பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களின் நினைவரங்கு

author
0 minutes, 5 seconds Read
This entry is part 18 of 43 in the series 17 ஜூன் 2012

வாணி. பாலசுந்தரம்

 

கடந்த மே மாதம் 20ம் திகதி கனடா, ஸ்காபரோ நகர மண்டபத்தில் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களின் நினைவரங்கு மிகவும் சிறப்பாக நடந்தேறியது.

 

நினைவரங்கு அழைப்பிதழ் மின்னஞ்சல் ஊடாக எனக்குக் கிடைத்ததுமே –அக்காலப் பல்கலைக் கழகச் சூழலும், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், சகமாணவர்கள், எமது அன்றய வாழ்வின் நிகழ்வுகள் யாவும்  மனதில்  திரையோட –  நானும் அன்றைய தினம் நினைவரங்கில் சென்றமர்ந்தேன்.  நிகழ்ச்சிகள் யாவும் அமைதியான முறையில், அழகாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

 

முதலில் கனேடியத் தேசியகீதமும் தமிழ்த்தாய் வாழ்த்தும் இசைக்கப்பட்டன. தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு மாலினி பரராஜசிங்கம் அவர்களுடன் அவரது மாணவிகள் இருவர் இணைந்து நடனம் ஆடினர். இதன் பின்னர் மங்கள விளக்கேற்றல் வைபவம் இடம்பெற்றது. சற்று வித்தியாசமாகவே ஆரம்பித்த அன்றைய விழாவினை அதிபர் பொ. கனகசபாபதி அவர்கள் தன்னுரையுடன்  தலைமைதாங்கி இனிதே நடத்திச் சிறப்பித்தார்.

 

அதைத் தொடர்ந்து பேராசிரியர் சந்திரகாந்தன் சிறப்புரையாற்றினார். அவரது பேச்சும் நினைவு மீட்டலும் பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் பெருமைகளை வெளிக்கொணர்ந்தன. நல்ல காத்திரமான அந்த நினைவுப் பேருரையிலிருந்து பேராசிரியரது சிறப்புக்களை மென்மேலும் அறிய முடிந்தது.

 

பின்னர், “சிவாஜி ஒரு பண்பாட்டியற் குறிப்பு” என்ற ஆவணப்படம் ஆரம்பமானது. சிவத்தம்பி அவர்களின் ஓரிரு பேச்சுக்கள், விரிவுரைகளை மட்டுமே ஒரு காலத்தில் செவிமடுக்க எனக்குக் கிடைத்திருந்தது.  அவருடன் நேரடியான பழக்கம் இல்லையானாலும், விரிவுரை கேட்கும் பாக்கியமாவது கிட்டியதே என எண்ணிப் பெருமையடைவேன். ஆவணப்ப் படத்தின் மூலம் அவர் நேரடியாகக் கதைத்தது, இடையிடையே என் நினைவோட்டத்தில் என்னை அடியுண்டு போக வைத்தாலும், நான் அனுபவித்தது அதிகம்.

 

தொடர்ந்து மாலினி பரராஜசிங்கம் அவர்களின் பாரதிபாடல் இசைக்கப்பட்டது. அது அவ்விடத்தில் ஒரு அமைதியான இனிய இசைத் தென்றலென வந்தது என்றே கூறவேண்டும்.

 

அடுத்த அம்சமாக, பேராசிரியர் சுப்பிரமணிய ஐயர் அவர்கள்   ’தமிழிலக்கியத் திறனாய்வியலில் பேராசிரியர் கலாநிதி கா. சிவத்தம்பியவர்களின் இயங்குநிலை’  என்ற தலைப்பில், விரைவில் வெளிவர இருக்கும் ‘கனம்’ கட்டுரைத் தொகுதிக்கென எழுதிய கட்டுரையை   அடியொற்றித் தயாரிக்கப்பட்ட  ’போராசிரியர் சிவத்தம்பியின்  இலக்கியத் திறனாய்வுச் செல்நெறி’ எனும் ’உரைமொழிவு’ ஒன்றை ஸ்ரீரஞ்சினி விஜேந்திரா, தர்ஷினி வரப்பிரகாசம், க. நவம் ஆகியோர் கூட்டாகச் சேர்ந்து வழங்கினர். தனியே இருந்து புத்தகத்தைப் புரட்டிப் புரட்டி வாசிக்கும் போதிராத விளக்கம், அவர்கள் வாசிப்பில் அமைந்திருந்தமை என்னைக் கவர்ந்தது.

 

உரைமொழிவு நிகழ்ச்சியின் தொடராகத் திரையிடப்பட்ட ‘ஜெயகாந்தன் என்ற உலகப் பொது மனிதன் – புதிய சிந்தனை நிலைகளுக்கு’  என்ற இரண்டாவது ஆவணப் படத்தில், ஜெயகாந்தன் அவர்களின் பேச்சுக்கள், உரைகள், வாழ்வின் வெவ்வேறு கட்டங்கள் என்பவற்றைத் தொகுத்து வழங்கியிருந்தார் தயாரிப்பாளர், மூர்த்தி.

 

அன்றைய நிகழ்வின் சிறப்பம்சமான, பேராசிரியர் பங்கேற்று, கனடா மூர்த்தி அவர்களால் உருவாக்கப்பட்ட, இரு ஆவணப்படங்களும் ஏற்கனவே கொழும்பிலும் சென்னையிலும் திரையிடப்படப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

 

‘சிவாஜி ஒரு பண்பாட்டியற் குறிப்பு’ என்ற ஆவணப்படத்தில், சிவாஜி நடித்த படங்களின் இலக்கியாம்சங்களைப் பேராசிரியர் தன்னுரையில் எடுத்து இயம்பும் பொழுதெல்லாம் அந்தந்த  இடங்களில்  வரும் திரைப்படங்களை அவர் தெரிந்து, குறித்த காட்சிக் கட்டங்களை உரையின் பின்னே எடுத்துக் காட்டியிருந்தார். சிவாஜியின் படங்களை வெறுமனே பார்த்த எங்களுக்கு, இலக்கியச் சுவையுடன் பகிர்ந்தளித்தமை மகிழ்ச்சிக்குரியதும் பாராட்டற்குரியதும் ஆகும். இருந்தும் பேராசிரியர் பேச்சினூடே காட்சிகள் வரும்பொழுது பேச்சின் கவனம் துண்டுபடவே செய்தது. பேச்சின் பின் காட்சிகளோ, இல்லை காட்சிகளின் பின் பேச்சோ தனித் தனியே வந்திருந்தால் இரண்டையும் முழுமையாக அனுபவித்திருப்பேனே என்று என் மனம் அங்கலாய்த்தது.

 

வாழ்க்கை நீரோட்டத்தில் கற்ற தமிழை மறந்து அமிழ்ந்து போய்க்கொண்டிருக்கும் எங்களுக்கு, அது மனநிறைவையும் மகிழ்வையும் தந்திருந்தது. இப்படைப்புக்களை பகிர்ந்தளித்த கனடா மூர்த்தி அவர்களுக்கும் அவருடன் இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்த க. நவம் அவர்களுக்கும்  எனது பாராட்டுக்களும் நன்றியும்.

Series Navigationஆசை அறுமின்!தாய்மையின் தாகம்……!
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *