சோம. அழகு
அமெரிக்க வாழ் தமிழர்களின் தமிழை வைத்து அவர்களது சொந்த ஊரைக் கண்டுபிடிக்கவே இயலாது. ஏனெனில் எல்லா வட்டார வழக்குகளையும் விழுங்கிவிட்ட ஒரு செயற்கையான மேட்டுக்குடித் தமிழ் அது. குழந்தைகளின் தமிழைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். எங்கேனும் எப்போதேனும் அவர்களிடமிருந்து எட்டிப் பார்க்கும் தமிழில் ர, ட போன்ற எழுத்துகள் அவற்றை ஒத்த ஆங்கில ஒலியைப் பெற்றுவிட்டன. [ல, ள, ழ], [ர, ற] மற்றும் [ந, ன, ண] ஆகியவற்றினுள் வித்தியாசமே இல்லை. நம் ஊரிலேயே இல்லையே என்கிறீர்களா?
ஒவ்வொரு மாகாணத்திலும் தமிழ்ப் பற்றாளர்கள் சேர்ந்து இலவசமாகத் தமிழ்ப்பள்ளி நடத்துகிறார்கள். நான் இருக்கும் இடத்திலும் ஆறு நிலைகளில் தமிழ் வகுப்பு நடைபெறுகிறது. தாம் சேவை செய்வதாகவெல்லாம் இவர்கள் எண்ணவில்லை. அதையும் தாண்டி அடுத்த தலைமுறைக்கு நம் மொழியை எப்படியேனும் கொண்டு போய்ச் சேர்த்திட வேண்டும் என்ற பதட்டம் கலந்த அதீத பொறுப்புணர்வைத்தான் காண்கிறேன். தன்னார்வலர்களின் முயற்சியில் மிகுந்த அர்ப்பணிப்புடன் வாரம் ஒரு முறை வகுப்புகள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு வகுப்பிலும் சராசரியாக பத்து மாணவர்கள். சிங்கப்பூரில் இரண்டாம் மொழியாகத் தமிழ் பயிலும் மாணவர்களுக்கான பாடநூல்கள்தாம் பின்பற்றப்பட்டுக் கொண்டிருந்தன. எனவே நமது ஒன்றாம் இரண்டாம் வகுப்புத் தமிழ் பாட நூல்கள் இவர்களது ஆறாம் நிலை பாட நூலுக்கு ஒப்பாக இருந்தது. மிகவும் எளிமையான பாடத்திட்டம்.
நான் அங்கு ஆசிரியராக இணைந்த முதல் நாளே ஆறாம் நிலையில் அமர்த்தப்பட்டேன். பத்து முதல் பன்னிரண்டு வயதிற்குட்பட்ட சிறார்கள். அந்த வகுப்பின் பொறுப்பாசிரியர் பிள்ளைகளின் தமிழ் பரிச்சயத்தைப் பற்றி என்னிடம் எடுத்துக் கூற வந்தவர் வகுப்பு முடிந்தவுடன் பார்த்துக் கொள்ளலாம் என்றெண்ணி முதலில் அவர்களைத் தாம் கூறும் சில தமிழ்ச் சொற்களை எழுதுமாறு பணித்தார்கள். நாங்கள் இருவரும் ஒவ்வொருவரின் எழுத்துக்கோர்வையையும் சரி பார்த்துத் திருத்தம் கூறிக் கொண்டிருந்தோம். ‘மான்புளு’ என்ற புதிய உயிரினத்தைக் கண்டுபிடித்திருந்தான் ஒருவன். தென்தரவு, னீச்சள், இடவாளை, சுறியன், மதாம், காட்டயம், மதியவற், மன்தர பேட்டி என எல்லாமே ஏதோ எதிரி நாட்டுக்குத் தெரியக் கூடாது என்பதற்காக ரகசியமாக எழுதப்பட்ட சங்கேத மொழியைப் போல் இருந்தன.
அதன் பிறகு வாசிப்புப் பயிற்சி. ஒவ்வொருவரையும் வரிசையாக ஒவ்வொரு வரியாக வாசிக்கச் சொன்னோம். முதலாமவன் வாசித்துக் கொண்டிருக்கையில் பிறர் அனைவரும் தம்முடைய முறையின் போது வரப் போகும் தமக்கான வரியை வாசித்துப் பழகிக் கொண்டிருந்தார்களே தவிர வாசிக்கப்பட்டுக் கொண்டிருந்த வரியையோ வாசிப்பவனையோ சிறிதும் சட்டை செய்யவில்லை. அதிலும் ஒருவள் பென்சில் கொண்டு ஏதோ அந்தப் பத்தியின் அருகில் எழுதிக் கொண்டிருந்தாள். நான் மெல்ல எட்டிப் பார்க்க புன்னகையுடன் அதை மறைக்க முற்பட்டாள். ஆனால் பார்த்துவிட்டேன். Antha nari kuyilidam sendru…. என எழுதியிருந்ததைப் பார்த்து புளகாங்கிதம் அடைந்து “என்னடா பண்ணியிருக்கீங்க?” என சிரித்தவாறே கேட்டேன். “This way I could read easily. Otherwise am too slow” என்றாள்.
அங்குள்ள நிலைமையை விளக்க முனைந்த பொறுப்பாசிரியரின் வேலையை வெகுவாகக் குறைத்து விட்டிருந்தனர் அரும்பெரும் செல்வங்கள்.
ஒரு நாள் ‘தொட்டம்’ என்ற சொல்லைத் திருத்தும் பொருட்டு “ஒற்றைக் கொம்பு இடக்கூடாது. இரட்டைக் கொம்பு போடுங்க” என்றதும் அம்மாணவன் புரியாமல் விழிக்க இன்னொருவன் உதவினான் – “Hey! That telephone letter!”. பிறிதொரு நாள் விளையாட்டாகப் படிக்க வைக்கும் விதமாக அவர்களை இரண்டு குழுக்களாகப் பிரித்து நான் தமிழ்ச் சொற்களைக் கூற யார் முதலில் சரியான பொருளைத் தருகிறார்கள் என போட்டி வைத்தோம். ‘சிறப்பு’ என்ற சொல்லுக்கு ஆர்வம் பொங்க Red என பதில் தந்து பூரிப்படைய வைத்தான் ஒருவன். ‘அரிது’ ‘knowledge’ எனப் புதிய பொருள் பெற்றதில் லேசாகத் தலை கிறுகிறுக்க ஆரம்பித்தது எனக்கு. ‘இரும்பு’ என அடுத்த வார்த்தையைக் கூறிவிட்டு நான் தண்ணியை எடுத்துக் குடித்துக் கொண்டிருக்கும் போது Cough என்று பதில் மொழிந்தவனைப் பார்த்து என் கண்கள் அதிர்ச்சியில் விரிய அவனோ எனக்குப் புரியவில்லை என நினைத்துத் தன் முழங்கையைக் கொண்டு வாயை மூடி இருமி வேறு காண்பித்துச் செயல்முறை விளக்கம் தந்து புரையேற வைத்தான். துணிவு – Dress, பொறுமை – Jealousy… பொறுமை இழந்து இப்போது நான் ஆங்கிலச் சொற்களுக்கு மாறினேன். அப்போதும் Forest – விவசாயி, River – நிதி, Competition – பேட்டி என இப்பட்டியலும் பெரிசாகிக் கொண்டே செல்ல எல்லாச் சிறார்களுக்கும் சேர்ந்தாற் போல் திருஷ்டி கழிக்கும் பொருட்டு என் கைகளால் நெட்டி முறித்து, “நா பங்காரம்” என கொடூரமாகத் தெலுங்கு பேசத் துவங்கிருந்தேன்.
இந்தத் தமிழ்ப் பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் குழந்தைகள் விருப்பத்துடனும் மகிழ்ச்சியாகவும் படிக்க வேண்டும் என்பதற்காகப் பரீட்சை முறை வேண்டாம் என நல்லதொரு வரவேற்கத்தக்க முடிவைப் பின்பற்றி வந்தார். தமிழ் வகுப்புகளில் கட்டாயம் தமிழில்தான் கதைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் பிள்ளைகள் இயல்பாக ஆங்கிலத்தில்தான் உரையாடத் துவங்கினர் ஒவ்வொரு முறையும். மீண்டும் மீண்டும் தமிழில் பேச நினைவூட்டினாலும் ஒன்றும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
இது குறித்து பொறுப்பாசிரியருடன் இன்னும் அளவளாவிய போது பள்ளிகளில் முழுக்க ஆங்கிலம் என்பதால் வீடுகளிலும் அதுவே பெற்றோருடனான புழக்க மொழியாக மாறிவிட்டதாகக் கூறப்பட்டது. மேலும் பதிமூன்று பதினான்கு வயதுகளில் பாடத்திட்டத்தின் சுமை அதிகரித்து விடுவதால் விளையாட்டு, ஆடல், இசை… என நீளும் extra curricular activities பட்டியலில் இருந்து முதலில் அடி வாங்குவது தமிழ் வகுப்பு என்றும் ஆதங்கத்துடன் கூறினார்.
மேலும் இங்குள்ள பெற்றோர்கள் அனைவரின் ஒருமித்த குரலில் ஒலிக்கும் ஒரே வாக்கியம் – என் பிள்ளைக்குத் தமிழில் பேசத் தெரிஞ்சா, ஓரளவு எழுதப் படிக்கத் தெரிஞ்சா போதும். இதையே பெரிய விஷயமாகக் கருதி ஒரு தேக்க நிலையை எட்டி அங்கேயே நின்றுவிட்டார்கள் எனத் தோன்றிற்று. தமிழ் என்னும் தேன்கடலில் நமது இரு கைகளாலும் அள்ளிப் பருகினாலே இந்த வாழ்நாளில் எல்லா இலக்கியங்களையும் சுவைக்க இயலாது. இவர்களோ ஒரு துளியை விரல் நுனியில் தொட்டு அடிநாக்கில் இட்டுப் போதுமென்ற மனநிலைக்கு வந்துவிட்டார்கள். நம் ஊர்களில் தம் குழந்தைகளுக்கு இரண்டாம் மொழியாக இந்தியைத் தேர்வு செய்து தமிழைப் புறக்கணிக்கும் பெற்றோர்களுடன் இவர்களை ஒப்பிட்டுப் பார்த்துக் கொஞ்சம் ஆறுதலடைந்து கொள்ளலாம்.
தொன்மையான தமிழ் மொழியில் இருக்கும் சங்க இலக்கியங்களைப் போல் வேறெந்த மொழியிலாவது காட்ட இயலுமா? நான் கேள்விப்பட்டவரை முதல் வகுப்பிலேயே திருக்குறள், ஆத்திசூடி மேல்நிலை வகுப்புகளில் சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி,…. என மாபெரும் காப்பியங்களைக் கற்றுக் கொடுக்க முடிகிற ஒரே மொழி தமிழ். உலக அரங்கில் ஈடு இணையற்றதாக விளங்கும் நமது பதினெண்கீழ்கணக்கு நூல்கள், ஐம்பெருங்காப்பியங்கள், ஐங்குறுங்காப்பியங்கள், பக்தி இலக்கியங்கள்…… என அனைத்தும் இவர்களைக் கழிவிரக்கத்துடன் பார்த்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் இவ்விலக்கியங்களின் இருப்பைப் பற்றியே தெரியாமல் தாம் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய பொக்கிஷத்தை இழந்து கொண்டிருக்கிறோம் என்று கூட உணர வழியில்லாமல் வளரும் இக்குழந்தைகளின் மீது பரிதாபமே மேலிடுகிறது.
அதிகபட்சமாக தொண்ணூறுகள் வரை கல்லூரிகளில் ஆங்கிலப் பேராசிரியர்கள் மில்டன், ஆஸ்கர் வைல்ட்,…. என ஆங்கிலக் கவிஞர்களைக் கரைத்துக் குடித்தவர்களாயிருப்பர். வகுப்புகளுக்கு வீசின கையும் வெறுங்கையுமாக வந்து அக்கவிதைகளை முறையான ஏற்ற இறக்கத்துடன் கூறி பொருளுடன் விளக்குவதைக் கேட்க அவ்வளவு ரசனையாக இருக்கும் என அப்பா கூறக் கேட்டிருக்கிறேன். தற்போது (இந்தியாவிலும்) ஆங்கிலத்தில் ஷேக்ஸ்பியரையும் கீட்ஸையும் படிக்காமலேயே ஒருவன் முனைவர் பட்டம் பெற்றுவிட முடிகிற அளவிற்கு பாடதிட்டத்தை மேம்படுத்தி(!?) வைத்திருக்கிறார்கள். பெரும்பாலானோரால் உயர்வாகக் கருதப்படும் ஆங்கிலத்திற்கே இந்த கதி என்றால்… ? எல்லாமே வணிகக் கண்ணோட்டத்துடனேயே பார்க்கப்படுவதுதான் முக்கிய காரணம். இந்த இடத்தில் Dead Poets Society திரைப்படத்தில் வரும் அருமையான வரிகள் நினைவிற்கு வருகின்றன.
We don’t read and write poetry because it’s cute. We read and write poetry because we are members of the human race. And the human race is filled with passion. And medicine, law, business, engineering, these are noble pursuits and necessary to sustain life. But poetry, beauty, romance, love, these are what we stay alive for.
மொழி என்பது வெறும் தகவல் பரிமாற்ற ஊடகம் மட்டுமல்ல – மாபெரும் வரலாற்றையும் செழுமையும் வளமையும் நிறைந்த ஒரு கலாச்சாரத்தையும் உள்ளடக்கியது. ஒரு குழந்தைக்கு நாம் தாய்மொழியை மறுக்கும்போது, அதுவும் சிறப்பு வாய்ந்த தமிழ்மொழியை மறுக்கும் போது ஒரு நீண்ட நெடிய பாரம்பரியத்தையும் வலுவான அடையாளத்தையும் மறுத்துக் கொண்டே வருகிறோம். போர்க்காலச் சூழலில் குடும்பம் சிதறடிக்கப்பட்டு வதைமுகாமில் அகதியாக அடைபட்டுத்தான் அடையாளத்தை இழக்க வேண்டும் என்பதில்லை. தாய்மொழியைச் சரியாகக் கற்காமல் கூட அடையாளத்தை இழக்கலாம்.
****************************
பள்ளி துவங்கப்பட்டு பத்து ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி ஆண்டு மலர் கொண்டு வருவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சில திருக்குறள்களைப் பொருளோடு அச்சிட்டுக் கொடுக்கலாம் என்ற யோசனை முன்வைக்கப்பட்டது. அனைத்து இலக்கியங்களையும் அறிமுகப்படுத்தும் பொருட்டு உவமை, உருவகம், அளபெடை, அணி உள்ளிட்ட கவிதைக் கூறுகள் தென்படும் ரசனையான சங்ககாலப் பாடல்கள் சிலவற்றை ஒவ்வொரு நூலிலும் இருந்து திரட்டி ஒன்றாகத் தொகுக்கலாம் என்ற எனது பரிந்துரை ஏற்றுக் கொள்ளப்பட்டு அந்தப் பொறுப்பு என்னிடமே ஒப்படைக்கப்பட்டது. அகமகிழ்வோடு ஏற்றுக் கொண்டேன். அப்பாவிடம் உதவி பெறும் துணிச்சல்தான், வேறென்ன? மனம் காலச்சக்கரத்தைக் கொஞ்சம் பின்னோக்கிச் சுழற்றியது.
முதலில் எனக்குத் தெரிந்த பாடல்களையெல்லாம் நினைவுகூரத் துவங்கினேன். இவையும் அப்பாவிடம் கற்றவைதாம். கம்பராமாயணம் – “கண்டெனன் கற்பினுக் கணியைக் கண்களால்….” – அனுமன் சீதையைக் கண்டுவிட்டதாக இராமனிடம் தெரிவிக்கும் இடம். கம்பர் இப்பாடல் இயற்றிய விதத்தை வெகுவாகச் சிலாகிப்பார்கள் அப்பா. கதாகலட்சேபம் மற்றும் வில்லுப்பாட்டுக் கச்சேரிகளில் “கண்டேன் சீதையை” என்று கேட்டுப் பழக்கமாகியிருந்ததால் இதில் என்ன பெரிய வேறுபாடு என்று அப்பா விளக்கித்தான் புரிந்தது. “சீதையைக் கண்டேன்” எனக் கூறும்போது இரு சொற்களுக்கும் இடையில் “ஐயோ! சீதைக்கு எதுவும் நேர்ந்துவிட்டதோ” எனச் சட்டென இதயத்துடிப்பு அதிகரிக்குமாம். அதனால்தான் முக்கியச் சொல் முதலில் வருகிறது. ஆனால் வில்லுப்பாட்டில் கூட கண்ட செய்தி மட்டும்தான் இருக்கிறது. ‘அவள் எப்படி இருக்கிறாளோ?’ என்ற பதைபதைப்பை உணர வழியில்லாமல் அந்த ஒரு வரியிலேயே அவள் நலமுடன் இருக்கும் செய்தியையும் சேர்த்து வெளிப்படுத்தியிருப்பார் கம்பர். இப்படியெல்லாம் சொல்லித் தந்தால் இலக்கியம் ஏன் ரசிக்காது? கணிதப் பேராசிரியராகப் பணியாற்றியிருந்தாலும் அப்பாவினுள் உறைந்தே இருக்கும் தமிழ் மற்றும் ஆங்கிலப் பேராசிரியரின் தரிசனமும் எங்களுக்கு அவ்வப்போது கிட்டும்.
அன்றிலிருந்து அப்பாவிடம் “95 கணக்கில்” என்றுதான் மதிப்பெண் கூறுவேன்.
இது போலவே “….புதல்வரால் பொலிந்தான் நுந்தை” என்னும் கம்பராமாயணப் பாடலில் இன்றும் காணப்படும் பேச்சுவழக்கு, “குரவர்பணி யன்றியுங் குலப்பிறப் பாட்டியோடு….” (சிலப்பதிகாரம்), “கருங்கொடிப் புருவ மேறா கயனொடுங் கண்ணு மாடா….” (சீவகசிந்தாமணி), “யாண்டு பல வாக…” என்னும் பிசிராந்தையார் பாடல், “அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்…” என்ற திருமூலரின் வாக்கு, “நட்ட கல்லைத் தெய்வமென்று….” என்னும் சிவவாக்கியார் பாடல், அனிச்ச மலர் இடம்பெரும் திருக்குறள்கள், தும்மல் series என நாங்கள் பெயர் கொடுத்த திருக்குறள்கள் உள்ளிட்ட பல நினைவிற்கு வந்தன.
இவையெதுவுமே முறையாக உட்கார்ந்து அப்பாவிடம் கற்றதல்ல. எப்போதேனும் எங்கள் பேசுபொருள் தொடர்பாக அப்பாவிற்கு ஞாபகம் வருவதை எடுத்துக் கூறுவார்கள். உதாரணமாக அம்மா மோர்க்குழம்பு செய்த ஒரு நாளில்தான் “முளிதயிர் பிசைந்த காந்தண் மென்விரல்….” என்ற குறுந்தொகைப் பாடல் அறியக் கிடைத்தது. இவ்வாறாக வயிற்றுக்கும் செவிக்கும் அன்று தீம்புளிப் பாகர் கிட்டியது. மகிழுந்தில் செல்லும் போதும் மிகச் சாதாரண உரையாடல்களின் போதும் அப்பா புகட்டியவைதாம் அனைத்தும். உட்கார்ந்து மெனெக்கெடுதலைக் காட்டிலும் இப்படி போகிற போக்கில் சான்றோனாக்கும் தம் கடமையைச் செவ்வனே செய்து வருகிறார்கள் அப்பா. கற்றலுக்கு அதுதான் சிறந்த வழி என்பதே அப்பாவின் கருத்து.
அப்பாவிற்கும் எனக்கும் இருக்கும் உணர்வுப்பூர்வமான பிணைப்பில் வினையூக்கியாக முக்கியப் பங்காற்றியது எங்கள் தாய்மொழி. இப்பிள்ளைகளுக்கு? மொழிக்கும் உணர்வுக்கும் சம்பந்தம் இல்லை என்பது பேதைகளுக்கான வாதம். எனில் அமெரிக்கர்களும் ஆங்கிலேயர்களும் பெற்றோருடன் இணக்கமாக இருந்திருப்பார்களே!
எனவே தயாராகும் ஆண்டு மலரில் வரப்போகும் பாடல்களைச் சில பெற்றோரேனும் ரசித்து வாசித்துப் பிள்ளைகளுக்கும் சொல்லித் தருவார்கள் என்ற அவா வேகமாக என்னை முடுக்கியது. அவர்களில் சில குழந்தைகள் அடுத்த கட்டமாக இன்னும் தேடித்தேடி வாசிக்காமாட்டார்களா என்ற நைப்பாசையும் என்னை ஆட்கொண்டது. இவையனைத்தும் நடந்தே விட்டால்…? மனம் கற்பனைத் தேரில் ஏறியது. நாளை தமிழ் மொழியின் சிறப்பும், தமிழர்களின் நாகரிகமும் உலகின் முன்னோடியாக ஓங்கியுயர்ந்து நிற்கும் போது இக்குழந்தைகள் “ஆதி மொழிக்குச் சொந்தக்காரன் நான். எனது பாதங்கள் இங்கே இருந்தாலும் எனது வேர்கள் கீழடியிலும் ஆதிச்சநல்லூரிலும் ஊன்றப்பட்டவை” என பெருமையாக மிடுக்காகக் கூறும் நாள் வராமலா போய்விடும்?
தமிழ் வகுப்புகளும் ஆலோசனைக் கூட்டமும் முடிந்தன. மிகுந்த நம்பிக்கையுடனும் உத்வேகத்துடனும் வெளியே வந்தேன். எனது வலதுபுறத்தில் இருந்து ஒரு நடுத்தர வயதுக்காரரின் குரல், “So? How was your Tamil class today?”. தேர்க்கால் ஒடிந்து நான் தொப்பென்று கீழே விழுந்தாற்போல இருந்தது. திரும்பிப் பார்த்து அக்குரலுக்கு முகம் கொடுக்க விரும்பாமல் விடுவிடுவென வேகமாக வீட்டை நோக்கிப் புறப்பட்டேன்.
“இன்றொரு சொல்லினைக் கேட்டேன் – இனி
ஏது செய்வேன்? என தாருயிர் மக்காள்!”
– பாரதி சத்தமாக என் காதுகளில் ஒலிக்கத் துவங்கி
“சென்றிடுவீர் எட்டுத் திக்கும் – கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!”
என்னும் வரிகளில் முடித்தான். தமிழுக்குக் கொண்டு வந்து சேர்ப்பது ஒருபுறம் இருக்கட்டும். இருப்பதைக் கொண்டு சென்று போகும் இடத்தின் நீரோட்டத்தில் கலந்து கரைத்து மொத்தமாகத் தொலைத்தல் தொழிலைச் செய்யாமலிருப்பதே தமிழுக்கு ஆற்றும் ஆகப் பெரிய நன்றி. மெல்லத் தமிழினிச் சாவதையும் அந்த மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்குவதையும் தடுக்கும் இத்தமிழ்ப் பள்ளிகளின் அரும்பணியும் முயற்சியும் நிச்சயம் பாராட்டுக்குரியன.
- சோம. அழகு
- சென்றிடுவீர் எட்டுத் திக்கும்!
- உறைந்து போகுமா நயாகரா நீர்வீழ்ச்சி?
- பெயின்ட் அடிக்கும் விடலை
- சாம்பல்
- ஆறுதலாகும் மாக்கோடுகள்