உயிரின் வாசம் – “பெயரிடாத நட்சத்திரங்கள்”

This entry is part 1 of 42 in the series 25 நவம்பர் 2012

சு. குணேஸ்வரன்
போர்ப்பகைப்புலத்தில் இருந்த பெண்கவிஞைகளின் வரிகளாக உயிரின் வாசத்தோடும், உணர்வு கொப்பளிக்கும் வார்த்தைகளோடும் வந்திருக்கிறது பெயரிடாத நட்சத்திரங்களின் கவிதைகள். பெண் படைப்புக்களுக்கு இருக்கக்கூடிய தனித்துவத்தோடு எளிய மாந்தர்களும் புரிந்துகொள்ளக்கூடிய எளிமையான வார்த்தைகளோடு தாய்மையுணர்வுமுதல் தாயகநேசிப்பு வரையான கவிதைகளைக் கொண்டிருக்கிறது பெயரிடாத நட்சத்திரங்கள்.
ஊடறுவும் விடியல் பதிப்பகமும் இணைந்து வெளியிட்டுள்ள இத்தொகுப்பில் 26 கவிஞைகளின் 70 கவிதைகள் உள்ளன. அதிகமும் அறியப்பட்ட கவிஞைகளான அம்புலி, ஆதிலட்சுமி, கஸ்தூரி, வானதி, பாரதி ஆகியோருடன் அலையிசை, மலைமகள், தூயவள், நாமகள், சூரியநிலா, சுதாமதி, தமிழவள் ஆகிய ஒவ்வொருவரினதும் மூன்றுக்கு மேற்பட்ட கவிதைகள் இத்தொகுப்பில் உள்ளன.
மேலும்; காந்தா, ஜெயா, கலைமகள், கனிமொழி, ஞானமதி, புரட்சிகா, கிருபா, நகுலா, நாதினி, பிரேமினி, பிரமிளா, ரூபி மார்க்கட், சிரஞ்சீவி, தயாமதி ஆகியோரின் ஒவ்வொரு கவிதைகளைக் கொண்டதாகவும் தொகுப்பு உள்ளது.
ஒரு போராட்ட அமைப்பு என்ற சார்புநிலைக்கு அப்பாலிருந்து தொகுக்கப்பட்ட தொகுதியாக இது இருப்பதை முதலில் குறிப்பிடவேண்டும். அமைப்பு, அதன் கொள்கை, அதன் பிரச்சாரத்தேவை என்ற முன்னுதாரணங்களை விலக்கிவிட்டுப் பார்ப்போமானால் பெண் படைப்புக்களின் வரிசையிலே போர்க்காலப் படைப்புக்களுக்கு வலிமைசேர்க்கக்கூடிய தொகுப்பாக அமைகிறது.
போர்க்கால இலக்கியப் போக்கினை மதிப்பிடுகின்றபோது அவற்றை பொதுவாக மூன்று வகையாக நோக்கலாம். ஒன்று சார்புநிலையாக வெளிப்படும் படைப்புக்கள். மற்றையது எதிர்நிலையில் இருந்து வெளிப்படும் படைப்புக்கள் – இவற்றை அரசியல் விமர்சனம் சார்ந்த படைப்புக்கள் என்றும் கூறலாம். மூன்றாவது, சார்பும் எதிருமின்றி நியாயத்தைப் பேசும் படைப்புக்கள் – இவற்றை காலங்கடந்தும் வாழக்கூடிய படைப்புக்கள் என்றும் சொல்லலாம்.
சார்புநிலையைப் பேசும் படைப்புக்கள்; குறித்த அமைப்பின் செயற்பாடுகளை நியாயப்படுத்துவதாகவோ அல்லது அதன் கொள்கை பரப்பலாகவே இருப்பதற்கு வாய்ப்பு அதிகம். அது மறுபுறத்தில் அபத்தமாகப் படலாம்.
