ஹெச்.ஜி.ரசூல்
இமாம் ஷாபி தரும் விளக்கமொன்று இவ்வாறு விரிகிறது. முசுக்கட்டை மரத்தின் இலை, அதன் சுவை ஒன்றுதான். ஆனால் அதை பட்டுப்புழு தின்றுவிட்டு பட்டுநூலைத் தருகிறது. தேனீ தின்றுவிட்டு தேனைத் தருகிறது. இவ்வார்த்தைகளை நாம் இச்சூழலில் பொருத்திப் பார்க்கலாம்.
குர்ஆன் ஒன்று. எனினும் காலந்தோறும் அதன் விளக்கவுரை நுட்பமாக விரிவாக பல்வித அர்த்தப் பரிமாணங்களில் எழுதப்பட்டு வந்துள்ளது. காலம், அறிவுச்சூழல், பிரதேசம், பண்பாட்டின் இறுக்கம் சார்ந்து அதன் அர்த்தங்கள் அகலமும் கனமும் பெறுகின்றன. ஒற்றை முறையியல் ஆய்வு வெளியைத் தாண்டி இன்று வளர்ந்துள்ள பன்முகத்தன்மை மிக்க வரலாற்றியல், நிலவியல், சூழலியல், மானிடவியல், சமூகவியல், பல்துறை அறிவு சார்ந்த அணுகுமுறைகள் திறனாய்வுத்துறையில் முன் வைக்கப்படுகின்றன.
அரபு மூலங்களிலும், உலகின் ஏனைய மொழிகளிலும் இஸ்லாமிய அறிஞர்கள், இஸ்லாம் அல்லாத பிற அறிஞர்கள் இவற்றை அறிமுகம் செய்துள்ளனர். முசுக்கட்டை மரத்தின் இலை பட்டு நூலாக, தேனாக, கஸ்தூரியாக உருமாறுவது இத்தகைய சார்பு நிலை கொண்டுதான் என்பதை குறிப்பிட்டாக வேண்டும்.
வரலாற்றின் மத்திய காலப்பகுதியில் ஏறத்தாழ 630 ஆண்டுகளுக்கு முன்பதாகவும், திருக்குர்ஆன் முழுமை பெற்று கிட்டத்தட்ட 740 ஆண்டுகளுக்கு பின்பதாகவும் உருவான குர்ஆனின் விளக்கவுரை தப்சீர் இப்னுகஸீர் ஆகும். இதன் மூல ஆசிரியர் இமாம் அபுல்ஃபிதா இஸ்மாயீல் பின்கஸீர் அத்தி மஷ்கீ. இவரது பிறப்பு இன்றைய சிரியாவிலும் வாழ்க்கை குடியேற்றம் டமாஸ்கஸிலும் நிகழ்ந்துள்ளது. கி.பி. 1300 க்கும் 1372 க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த இவரது நான்கு பாகம் கொண்ட குர்ஆன் அரபுமொழி விரிவுரையை மெக்காவின் மன்னர் அப்துல் அஸீஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர் பேரறிஞர் முஹம்மத் அலீ அஸ்ஸானி மூன்று பாகமாக சுருக்கி வெளியிட்டுள்ளார். இந்த அரபுமொழிப் பிரதியின் தமிழ் மொழிபெயர்ப்பே ரஹ்மத் அறக்கட்டளை நிறுவனத்தார் வெளியிட்டிருக்கும் தப்சீர் இப்னுகஸீர் முதல்பாகமாகும்.
இப்னுகஸீரின் விரிவுரை முறையியல் திருக்குர்ஆனின் வசனங்களுக்கு அதே குர்ஆனின் பிற வசனங்களைக் கொண்டும், ஸஹீஹ÷ல்புகாரி, ஷமாயில் திர்மிதி, ஜாமிவுத் திர்மதி, அபூதாவூத், இப்னுமாஜா, முஸ்னது அஹமத், ஸஹிஹ்முஸ்லிம் உள்ளிட்ட ஹதீஸ்களின் வழி நின்றும், உமர், அப்பாஸ், மஸ்ஊத், அபுஹுரைரா நபித்தோழர்கள், இப்னு ஜரீர் அத்தப்ரீ, இப்னு இஸ்ஹாக், இமாம் குர்துபி உள்ளிட்ட குர்ஆன் விரிவுரை அரபுமொழிப் பேரறிஞர்கள், மற்றும் அரபு மொழிக் கவிஞர்களின் கவிதைகளின் ஊடாகவும் விரிவுரை செய்யப்பட்டுள்ளது.
