது

சிறிதளவு நம்பிக்கையும்

கரைந்து விடுகிறது

தெய்விக நிலையிலிருந்து

வழுவியதற்காக மனிதன்

சிறைவைக்கப்பட்டிருக்கும்

இடம்தான் இவ்வுலகம்!

2

முற்றிலுமாக நம்பிக்கை இழக்க

வைத்துவிட்டது இந்த வாழ்க்கை

எனது தட்டுதல்களுக்கு

யாரும் செவிசாய்க்கவில்லை

இதன் மூலம் கடவுளுக்கு

காது கேட்காது என

முடிவு செய்து கொள்கிறேன்

இந்த இரவுகளை வெறுக்கின்றேன்

பகல்களையும் தான்

நிலா என்னைப் பார்த்துக்

கொண்டிருக்கிறது

கருணையே இல்லாத மனிதர்களுக்கு

ஒளி தந்து கொண்டிருக்கிறது

எனக்குள்லிருந்து மாயமான

ஏதோவொன்றை நான்

தேடிக் கொண்டிருக்கிறேன்

கடவுளின் கண்கள்

என்னை மிரட்சியோடு

பார்க்கின்றது

நான் தான் அவரது குமாரனை

முப்பது வெள்ளிக்காசுகளுக்காக

காட்டிக் கொடுத்தவன்

சாச்ரடீஸுக்கு விஷம் தந்தது

எனது கைகள் தான்

நபியின் மீது கற்கறை வீசியது

எனது கரங்கள் தான்

கடவுளின் அடக்குமுறை விசித்திரமானது

நீங்கள் அழுவதை நிறுத்திவிட்டு

ஒன்று சேருங்கள்

இந்த பாறையில் மோதி

நமது கபாலங்கள் சிதறட்டும்

மரணத்தை வைத்து

பூச்சாண்டி காட்டும் கடவுளுக்கு

நாம் பாடம் கற்றுக் கொடுப்போம்!

3

என்னைத் தனிமையில் விடுங்கள்

உங்கள் வேதவசனம் என்னைக்

காப்பாற்றாது

எனது தேவையும், வேண்டுதல்களும்

அதற்குப் புரியாது

உங்களது அங்கிகள் தான்

உங்களது புனிதத்தைத் தீர்மானிக்கின்றதா

உங்கள் கடவுள் வெண்மைநிறத்தவரா

எங்கள் கடவுள் கறுப்பானவர்

நீங்கள் மேற்கத்தியர்களா

நாங்கள் கிழக்கத்தியர்கள்

மானுட இனத்தின் மீது நீங்கள்

மேலாதிக்கம் செய்பவர்களாக

இருக்கலாம்

ஆனாலும் அங்கங்கே

சிறு எதிர்ப்புகள் எழத்தான் செய்யும்

நீங்கள் நினைப்பதை

நான் பேச வேண்டும்

என்பது கூட

என்மீது ஏவப்பட்ட அடக்குமுறைதான்

எனது கையிலுள்ள தீக்குச்சி

உலகை எரிக்குமென்றால்

நான் ஏன் அதை பற்ற

வைக்கக்கூடாது

எந்தக் கடவுளரும்

என் கண்ணெதிரே நிற்காதீர்கள்

இறுதிப்போரில் நீங்கள்

ஜெயித்திருக்கலாம் ஆனால்

நான் தோற்கவில்லை…



mathi2134@gmail.com

Series Navigationதிருக்குறளும் செயற்கை நுண்ணறிவியலும்வாழ்க்கை
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *