சு.பிரசன்ன கிருஷ்ணன்
இப்போது 2012 இல் என்னுடைய 37 ஆவது அகவையில் கிருஷ்ணன் மற்றும் என்னுடைய வாழ்க்கை சரித்திரத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன். ஆங்கிலத்தில் ஆட்டோ-பயோக்ராஃபி.. இதையெல்லாம் புத்தகமாக வெளியிட ஏதாவதொரு மடையன் முன்வர வேண்டும்..அப்படி என்ன நான் கிழித்து விட்டேன் என்று இதை படிக்க நேரும் போது உங்களுக்கு தெரியும். 37 மாதங்களில், 37 நாட்களில், 37 மணி நேரங்களில், ஏன் 37 மணி துளிகளிலும் கூட என் இனத்தவர்கள் அழிந்ததுண்டு. ஆனால் என் ஜன்ம சாபல்யம், வேறாக இருந்துவிட்டது. எங்கள் இனத்தவர்கள் எப்போதும் கூட்டம் கூட்டமாக தான் ஜனிப்பார்கள். என்னை சுற்றி என் நிறம், என் உடல் வாகு என சகல அம்சங்களும் என்னை போலவே உள்ள 49 பேர் கூடவே பிறந்து தொலைத்தார்கள்.. நாங்கள் அனைவரும் ஏதோ ஒரு ஹிந்தி வாலாவின் கிருபையால் தோன்றியவுடன், இரைச்சலுடன் கூடிய ஒரு சுற்றுச் சூழலை தான் உணர்ந்தோம். என்னவென்றே தெரியாத ஒரு சொல்லாடலை கேட்டு கொண்டிருப்போம்.. திடீரென்று ஏதோ ஒரு கச்சடாவான ரூமில் அடைக்க படுவோம்.. எங்கும் இருள், எங்கும் மௌனம்.. நெருக்கி கொண்டு நின்றுகொண்டிருப்போம்.. மூச்சு முட்டும்.. “உன்னையெல்லாம் பெத்தாங்களா செஞ்சாங்களா?” என்ற கேள்விக்கு என் இனத்தவர்கள் தைரியமாக “என்ன செய்யத் தான் செஞ்சாங்க என்ன இப்போ?” என்று கேட்போம். உருவான இடத்திலிருந்து தமிழ் நாட்டிற்கு பயணமாகி, ஏதோ ஓர் கடல் சார்ந்த நகரத்தில் வந்தடைந்த போது தான் தெரிகிறது, நான் கிருஷ்ணனிடம் 10 ரூபாய்க்கு விற்க பட்டேன் என்று..
என்னை பார்த்த மறுகணம் அவன் நண்பன்,”என்னடா புது பேனா?”
அவன் சிரித்தவாறே,”பொறந்த நாளில்ல இன்னிக்கு, அதான் தாத்தா இருபது ரூபா கொடுத்தாங்க, அதுல வாங்குனது..” என்று அவர்கள் செய்த சம்பாஷனைகள் ஒன்றுமே விளங்கவில்லை.. அன்றிலிருந்து நான் கிருஷ்ணனின் முதல் பாரியாள்..
மிக பெருமையோடு வீட்டில் அவனது அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, என எல்லோரிடமும் காண்பித்தான்.. ஒவ்வொருவரும் என்னை என் உடல் கூசுமாறு தொட்டு தடவி தடவி பார்த்தார்கள். எனக்கு மொழி தெரியாது, பெயர் கிடையாது, உருவான ஊர் தெரியாது, என்னை வேசியை போல் விலைக்கு வாங்கி விட்ட….. என்ன முகம் சுழிக்கிறீர்கள்.. உவமை பிடிக்கவில்லையா?.. சரி, என்னை 10 ரூபாய் கொடுத்து சுவீகரித்து கொண்டான் அவன் பிறந்த நாள் அன்று..
என் மேலாடையை கிழற்றி, பிறகு கீழாடையும் கிழற்றி, ஏதோ ஒரு நீல திரவத்தை ஊற்றினான். சவம் என்னத்த ஊத்துதோ என்று எண்ணி கொண்டேன்.. ஊற்றியவுடன், கீழாடையை அணிவித்து, ” ஊ….” என்று எழுதினான். நான் இப்போது உங்களிடம் சர்வ சாதாரனமாக உரையாடுவதற்கு பிள்ளையார் சுழி தான் அது.. நான் கற்று கொண்ட முதல் வார்த்தை அது.. பிறகு சில கிறுக்கல்கள்.. பிறகு ஒரு பெயர்,”க்…ரு….ஷ்….ண… சு….ப்…ர….ம….ணி…..ய.
அவனுக்கு நான் கொண்டு சேர்த்த அதிர்ஷ்டங்கள் அனேகம். அவன் பல தமிழ் சொற்களை கற்று கொடுத்தான். செய்த நன்றியை மறக்காத நான் அவனுக்கு தந்தது, அவன் சைட் அடித்து கொண்டிருந்த சரண்யாவை அவனுக்கு காதலியாக்கியது. என்னை சல்லீசாக பத்து ரூபாய்க்கு வாங்கிய ஒரு வாரத்தில் என்னை இயக்கி எழுது எழுது என்று எழுதி தள்ளி விட்டான்.. தமிழில் உள்ள மொத்த 247 சொற்களையும் கற்றாயிற்று.. வெவ்வேறு வார்த்தைகளை உருவாக்க என்னால் கற்று கொண்டான் கிருஷ்ண சுப்ரமணியன்.. என் இனத்திலேயே எனக்கு மட்டும் புத்தி கூர்மை அதிகம் என்று நினைக்கிறேன்.. இல்லையென்றால் என்னை கொண்டு எழுதிய முதல் காதல் கடிதமே அவனுக்கு ஒரு காதலியை தந்திருக்காது.. இந்த பத்தியை அந்த சரண்யா படிக்க நேர்ந்தால் ஒன்று சொல்லி விடுகிறேன், கிருஷ்ண என்னும் மாபெரும் எழுத்தாளன் முதலில் முத்தமிட்டது என்னை தான், உன்னையல்ல..
நான் ஒரு பேனா தானே என்று சாதாரணமாக நினைத்து விடாதீர்கள்.. என்னை போன்ற ஒவ்வொரு உயிரற்ற பொருளுக்குள்ளும் ஒரு அகம் இருக்கிறது.. அது என் சொந்தகாரனிடம் மட்டுமே வெளிப்படும்.. என் பொறாமையால் தானோ என்னவோ சரண்யா அவனுக்கு கிட்டவில்லை.. இவர்களது காதல் கத்திரிக்காய் சமாச்சாரம் பற்றி தெரிந்த சரண்யா வீட்டு முரடன்கள் அவளுக்கு வேறொரு ஆண் துணை தேடி விட்டனர்.. காதல் கடிதங்கள் எழுதி கொண்டிருந்த இவன் அவளை பற்றி கெட்ட கெட்ட வார்த்தைகளாக எழுத தொடங்கிவிட்டான்.. “மடையா…. பொறுத்து கொள், நான் தான் இருக்கிறேனே ஏன் இப்படி கொச்சையாக நடந்து கொள்கிறாய்…” என்று கடிந்து பார்த்தேன்.. அவன் கேட்பதாக தெரியவில்லை.. அவனிடம் ஆரம்பத்திலிருந்தே ஓர் உரிமையை எடுத்து கொண்டேன்.. அவன் பெற்றோர்கள் அந்த சமயத்தில் வேண்டா விறுப்பாக ஒரு விபத்தில் இறைவனடி சேர்ந்தனர்..
குடி, சிகரெட் என்று வேறு பக்கம் போக தொடங்கினான்.. அது வயிற்றையும், ஈரலையும் புண்ணாக்கியதே தவிற அவனுக்கு ஒரு மன அமைதியை கொடுக்க மறுத்தது.. அவனை பார்க்கவே அகோரமாக இருந்தது… “என்னை இயக்கி கொள்… ஏதாவது எழுது, சிந்தனையை திசை திருப்பு….” என நானும் அவன் கண் முன்னே அவ்வப்போது வந்து போவேன்.. எனக்கு கிருஷ்ணனின் முதல் இருபது வருட வாழ்க்கை பற்றி தெரியாது.. இலக்கியத்தில் தீரா காதல் கொண்டவனாக இருந்திருக்க கூடும்.. புதுமைபித்தன், ஜி.நாகரஜன், கு.ப.ரா, பா.சிங்காரம், சி.சு.செல்லப்பா, கு.அழகிரிசாமி, ந.பிச்சமூர்த்தி, சுந்தர ராமசாமி மற்றும் பல ரஷிய எழுத்தாளர்கள் அவனின் அலமாரியில் சந்தித்து கொண்டார்கள்.. அனுதினம் இரவு யாரையோ எடுத்து அவரை சிலாகிக்காமல் அன்றைய பொழுது அவனுக்கு தீராது.. பல துற்சம்பவங்கள் அறங்கேறிய பிறகு, சற்று இந்த சிலாகிப்பு மறைந்தது..
திடீரென்று ஒரு நாள் பைத்தியம் போல் உட்கார்ந்து படிக்க புத்தகங்களை எடுத்து விட்டான்.. எனக்கு ஒரு புறம் சந்தோஷமாக இருக்க மறு புறம் பயம் தான் கிளம்பியது.. வெறி கொண்டவன் போல் வாசித்து கொண்டிருந்தான். அடுத்த நாள் எழுந்து காலை கடன்களை முடித்து மறுபடியும் உட்கார்ந்து வாசிக்க தொடர்ந்த போது தான் தெரிந்தது அவன் செய்து கொண்டிருந்த சாதாரண தொழிலையும் விட்டு விட்டான் என்று.. அவன் தத்தா பாட்டி அவனை எதுவும் கேட்பதில்லை.. ஏதேதோ எழுத தொடங்கினான்.. அவனுக்கு உறுதுணையாக நான் செயல் பட ஆரம்பித்தேன்.. அவனுக்கு எப்போதும் பயங்கரமாக வளைந்து கொடுக்க நேர்ந்தது.. ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் எழுத தொடங்கினான்.. கதைகள், கட்டுரைகள், கவிதைகள் என தொடர்ந்தது..
அவன் இது நாள் வரை சந்தித்த இழப்புகள், அறம் சார்ந்த மாற்றங்கள் என அனைத்தையும் கதையாக்கினான்.. ஒவ்வொரு வார்த்தையையும் அனுபவித்து எழுதினான்.. ” 8 மணி நேரம் என்ன, 16 மணி நேரம் வேண்டுமானாலும் எடுத்து கொள், நீ சந்தோஷமாக இருக்கிறாயா, அது போதும் எனக்கு” என்றது என் மனம். கிருஷ்ணன் என்னை வெளியே வெகுவாக எடுத்து செல்ல மாட்டான்.. ஒரு நாள் அவன் சட்டை பையில் என்னை திணித்து எங்கேயோ கூட்டி போனான்.. ஒரு பத்திரிக்கை அலுவலகம் அது, ஒருவரிடம் காசு வாங்கி திரும்பினோம் நாங்கள்.. வீட்டில் அன்று கிழம் போட்ட சத்தம் அக்கம் பக்கத்து வீடுகளுக்கு கண்டிப்பாக கேட்டிருக்கும்,
“இங்க குண்டி கழுவவே வக்கில்லையாம், கத எழுதுரானாம் கத…. செஞ்சிக்கிட்டு இருந்த வேலையையும் விட்டுட்டு, பெரிய புடிங்கி மாதிரி எழுத்தாளன் ஆறானாம்… அப்படியே துர டாகூர் பரம்பரையில பொறந்துட்டாறு…” என்று என்றும் இல்லாமல் ஜாடை மாடையாக திட்டி கொண்டிருந்த தாத்தா அன்று வெடித்து விட்டார்.. நம் ஆளுக்கு தான் ரோஷம் பொத்து கொண்டு வருமே.. அன்றிரவே வீட்டை விட்டு கிளம்பினான்.. தாத்தாவின் சொந்த வீடு அது. அவரை வெளியே போக சொல்ல முடியாது..
ஒரு மேன்ஷனில் தங்கினான்.. அவனுடைய ஆக்கங்கள் தொடர்ந்து கொண்டே இருந்தன.. அனைத்தும் சொந்த அனுபவங்களிலிருந்து எழுந்த கதைகள்.. நடு நடுவே அவன் யோசனையில் ஆழ்ந்திருக்கும் போது என்னை லேசாக கடித்துக் கொள்வான்.. எல்லோரும் அவரவர் எழுதுகோளை, யோசிக்கும் போது வாயில் வைப்பது வேறு, கிருஷ்ணன் என்னை வாயில் வைத்து கடிப்பது வேறு.. அவனிடம் என்றும் எனக்கு ஒரு இனக்கமான உறவு தொடர்ந்து வந்தது.. மதிய வேளைகள் எங்கள் இருவரையும் பயமுறுத்தும், எதையாவது படித்து கொண்டோ, இல்லை எழுதிகொண்டோ அல்லது பத்திரிக்கைக்கு சென்று வந்து கொண்டோ இருப்பான்.. எதுவுமற்ற நீர்த்த நிலை அடைந்த மதியங்கள் அவன் வாழ்க்கையிலும் சரி, என் வாழ்க்கையிலும் சரி அநேகம் உண்டு.. வயது அவனை பாடாக படுத்தியது.. கீழே தெருவில் போகும் அனைத்து பெண்களையும் விடாது பார்த்து கொண்டிருப்பான்.. என் போன்றவர்களுக்கு தான் நினைப்பில் கூட வேசி தன்மை இல்லை, எங்களை வாங்கபட்ட ஒருத்தனுக்கே எங்கள் உயிரை விடுகிறோம், மதி கெட்ட மனித ஜென்மம் தான் அன்பளிப்பு என்றும், உதவி என்றும் எங்களை மற்றவர்களிடம் தாரை வார்த்து விடுவார்கள்.. நாங்கள் எப்போதுமே ஒருவனிடமோ, ஒருத்தியடமோ தான் இருக்க ஆசை படுகிறோம்.. எங்களின் பால் தன்மை எங்களின் உரிமையாளரை பொருத்தே. ஆக இப்போது நான் “இது” அல்ல “இவள்”
வெயில் கிளப்பிய சூடு கட்டடங்கள் வழியாக இறங்கும் மதிய வேளைகளில் கிருஷ்ணன், மிக வித்தியாசமான செயலில் ஈடுபடுவான்.. பிறகு கக்கூசுக்குள் சென்று நெடு நேரம் கழித்து வெளி வருவான்.. தளர்ச்சியாக வந்தவன் ஜன்னலோரம் உட்கார்ந்து தன்னை ஆசுவாச படுத்தி கொண்டு, ஒரு சிகரெட்டை பற்றவைப்பான்..”அடப்பாவி, நிப்பாட்டிட்டன்னு நினச்சேன், சண்டாளா ஆரம்பிச்சுட்டியா திரும்பவும்…” என்று கேட்பேன்..
ஏதாவதொரு கதை பிரசுரமானால் அவனுக்கு வரும் அற்ப காசை வைத்து கொண்டு வயித்துக்கு கொஞ்சம் செலவழித்ததில் மிச்சம் போக எனக்கு நீல திரவத்தை வாங்கி வருவான்.. சில நேரங்களில் அவன் வயிற்றை சுற்றி ஈரத் துண்டை கட்டி கொளவது போல், எனக்கும் நேர்ந்து விடும், நீல திரவம் வாங்க கூட அவனுக்கு காசு இருக்காது.. என்னை பார்த்த படியே இரவு முழுக்க அழுவான்.. எனக்கும் அழ வேண்டும் என்று தோன்றும்.. சிந்துவதற்கு அந்த நீல திரவம் கூட இருக்காது.. என்னை பலவந்தமாக அடிக்க தொடங்கினான். என்னை கீழே போட்டு உடைக்க தொடங்கினான்.. நான் மனதையும் உடலையும் கல்லாக்கி கொண்டு தரையில் வீழ்ந்தேன். மேஜையில் வைக்க பட்டிருந்த வெள்ளை தாள்கள் மூன்றல்லது நான்கு பாகங்களாக கிழி பட்டன..
இப்படியே சிறிது நாட்கள் கழிந்தன.. பத்திரிக்கை அலுவலகத்துக்கு போவதும் வருவதுமாக அவன் வாழ் நாளில் ஒரு ஐந்து வருடம் கழிந்தது.. கற்பனை வறட்சி ஏற்பட்டது..ஒரு நாள் ஜோல்னா பையை மாட்டி கொண்டு பயணமானான். நீண்ட நாள் பயணமாக அது மாறியது.. இந்த பயணத்திற்காக பத்திரிக்கையிலிருந்து வரும் சொற்ப நாணயங்களை வயித்தை கட்டி வாயை கட்டி சேமித்தான். எனக்கு அவன் எந்தெந்த ஊருக்கு போனான் என்பதை பற்றியெல்லாம் விவரம் தெரியவில்லை.. ஆனால் அவன் சென்ற இடங்களில்லாம் அங்கிருந்த மக்களிடம் பேச்சு கொடுத்தான்.. பல விதமான குறிப்புகள் எடுத்தான்.. அவனுடைய விரலிடுக்குள் எப்போதும் நான் என் ஆஸ்தான இருக்கையில் இருந்தேன்.. அந்த நீண்ட நாள் பயணம் ஒரு நாள் நிறைவுற்று,மேன்ஷனில் ஒரு நாள் இரவு முழுக்க என்னை தாள்களுடன் இயக்க செய்து கொண்டிருந்தான்.. அவன் உபயோகித்த வார்த்தைகளில், கதையின் சாராம்சம் என அனைத்தும் மாறியிருந்தன.. அவனுக்கு நான் பக்க துணையாக என்னால் இயன்ற நல்ல வார்த்தைகளை கோர்த்து கொடுத்தேன்.. தாள்கள் அனேகம் கிழிபட்டன.. அதற்கடுத்து வந்த இரவுகளில் நானும் அவனும் ஆந்தையை போல முழித்து கொண்டு ஆக்கங்களில் செயல் பட்டோம்..
சில நாட்கள் கழிந்தன.. அதே இரு வேளை சாப்பாடு, எனக்கு கொஞ்சம் நீல திரவம் என்று சென்று கொண்டிருந்த வாழ்க்கை சற்று நிலை மாற ஆரம்பித்தது..பணம் அவன் கை தேடி வர ஆரம்பித்தது.. இந்த நிலை மாற்றத்துக்கு நானும் ஒரு காரணம் என்பதை அவன் தார்மீகமாக நம்பினான்.. பல் வேறு சிறு பத்திரிக்கைகளில் அவன் பெயரை முடிவில் கொண்ட சிறுகதைகள் வர ஆரம்பித்தன.. லட்ஷுமி மொல்ல மொல்ல தான் வர ஆரம்பித்தாள். ஆனால் அவனுடைய பெயர் இலக்கிய வட்டத்தில் ஒரு அலையை எழுப்பியது..
இடையில் தாத்தா மூச்சை விட்டார். போய் பார்க்க கூடாது என்ற உறுதியுடன் இருந்த அவன், என்னை எதற்கோ ஒரு முறை உற்று பார்த்து விட்டு சவ ஊர்வலத்துக்கு கிளம்பினான். “ஏண்டா அப்படியொரு பார்வ பாத்த என்ன?” என்று கேட்க தோணியது.. தாத்தாவின் பரிசில் கிடைத்த பொக்கிஷம் அல்லவா நான்.. அதற்காக இருக்கலாம்.. மீண்டும் மேன்ஷன் வாழ்க்கை.. காலம் நகர்ந்தது.. நான் எப்போதும் போல் என்னுடைய ஆஸ்தான இருக்கையை அடைந்தேன்.. அவன் அடைந்த முன்னேற்றங்கள் தமிழ் படங்களில் வருவதுபோல ஒரே பாடலில் உயராமல், ஒரு தக்க இடைவெளியுடன் சீராக அமைந்தது..