சொல்லாராய்ச்சி, மொழியியல் திறனாய்வு விளக்கம் என்பதான திசை வழிகளை இது சொல்லித் தருகிறது. வாசகனுக்கு சில அடிப்படையான புரிதல்தளங்களை தாராளமாக உருவாக்கித் தரும் தப்சீரின் அடிக்குறிப்புகள், சொல் விளக்கத் தொகுப்பு குர்ஆன் வசனங்களுக்கான சமகால விளக்கங்கள், ஐயப்பாடுகளை தீர்க்க முனையும் குறிப்புகள், விவிலியம் பழைய ஏற்பாடு, பைபிளில் இடம்பெறும் வரிகள் மற்றும் யூத வரலாற்று நிகழ்வுகளும் இவற்றோடு இணைக்கப் பெற்றுள்ளன.
சூரத்துல் பாத்திஹா அத்தியாயம் சபிக்கப்பட்ட ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்பு கோருவதிலிருந்து துவங்குகிறது. இறைப்புகழ்ச்சி அளவற்ற அருளாளன் (அர்ரகுமான்) நிகரற்ற அன்புடையோன் (அர்ரஹீம்) பிரதிபலன் அளிக்கும் நாளின் அதிபதி (மாலிகியெüமித்தீன்) என வெளிப்பட்டு உன்னையே வணங்குகின்றோம், உன்னிடமே உதவி தேடுகின்றோம் (இய்யாக்க நக்புது வ இயக்காக்க நஸ்தகீன்) என பிராத்தனை செய்கிறது. தொடர்ந்து எங்களை நேர்வழியில் செலுத்துவாயாக (இஹ்தின சிறாத்தில் முஸ்தகீன்) என வேண்டுகிறது. நீயாருக்கு அருள் புரிந்தாயோ அவர்களின் வழியில் செலுத்துவாயாக, அவர்கள் உனது சினத்திற்கு ஆளானவர்கள் அல்லர், வழிதவறிச் சென்றவர்களும் அல்லர் (சிறாத்தில் அதீன அன்ஹம்த அலைகும் கைறில் மக்ழூபி அலைகிம் வலள்ளாலீன்) இவ்வாறாக இறுதிவசனங்களில் தென்படுகிற நேர்வழி தவறான வழி இருமை நிலைகளையும், சினத்திற்கு ஆளானவர்கள், வழி தவறிச் சென்றவர்கள் யார் யார் என்ற கேள்வியையும் எழுப்புகிறது. அரேபிய சூழல் சார்ந்த வாழ்வுப் பின்னணியில் இறைவனின் கோபத்துக்கு ஆளானவர்களாக யூதர்களும், வழி தவறியவர்களாக கிறிஸ்தவர்களும் குறிக்கப் பெற்றுள்ளனர். இதன் தொடர்ச்சியாக அல்பகரா அத்தியாயத்தின் முதல் ஐந்து வசனங்கள் இறை நம்பிக்கையாளர் பண்புகள் பற்றியும், அடுத்து வரும் 15 வசனங்கள் இறை மறுப்பாளர் நய வஞ்சகர்களின் பண்புகள் பற்றியும் விவரிக்கிறது. இறை நம்பிக்கையாளர் பண்புகளில் மிக முக்கியமாக ஈமான் தொழுகை தர்மம் என்கின்ற மூன்றுபண்புகளமுதன்மைப்படுத்தப்
அவர்கள் மறைவானவற்றை நம்புவார்கள். தொழுகையைக் கடைபிடிப்பார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (பிறருக்கு) செலவு செய்வார்கள் (2:3)
இங்கே தொழுகை உடல்சார்ந்த வழிபாடாகவும், தர்மம் பொருள் சார்ந்த வழிபாடாகவும் இணைவாக்கம் பெற்றுள்ளது.
அல்பகரா அத்தியாயத்தின் சிறிதும் பெரிதுமான 286 வசனங்களும் ஏறக்குறைய இஸ்லாமியர்களின், சமூக, குடும்ப, தனிமனித வாழ்வு சார்ந்த அனைத்துப் பிரச்சினைகளையும் பற்றி உரையாடுகின்றன. குறிப்பாக இறைவழிபாடு, பிறருக்கு உதவுதல், நேர்வழி பின்பற்றாதவர் மீதான கண்டனம், ஷைத்தான், நரகம், சொர்க்கம் பற்றிய கருத்தியல்கள், ஆதம்நபி, மூசா நபி, இப்ராஹீம் நபி, கஃபத்துல்லா வரலாறு, நோன்பு, ஹஜ், உம்ரா கடமைகள், திருமணம், இஸ்லாமியப்பெண் இணை வைக்கும் பெண், அடிமைப் பெண் குறித்த விவரிப்புகள், பெண் உடல்ரீதியாக எதிர்கொள்ளும் மாதவிடாய் பிரச்சனை, தாம்பத்ய உறவு, மணவிடுதலை பெற ஆண் சொல்லும் தலாக் (விவாகரத்து) பெண் சொல்லும் குலாஅ, இத்தா காலம், மணவிலக்கு பெற்ற பெண்ணுக்கான பாதுகாப்பு, வணிகம், வட்டி உள்ளிட்ட பொருளியல் சிந்தனை என பன்முகக்கூறுகளின் பிரதிபலிப்புகளை யதார்த்த நிலையிலும், கதையாடல் வடிவத்திலும் முன்வைக்கப்படுகின்றன.
அரபுமொழிச் சொற்களின் தமிழ் அர்த்தங்களை நடைமுறைப் பயன்பாடு சார்ந்து எளிதில் அறிந்து கொள்ள முடிகிறது. அபூ(தந்தை) உம்மு(தாய்) இப்னு(புதல்வர்) இப்னத்/பின்த்(புதல்வி) என்பதான நிலைகளில் அபூஅப்துல்லாஹ் (அப்துல்லாவின் தந்தை) உம்முசல்மா (சல்மாவின் தாய்) இப்னுஉமர் (உமரின் புதல்வர்) என இதன் விளக்க நீட்சி செல்கிறது.
ஒரு சொல் சூழல் சார்ந்து பல விளக்கம் பெறுதல் என்பதான மொழியியல் கூறுகளும் விரிவுரைகளில் பின்னிப் படர்ந்து கிடக்கின்றன. இது ஒரு சொல்லின் நேரடிப் பொருள் சூழ்பொருள் என்பதான எல்லைகளையும், மேற் தள அர்த்தம், ஆழ்தள அர்த்தம் சார்ந்த வெளிப்பாடுகளையும் கொண்டு இயங்குகிறது. அல்பாத்திஹா அத்தியாயம் உம்முல்கிதாப் உம்முரல்ஸ் தலையின் அன்னை (மூளையைச் சுற்றியுள்ள சவ்வு) என்றும் பிறிதொரு இடத்தில் உம்மு படைவீரர்களை ஓரணியில் சேர்க்கும் இராணுவக் கொடியாகவும் அர்த்தம் பெறுவதைக் குறிப்பிடலாம்.
இதுபோன்ற குர்ஆனின் இடம்பெறும் சில பொருட்கள் புதுவித அர்த்தங்களை சுமந்து பெறும் சிந்தனை விளக்கம் வாசிப்பிற்கு புத்துணர்ச்சியை அளிக்கிறது. நரகம் பற்றிய அச்சமூட்டும் வர்ணனையை குர்ஆனின் அல்பகரா வசனம் சுட்டிக்காட்டுகிறது.
மனிதர்களும் கற்களும் எரிபொருளாக உள்ள நரக நெருப்புக்கு நீங்கள் அஞ்சுங்கள். இறை மறுப்பாளர் களுக்காகவே அது தயார் செய்யப் பட்டுள்ளது. 2:24)
இதில் இடம்பெறும் எரியும் கற்கள் எதைக் குறிக்கின்றன என்பதற்கு பிணத்தை விட துர்வாடை வீசுகிற இறுகிய கரிய நிறமுடைய கந்தகக்கற்கள் தான் எரிக்கப்படும்போது கடுமையான வெப்பத்தை கக்குகின்றன என்பதான யதார்த்த விளக்கம் தரப்படுகிறது.
அல்பகராவின் 2:57 வசனம் இஸ்ரவேலர்கள் தொடர்பான சுட்டுப் பொசுக்கும் தீஹ்பாலைவனப் பிரதேசத்தில் நடைபெற்ற வரலாற்று நிகழ்வை பேசுகிறது.
நாம் உங்கள்மீது மேகங்களை நிழலிடச்செய்தோம். உங்களுக்கு மன்னு மற்றும் சல்வாவை இறக்கி வைத்தோம். (அத்தோடு) நாம் உங்களுக்கு வழங்கியுள்ள தூய்óமையானவற்றிலிருந்து உண்ணுங்கள். (என்றோம்)
இவ்வசனத்தில் இடம்பெறும் மன்னு சல்வா குறித்த விளக்கங்கள் அரபு புவியியல் பரப்பு, சுற்றுச்சூழல், உணவுப்பழக்கம் சார்ந்து வெளிப்படுவதை கவனிக்கலாம். மன்னு. உணவுப்பொருள் மன்னா என்ற வேர்ச்சொல்லிலிருந்து பிறப்பெடுத்துள்ளது. இஞ்சிச் செடியில் பனிப்பொழிவைப்போல் இறங்கிக் கொண்டிருந்த உணவுப் பொருள், அது தேன்வகை திரவ உணவு, பாலைவிட அதிக வெண்மையாகவும், தேனை விட இனிப்பாகவும் உள்ள உணவு, மன்னுவகையைச் சேர்ந்ததுதான் சமையல்காளான், அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமளிக்கும் என்பதாக இந்த அர்த்தப்படுத்தல்கள் நிகழ்ந்துள்ளன. இதிலிருந்து மன்னு ஒரு தாவர வகை உணவு என்பதை புரிந்து கொள்ளலாம். சல்வாவைப் பொறுத்தமட்டில் தென்திசைக்காற்று கொண்டு சேர்க்கும் சிவப்பு நிறச் சாயலுள்ள பறவைகளில் ஒன்று, காடையைவிட அளவில் பெரிதான அதைப் போன்ற ஒருவகைப் பறவை என்பதான விளக்கம் தரப்படுகிறது. இப்படியாக குர்ஆனில் இடம் பெற்றிருக்கும் ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் பல்துறை அறிவின் விளக்கங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
குர்ஆனில் இடம்பெறும் குறியீட்டு மொழியினை எவ்வாறு அர்த்தப்படுத்திப் பார்ப்பது என்ற பிரச்சினையும் இத்தோடு எழுகிறது. ரமலான் மாதத்தின் நோன்புக் கால விதிமுறைகள் குறித்து அல்பகராவின் வசனம் சில வழிகாட்டல்களைச் சொல்கிறது.
… இன்னும் விடியற்காலையில் வெள்ளை நூலையும் கறுப்பு நூலையும் பிரித்தறிய முடியும் வரை உண்ணுங்கள் … பருகுங்கள் … (2:187)
இவ்வசனத்தை நேரடி அர்த்தமாக புரிந்து கொண்ட அதீ பின்ஹாத்திம் நபித்தோழர் ஒரு கறுப்பு கயிற்றையும், வெள்ளைக் கயிற்றையும் தலையணைக்கடியில் வைத்துக் கொண்டு இரவில் அவற்றை அடிக்கடி உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறார். இது குறித்து மறுநாள் நபிமுகமது(ஸல்)விடம் தெரிவித்தபோது கறுப்புக்கயிறும், வெள்ளைக்கயிறும் நேரடியாக கயிறைக் குறிப்பதல்ல, கறுப்புக் கயிறு இரவின் கருமையையும், வெள்ளைக் கயிறு அதிகாலை வெளிச்சத்தையும் குறிப்பதாகும் என்பதாக நபிமுகமது விளக்குகிறார். இதிலிருந்து நோன்பு காலத்தில் சஹர் நேர உணவு உண்ணுதல் அதிகாலை உதயமாகும்வரை அனுமதிக்கப்பட்டுள்ளதை அறிந்து கொள்ளலாம்.
பசுமாடு என்னும் பொருள்கொண்ட அல்பகரா என இந்த அத்தியாயத்திற்கு பெயர் வந்தமைக்கு காரணம்குறிப்பிடப்படுகிறது. பனுஇஸ்ராயீல் காலத்தில் ஒரு கொலையாளியைக் கண்டுபிடிக்க வேண்டுமெனில் ஒரு பசுமாட்டை அறுத்து அதன் உறுப்புகளில் ஒன்றை எடுத்து இறந்தவர் சடலத்தின் மீது அடித்தால் அவரே எழுந்து கொலையாளி யார் என்று சொல்லிவிடுவார் என்ற மூசா நபி வாழ்வு நிகழ்வின் அடிப்படையில் இப்பெயர் ஏற்பட்டுள்ளது. எனினும் இத்தகைய பெயரிடுதலை நிகழ்த்தியது யாரென்பது பற்றிய தகவல் அடிக்குறிப்பிலும் இல்லை. அல்லாஹ்வால் நபிகள் நாயகத்திற்கு வஹி மூலம் கி.பி.632 முடிய 22 ஆண்டு காலத்தில் இறக்கப்பட்ட குர்ஆனின் வசனங்கள் நபிகளாரின் மறைவுக்குப் பிறகு ஏறத்தாழ 12 ஆண்டுகளுக்குப்பின் ஹஸரத் உதுமான் காலத்தில்தான் இத்தகு வடிவம் பெறுகிறது. எனவே குர்ஆன் அத்தியாயங்களுக்கான பெயரிடுதல்கள் குறித்த ஆதார பூர்வமான வரலாற்று பதிவுகள் குறித்தும் தேடல் நிகழ்த்த வேண்டியுள்ளது.
ஆதம் நபி தொடர்பான அல்பகரா அத்தியாயத்தின் 36 வது வசன துவக்கம்
ஷைத்தான் அ(ம்மரத்)தை வைத்து
அவ்விருவரையும் வழிதவறச் செய்தான்”
என இடம்பெறுகிறது. ஆதம் நபி, ஹவ்வாவிற்கு சொர்க்கத்தில் விலக்கப்பட்ட கனியும், சபிக்கப்பட்ட மரமும் எதுவாக இருந்திருக்கும் என்பது குறித்த மார்க்க அறிஞர்களின் கருத்து நிலையில் அது திராட்சைக்கொடி, கோதுமைப்பயிர், தானியக்கதிர், பேரீச்ச மரம், அத்திமரம், ஆலிவ் மரம் என பல்வேறு நிலையில் அடையாளப் படுத்தப்படுகின்றன. இத்தகு முடிவுறா அர்த்தங்களைக் கொண்ட வசனங்களும் தப்சீரில் உள்ளன. இந்நிலையில் ஆதம் நபி பற்றிய சமகால விவாதங்களில் ஆதம்மலை, ஆதமின் பாதச்சுவடு என ஆதம் நபியை தென் தமிழக வரலாற்றோடு இணைத்துப் பார்க்கின்ற அணுகுமுறையும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஒவ்வொரு நபிமார்களும் தங்களது மொழியை ஒரு அடையாளமாக கொண்டிருக்கின்றனர். மூசா நபிக்கு தெளராத்வேதம், இப்ரானி மொழியிலும், தாவூத் நபிக்கு சபூர்வேதம் யூனானி மொமழியிலும், ஈசா நபிக்கு இஞ்சீல் வேதம் அரபு மொழியிலும் அருளப் பெற்றுள்ள நிலையில் ஆதம் நபிக்கு வழங்கப்பட்ட பத்து ஸுஹ்புகளும் எந்த மொழியில் இறக்கப்பட்டன இறைவனிடம் எந்த மொழியில் ஆதம்நபி ஆலிவ் மரத்தடியிலிருந்து பாவமன்னிப்பு கோரியிருக்ககூடும் என்பது குறித்தும் தேடல்கள் உருவாகின்றன.
அரபு சமூக வரலாற்றில் மூசா நபி காலத்தில் காளைக்கன்றை தெய்வமாக வழிபட்ட இஸ்ரவேலர்கள் தமக்குத்தாமே கொலை செய்ய பணிக்கப்பட்ட நிலையையும் சில விநாடி இருளின் மூடல் விலகியபோது எழுபதினாயிரம் பேர் வெட்டிக் கொல்லப்பட்ட நிகழ்ச்சி ரத்தத்தை உறைய வைக்குமளவுக்கு தப்சீரில் உக்கிரமாக இடம்பெற்றுள்ளது. மக்காவின் குரைஷிகள், பதூயின்கள் உள்ளிட்ட பழங்குடி மக்கள் மதிநாவின் யூதர்கள் (இஸ்ரவேலர்கள்) கிறிஸ்தவர்கள் என பல் இன மத குழுக்களுக்கிடையே இஸ்லாம் பரவத் துவங்கியபோது ஒரிறை கொள்கை வழியை நபிமுகமது(ஸல்) நடைமுறைப் படுத்திக் காட்டினார். அல்பகராவில் யூதக்கொள்கையை பின்பற்றுவோர்களை இஸ்லாத்தின்பால் ஈடுபட அழைக்கும் வார்த்தைகள் இடம் பெறுகிறது.
தொழுகையைக் கடைபிடியுங்கள். ஸகாத் (எனும் கட்டாயக் கொடையை) வழங்குங்கள். குனி(ந்து தொழு)கின்றவர்களுடன் சேர்ந்து நீங்களும் குனி(ந்து தொழு)ங்கள் (2:43)
தக்வா எனும் இறையச்சத்தை வெளிப்படுத்தவே தொழுகை என்றாலுங்கூட பண நிற இன மொழி பேதமற்று அனைவரும் இறைவனின் முன் சமம் என்னும் சமூக சத்துவத்தை தொழுகை முன்னிறுத்துகிறது. தமிழ் சூழலில் சூபியாக்களின் அர்த்தப் பரிமாணங்களில் ஒன்றாக தொழுகையின் பல நிலைகளை விளக்கப்படுகின்றன தக்பீர் கட்டும் நிலை (தாவரங்கள்) ருகூவு (விலங்கினம்) ஸ÷ஜ÷து (ஊர்வன) அத்தஹியாத் இருப்பு(மலைகள் என்பதாக உயிரின பரிணாமக் கோட்பாட்டின் அர்த்தப் பரிமாணமாக சொல்லிக் காட்டுவதை கவனிக்கலாம்.
இந்திய தமிழக யோக மரபின் அடிப்படையில் தொழுகை நிலைகள் ஒவ்வொன்றும் சமஸ்திதி நிலை, கர்ண சக்தி விகாஸ நிலை, ஸமன் சக்தி விகாஸகாநிலை, சக்ரவாகாசனம், அர்த்த சிரசாசனம், வஜ்ராசனம், அர்த்த மத்ஸயேந்திராசனம் என்கிற தியான ஆசனமுறைகளோடு நெருங்கிய உறவை கொண்டுள்ளதாக கூறப்படும் கருத்தையும் கவனத்திற் கொள்ளலாம்.
குர்ஆனிய வசனங்களுக்கு நபிகள் நாயகத்தின் காலகட்டத்தை ஒட்டி வரலாற்று இஸ்லாம் கால விளக்கங்கள் ஒருபுறமும், 19 ம் நூற்றாண்டின் ஐரோப்பிய மறுமலர்ச்சி விஞ்ஞான யுக சிந்தனையின் வெளிப்பாடாக நவீன இஸ்லாம் சார் விளக்கங்கள் மறுபுறமும் உருவாகியுள்ளன. சர்சையத் அகமத்கான், அல்லாமா முகமது இக்பால், யூசுப்அலி, மெüதூதி, குலாம் அகமது பர்வேண், ரஷாத்கலீபா, உள்ளிட்ட சிந்தனையாளர்களை குறிப்பிடலாம். இன்றைய பின் நவீன கால சிந்தனையும் உள்வாங்கி எழுதிவரும் அல்ஜீரிய சிந்தனையாளர் முகமது அர்கோன், அனெüவர் மஜீத், தாரிக்அலி, ஜியாவுதீர்சர்தார், அக்பர் எஸ்.அகமது, அமீனாவதூத், பாத்திமா மெர்னிசி அஸ்கர் அலி இஞ்சினியர், ஏ.ஜி.நுரானி, இம்தியாஸ் அகமது, யோகிந்தர் சிக்கந்த எனத்தொடரும் அறிஞர்களின் குர்ஆனிய இஸ்லாமிய அர்த்தப்படுத்தல்கள் வெவ்வேறு விதங்களில் வெளிப்படுவதை கவனிக்க முடிகிறது. இது நவீனத்துவம் சார்ந்த வாசிப்பு பெண்ணிய வாசிப்பு, அடித்தள மக்கள்சார் வாசிப்பு என்பதான பல்வித நிலைகளை முன்வைத்துப்பேசுகிறது.
காலந்தோறும் வளர்ந்துவரும் ஆய்வுமுறையியல், சமூக அரசியல் பண்பாடு சார்ந்த கண்ணோட்டம் ஒரு வசனத்தை வாசித்து அர்த்தப்படுத்துவதிலேயே வெவ்வேறு கருத்து நிலைகள் உருவாகியிருக்கும் சூழலில் இப்னுகஸீரின் தப்சீரை முன்வைத்து குர்ஆன் எனும் புனிதநூல் சொல்லும் விளிம்புநிலை மற்றும் விடுதலை சார்ந்த இஸ்லாமிய மாற்று அரசியலுக்கான தேடலை நாம் உருவாக்கி கொள்ளலாம்.
- புதிய அனுபவம்
- பாரதியும் பட்டுக்கோட்டையாரும்(நிறைவுப் பகுதி)
- தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகத்தின் 68வது நிகழ்ச்சி
- காலமும் தூரமும்
- நல்லதோர் வீணை..!
- இடைவெளிகள் (10) – மிகைப்படுத்தலும் மனத்துள்ளலும்
- நேர்மையின்குரல்
- குரானுக்கான தப்சீர் எழுத்தியல் வரலாறு
- சிவாஜி ஒரு சகாப்தம்
- 6 ஆகஸ்ட் 2012
- கருப்பு விலைமகளொருத்தி
- ஆற்றங்கரைப் பிள்ளையார்
- கவிமுகில் – தாராபாரதி விருது வழங்கும் விழா
- 2014 ஆண்டில் ஏவப்படும் ஜப்பான் விண்கப்பல் ஹயபுஸா -2 வக்கிரக்கோள் மண்ணெடுத்துப் பூமிக்கு மீளும்
- ஓயாத உழைப்பும், மனிதநேயப் பண்பும்! கேப்டன் லட்சுமி சேகல் (1914 – 2012)
- காலம்….!
- கதையே கவிதையாய்! (3)
- அது ஒரு வரம்
- உயர்வென்ன கண்டீர்?
- காலத்தின் விதி
- சாகித்திய அகாதெமி விருது குறிஞ்சிச்செல்வர் டாக்டர் கொ.மா.கோதண்டம்
- மலைப்பேச்சு – செஞ்சி சொல்லும் கதை -41
- உரஷிமா தாரோ (ஜப்பான்)
- ஓடும் பஸ்ஸில் ஒரு நாடகம்..!
- இவ்வாண்டின் “ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது “ பெற்ற சுப்ரபாரதிமணியனின் “நீர்த்துளி ” நாவல்
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் -10
- என்ன செய்வார்….இனி..!
- இந்திய இன்சுரன்ஸ் பணம் & பிஎஃப் பணம் பணால் ஆக, நிதிஅமைச்சரின் யோசனை….
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 35) குற்ற மன்னிப்பு
- தாகூரின் கீதப் பாமாலை – 29 கானத்தைப் பாடும் தருணம்
- முள்வெளி அத்தியாயம் -24 (விடுபட்டுப் போன அத்தியாயம்)
- பழமொழிகளில் கனவும் நினைத்தலும்
- பாவைப் பிள்ளை சிறுவர் பாடல் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு
- குற்றமும் தண்டனையும் சிறுகதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு
- ஆர். பன்னீர்செல்வத்தின் “ 18 வயசு “
- தொலைந்த உறவுகள் – சிறுகதை
- வைகறை வாசம் கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு