8 கவிதைகள்

 

கவிதை 1

தமிழ்

கிணறுகள்

குளங்கள் ஏரிகள்

நதிகள் கடல்களென

தமிழ் இனம்

 

அனைத்திற்கும்

பெருமை

தமிழ் என்ற

தண்ணீரே

-அமீதாம்மாள்

 

கவிதை 2

தமிழ்விழா

தமிழ்விழா

தேன் கூடு

வெவ்வேறு  பூச்சிகள்

வெவ்வேறு பூக்கள்

வெவ்வேறு தேடல்கள்

சேமிப்பது என்னவோ

தேன் மட்டுமே

-அமீதாம்மாள்

 

கவிதை 3

கனம்

கனமாக விழும்

அருவியில்

இலேசாக விழுகிறது

மழை

அருவிக்குப் புரிகிறது

‘தன் கனம் என்பது

மழையால் வந்தது’

-அமீதாம்மாள்

 

கவிதை 4

புறம்

பலாவும் டுரியானும்

பேசிக் கொண்டன

புத்திசாலி மக்கள்

புரிந்து கொண்டனர்

புறம் பொய்யென்று

-அமீதாம்மாள்

 

 

கவிதை 5

நட்பு

அந்தப் பூங்காவில்

அவனோடு வந்த நாயும்

அவளோடு வந்த நாயும்

முத்தமிட்டுக் கொண்டன

-அமீதாம்மாள்

 

கவிதை 6

தமிழை நேசிப்போம்

தமிழில் பேசுவோம்

பொயப் பூவில்

தேன் தேடும்

பட்டாம்பூச்சிகள்

 

முளைக்க

விரும்பும்

அரிசிகள்

 

உதயத்திற்கு

ஆசைப்படும்

மேற்குகள்

 

தாய்மை

விரும்பும்

வெம்பல்கள்

 

அமைதியை

விரும்பும்

அருவிகள்

 

தனிமை

விரும்பும்

இளமைகள்

 

தரித்திரம்

விரும்பும்

தலைமைகள்

 

துறவு

விரும்பும்

உறவுகள்

 

வெளிச்சம்

விரும்பும்

ஆழ்கடல்கள்

 

சாலைகள்

விரும்பும்

ஓடங்கள்

 

எது எப்படியோ

போகட்டும்

 

தமிழன் மட்டும்

தமிழையே

நேசிக்கட்டும்.

தமிழையே

பேசட்டும்

-அமீதாம்மாள்

 

கவிதை 7

தேடுகிறேன்

என்னை

வீட்டில் வைத்துவிட்டு

வெளியே தேடுகிறேன்

வெளியே வைத்துவிட்டு

வீட்டில் தேடுகிறேன்

-அமீதாம்மாள்

 

கவிதை 8

தேக்காவில் மயில்

‘தலையின்

இழிந்த மயிரனையர்

மாந்தர் நிலையின்

இழிந்தக் கடை’

 

தேக்கா வந்த

மயிலுக்கு

ஏகப்பட்ட மகிழ்ச்சி

பயணிகள்

கைகளிலெல்லாம்

தன்னில் இழிந்த மயிர்கள்

-அமீதாம்மாள்

 

Series Navigationகதுவா: ஒரு குரூரமான குற்றம் எவ்வாறு அரசியல் மற்றும் மத சாயம் பூசப்பட்டு ஒற்றை பரிமாணமாக்கப்பட்டதுஎனக்குள் தோன்றும் உலகம்