குரு அரவிந்தன்
நயாகரா நீர்வீழ்ச்சி உறைந்து போயிருப்பதாக நண்பர் தெரிவித்ததைத் தொடர்ந்து சென்ற சனிக்கிழமை நயாகரா நீர்வீழ்ச்சியைப் பார்க்கப் போயிருந்தேன். பல தடவை கனடிய பக்கமுள்ள 187 அடி உயரமும், 2590 அடி அகலமும் கொண்ட பெரிய நீர்வீழ்ச்சிக்கு அருகே படகில் சென்று, அவர்கள் தரும் சிகப்பு நிற மழைக்கோட் அணிந்து தூவானத்தில் நனைந்து ‘மெயிட் ஆப் த மிஸ்ட்’ ஐப் பார்த்து மகிழ்ந்த எங்களுக்கு உறைந்து போன நயாகராவைப் பார்க்க வியப்பாக இருந்தது. மனிதமனங்களும் இப்டித்தான் உறைந்து போகுமோ என்று நினைக்வைத்தது அந்தக் காட்சி.
இதேபோல, அமெரிக்க நீர்வீழ்ச்சியை அருகே சென்று பார்ப்பதானால் நீலநிற மழைக்கோட் அணியக் கொடுப்பார்கள். பொதுவாக எந்த நேரமும் சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழியும் கனடாவின் நயாகரா நகரமா இப்படிக் களையிழந்து காட்சி தருகின்றது என்று நினைத்தேன்.
நான் தங்கியிருந்த ஹோட்டலின் 15வது மாடியில் இருந்து அருகே இருந்த அமெரிக்க நீர்வீழ்ச்சியையும், கனடிய நீர்வீழ்ச்சியையும் பார்க்கக்கூடியதாக இருந்தது. வெய்யில் இல்லாவிட்டாலும், உறைந்த நிலையில் இருக்கும் நீர்வீழ்ச்சியைக் காலைநேரம் அழகான படங்கள் எடுக்கக் கூடியதாக வெளிச்சம் இருந்தது.
அமெரிக்க நீர்வீழ்ச்சியும், ‘ஹோஸ்சூ’ என்று அழைக்கப்படும் கனடிய நீர்வீழ்ச்சியும் உறைந்து போயிருந்தாலும் ஒரு பக்கத்தால் இரைச்சல் எதுவும் இல்லாமல் சிறிதளவு நீர் கொட்டிக் கொண்டிருந்தது. கோடைகாலத்தில் ஒரு நிமிடத்திற்கு 5.9 மில்லியன் கன அடி நீரைக் கொட்டும் இந்த நீர்வீழ்ச்சி இம்முறை பனிக்காலத்தில் பெரிதாக உறைந்திருந்தது. நயாகரா நீர்வீழ்ச்சியில் விழும் இந்த நீர் சென்ட் லாரன்ஸ் ஆற்றில் கலந்து அட்டிலாண்டிக் கடலில் கலக்கின்றது. 1885, 1902, 1906, 1911, 1932, 1936, 2014, 2017, 2019 ஆம் ஆண்டுகளிலும் பனிப் பொழிவின் போது இது முற்றாக உறைந்து போயிருந்தது. 2025 ஆம் ஆண்டும் முற்றாக உறைந்து போனால் நயாகரா நீர்வீழ்ச்சி மீண்டும் வரலாற்றில் ஒரு சாதனை படைக்கும் என்றே நினைக்கின்றேன்.
கனடாவில் மின்சார உற்பத்திக்கு இந்த நயாகரா நீர்வீழ்ச்சி நீர் பாவிக்கப்படுகின்றது. இதேபோல, 1912 ஆம் ஆண்டு உறைந்த பனிக்கட்டியின் மேல் மக்கள் நடந்தபோது, அது உடைந்ததில் மூவர் அதில் அகப்பட்டு இறந்து போயினர். நயாகரா நீர்வீழ்ச்சியில் பலர் பலவிதமான சாகசங்கள் செய்ய முயன்று இறந்திருக்கிறார்கள். அவர்கள் தப்பினாலும் சட்டப்படி அவர்களுக்குத் தண்டனை காத்திருக்கும்.
- சென்றிடுவீர் எட்டுத் திக்கும்!
- உறைந்து போகுமா நயாகரா நீர்வீழ்ச்சி?
- பெயின்ட் அடிக்கும் விடலை
- சாம்பல்
- ஆறுதலாகும் மாக்கோடுகள்