என்னைத்தேடி
உன்னிடம் வந்தால்,
நீண்ட பயணியாய்
என்னுள்
ஏன் நுழைந்தாய் !
பாதையெங்கும்
பூத்துவிடுகின்றாய்.
பச்சையமாய்
பரவியும் விடுகின்றாய்.
எந்த பூவில்
எந்த கவிதையை ரசிப்பேன்
எந்த மரத்தில்
உந்தன் இசைக்கேட்பேன்.
மனக்குகையில்
ஒளிந்திருக்கும்
ரகசிய மொழியை
யாரிடம் கேட்பது.
சொல்! சொல்!!
உன் எதிரொலியால்
நான்கு திசையில்
திரண்டு எழுகின்றாய்.
உன்னிடம் தஞ்சமடைய
யாசகம் கேட்கின்றேன்.
எங்கோ ஒலிக்கும்
ஒரு குயிலின் இசையில்
அருவியை நனைத்து
சிறகாய் பறக்கின்றாய்.
மலை அருகே சென்றால்
உளியின் கவிஞன்
வடித்த சிலையெல்லாம்
வடிவம்மை, அழகம்மை, வள்ளியம்மை,
திலகம்மை, தேனம்மை, தெவிட்டா
சிலையம்மை.
அவள்
காலில்,கண்களில்
ஆயிரம்
கவிதைகள் ஏற்றி
ஒளியம்மை ஓரிடத்தில்
நின்றாட
நானோ
பரதேசியாய்
அவளிடமே குழந்தம்மை
ஆடுகின்றேன்.
-ஜெயானந்தன்.