This entry is part 2 of 13 in the series 18 ஜனவரி 2026

“கந்தா! ஏன்டா உன்னைப் போராளி என்று ஊரில் இருப்பவர்கள் எல்லாம் சொல்கிறார்கள்?” என்றான் சேகர்.

“அடே சேகரு, ஒரு வேலை செய்யும்போது ஆயிரம் தடங்கல் வரும். தடங்கல் வருகிறதே என்று எடுத்த வேலையை அப்படியே விட்டுவிட்டு, தனக்குத்தானே நொந்துகொண்டு, அடுத்தவன் மேல் பழியைப் போட்டுக்கொண்டு திரிகிறவன்கள்தான் இங்கே அதிகம். இதில் இருந்து எவன் ஒருவன் மற்றவர்கள் கண்ணுக்கு மாறுபட்டுத் தெரிகிறானோ, அவனே போராளி. நீ அவனைப் பார்த்தாயானால், அவனுக்கு யாரிடமும் பயம் இருக்காது. ‘ஏன் அப்படி?’ என்று நீ கேள்வி கேட்டாயானால், அவன் அவனுடைய மனசாட்சிக்கு மட்டும்தான்டா பயப்படுவான்.”

“டேய் கந்தா! நான் என்னடா, யதார்த்தமாகத்தான் உன்னிடம் இந்தக் கேள்வியைக் கேட்டேன். நீ என்னடா என்றால் இதற்கு இவ்வளவு பெரிய விளக்கம் சொல்கிறாய்? சரி, தர்க்கத்துக்குள் போக வேண்டாம். உன்னுடைய எழுத்து வேலையெல்லாம் எப்படிப் போய்க்கொண்டு இருக்கிறது?”

“அதுவா!” என்றான் கந்தன். சமையலறையிலிருந்து கந்தனின் அம்மா காவேரி குரல் கொடுத்தாள், “வாப்பா சேகர், எப்படி இருக்க?”

“அம்மா, நான் நன்றாக இருக்கிறேன். இந்த வழியாக ரேஷன் சாமான்கள் வாங்கி வரச் சொன்னார்கள். அதான் வரும் வழியில் கந்தனைப் பார்த்துப் பேசிவிட்டுப் போகலாம் என்று உள்ளே வந்தேன்.”

“சரி, என்ன சாப்பிடுகிறாய்? டீ வேண்டுமா அல்லது காபி வேண்டுமா?”

“ம்மா, நான் இரண்டுமே குடிப்பேன். உங்கள் வசதிக்கு என்ன இருக்கிறதோ அதைக் கொடுங்கள்.”

“இதோ, ஐந்து நிமிடத்தில் போட்டு எடுத்துக்கொண்டு வருகிறேன். அதுவரைக்கும் நீ கந்தனிடம் பேசிக்கொண்டு இரு,” என்றாள் கந்தனின் அம்மா காவேரி.

சேகரும் கந்தனும் பேசிக்கொண்டிருந்த சமயம் பார்த்து, காவேரி சொன்ன மாதிரி மூவருக்கும் காபி போட்டு எடுத்துவந்தார். “கொஞ்சம் இதை எடுத்துக்கோ சேகர்,” என்றார்.

“என்னம்மா… இவ்வளவு எடுத்துக்கொண்டு வந்திருக்கிறீர்கள்!”

“ஏன்பா, வளரும் பிள்ளை இவ்வளவு கூட குடிக்கக் கூடாதா? கொஞ்சம்தான் இருக்கிறது, குடி. ஒன்றும் செய்யாது,” என்றாள் கந்தனின் அம்மா.

“சரி கொடுங்கள்,” என்று சொல்லி, அவர் கொடுத்த காபியைக் குடித்து முடித்தான் சேகர்.

“ஏன்டா சேகரு, உன்னுடைய வேலையெல்லாம் எப்படிப் போய்க்கொண்டு இருக்கிறது? நீ தனியாக ரெடிமேட் துணிக்கடை வைத்திருக்கிறாயே?”

“ஆமாம்மா, சரியாகச் சொன்னீர்கள்.”

“எப்படிப் போய்க்கொண்டு இருக்கிறது?”

“ம்மா, உங்களுக்குத் தெரியாதா? இது என்ன நகரம் என்று நினைத்துவிட்டீர்களா! கிராமம்தானே… ஏதோ வண்டி ஓடிக்கொண்டு இருக்கிறது. விசேஷ நாட்கள், திருவிழா நாள் என்றால் கொஞ்சம் சொல்லிக்கொள்கிற மாதிரி வியாபாரம் இருக்கும்.”

“ம்மா, நான் இப்போது ரேஷன் கடைக்குப் போகணும். நான் கிளம்புகிறேன். கந்தா, அப்புறம் பேசலாம்டா,” என்று சொல்லிவிட்டு, சேகர் கந்தனின் வீட்டிலிருந்து வெளியேறினான்.

சேகர் வீட்டிலிருந்து கிளம்பிய சமயம் பார்த்து, அந்த ஊர் போஸ்ட் மாஸ்டர் கந்தனின் வீட்டு வாசலுக்கு வந்தார். சேகர் குரல் கொடுத்தான், “கந்தா, போஸ்ட் மாஸ்டர் வந்திருக்கிறார். ஏதோ கடிதம் வந்திருக்கிறது போல, வந்து வாங்கிக்கொள்,” என்று கத்திக்கொண்டே கந்தனின் வீட்டை விட்டு வெளியேறினான்.

கந்தன் வீட்டு வாசலுக்கு வந்து போஸ்ட் மாஸ்டரிடம், “சார், என்ன கடிதம்? எங்கிருந்து வந்திருக்கிறது?” என்றான்.

“அதுவா, சென்னையிலிருந்து வந்திருக்கிறது. ஏதோ பிரசித்திபெற்ற வார இதழிலிருந்துதான்.”

“சரி கொடுங்கள்,” என்று பரபரப்புடன் கடிதத்தை வாங்கிப் பார்த்தான் கந்தன். அவனது மனதில் உள்ளுக்குள் ஒரு பதற்றமும் படபடப்பும் இருந்தன. ஏனென்றால், அது அவன் எழுதிய கதை பற்றியதாக இருக்குமோ என்றுதான் அந்த எண்ணம்.

கடிதத்தை வாங்கியவன் அதைப் பிரித்துப் படித்தான். ஒரு வினாடி, அவனுடைய கண்களில் நீர் தேங்கி நின்றது. குழாயை மூடும்போது, அதன் வாயில் எப்படி ஒரு கணம் தண்ணீர் தேங்கி நிற்குமோ, அப்படி அவனது கண்கள் குளமானது. ஆனால், அடுத்த வினாடியே கண்ணைத் துடைத்துக்கொண்டு பழைய நிலைமைக்கு வந்துவிட்டான்.

அதில் அப்படி என்ன எழுதியிருந்தது? கந்தன் அனுப்பியிருந்த கதை, பிரசுரத்திற்குத் தேர்வு செய்யப்படவில்லை என்ற தகவல்தான் அது. அந்த வார இதழிலிருந்து எழுதியிருந்தார்கள்: “உங்கள் கதை எங்கள் இதழில் இடம்பெறவில்லை. ஏன் என்று தெரிந்துகொள்ள வேண்டுமா? எங்கள் வார இதழுக்கு என்று தனியாக ஒரு வாசகர் கூட்டம் இருக்கிறது. நீங்கள் எழுதி அனுப்பிய கதையின் மொழிநடை, வழக்கு மொழியில் இல்லை. பழங்கால மொழிநடையில் உங்கள் கதையைக் கொடுத்திருக்கிறீர்கள். உதாரணமாக, கதையின் பல இடங்களில் இருவர் உரையாடுவது போல அமைத்துள்ளீர்கள். அந்த உரையாடல்களில், 1950கள் மற்றும் 1960களில் வழக்கில் இருந்த சொற்றொடர்களைப் பயன்படுத்தியிருக்கிறீர்கள். இது தற்கால வாசகர்களைச் சென்றடைவது கடினம். உங்கள் கதை முற்றிலும் தவறு என்று நாங்கள் கூறவில்லை. ஆனால், இக்காலத்திற்கு ஏற்றபடி சற்று மாற்றி அமைத்திருந்தால், இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்பதே எங்கள் கருத்து. உங்களால் முடிந்தால், இந்தக் காலத்துக்கு ஏற்றவாறு மொழிநடையை மாற்றித் தர முடியுமா? அப்படி முடிந்தால் நாங்கள் பரிசீலனை செய்வோம்,” என்று எழுதியிருந்தது.

கடிதத்தைத் தன் பையில் வைத்துவிட்டு ஆற்றங்கரைப் பக்கம் நடந்தான். கொஞ்சம் அமைதியைத் தேடித்தான் அங்கே போனான். ஒரு தென்னை மரத்தடியில் சென்று அமர்ந்தான். புயல் கரையைக் கடக்கும்போது அதன் தீவிரம் அதிகமாகத்தானே இருக்கும், அதுபோல அவன் மனதுக்குள்ளும் ஒரு பெரிய போராட்டம் ஓடிக்கொண்டிருந்தது. ‘எப்படி அந்த வார இதழில் தன் கதையை இடம்பெற வைப்பது?’ என்று யோசித்தான்.

இரண்டு மணி நேரம் அங்கேயே யோசித்துவிட்டு வீட்டுக்கு வந்தான். வந்து, அவனுடைய அன்றாட வேலைகளைச் செய்யத் தொடங்கினான். அவனைப் பார்த்த அவனது அம்மா, “என்னடா, முகம் வாட்டமாக இருக்கிறது? என்ன ஆனது?” என்று கேட்டாள்.

“அதெல்லாம் ஒன்றுமில்லையம்மா. நீ போய் உன் வேலையைப் பார், நான் என் வேலையைப் பார்க்கிறேன்,” என்றான்.

“சரி, அவனே சரியாகிவிடுவான்” என்று நினைத்துக்கொண்டு, அவளும் தன்னுடைய அன்றாட வேலைகளைச் செய்யத் தொடங்கினாள். இரவு வேளையில் தன் அறையில் அமர்ந்து, மனதில் நினைப்பவற்றை வெள்ளைக் காகிதத்தில் வடிக்கத் தொடங்கினான். இரண்டு மூன்று பக்கங்கள் கடகடவென எழுதிய பிறகு, அவனே அதை மீண்டும் படித்துப் பார்ப்பான். படிக்கும்போது ஏதோ ஒரு குறை இருப்பதாகத் தோன்றும். அப்படித் தோன்றியவுடன், எழுதியதைக் கிழித்துக் குப்பைத் தொட்டியில் போட்டுவிடுவான். சில இரவுகள் இப்படி எழுதுவதும் கிழிப்பதுமாகவே கழிந்தன.

அந்த வாரக் கடைசியில், கந்தன் மீண்டும் ஒரு கதையை எழுதி அதே வார இதழுக்கு அனுப்பினான். ஒரு வாரம் ஆனது, இரண்டு வாரம் ஆனது, பதிலேதும் வரவில்லை. அவன் எதிர்பார்த்துக்கொண்டே இருந்தான். தபால்காரர் மீண்டும் அவன் வீட்டு வாசலுக்கு வந்தார். கந்தன் ஓடிப்போய் அவரிடம், “என்ன ஐயா, எங்கிருந்து?” என்று கேட்டான்.

“போன மாதம் ஒன்று வந்ததே, அதே வார இதழிலிருந்துதான்,” என்றார் அவர்.

கந்தன் அவசர அவசரமாக அவரிடமிருந்து அந்தக் கடிதத்தை வாங்கிப் பிரித்துப் படித்தான். அந்தக் கடிதத்திலும், ‘அவனுடைய கதை தேர்வாகவில்லை’ என்றுதான் எழுதியிருந்தது. மறுபடியும் சோர்ந்துபோன கந்தன், அடுத்த கணமே சுதாரித்துக்கொண்டு சுயநினைவுக்கு வந்தான்.

ஒரு நாள் அவன் சின்ன வயதில் படித்த தமிழ் வாத்தியார் வீட்டுக்குப் போயிருந்தான். மரியாதைக்காகப் போனாலும், தமிழ் ஐயா அவனைப் பார்த்ததும் அவனிடம் பழைய நினைவுகளையெல்லாம் பேச ஆரம்பிச்சார். அவனோடு சேர்ந்து எத்தனை பேர் தமிழ் படித்தார்கள், அதில் யார் யாரெல்லாம் நன்றாக அடி வாங்குவார்கள், யார் யாரெல்லாம் நன்றாகப் பாராட்டு வாங்குவார்கள் என்று பேசிக்கொண்டிருந்த சமயம்… கந்தனுடைய முகம் எங்கோ லயித்துப் போயிருந்ததைக் கவனித்த தமிழ் ஐயா, அவனிடம், “கந்தா, என்னாச்சு? என்ன எங்கோ யோசனையாக இருக்கிறாய்?” என்று கேட்டார்.

“ஐயா, அது ஒன்றுமில்லைங்க. நான் ஒரு நான்கைந்து மாதங்களாக விடாமல் ஒரு வாரப் பத்திரிகைக்குக் கதை எழுதி அனுப்பிட்டு இருந்தேன். ஆனால் அவர்கள் என் கதையைப் பிரசுரத்திற்கு எடுத்துக்கொள்ளவில்லை. நானும் ஒவ்வொரு முறையும் என் முழு முயற்சியைப் போட்டுத்தான் கதை எழுதுகிறேன். ஏனோ அந்தப் பத்திரிகையில் என் கதைக்கு இடம் கிடைக்க மாட்டேங்குது. அதான் கொஞ்சம் யோசித்துக்கொண்டு இருந்தேன்,” என்றான்.

“அட, இவ்வளவுதானா! நீ நான்கு மாதம், ஐந்து மாதம் அந்த வாரப் பத்திரிகைக்குக் கதை அனுப்பியது தவறே இல்லை. உன் முயற்சியை நீ எப்போதும் தளர விடக்கூடாது. உனக்குத் தெரியுமா? வெற்றி என்பது போராட்டத்திற்குப் பிறகுதான் கிடைக்கும். அதனால் நீ இன்னும் முயற்சி செய்து நிறைய எழுது. ‘எழுத எழுதத்தான் எழுத்து மெருகேறும்’ என்று சொல்வார்கள். அதனால் இப்ப உன் கதை பிரசுரம் ஆகவில்லை என்று கவலைப்படாதே. நீ தொடர்ந்து எழுது, அந்த எழுத்து உனக்குக் கைவரும். அப்போது நீ ஒரு கதை எழுதி அந்த வாரப் பத்திரிகைக்கு அனுப்பு. கண்டிப்பாக உன் கதைக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும். இப்ப நீ போயி உன்னுடைய அன்றாட வேலையைக் கவனி. நேரம் கிடைக்கும்போது கதை எழுது. அதுவும் நான் சொன்ன மாதிரி, ‘எப்ப எழுத்து உனக்கு நன்றாகக் கைக்கு வருகிறது’ என்று உன் மனசு சொல்கிறதோ, அப்போது அந்தக் கதையை அனுப்பி வை. கட்டாயமாகச் சொல்கிறேன், அப்போது உன் கதை பிரசுரத்துக்குத் தகுதி பெறும் என்பதில் எந்தச் சந்தேகமும் வேண்டாம்,” என்றார்.

அவரிடம் நன்றி சொல்லிட்டு வீட்டுக்குத் திரும்பினான். இரண்டு மாத காலம் அமைதியாக இருந்தான். வேலைக்குப் போவதும், சாயங்காலம் வீட்டுக்குத் திரும்புவதுமாகவே இருந்தான். ஒரு வழியாகக் கடைசியில், முழு முயற்சியோடு அவன் ஆழ் மனதில் தேக்கி வைத்திருந்ததையெல்லாம் எழுத்தில் கொட்டி எழுத ஆரம்பித்த கதைதான் “போராளி”.

இந்தக் கதை முழு வடிவம் அடைந்தவுடன், மீண்டும் அந்த வார இதழுக்கு அனுப்பியிருந்தான். ஒரு மாதம் ஆகியும் பதில் வரவில்லை. இவனும் அதை மறந்தே போய்விட்டான். ஒரு நாள் போஸ்ட் மாஸ்டர் மறுபடியும் வந்தார். வந்தவர் கந்தனைக் கூப்பிட்டு, அவனிடம் அந்தக் கடிதத்தைக் கொடுத்தார்.

கந்தனோ, ‘என்ன புதிதாக வரப்போகிறது, அதே பதிலாகத்தான் இருக்கும்’ என்று நினைத்துக்கொண்டே கடிதத்தைப் பிரித்துப் படித்தபோதுதான் அவனுக்குத் தெரிந்தது, அவனுடைய கதை அந்த வார இதழில் வெளிவந்திருக்கிறது என்று.

அப்போதுதான் அவனுக்கு அவனுடைய தமிழ் ஐயா சொன்னது நினைவுக்கு வந்தது, ‘போராட்டத்திற்குப் பிறகுதான் வெற்றி’ என்று.

“வெற்றி வேண்டுமென்றால் போராளியாக இருப்பதில் தவறில்லை” என்பதை கந்தன் உணர்ந்துகொண்டான்.

-பாலமுருகன்.லோ-

Series Navigationகவிதைகள்நந்தி