எங்கோ
தலைசாய்த்து பார்க்கின்றது
சிட்டுக்குருவி.
துணையை தேடுகின்ற
காலத்தில்
வேதனையை
முழுங்கிவிடுகின்றது.
ஒற்றைக்குருவியாய்
சுள்ளிகள் பொறுக்கி
கூடும் கட்ட
உடல் வேதனை.
மனம்
இன்னும்
துணை வராமல் காத்திருக்க.
பக்கத்து கூட்டில்
கொஞ்சி குலாவி
மகிழ்ந்து
உயிரோடு உயிர் கலந்து
சில்லிட்டுப்பறந்தன
ஜோடிக்குருவிகள்.
சிட்டுக்குருவியின்
ஏக்கத்தில்
என்
அக்கா
தடவிய
ஜன்னல் கம்பிகள்
தேய்ந்தே போயின
பல வருடங்கள்
துணைக்காக
காத்திருப்பு
வாழ்வின் பெரும் சோகம்.
ஜாதகக்கட்டில்
பல்லாங்குழி விளையாடினார்
புரோகிதர் சிகாமணி.
சர்ப்ப தோஷம்
செவ்வாய் தோஷம்
சனி தோஷம்
என
எல்லா தோஷத்திலும்
வடை சுட்டார்.
ஆறிப்போன
அவியலாய் மாறியது
பரிகாரங்கள்.
வரும் போகும்
மைனரெல்லாம்
வாடகைக்கு
தேடி அலையும்
ஆண் குருவிகள்.
நிரந்தர
கூடுக்கட்டி
அக்கா குருவியை
அழைத்துச்செல்ல
எப்போது வருவான்
ஆண் சிங்கமாய்
ஒருவன்.
– ஜெயானந்தன்