சுடுகிறதென்றால்தானே
சொரணை இருக்கிறதெனத் தெரியும்
இந்த சொற்கூத்தில்
காக்கும் மௌனத்தின் போதையில்.
சினத்தை
சிதறவிடும்பொழுதெல்லாம்
பொறுக்கியடுக்கி
புன் முறுவல் செய்திடும் போது
கடுகடுத்தவர்களாக
வில்லையை ஒட்டி
விரும்பிய பெயரை எழுதி வேதனையைக் கூட்ட முடிகிறது
கச்சிதமான பாவனையில்.
வாஞ்சையில்
ஒலிக்கும்
உள்க் குரல்
நெடும்பயணத்தின்
கரிசனமென
அறிய மறந்து
சட்டகமிட்டு
நழுவிட முடிகிறது
சாதுர்யமாக.
சொற்களைக் கிண்டி
சுகம் காண்பதான
பாங்கில்
அடிபிடிக்கும்
துர்வாடையை
அறியாதபொழுது
உங்களை நோக்கிப் பிரயோகிக்க
காணாமல் போனச்சொற்களைக்
ஒருபொழுதும்
கண்டெடுப்பதாக இல்லை
பொங்கும்
கருணையைக்
கையளிக்க
காத்திருப்பதைத் தவிர.
***
-ரவி அல்லது.
ravialladhu@gmail.com