மௌனம்
அந்த
விரைவுவண்டியில்
செவியோடு தைத்த
பேசியோடு ஒரு பெண்
ஒலிப்பான் கத்த
அதையும் மீறி
அவளும் கத்த
மூச்சுக்குக் கூட
இல்லை இடைவெளி
அவள் சத்தமும்
என் மௌனமும்
பேசிக்கொண்டன
‘ஏன் இப்படி
செவிகள் செவிடுபட
கத்துகிறாய்’
மௌனத்தைத் திட்டியது
அவளின் சப்தம்
நம் கவிதை
நான் படைத்தேன்
நீ படித்தாய்
எந்தையும் தாயும்
நாமாக
பிறந்தது கவிதை
நான்
இறந்துவிட்டேன்
என் பாதையில்
வந்து போனோரெல்லாம்
சென்று போயினர்
என் பெயர் சொல்ல
இன்று யாருமே இல்லை
எங்கோ வாழும்
என் பேரனின் பேரனுக்கு
என் பெயர்
இடது கையால்
எழுதுகிறான்
கவிதை வடிக்கிறான்
அவன்
அவனா?
நானா?
பழுது
மலர்க்காரன் நான்
மலர் ஆயிரம் கொண்டு
மாலை செய்தேன்
இதழிழந்த ஒன்று
நிறமிழந்த ஒன்று
காப்பிழந்த ஒன்றென்னு
களைகள் சேர்ந்ததில்
கலையிழந்தது மாலை
எப்படிச் சேர்ந்தன
களைகள்
எங்கோ தவறு
என் அறிவில் சரிவு
‘பழுதோடு சேர்ந்ததால்
புகழுக்குரிய நான்
புழுதியாகிறேன்’
அழுதது மாலை
கொள்கை
எல்லா ருசிகளும்
நமதாகட்டும்
எல்லா மயக்கமும்
சுகமாகட்டும்
அவசரம் கோபம்
முகவரியாகட்டும்
வாக்கு தவறுதல்
வாழ்வாகட்டும்
மோசடி பொறாமை
கொள்கையாகட்டும்
சொல்லிக் காட்டுதல்
சொர்க்கமாகட்டும்
தண்டிப்பது
பகவானோ
பகைவனோ
தெரியாது
இன்று
படுக்கையில் கிடத்தி
கைகொட்டிச் சிரிக்கிறது
இருதயமும் நீரகமும்
புரிகிறது
குஞ்சுபறந்தபின்
புரிகிறது
கூடென்பது குப்பேயே
உறவுகள் பிரிந்தபின்
பிரிகிறது
நான் என்பது அனாதையே
சொத்திழந்தபின்
புரிகிறது
சொந்தங்கள் பொய்களே
அவளோடு அவன்
புரிகிறது
இவன் காதல் பொய்யென்று
எனக்கென்ன தந்தாய்
கேள்வியில் புரிகிறது
சந்ததிகள் சந்தையே
வாக்கு தவறியதில்
புரிகிறது
வீடு என்பது காடே
மரணத்தின் மடியில்தான்
புரிகிறது
வாழ்ந்ததே பொய்யென்று