ஆனால் இத்தொகுப்பில் வந்துள்ள கவிதைகள் போர்க்காலத்தில் மக்கள் எதிர்கொள்ளக்கூடிய அவலங்களையும் அந்த அவலங்களைத் தீர்ப்பதற்கு புறப்பட்டவர்களின் உணர்வுகளையும் பேசுவனவாக உள்ளன. போராடுபவர்களின் பக்கம் நின்றுகொண்டு அதற்கான நியாயப்பாடுகளைப் பேசுகின்றன.
ஒட்டுமொத்தமாக தொகுப்பில் உள்ளடங்கியுள்ள கவிதைகளைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
1. போரினால் மக்கள் படும் அவலங்களைப் பேசுதல்
2. பெண் அடக்குமுறை, சமூகத்தின் போலியை எதிர்த்தல்
3. விடுதலை வேட்கையைப் பாடுதல்
4. வீடு, உறவு, இளமைக்காலம் ஆகியவற்றை மீட்டுப் பார்த்தல்
5. உலகு பற்றிய பார்வை
இந்தப்போர் மக்களை எவ்வாறெல்லாம் அலைக்கழிக்கிறது என்பதனை பல பெண்கவிஞைகள் பாடியுள்ளனர். காலங்காலமாக வாழ்ந்த பூர்வீகத் தேசத்தைவிட்டு ஏதிலிகளாக அலைந்துலைந்து வாழவேண்டிய நிலையினையும், போரால் இழந்துவிட்ட உயிர்கள் பற்றியும் பலவிதத்திலும் பேரின் கரங்கள் மக்களின் மீது தொடர்ந்துகொண்டிருக்கும் அவலநிலையினையும் பாடுகின்றனர்.
“பாலியல் வன்முறைக்கு
இரையான
பள்ளிக்கூட மாணவி நீ
உன்னைச் சூழ்ந்து நின்று
மிருகங்கள் சுவை பார்த்து
சிரித்த பொழுது
நீ சத்தமிட முடியாமல்
சாவோடு போராடினாய் – உன்
விழிகளிரண்டும்
வான்நோக்கி நிலைத்தபோது
என்னம்மா நினைத்திருப்பாய்?” (ஆதிலட்சுமி)
என்ற வரிகள் கிருஷாந்தி வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தை நினைவூட்டுகின்றன. மக்களை ஒடுக்குவதற்கு பாலியல் ரீதியான அடக்குமுறை ஒரு ஆயுதமாக அடக்கப்படுபவர்களால் மேற்கொள்ளப்படுகிறது. இது மக்களுக்கு மிகுந்த அச்சத்தையும் இயலாத்தனத்தையும் ஏற்படுத்துகிறது.
ஒரு சாதாரண குடிமகன் என்ன நினைத்திருப்பான். தானும் தன் வீடும் தன் பிள்ளையும் தோட்டமும் என்று ஒரு குடிலில் வாழ்ந்த மனிதர்கள் சாவின் எல்லைவரை விரட்டப்படுகிறார்கள் இது இன்னொரு கவிஞையிடம்

“உயிர் வாழ்வதன்றி வேறொன்றறியா
எம் உறவுகள்
மண்ணோடு போக
உளம் புண்ணாகி உடல் சோர்ந்து
வீதியிறங்கி
வியர்வைத் துவாரங்களால் இரத்தம் கசிய
கதறியழுது அலையும் வாழ்வு
ஏன் எனக்கு வந்தது?” (மலைமகள்)
இவ்வாறான துன்பங்கள் தொடர்வதற்குத்தான் காரணங்கள் என்ன? அந்தத் துன்பத்தை வலிமை பெற்றவர்கள் கூட்டாக எளியவர்கள் மீது திணிக்கிறார்கள் என்பதனையும் இந்தக் கவிஞைகள் பாடுகின்றனர். மக்களின் துன்பம் தொடர்வதற்கு படிப்படியாக மாறிக்கொண்டிருந்த அரசியல் நிலைப்பாடுகள்தான் காரணம் என்கிறார்கள். ஆட்சியாளர்களுடன் கைகுலுக்கிக் கொண்டு வந்த வல்லரசுகள் மக்களைக் கொன்று குவிக்க உதவியமையை கவிதையொன்று சுட்டிக்காட்டுகிறது.
“அனைத்து நாடுகளும்
அண்ணாந்து பார்த்து நிற்க
உயரத்தில் விழுந்தன
உணவுப் பொட்டலங்கள்.
ஒருதலைப்பட்சமாய் உள்ளே வந்த வல்லரசால்
அரிசிப் பொதிகள் விழுந்த
அதே குச்சொழுங்கைகளில்
குப்பெனப் பீறிட்டது குருதியாறு” (கஸ்தூரி)

என்று வரலாற்றில் நடந்த ஒர் அவலத்தை மிகத் தத்ரூபமாக கண்முன் நிறுத்துகிறார் கவிஞர்.
“தேநீர்க் கடையின் பாட்டுக்கூட
நின்றுபோயிருந்தது.
வெறிச்சோடிய வீதியில்
அவன் மட்டும்
தனியாகக் கிடந்தான்
கையொன்று வீதியின் மறுகரையில்
விரல்களை நீட்டியபடி
யாரையோ குற்றம் சாட்டுவதாய்.

சில நிமிடங்கள் தான்
அம்புலன்ஸ் எல்லாவற்றையும்
அள்ளிக் கொண்டுபோனது
எஞ்சியதாய்
அவனது இரத்தம் கொஞ்சம்
ஒன்றிரண்டு சைக்கிள் கம்பிகள்
செல் துண்டுகள் அவ்வளவுதான்.” (நாமகள்)
என்ற கவிதை எமது மக்கள் ஊமையாய் உக்கிப்போய் செத்துப்போன நிலைகளை எடுத்துக்காட்டுகிறது. சேரன் 80 களின் தொடக்கத்தில் எழுதிய ‘எல்லாவற்றையும் மறந்துவிடலாம்’ என்ற கவிதையினையும் இவ்வரிகள் ஞாபகப்படுத்துகின்றன.
இவை தவிர மலையக மக்களின் பிரச்சினைகளுடன் அவர்களின் உழைப்பு சுரண்டப்படுதல் பற்றிய கவிதையும் இத்தொகுப்பில் உள்ளமை கவனிக்கத்தக்கது. எங்கள் சொந்தச் சகோதரர்கள் எவ்வாறு சுரண்டப்படுகின்றனர்?
“சுரண்டல் தராசுகளில்
கொழுந்துக் கூடைகளை
கொழுவிவிட்டு
தேனீருக்கான ஏங்கும்
இத் தேயிலைச் செடிகள்
அக்கினியாய் அணிவகுத்து
அவலங்களை எரிப்பதெந்நாள்?” (கஸ்தூரி)
என்று ‘கொழுந்துக் கூடைகள்’ கவிதையில் எழுதுகிறார்.
இன்னொரு கவிதை புலம்பெயர்ந்து சென்ற ஈழமகன் ஒருவனைப் பற்றிய சித்திரத்தை அழகாகத் தருகிறது. புலம்பெயர்ந்து செல்லமுன் ஒர் ஆண்மகன் வீட்டில் இருந்த நிலை, புலம்பெயர்ந்தவர்கள் அங்கு எதிர்கொள்கின்ற வாழ்க்கை முரண்கள், அவர்களின் தாயகஉறவு பற்றிய அந்தரநிலை என்று பல விடயங்களை பாடுகிறார்.
வீட்டில் சாப்பிட்ட கோப்பையே கழுவாதவன் ஹோட்டலில் தட்டுக் கழுவிச் சம்பாதித்து தன் உறவுகளுக்கும் தாயகத்திற்கும் உதவுவதையும் சுட்டிக்காட்டுகிறார். போர்; மனிதர்களை எவ்வாறெல்லாம் மாற்றி விடுகிறது என்பதற்கு நல்ல உதாரணம் இக்கவிதை.
“கழிப்பறைக்கு நீர் சுமக்கவும் மறுத்த
தம்பியின் வாழ்வு
குளிர் பனிக்குள்
கழிப்பறைத் தூய்மையிலே கரைந்தது.
திண்ட கோப்பைகூடக்
கழுவத் தெரியாத பிள்ளை
ரெஸ்ரோரண்டில்
அதைக் கழுவிப் பிழைத்தே
காசு அனுப்பியது” (அம்புலி)
என்று இன்னும் பல சம்பவங்களையும் குறிப்பிடுகிறார். உறவைப் பிரிந்துபோன ஏக்கம், தனிமைவாழ்வு, மொழிக்கலப்பு ஆகியனவும் பேசப்படுகின்றன. ‘தூரவிருந்து குரலை உயர்த்தி கரத்தையிணைத்து துணையிருக்கும் உறவுகள்’ எனவும் புலம்பெயர்ந்துபோன ஈழத்தமிழ் மக்களை நன்றியுடன் நினைக்கின்ற கவிதையாகவும் இது அமைந்திருக்கின்றது.
சமூகக் கொடுமைகள் பற்றிச் சுட்டும்போது சீதனம் பெறுதல் மற்றும் பெண்அடிமைத்தனம் பற்றிப் பாடுகின்றனர். பெண்ணைப் பார்த்துக் குட்டக் குட்டக் குனிந்து கொண்டு (வானதி) குசினிக்குள்ளே முடக்கிப் போகாமல் சமூகத் தளைகளை உடைக்க வெளியே வா என சமூகத்தின் பிற்போக்குத்தனத்திற்கும் அடக்குமுறைக்கும் எதிராக எழுமாறு அறைக்கூவும் கவிதைகளும் உள்ளன.
மகாகவி பாரதியை முன்னிறுத்திப் பாடுவதுபோல் அமைந்த கவிதையில் இன்று சீதனம் வாங்கும் ஆண்களின் நிலையை பின்வரும் கவிதை சுட்டிக்காட்டுகிறது.
“காசு பெரிதில்லை
நெஞ்சிலுள்ள காதல் பெரிதென்றாய்
இங்கோ கண்ணன்கள்
காசு பெரிதென்று
காதலை முறிக்கிறார்கள்” (ஆதிலட்சுமி)
விடுதலை வேட்கையை வெளிப்படுத்தும் கவிதைகள் என்ற வகையில் பார்ப்போமானால் போராளிகளின் விடுதலையுணர்வு, அவர்களின் தியாகம், அவர்களிடம் இருக்கக்கூடிய நம்பிக்கை, எதையும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தற்துணிவு என்பன இக்கவிதைகளில் பேசப்படுகின்றன.
ஓராயிரம் விழிகளின் உறக்கத்திற்காக தங்கள் காவல் முக்கியம் என்று அம்புலி எழுதுவார். இரவு பகல் வெய்யில் மழை என்றும் பாராமல் அவர்களின் காத்திருப்பும் கவலிருப்பும் குறிப்பிடப்படுகிறது. கொள்ளி வைக்க இருந்த பிள்ளையும் போய்விட்டதே என்று கலங்கும் தந்தைக்கு தாயினூடாகப் பதிலுரைக்கும்போது இறந்தபின்னர் அடக்கம்செய்யும் மயானத்திற்காகவும் தான் நான் காவலிருக்கிறேன் (‘அப்புறமாய் வருகிறேன்’ – ரூபி மார்க்கிரட்) என்று பாடுகிறார்.
“ஓர் அழகிய காலையை
உனக்கு
காட்டமுடியாத வசந்த காலத்தில்
விளையாட முடியாத
பாலைவன நாட்களையே
உனக்குப் பரிசளிக்கிறேன்” (அம்புலி)
என்று ஒரு தாயின் உணர்வுநிலையில் இருந்து கொண்டு குழந்தைக்குச் சொல்லும் வரிகளாக அவை அமைந்து விடுகின்றன.
இதேபோன்று வானதியின் ‘எழுதாத கவிதை’ விடுதலை உணர்வையும் அதனை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்ற எதிர்பார்ப்பினையும் ஊட்டுகின்ற கவிதையாக அது அமைந்திருக்கிறது.
“சீறும் துப்பாக்கியின் பின்னால்
என் உடல்
சின்னாபின்னப்பட்டுப் போகலாம்
ஆனால் என்
உணர்வுகள் சிதையாது
உங்களைச் சிந்திக்க வைக்கும் அது.
அப்போது
எழுதாத என் கவிதையை
எழுதுங்களேன்.” (வானதி)
என்று எழுதுகிறார். இதனை நாதினி என்ற இன்னொரு கவிஞை எழுதாதுபோன உன் கவிதையை எழுதுவதற்காக உயிரைக் கோலாக்கி உதிரத்தை மையாக்கி அணிவகுத்து நிற்பவர்களைச் சுட்டிக்காட்டுகின்றார்.
இவர்களிடம் உலகு பற்றிய பார்வையும் உள்ளமை மற்றொரு சிறப்பம்சமாகும். குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில் ஒன்றான ருவாண்டாவில் நடந்த இனவழிப்பை இலங்கையில் நடந்த இனவழிப்புடன் ஒப்பிட்டுப் பாடுகின்றனர்.
“மொழிவேறு என்றாலும்
எங்களுக்கும் உங்களுக்கும்
மூச்சு ஒன்றுதானே.
அகதிமுகாம் வாசலிலே
அம்மாவைத் தேடு என்று
ஐ.நா கூறியதாமே
யாரைப் பார்த்தாலும்
அம்மாவாய்த் தெரிகிறதா?
சின்ன வயதில் உங்கள் தோள்களிலே
சிலுவையை ஏற்றி வைத்தது யார்?” (ஆதிலட்சுமி)
சர்வதேசம் பற்றிக் கூறும்போது அது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக உள்நாட்டுப் பிரச்சினைகளைப் பெரிதாக்கி விடுகின்றன. இதனை ‘வல்லரசுகள்’ என்ற கவிதையிலே பாடும்போது
“சமாதான நாடுகளில்
சாமர்த்தியமாய் நுழைந்து
ஆணிவேரை அறுத்துவிட்டு
வாடாது நிற்க
நீர் ஊற்றுபவர்கள் நீங்கள்.
உங்கள் தலையீடுகளால்
தரைமட்டமாகிப் போன தேசங்களே அதிகம்.” (கஸ்தூரி)
தாயகம், வீடு, உறவு பற்றிய உணர்வுநிலைகள் மிக அழகாக வந்துள்ளன. ‘அன்பான அம்மா’ என்ற பாரதியின் கவிதையில் சிறுவயது நினைவுகள், வீடு மற்றும் கிராமத்து நினைவுகள் வருவதனைக் காணலாம்.
இளமை நினைவுகள், பள்ளிக்கூட வாழ்க்கை, அதன்பின்னர் பல நண்பர்களை தாம் இழந்துவிட்டமை, கால் இழந்து விட்ட நிலையிலே அசையமுடியாது மரத்துப்போனதுபோல் இருக்கின்ற நிலை… என கவிதையின் போக்குப்பற்றி மேலும் குறிப்பிடலாம். அம்மா பற்றிய கவிதைகளும் அம்மா பற்றிய படிமமும் பல கவிஞைகளின் கவிதைகளில் அற்புதமாக வந்துள்ளமை கவனத்திற் கொள்ளத்தக்கவை. தாயின் அன்பும் அவளின் அரவணைப்பும் துன்பங்களைத் தாங்கிக்கொண்டு அவள் தங்களை வளர்த்து ஆளாக்கியமையும் இக்கவிதைகளில் பாடப்படுகின்றன. மேலும் தமது உணர்வுகளைத் தாயை முன்னிறுத்திப் பாடும் கவிதைகள் அதிகமாக உள்ளமையும் கவனிக்கத்தக்கது. தந்தையிடம் கூறவேண்டியதை தாயிடம் கூறுதல், அவளை விட்டுப் பிரிந்து வந்த சோகத்தைக் கூறுதல் என்பன இங்கு முக்கியமானவை.
“அன்பான அம்மாவே
நான் உன்னை
அளவு கடந்து நேசிக்கிறேன்
அதனிலும் பார்க்க
நான் ஓடி விளையாடிய
என் வீட்டு முற்றத்தை
நான் கால் பதித்த
ஒற்றையடிப் பாதைகளை
செம்பாட்டு மண்படிந்த என்
தெருக்களை
சணல் பூத்துக் குலுங்கும் என் தேசத்தை
தோட்ட வெளிகளை
இப்படி இப்படியாய்
எத்தனையோ.” (பாரதி)

“ஒரு வண்ணத்துப் பூச்சியின் சிறகடிப்பில்
எனை மறக்கவும்
ஒரு குழந்தையை மென்மையாக தாலாட்டவும்
என்னால் முடியும்.
குளத்தடி மரநிழலில்
எனது புல்லாங்குழலைத் தழுவும்
காற்றோடு கதைபேச நான் தயார்.
நிம்மதியான பூமியிலே நித்திரைகொள்ள
எனக்கும் விருப்புண்டு” (அம்புலி)
என்று தாய் பற்றிய உணர்வையும் அவளின் அன்பையும் தவிர்க்கமுடியாமல் தாங்கள் புறப்பட்ட நிலையையும் எடுத்துக் காட்டுகின்றனர்.
நூலின் முன்னுரையில்
“பெண்களுக்காக வரையறுக்கப்பட்ட பல கலாசாரத் தடைகளை மீறி போர்க்களம் காணல், தலைமைத்துவப் பண்புகளை வளர்த்துக் கொள்ளல், உளவு பார்த்தல், பல்வேறுபட்ட நவீன இயந்திரங்களை இயக்குதல், அவற்றைப் பழுது பார்த்தல், சிக்கலான விடயங்களைத் தீர ஆராய்தல், முடிவுகளை எடுத்தல், இரவுக் காவல்களிலும் பணிகளிலும் ஈடுபடுதல், எல்லைக்காவல், தீவிர உடற்பயிற்சி, இரகசியங்களைப் பேணுதல், வரைபட வாசிப்பில் தேர்ச்சி என பல புதிய பரிமாணங்களை எட்டியிருக்கிறார்கள்.”
என்று இக்காலத்தில் இருந்த பெண்களின் புதிய எழுச்சியை போர்க்காலத்தின் பதிவாகக் குறிப்பிடுகின்றனர் தொகுப்பாளர்கள்.
இயல்புநிலை அழிக்கப்பட்ட சூழலிலிருந்து பாடப்பட்ட கவிதைகள் இவையென்பது முக்கியமாக கவனத்தில் எடுக்கவேண்டியதாகும். கவிதைகள் எளிமையாக இருக்கின்ற அதேவேளை அவற்றின் புனைதிறன் உத்தியிலும் ஓரளவு சாத்தியத்தை எட்டியிருக்கின்றன. தங்கள் பிரச்சினைகளை, தாங்கள் எதிர்கொண்ட இன்னல்களை, காலத்தின் தேவையை பாடியிருக்கிறார்கள்.
உணர்வும் உயிரும் அற்ற வெற்றுவார்த்தைகளை மாபெரும் படைப்பெனக் கூறிக்கொண்டு நாங்களும் காலத்தின் வரலாற்று நாயகர்கள்தான் என எழுதிக்கொண்டிருப்பவர்களின் மத்தியில் இவை உண்மையான எழுத்துக்கள்தான் என்பதை இந்தக் கவிதைகள் உணர்த்திக்கொண்டேயிருக்கும்.
‘மறையாத மறுபாதி’, ‘சொல்லாத சேதி’ போன்ற பெண் படைப்பாளிகளின் தொகுப்புக்களின் வரிசையில் போர்க்காலப் படைப்புக்களில் பெண்களின் குரல்களாக வந்திருக்கும் ‘பெயரிடாத நட்சத்திரங்கள்’ ஈழத்து இலக்கியப் போக்கில் கவனத்திற் கொள்ளவேண்டிய தொகுப்பாக அமைந்திருக்கிறது.

Series Navigationகடவுள் உண்டு
author

சு.குணேஸ்வரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *