பா.சத்தியமோகன்
நட்சத்திரங்களை உற்றுப் பார்த்து
தன்னுள் அமைதி பெறும்
ஒரு கைதியின் கண் கசிவு கண்டேன்
மலர்களின் இதழ்களைப் பறிக்கும்போதே
நெகிழ்ந்து விடுகிறது
மழலையின் உள்ளங்கைச் சதை போன்ற ஓர் அற்புத செய்தி
சாலையில் உருளும்போது தோன்றும்
கூர் சலனம் நெஞ்சில் கண்டேன்
பயன்படுத்தவில்லையே நம்மை என்ற கவலையுடன்
புறக்கடைச் சாக்கடையில் மூழ்கும்
செந்நிற நார் மாங்கனி தவிப்பு கண்டேன்
கண்கசிவு- கூர்சலனம் – மாங்கனி
அனைத்து தவிப்புக் குறிப்புகளும்
உரியும் நகராட்சிப் பள்ளிச் சுவரின் வண்ணத்தில்
ஒட்டிக்கொண்டு காய்ந்தன
பிறகு
காற்றிடம் அவை இரகசியம் அவிழ்க்க
முயற்சித்தன ஒற்றை வரியாக மாறி
பிறகு கண் எதிரே பறந்துபோய்
லாரிச்சக்கரம் ஏறி நசுங்கி
சிறு வெள்ளைக் கோழிக்குஞ்சின் குருதியில்
பிசுபிசுப்பாய் ஒட்டிக் கொண்டதும்
மின்னி அணைந்த மனம்
அந்த ஒற்றை வரியை எப்படி மீட்கும் ?
***