பல பத்திரிக்கைகள் எங்கள் வாசல் கதைவை தட்டின.. நாங்கள் இருவருமே எந்த வித பிஹூவும் செய்துகொள்ளவில்லை.. வந்த அனைவருக்குமே அவனால் முடிந்த தரமான கதைகள், என்னால் முடிந்த முறையான சொற்களை கொடுத்த படியே இருந்தோம்.. நடு நடுவே நிறைய பயணம் செய்யலானான்.. இவனின் துணையால் நிறைய இடங்களை நானும் சுற்றி பார்த்து விட்டேன்.. பயணங்கள் அவனை மிகவும் பக்குவ படுத்தியது என நானறிந்தேன்..
இதற்கிடையில் அவனுடைய வாசகி ஒருத்தியை கல்யாணம் என்ற கன்றாவியை வேறு செய்து கொண்டான்.. படுக்கையில், இப்போது எனக்கிருந்த துளி இடமும் காலியானது.. நான் பல நேரங்களில் கிருஷ்ண சுப்ரமனியனின் புதிய வாடகை வீட்டில் படுக்கையின் ஓரத்தில் தான் கிடப்பேன்.. முதல் இரவு, அவள் வந்தவுடன், என்னை எடுத்து குப்பை தொட்டியில் போடுவது போல் கடாசினாள்.. அவன் நல்ல வேளை என்னை பத்திர படுத்தினான்..
தனிமையில், அவன் இலக்கியம் பற்றி ஆழ்ந்த சிந்தனையில் இருக்கும் போது, என்னிடம் மேற்கொள்ளும் உரையாடலாகவே தோன்றும்.. இப்போது அவனது வாசிகியே வந்துவிட்டாள்.. என்னை தனியே பார்க்க விட்டு, இருவரும் விடிய விடிய படுக்கையறையில், பிச்சமூர்த்தி, சுந்தர ராமசாமி என பேசி கொண்டிருக்கிறார்கள்..
எனக்கும் கிருஷ்ணனுக்கும் உள்ள அந்தரங்க உறவு அவளுக்கு தெரிந்திருக்குமோ?, என்னுடைய தலை அவ்வபோது படுத்தி எடுக்கும்.. அவள்,”எதுக்கு நிப்பு மாத்திக்கிட்டு?,… பேசாம அந்த பேனாவ தூக்கி போட வேண்டியது தான??,…. எனக்கு அத பாத்தாலே பிடிக்கல” என்றால்… எனக்கு தூக்கிவாரி போட்டது.. ” பொண்டாட்டி பேச்ச கேட்காதடா கிருஷ்ணா…..” என்று நான் குமுறினேன்.. ஆனால் அந்த குமுறல் தேவைப்படவில்லை.. அவன்,”நான் எழுத ஆரம்பிச்சது இந்த பென்னால தான், தோத்து போகும் போது கூட நின்னு துணையா இருந்தது இந்த பென்னால தான், எவ்வளவோ முறை இத கீழ பொட்டுருக்கேன், கடாசி எரிஞ்சிருக்கேன், ஆனா எனக்காகவே செஞ்ச மாதிரி, திரும்பவும் வந்து நிக்கும், எவ்ளோ வேனும்னாலும் எழுதிக்கோடானு சொல்ற மாதிரி தோணும்.. தயவு செஞ்சு இந்த பேனாவ மட்டும் எதுவும் சொல்லாத… நான் இன்னிக்கு நாலு பேரு மதிக்கிற ரைட்டர் ஆயிருக்கேன்னா, அதுக்கு இந்த பேனா முக்கியமான காரணம்னு எனக்கு தோணுது, இது என்னுடைய சென்டிமென்ட், இதுல இனிமே குறுக்கிடாத….” என்று அவன் சொல்ல, அவன் மனைவி, கொய்யோ மொய்யோ என்று கத்த ஆரம்பித்துவிட்டாள்,”நான் இப்போ என்ன கேட்டுட்டேன்.. பேனா பழசான மாதிரி தெரியுதே, வேற புது பேனா மாத்திக்கலாமேனு தான சொன்னேன்… ஒரு பேனா விஷயத்துல கூட எனக்கு உரிமை கிடையாதா…”, அவன் ஒரே போடில்,”….. ஆமாம்” என்று அழுத்தம் திருத்தமாக சொல்லி விட்டான்.. அவன் பேசியதை கேட்டு, எனக்கு மட்டும் கொத்து கொத்தாக மயிர்கூட்டங்கள் இருந்திருந்தால் அத்தனையும் தூக்கி நின்றிருக்கும்.. உடல் சிலிர்த்து போயிற்று.. மடத்தனமாக நான் மட்டும் தான் அன்பு செலுத்தி வருகிறேனோ என்ற ஏக்கம் கலைந்தது..
மூன்று வருடங்கள் ஓடின.. இந்த கால அவகாசத்தில் அவன் செய்தது எல்லாம் ஒன்றே ஒன்று தான். ஒரு நாவல் எழுதினான்.. முழுக்க முழுக்க நேர்மையாக, பல ஊர்களுக்கு பயணமாகி, பல விஷயங்களை தேடி தேடி படித்தறிந்து கொண்டு, ஒரு உச்ச நிலைக்கு செல்ல எத்தனித்து பார்த்து பார்த்து செதுக்கினான் அந்த நாவலை. அதில் என் பங்கும் அதிகம்.. அவனின் அந்த உச்ச நிலை தடுமாறும் போதெல்லாம், நான் அவனை தட்டி கொடுக்க நினைப்பேன்.. “இன்னும் எழுது, இன்னும் நிறைய, இங்கே பார் இந்தசொல் ப்ரயோகம் சரியில்லை, மாற்று. இங்கே வேறு சொல்லாடலை கொண்டு வா” என்று அவன் கையை நானே இட்டு செல்வேன்.. என்னை புரிந்து கொண்டவன் போல் அவனும் வளைந்து கொடுத்தான்.. நாவல் வெளியாவதற்கு முன்னரே அவனுக்கு பிள்ளைபேறு நடந்து விட்டது..
நாவல் வெளிவந்தது.. மற்ற எழுத்தாளர்கள் செய்வது போல புத்தக வெளியீட்டு விழாவெல்லாம் நடத்தப்படவில்லை.. நாவல் மக்களிடையே அமோக வரவேற்பு.. அமோக வர்வேற்பு என்றால் ஒரு லட்சம் பிரதிகள் விற்று சாதனை என்றெல்லாம் எண்ண வேண்டாம்.. கேவலம் நாம் வாழ்வது தமிழ் நாடு, இங்கு 5000 பிரதிகள் விற்றால் உலக மகா சாதனை.. பொன்னியின் செல்வன் மட்டும் ஏதோ, காலத்தை கடந்து விற்பனையாகிறது.. இவன் பெயர் உச்சத்தை அடைந்தது.. பல வாசகர்களை சம்பாதித்தான்.. நாவல் தீவிர இலக்கிய வட்டத்திலும் சரி, சாதாரண மக்களிடையேயும் சரி, பெரும் மதிப்பை பெற்றது..
பல இலக்கிய சந்திப்புகள் அவனை மையமாக வைத்து நடத்தினர்.. அவனின் பழைய சிறுகதைகளையெல்லாம் தொகுத்து புதிதாக வெளியிட்டார்கள்.. அதில் ஒரு தொகுப்பில், முன்னுரையில், “ஒவ்வொருவரிடமும் அவர்களுக்கே சொந்தமான அந்தரங்கமான பேனா இருக்க கூடும், அதை பத்திரமாக வைத்திருங்கள், அது தன்னுள் உள்ள அழகிய வார்த்தைகளை எப்போதும் கொட்டிய படியே இருக்கும்….” என்று எழுதியிருந்தான், நான் அவனுக்கு தெரியாமல் படித்த விஷயமிது.. உண்மையிலேயே அவனுக்கும், எனக்கும் ஒரு பூர்வ ஜென்ம பந்தம் இருக்க கூடும், இல்லையேல் பரஸ்பரம், நாங்கள் அன்பை கொட்டி கொள்ள இயலாது..
பின்பு தான் பிடித்தது சனி.. அவனின் நாவல் ஹிட்டை தொடர்ந்து, பல ஜனரஞ்சக பத்திரிக்கைகள், அழைப்பு மணியை அடிக்க, நாங்கள் அவர்களை உள்ளே விட்டது சனியை வீட்டுக்குள் விடுவது போன்று அமைந்தது.. முதல் வாரத்தில் அந்த ஜனரஞ்சக பத்திரிக்கையில், அடுத்த வாரத்திலிருந்து தொடர் கட்டுரை எழுத போவதாக அறிவித்து விட்டான்.. அவன் எழுதிய முதல் கட்டுரை என்னை பற்றியே.. யோசித்து பாருங்கள், ஒரு பேனா அதன் வரலாற்றை பற்றி அதுவே எழுதுகிறது, அதன் பெருமையை அதுவே எழுதுகிறது…. எனக்கு அந்த கட்டுரையை முடிக்கும் வரை உடம்பெல்லாம் ஒரே கூச்சம்,”டே… கிருஷ்ணா… போதும் புகழ்ந்தது..” என்று வெட்கித்தேன்…
வாசகர்கள் பலர் எனக்கும் சேர்ந்தனர்.. அவனை பார்க்கும் சந்திக்கும் ரசிகர்களில் மூன்றில் ஒருவர் என்னை உரிமையோடு அவன் பையிலிருக்கும் என்னை எடுத்து,”சார், இதான சார் அந்த பேனா, கட்டுர எழுதுனீங்களே, சூப்பர் சார்….. இத யூஸ் பண்ணி ஒரு கையெழுத்து போடுங்க சார்….” என்று கேட்பார்கள்.. பல கட்டுரை தொடர்கள் தொடர்ந்து வெளி வர ஆரம்பித்தன.. இது போன்று ஜனரஞ்சக பத்திரிக்கையிலிருந்து வரும் பெரிய தொந்தரவு, கால அவகாசம், அவர்கள் கிருஷ்ணனிடம் சரியான நேரத்தில் கட்டுரையை எதிர்பார்த்தார்கள்.. அவனால் எப்போதுமே ஒரு கால அவகாசத்துக்குள் எல்லாம் மனம் லயித்து கட்டுரை எழுத முடியவில்லை.. கொடுக்கும் டெட் லைனை தாண்டி தான் அவன் கட்டுரைகளை சமர்ப்பித்தான்.. ஜனரஞ்சக பத்திரிக்கையின் ஆசிரியர்களுக்கும் அவனுக்கும் தொலை பேசியில் நடக்கும் சண்டைகளை வைத்து கொண்டு தான் தெரிந்து கொண்டேன்.. இருக்கும் ஒரே சௌகரியம் காசை அள்ளி தெளித்து விடுவார்கள்…
பணத்தை கண்டு மயங்க ஆரம்பித்தது அப்போது தான் தொடங்கியது.. கட்டுரைகளில் பல செய்திகளை பொய்யாக எழுத ஆரம்பித்தான்.. எந்தவித லயிப்பும் அற்று மொன்னையாக உற்சாக மின்றி எழுத ஆரம்பித்தான்.. எனக்கு அதில் சுத்தமாக உடன்பாடில்லை.. கிருஷ்ணன் நான் வளர்த்தெடுத்த எழுத்தாளன், ஏன் தரம் கெட்டு எழுதுகிறான் என்று அவன் மேல் முதல்முறையாக எரிச்சல் வர தொடங்கியது.. அவனின் எழுத்து செயலுக்கு முற்றிலும் நிராகரிப்பை காட்ட வேண்டும் என்று தோன்றியது.. அவன் ஜனரஞ்சக பத்திரிக்கையின் கட்டுரையை எழுத தொடங்கினாலே, நான் என் மேல் பாகத்தை கிழட்ட விட மாட்டேன்.. அவன் மிகவும் முக்கி என்னை திறந்துவிடுவான்.. பேப்பரில் என்னை பொருத்தியவுடன், பேப்பருடன் சேர்ந்து ஒட்டி கொண்டு, வர மறுத்து, அந்த முழு தாளையும் என் நீல திரவத்தால் அழுக்காக்குவேன்.. அவன்,”ஏன் இப்படி லீக் ஆகுது?” என்று நிப்பு மாற்றி, அதன் நடுவில் பிலேடால் கிழித்து சரி செய்து என்னென்னவோ செய்து பார்ப்பான்..”அட மடையா…. எழுதாதடா என்று சொல்லவே என் நீல திரவத்தை கண்ணீர் போல் சிந்தி காண்பித்தேன்.. இது உனக்கு புரியவில்லையா எழுத்தாளரே?….”
பணம் சம்பாதிக்கும் தந்திரம் கற்று கொண்டான்.. அவன் போகும் இலக்கிய சந்திப்புகளிலெலாம், அவனுடைய நேர்மையற்ற கட்டுரைகளை பற்றி ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து தள்ளி விடுவார்கள்.. இவனும் எந்த கூச்சமும் இல்லாமல் அமர்ந்திருப்பான்.. வீட்டுக்கு வந்தவுடன் என்னையே பார்த்து கொண்டிருப்பான்.. அவனுடைய மனசாட்சியாக நான் இருப்பதை அவன் அறிந்திருக்கவே செய்தான்.. அடுத்து இந்த நேர்மையின்மை சிறுகதையிலும் தொடர ஆரம்பித்தது.. “அட சிறுகதைல புனைவு இருந்தா என்ன இப்போ, பொய் தானே இலக்கியத்துக்கு அழகு…” என்று என்னை சாடாதீர்கள்.. அவனுடைய சிறுகதை அவன் பார்த்திராத நாடுகளின் பின்புலனையும், போகாத ஊர்களின் வரலாற்றை வைத்தும் கதைகளை வெறுமனே ஜோடிக்க ஆரம்பித்து விட்டான்… எழுதனுமே என்று எழுத ஆரம்பித்து விட்டான்.. அவனை இது போன்ற கீழ் நிலையில் காண எனக்கு விருப்பமில்லை..
“வேண்டாம் டா கிருஷ்ணா, கலை என்ற விஷயத்துல ஏமாற்ற படாது…” என்று என்னால் இயன்ற வரை அவனுக்கு, எழுதும் போதெல்லாம் தொந்தரவு செய்து கொண்டே இருந்தேன், அவனும் நிப்பு மாத்தி, திரவத்தை மாற்றி, வெளி ஒழுகிய மை கறையை சிகையில் துடைத்து, என்று சமாளித்து கொண்டான்.. எனக்கு அவன் மேலும் அவனுக்கு என் மேலும் ஒட்டு உறவாடுதல் குறைந்தது.. ஒரு முறை,”சவம், பேனாவா இது, எழவு எழுதுது பாரு, பீ மாதிரி…” என்று கத்தினான்.. அவன் பிள்ளை சமர்த்து போல் அருகில் வந்து “ஏம்ப்பா கத்தற, பிடிக்கிலேனா தூக்கி போட வேண்டியது தான…” என்று சொல்லி சென்று விட்டான்.. என்னை ஓரம் கட்டி விட்டு ஒரு புது பேனாவை வாங்கி உபயோக படுத்தலானான்.. ஒவ்வொரு முறை எழுத உட்காரும் போதும் என்னை ஒரு பார்வை பார்த்து விட்டு, என்னை தீண்டாமல், புது வரவை எடுத்து எழுத ஆரம்பிப்பான்..
அவனுக்கு அடுத்து கட்ட வேண்டிய வீட்டை பற்றிய கனவுகள், பையனின் படிப்பு செலவு என்று என்னென்னலாமோ மண்டையில் ஓடியிருக்க வேண்டும்.. பணம் தேவையான வஸ்துவாயிற்றே.. அதற்காக செய்கின்ற தொழிலில் சிறிது சமரசம் செய்தால் என்ன என்று தான் அவன் மனம் கூறியிருக்க வேண்டும்.. ஆனால் நான் அவன் பக்கத்தில் இருக்கும் வரை அவனுக்கு முழு மனதுடன் அந்த தவரை செய்ய சாத்தியமில்லை..
திடீரென்று ஒரு நாள், தீபாவளி மலருக்கு சிறுகதை எழுதுவதன் நிமித்தமாக என்னை கையில் எடுத்தான். எழுத போகும் கதை தரம் என்ன என்பது எழுத ஆரம்பித்த இரண்டாவது வரியில் எனக்கு தெரிந்துவிடும்.. கண்டிப்பாக நான் பிரச்சனை பண்ணுவேன் என்று அவனுக்கும் தெரியும்.. என்னை உற்று பார்த்தான், கடைசி முத்தத்தை அளித்தான் எனக்கு… எனக்கு முதல் முத்தம் ஞாபகம் வந்தது.. அவன் கண்களில் ஏனோ கண்ணீர்… என்னை ஜன்னல் வழியாக என்னை தூக்கி எறிந்து விட்டான்… நான் ஒரு சாக்கடையில் போய் விழுந்தேன்..
நாளை காலை அவன் என்னை மீட்டெடுப்பான் என நம்பிக்கையுடன் இருக்கிறேன்..
- ஆப்கானிஸ்தான் இந்துக்களும் சீக்கியர்களும் தங்களது கிராமத்தை மீட்டெடுக்க விரும்புகின்றனர்
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 44) கவலைச் சின்னம்
- பூனை மகாத்மியம்
- விடுமுறை நாள்
- கண்காணிப்பு
- நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து.4.. லா.ச.ராமாமிருதம் – கங்கா
- பழமொழிகளில் ‘காடு’
- வீடு
- நைலான் கயிறு…!…?
- நம்பிக்கை ஒளி! (6)
- க.நா.சு.வும் நானும்
- அவம்
- என்னை மன்னித்து விடு குவேனி
- சவுதி அரேபியாவின் அடக்குமுறையினால், ஷியா புரட்சி உருவாகிறது.
- அலையின் திசையில் மாற்றம் தேடி..-வாஸந்தியின் “ மீட்சி” சிறுகதைத்தொகுப்பை முன் வைத்து….
- நூறு மசலாவும் நூறாயிரம் வாசல்களும்
- தலைதப்பிய தீபாவளி
- வீதி
- இது தான் காலேஜா – நிஜங்கள்
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (நான்காம் அங்கம்) அங்கம் -4 பாகம் -2
- தீபாவளியின் முகம்
- அகாலம்
- நுகராத வாசனை…………
- குன்றக்குடியில் கார்த்திகை முதல். சோம வாரம் ஆண்டிக்கு வடித்தல்
- தாகூரின் கீதப் பாமாலை – 39 என் காலம் முடியும் தருணம்
- களரி தொல்கலைகள் கலைஞர்கள் மேம்பாட்டு மையம்
- குறும்பாக்களைப்பற்றி குறும்பாக்கள்
- மணலும் நுரையும்! (3)
- நானும் அவனும்
- தீபாவளிப் பரிசு!
- கடிதம்
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் – செவ்வாய்க் கோள் இழந்த சூழ்வெளிப் புதிரை விடுவிக்கப் போகும் நாசாவின் தளவுளவி
- அக்னிப்பிரவேசம் -9