மலர்மன்னன்
மத்திய அரசின் 12ம் வகுப்பு வரலாறு பாடப் புத்தகத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் பற்றி இடம்பெற்ற செய்திகளும் கேலிச்சித்திரமும் பிழையானவை என்று தமிழகத்தில் எதிர்ப்புக் குரல்களும் விவாதங்களும் வலுத்தன. இது பற்றிய சரியான புரிதலை உருவாக்கிக்கொள்ளவேண்டுமானால் வரலாற்றின் கடந்த கால பக்கங்களை மீண்டுமொருமுறை புரட்டிப்பார்க்கவேண்டும்.
தமிழக அரசியலில் அப்போதுதான் நடை பயிலத் தொடங்கியிருந்த திராவிட முன்னேற்றக் கழகம் தனது இருப்பைப் பதிவு செய்வதற்கான ஒரு வாய்ப்பாக 1953 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மும்முனைப் போராட்டம் என்பதாக ஒன்றை நடத்த முடிவு செய்தது. அதில் ஒரு முனைதான் கல்லக்குடிப் போராட்டம்.
திருச்சி மாவட்டம் அரியலூர் பகுதியில் சுண்ணாம்புக் கற்பாறைகள் ஏராளமாகப் புதைந்து கிடப்பதால் சிமெண்ட் உற்பத்திக்கு அது மிகவும் ஏற்ற இடமாக இருப்பதை 1930 – களிலேயே கண்டறிந்த டால்மியா நிறுவனம், அரியலூரிலிருந்து 24 கிலோ மீட்டர் தொலைவில் தனது தொழிற்சாலையை நாற்பதுகளின் தொடக்கத்தில் நிறுவியது. அந்தக் காலகட்டத்தில் அரியலூர் இப்போதிருப்பதைவிட மிகச் சிறிய ஒரு சிற்றூராகத்தான் இருந்திருக்கும். எனில் டால்மியா சிமென்ட் தொழிற்சாலை நிறுவப்பட்ட கிராமப்புறம் எந்த நிலையில் இருந்திருக்கும் என்பதை விவரிக்கத் தேவையில்லை. தொழிற்சாலை அமைந்த சுற்று வட்டார கிராமங்கள் கல்லக்குடி, பழங்காநத்தம் முதலானவை.
டால்மியா சிமெண்ட் தொழிற்சாலை தொடங்கப்பட்டதாலேயே அந்தப் பகுதி பல துணைத்தொழில்களும் வாணிபங்களும் மிகுந்து, தொழில்வளர்ச்சியடைந்த வட்டாரமாக முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. தொழிற்சாலை அலுவலர்களுக்கான குடியிருப்புகளும் கடை கண்ணிகளும் உருவாயின. டால்மியா சிமெண்ட் தொழிற்சாலையின் பின்னணியிலேயே அடையாளம் பெற்ற அச்சிறுதொழில் நகரத்தில் தளவாடங்கள் வந்து இறங்கவும் சிமெண்ட் மூட்டைகள் ஏற்றுமதி செய்யவும் அமைந்த ரயில் நிலையம்தான் டால்மியாபுரம். இப்படி வளர்ச்சிக்குக் காரணமான இடங்களுக்கு டாட்டா நகர், ஜாம்ஷெட்பூர் என்றெல்லாம் அங்கீகாரம் வழங்கி கௌரவிப்பதுபோல் பெயர் சூட்டுவது இயல்புதானே?
ஆனால், ‘டால்மியா என்பது ஒரு வட நாட்டான் பெயர். அவன் பெயரால் தமிழ் நாட்டில் ஓர் ஊர் இருக்கக் கூடாது’ என்று திடீரென விழித்துக்கொண்டு, கண்டனம் தெரிவித்து, அந்தப் பெயருக்குப் பதிலாக அதன் அருகில் உள்ள கல்லக்குடியின் பெயரைச் சூட்ட வேண்டும் என்பதற்கான போராட்டத்தைத் தனது மும்முனைப் போராட்டத்தில் ஒன்றாக நடத்துவதென்று தி.மு.க. தீர்மானித்தது. இது குறித்து அது முன்னதாகக் கள ஆய்வு ஏதும் செய்து மக்களின் எண்ணத்தைத் திரட்டியிருக்கவில்லை. டால்மியாபுரம் என்ற பெயருக்குப் பதிலாகத் தங்கள் ஊரின் பெயரைச் சூட்ட வேண்டும் என்ற விருப்பமோ கோரிக்கையோ அப்போது கல்லக்குடி மக்களிடையே இருக்கவுமில்லை. சொல்லப் போனால் டால்மியாபுரம் என்ற பெயரை மாற்றுவதானால் டால்மியா தொழிற்சாலை அமைக்கப்பட்ட பழங்காநத்தம் என்ற ஊரின் பெயரைச் சூட்டுவதுதான் மிகப் பொருத்தமாக இருக்கும். எனவேதான் பல ஆண்டுகளுக்குப் பிறகு, பலவாறான அரசியல் மாற்றங்களின் விளைவாக மத்தியில் அரசு அமைய தி.மு.க. வின் தயவு தேவை என்ற நிலைமை உருவாகி, அதைத் திருப்தி செய்ய டால்மியாபுரம் என்ற பெயர் நீக்கப்பட்டு,
கல்லக்குடி-பழங்காநத்தம் என்ற பெயர் சூட்டப் பட்டது. அரசியலுக்காகக் கல்லக்குடி, மக்களின் நியாயமான நிலைப்பாட்டுக்காகப் பழங்காநத்தம்!
திட்டம் இதுதான். குறிப்பிட்ட நாளில் டால்மியாபுரம் ரயில் நிலையம் சென்று, அங்குள்ள பெயர்ப் பலகையில் டால்மியாபுரம் என்ற பெயருக்கு மேல் கல்லக்குடி என்று எழுதப்பட்ட தாளை ஒட்ட வேண்டும். போராட்டம் ஒருநாள் மட்டும்தான். வன்முறைக்குச் சிறிதும் இடமில்லை. பெயர்ப் பலகையில் தாளை ஒட்டவிடாமல் தடுத்தால் அமைதியாகத் தடையை மீறிக் கைதாக வேண்டும். ஆனால், கருணாநிதிதான் திடீரெனத் தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்து, பெயர்த்தாள் ஒட்டும் போராட்டத்தை ரயில் நிறுத்தப் போராட்டமாக மாற்றிவிட்டார்.
தி.மு.க. நடத்திய மும்முனைப் போராட்டத்தில் ரயிலை நிறுத்துவதும் இடம் பெற்றிருந்தது. ஆனால் அதற்கும் கல்லக்குடிக்கும் சம்பந்தமில்லை. நேரு ‘நான்சென்ஸ்’ என்று சொன்னதற்காக ஓடும் ரயிலில் அபாயச் சங்கிலியை இழுத்து வண்டியை நிறுத்துவது என்று திட்டமிட்டிருந்தார்கள். அப்போது முதலமைச்சராக இருந்த ராஜாஜியை மாற்ற வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள் சிலர் எழுப்பிய கோரிக்யைத்தான் பிரதமர் நேரு ‘நான்சென்ஸ்’ என்று புறந்தள்ளிவிட்டிருந்தார். அன்றைக்கு இருந்த அரசியல் சூழலில் ராஜாஜிதான் சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள வழி செய்திருந்தார். உடனே, நேரு தமிழர்களையே அவமதித்துவிட்டதாகக் குற்றம் சாட்டி, அவர் மன்னிப்புக் கோர வேண்டும் என்று வலியுறுத்தி இன்னொரு முனைப்போராக ரயில் நிறுத்தப் போராட்டத்தை தி மு க நடத்தியது. இந்தப் போராட்டத்தின்போது ஓடும் ரயிலில் அபாயச் சங்கிலியை இழுத்து வண்டியை நிறுத்திய தி.மு.க வினர் பலர் வண்டி நின்றதும் வெளியே குதித்து ஓடிப் போனார்கள். எஞ்சிய சில நூறுபேர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது.
தி.மு.க. தனது மும்முனைப் போராட்டத்தில் சேர்த்துக்கொண்ட மூன்றாவது போர் முதலமைச்சர் வீட்டு வாயிலின்முன் அவரை வெளியே வரவிடாமல் மறியல் செய்வது. ராஜாஜி கொண்டு வந்த கல்வித் திட்டத்துக்குக் ‘குலக் கல்வித் திட்டம்’ எனப் பட்டம் சூட்டி அதைக் கைவிட வற்புறுத்துவதற்கான போர்முறை அது.
1950 ஜனவரி 26 அன்று நடைமுறைக்கு வந்த நமது அரசியல் சாசனத்தின் ஐந்தாவது பகுதியில் உள்ள வழிகாட்டு நெறிகளில் 45 ஆவது விதி கல்வி அளிப்பது குறித்து மாநில அரசுகளுக்கு உள்ள கடமையை அறிவுறுத்துகிறது. ’சாசனம் நடைமுறைக்கு வந்து பத்து வருட காலத்திற்குள் 14 வயது முழுமையடைந்த குழந்தைகள் அனைவருக்கும் இலவசமாகவும் கட்டாயமாகவும் கல்வி அளிக்க முயற்சி எடுத்தாக வேண்டும்’ என்று அந்த விதி வலியுறுத்துகிறது. இதனையொட்டி அப்போதைய நிதி ஆதாரத்தையும், ஏற்கெனவே இருந்து வந்த ஆரம்பப் பள்ளிகளின் எண்ணிக்கையையும் கருத்தில்கொண்டு ஒரு புதிய கல்வித் திட்டத்தை ராஜாஜி முன்வைத்தார்.
ஒவ்வொரு பள்ளியிலும் இரண்டு ஷிஃப்டுகள் நடைபெற வழி செய்யும் அத்திட்டத்தின்படி, மாணவர்கள் ஒருவேளை மட்டும் பள்ளிக்கு வந்து செல்வார்கள். சட்டமன்றத்தில் புதிய கல்வித் திட்டம் முன்வைக்கப்பட்டபோது, ’எஞ்சிய பொழுதில் மாணவர்கள் என்ன செய்வார்கள்? வீணாக ஊரைச் சுற்றிக் கெட்டுப் போக மாட்டார்களா’ என்று உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினார்கள். ‘அப்படி ஏன் எண்ண வேண்டும்? அவர்கள் அந்த நேரத்தில் ஏதாவது கைத் தொழிலைக் கற்றுக்கொள்ளலாம். ஏன், வீட்டிலேயே பெற்றோருக்கு உதவியாக வேலை செய்து அவர்கள் செய்யும் தொழிலில் தேர்ச்சி பெறலாம். கைப் பழக்கமாக அவர்களால் எளிதில் அத்தொழிலில் தேர்ச்சி பெற்று விட முடியும்’ என்று முதல்வர் ராஜாஜி மிகவும் யதார்த்தமாகச் சொன்னார். அவ்வளவுதான், ’ஆச்சாரியார் குலக் கல்வியைப் புகுத்துகிறார்’ என்கிற கோஷம் வீறிட்டெழுந்தது. ராஜாஜியின் குலக் கல்வித் திட்டத்தை எதிர்த்து அவர் வீட்டு வாசலில் மறியல் செய்வது தி.மு.க. வின் மும்முனைப் போராட்டங்களில் ஒரு முனையானது. ராஜாஜியின் ஒருபொழுது கல்வித் திட்டத்துக்குக் குலக் கல்வித் திட்டம் என்று பெயர் சூட்டி அதை முன்வைத்தே ராஜாஜியைப் பதவி விலகும் நிர்பந்தத்துக்கு உள்ளாக்கினார்கள்.
1965ல் நடந்த மாணவர்களின் ஹிந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியும் தவறான தகவல்களின் அடிப்படையில் சொல்லப்படுவதுதான். 1950 ஜனவரி 26 அன்று நடைமுறைக்கு வந்த அரசியல் சாசனம், 15 வருட காலத்துக்குள் மத்திய ஆட்சி மொழியாகவும் தொடர்பு மொழியாகவும் ஹிந்தி ஆக வேண்டும் என்று கால நிர்ணயம் செய்திருந்தது. ஆனால் பிரதமர் நேரு ஹிந்தி மொழி பேசாத மக்கள் விரும்பும்வரை ஹிந்தியுடன் ஆங்கிலமும் மத்திய ஆட்சி மொழியாகவும் தொடர்பு மொழியாகவும் நீடிக்கும் என்று அறுபதுகளின் தொடக்கத்திலேயே வாக்களித்திருந்தார். அப்படியும் 1965 ஜனவரி 26 லிருந்து ஹிந்தி மட்டுமே மத்திய ஆட்சி மொழியாகவும் தொடர்பு மொழியாகவும் ஆகிவிடும் என்கிற பீதி மாணவர்களிடையே கிளப்பிவிடப்பட்டது.
1966 தொடக்கத்தில் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் காங்கிரசை வீழ்த்த வேண்டும் என்பதற்காகவே 1965-ல் மாணவர் கிளர்ச்சி தூண்டிவிடப்பட்டதென்று அக்கால கட்டத்தில் ஈ.வே.ரா. தமது ’விடுதலை’ நாளிதழில் தி.மு.க.வின் மீதும் ராஜாஜியின் சுதந்திரா கட்சியின் மீதும் இடைவிடாது குற்றம் சாட்டி வந்தார். அப்போது அவர் காங்கிரசின் அதி தீவிர ஆதரவாளர்! ஹிந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியைத் தூண்டியதற்காக அவ்விரு கட்சிகளுக்கும் தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தும் அளவுக்கு அவற்றின் மீது பகைமை பாராட்டியவர்!
’இந்தியா ஒண்ணா இருக்கணும்னா ஆட்சி மொழின்னு ஒண்ணு இருக்கணும் தானே? இந்திக்காரன் உங்களைப் போல இங்கிலீஷை நெனைக்கலியே! இழிவா நெனைக்கறானே! தமிழ் நாட்டுக்காரன் சொல்றபடி நடக்குமா? அதான் ஜனநாயகமா?’ என்று ஆனந்த விகடன் வார இதழுக்கு அளித்த பேட்டியில் எதிர்க் கேள்வி கேட்டவர், அவர் (14 ஏப்ரல், 1965).
மாணவர் என்ற போர்வையில் சமூக விரோத ரவுடிக் கும்பல்கள் வன்முறைக் கிளர்ச்சிகளை நடத்துவதாகவும் ’விடுதலை’யில் எழுதினார், ஈ.வே.ரா. 1965 ஹிந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி பற்றி பிப்ரவரி 8 அன்று விடுதலை இதழில் விவரிக்கும் ஈ.வே.ரா., ‘இதனால் கெட்டவர்கள் நம் மக்களின் பிள்ளைகள்தானே! பாவம், இந்தக் காலித்தனத்தில் 100 க்கு 50 பேர்கூட மாணவர்கள் இருக்க மாட்டார்கள். 50 பங்குக்குமேல் கண்ணீர்த்துளி (தி.மு.க.) காலிகளும் பணக்காரரால் (சுதந்திரா) ஏவப்பட்ட காலிகளும் இருந்து நடத்தி இருக்கிறார்கள்! அவர்கள்தான் திட்டம் போடுகிறார்கள். அதை மாணவர் பேரால் பத்திரிகைக்காரர்கள் வெளியிடுகிறார்கள். காலிகளே நடத்துகிறார்கள்’ என்கிறார்.
இந்தப் பின்னணியில் பாடப்பத்தக சர்ச்சைக்குள் மீண்டும் செல்வோம். ஹிந்தி எதிர்ப்புக்கான காரணத்தை விளக்குகையில், அது ஆங்கிலத்தின் இடத்தைப் பிடித்துக்கொண்டுவிடும், அது ஹிந்தி மொழியைத் தாய் மொழியாகக் கொள்ளாதவர்களுக்குப் பாதகமாகிவிடும் என்றுதான் ராஜாஜியும் சொன்னார். எனவே கேலிப் படத்தில் ராஜாஜி ஒருபக்கம் ’இதென்ன ஆங்கிலத்துக்கு ஆதரவான முழக்கங்களை எதிர்க்கிறார்களே’ என்று தலையில் கை வைத்துக்கொள்ள, மறுபுறம் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் பொறுப்பில் உள்ள அப்போதைய முதல்வர் பக்தவத்சலம் இவர்கள் என்ன மாணவர்கள்தானா என்று திகைக்கிறார்.
பாடப் புத்தகங்கள் வறட்டுத்தனமான ஆவணங்களின் தொகுப்பாகச் சலிப்பூட்டாமல் சுவாரசியமாக இருந்துவிட்டால் மாணவர்கள் ஆர்வத்துடன் பாடங்களைப் படிப்பார்கள் என்கிற நோக்கத்துடன்தான் கேலிப் படங்கள் பாடங்களில் சேர்க்கப்படுகின்றன என்று எடுத்துக் கொண்டால் பிரச்னை இல்லை.
நன்றி: ஆழம் மாத இதழ், செப்டம்பர் 2012 (சென்னை கிழக்குப் பதிப்பக வெளியீடு)
- கருணையினால் அல்ல…..!
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் -1
- கதையே கவிதையாய்! (4) செவிடாக இருந்தவள்
- கேள்விகளின் வாழ்க்கை
- இடைவெளிகள் (11) – மாறும் சூழல்களும் சபலங்களும்
- மலைப்பேச்சு – செஞ்சி சொல்லும் கதை -42
- மொழிவது சுகம் செப்டம்பர் -6 பிரான்சை தெரிந்துகொள்ளுங்கள்
- அஸ்லமின் “ பாகன் “
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 36) அடுத்த ஓர் முறையீடு
- உறு மீன் வரும்வரை…..
- 2016 ஒபாமாவின் அமெரிக்கா
- தகழியின் பாப்பி அம்மாவும் பிள்ளைகளும்
- மிஷ்கினின் “ முகமூடி “
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் — 27
- இந்த நேரத்தில்——
- Kobo Books தளத்தில் ரெ.கா.வின் மின்னூல்கள்
- முள்வெளி-அத்தியாயம் 25 (நிறைவுப் பகுதி)
- சத்யானந்தன் மடல்
- தாகூரின் கீதப் பாமாலை – 30 கடற் பயணி.
- (99) – நினைவுகளின் சுவட்டில்
- திமுகவின் மும்முனைப் போராட்டம்: உண்மை வரலாறு
- காலம்….!
- கவிதை பாடு குயிலே இனி வசந்தமே..!
- இஸ்லாமிய பெண்ணியம்
- 35 ஆண்டுகளில் பரிதி மண்டல விளிம்பு கடந்து புதிய மைல் கல் நாட்டிய நாசாவின் வாயேஜர் விண்கப்பல்கள்.
- ஆசிரியர்களை நோக்கி ஒரு ஆசிரியப்பா!
- கர்நாடக இசை மேதை மணக்கால் எஸ்.ரங்கராஜன் பற்றிய டாகுமெண்டரி படம் சென்னையில் திரையிடப்படவிருக்கிற
- Bharathiar-Bharathidasan Festival 2012,Singapore