பாலமுருகன்.லோ
“என்னங்க சம்மந்தியம்மா, எங்க போயிருக்காரு நம்ம சம்மந்தி?” என்றாள் கோமதி.
“அவரா? எல்லாம் நம்ம காவேரி விஷயமாத்தான் வெளியில போயிருக்காரு. இப்ப வந்துடுவாரு, வாங்க வந்து இப்படி உட்காருங்க. என்ன சாப்பிடுறீங்க? காபியா இல்ல டீ வேணுமா?”
“சூடா ஒரு கப் காபி இருந்தா நல்லாயிருக்கும்.”
“இதோ, உடனே போட்டு எடுத்துட்டு வர்றேன்,” என்றாள் காவேரியின் அம்மா தாரணி, சமையலறைக்குள் நுழைய.
தாரணி உள்ளே சென்றதும், கோமதி தன் பேச்சைத் தொடர்ந்தாள்.
“நான் ஏற்கெனவே சொன்னதுதான் சம்மந்தியம்மா,” என்று தாரணியின் காதுபட பேசினாள் கோமதி. “கல்யாண தேதி நெருங்கிக்கிட்டே இருக்கு. நீங்க சொன்னதெல்லாம் நினைவுல இருக்கா? இல்ல, கடைசி நிமிஷத்துல ‘அது முடியல, இது முடியல’ன்னு சொல்லப் போறீங்களா?”
சற்று நேரத்தில் காபியுடன் திரும்பி வந்த தாரணியின் புன்னகை லேசாக இறுகியது. “சம்மந்தியம்மா, அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல. காவேரி எங்களுக்கு ஒரே பொண்ணு. அவளுக்குச் செய்யாம வேற யாருக்குச் செய்யப் போறோம்.”
கோமதி கோப்பையை வாங்கிக்கொண்டு, ஒரு மெல்லிய புன்னகையுடன் தாரணியிடம், “ஏதோ, சொன்ன வாக்கைக் காப்பாத்தினா சரி,” என்றாள்.
“என்ன விஷயமா வந்தீங்கன்னு தெரிஞ்சா நல்லாயிருக்கும்.”
“இங்க உங்க வீட்டுக்குப் பக்கத்துல, நாலு தெரு தள்ளி என்னோட வேலை செய்யுற சிநேகிதி ஒருத்தி இருக்கா. அவ வீட்டுக்கும் போய்ப் பத்திரிகையெல்லாம் வச்சுட்டு வந்திடலாம்னுதான் வந்தேன். பிறகுதான் தோணுச்சு, ஏன் நம்ம காவேரியையும் சம்மந்தியம்மாவையும் பார்த்துட்டுப் போகலாம்னு.”
“அதுக்கென்ன, நீங்க எப்ப வேணும்னாலும் வரலாமே. இங்க வர்றதுக்கு ஏதாவது சாக்கு வேணுமா என்ன?”
இவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கையில், வாசலில் ஸ்கூட்டர் வந்து நிற்கும் சத்தம் கேட்டு தாரணி வீட்டு வாசலைப் பார்த்தாள். வண்டியிலிருந்து அப்பாவும் பொண்ணும் ஒருவர் பின் ஒருவராக இறங்கினார்கள். இருவரது கையிலும், ‘கடைசி நேர பர்ச்சேஸ்’ என்று சொல்லுவோமே, அந்த பர்ச்சேஸை முடிக்கத்தான் போயிருந்தனர் என்று அவர்களைப் பார்த்தவுடன் தாரணி சம்மந்தியம்மாவிடம் சொன்னாள்.
சிவா, காவேரியின் அப்பா, முதலில் உள்ளே வர, பின்தொடர்ந்தாள் காவேரி. உள்ளே வந்தவுடன், சிவா, சம்மந்தியம்மாவைப் பார்த்ததும், “வாங்க சம்மந்தியம்மா, எங்க நம்ம சம்மந்தி?” என்றார்.
“அவரா? அவர் அவருடைய நண்பர்களுக்கெல்லாம் தன் பிள்ளையாண்டான் கல்யாணப் பத்திரிகையைக் கொடுக்கப் போயிருக்காரு,” என்று அவர் கூறியவுடனே, காவேரிக்கு வெட்கம் தாங்காமல் கையில் இருந்ததை எல்லாம் சோபாவில் போட்டுவிட்டு வீட்டுக்குள் போய் நுழைந்துகொண்டாள்.
“சரி சம்மந்தி, அப்ப நான் கிளம்புறேன். இந்தப் பக்கம் வந்தேன், அதான் மருமகப் பொண்ணையும் உங்க எல்லாரையும் பார்த்துட்டுப் போயிடலாமேன்னுதான் வந்தேன். அப்ப, நான் வர்றேன்,” என்று சொல்லிக்கொண்டே வெளியேறினாள் கோமதி.
“ஏங்க, போன வேலையெல்லாம் முடிஞ்சுதா? முக்கியமா, ரொக்கமா அவங்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை ஏற்பாடு செய்யப் போனீங்களே, பணம் ஏற்பாடு பண்ணியாச்சா?”
“யம்மா, பாதிதான் கிடைச்சிருக்கு. இன்னும் ஒரு மாசம் இருக்குல்ல, அதுக்குள்ள எப்படியாவது புரட்டிடலாம். நீ ஒண்ணும் கவலைப்படாதே. அதான் கடவுள் இருக்காருல்ல, அவர் பார்த்துக்கொள்வார்.”
“என்ன, கடவுள் பார்த்துப்பாரா! என்ன, அவர் வந்து தரப்போறாரா என்ன? நீங்கதானே முயற்சி எடுக்கணும்.”
“எல்லாம் தெரியும்மா. நீ இப்ப புலம்ப ஆரம்பிக்காத, களைப்பா இருக்கு. ஒரு காபி கொண்டு வா,” என்று அந்த சோபாவில் அமர்ந்து கண்களை மூடினார் சிறிது நேரம்.
சிவாவின் எண்ணமானது ஆறுமாதம் முன்னர் இதே ஹாலில் நடந்த அந்த நிகழ்ச்சியை நினைவு செய்து பார்த்தபடி இருந்தார். தனது கண்களை மூடியவுடன், ஹிப்னாடிச மருத்துவர், அவரது கிளினிக்குக்கு வந்தவங்களை, ஒரு வட்ட வடிவத் தட்டில் கருப்பு வெள்ளை நிறத்தில் வட்டவடிவமாக பல வட்டங்கள் அதில் போடப்பட்டிருக்கும். அவரிடம் வரும் பேஷன்டை அந்த சுழலும் வட்ட வடிவத் தட்டைப் பார்க்கச் சொல்வது வழக்கம். அப்படி அந்த சுழலும் தட்டைப் பார்க்கும் போது, பார்த்தவர் அப்படியே இருந்த இடத்திலிருந்து ஒரு நிசப்தமான, வேறு உலகிற்கு, அதாவது உறங்கு நிலைக்குத் தள்ளப்படுவார். ஆனால் அவர் உண்மையில் உறங்கமாட்டார். மருத்துவர் என்ன கேள்வி கேட்கிறாரோ அதற்குப் பதில் அளிப்பார். அதே நிலையில் தான் இப்ப சிவாவும் இருந்தார்.
“ஏம்ப்பா சிவா, அவங்க கேட்குறத நம்மால கொடுக்க முடியுமா?” என்றாள் சிவாவின் அத்தை.
“என்ன அத்தை சொன்னீங்க, கொடுக்க முடியுமாவா! கொடுக்கத்தானே ஆகணும். நம்மளுக்கு இருக்குறதே ஒரே பொண்ணு, அவளுக்கு செய்யாம வேற யாருக்கு செய்யப் போறோம்?” என்று சொல்லி, தனது மனைவி தாரணியின் கண்களை ஊடுருவினார் சிவா, ஒருவித தயக்கத்துடன்.
இதை கவனித்த மாப்பிள்ளையோட அம்மா, “என்ன சம்மந்தி, ஏதாவது இருந்தா சொல்லுங்க, பேசிடலாம். பிறகு ‘இது சொல்லல, அது வைக்கல’ன்னு பேச்சு வரப்போகுது,” என்றாள்.
“அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல சம்மந்தி,” என்றாள் தாரணி. “என்னங்க, என்ன அமைதியா இருக்கீங்க? சொல்லுங்க சம்மந்தியிடம்,” என்றாள்.
சிவா தயக்கத்திலிருந்து உடனே விடுபட்டு, “அதான் நாங்க சொன்னோமே, ஒரே பொண்ணு, அவளுக்கு செய்யாம வேற யாருக்கு?” என்றார்.
அதன் பின் கொடுக்கல் வாங்கல் அனைத்தும் பேசி முடிக்கப்பட்டது. கல்யாண நாள் முடிவானது. மண்டபம் எங்கே பார்க்க வேண்டும், எவ்வளவு பெரிய மண்டபம் வேண்டும் என்று கோமதி ஒரு பெரிய லிஸ்ட்டே கொடுக்க, அதை தாரணியும் சிவாவும் ஆமோதித்தனர்.
“சம்மந்தி, நாங்க வேணும்னா பாதி தொகையை மண்டபத்திற்கும் கல்யாணச் செலவுக்கும் கொடுக்கிறோம்,” என்றாள் கோமதி.
சிவாவிற்கு உள்ளூர சந்தோஷம். ஒரு மெல்லிய புன்னகையுடன் தன் பார்வையை தாரணி பக்கம் திருப்பினார்.
ஒரு குரல் ஒலித்தது! “ஏங்க, இவ்வளவு பண்ணுற சிவா, தன் பிள்ளைக்காக கல்யாண மண்டபச் செலவை உங்ககிட்ட இருந்து எதிர்பார்ப்பானா?” என்று சிவாவின் உறவினர் ஒருவர் சொல்ல…
சிவாவிடமிருந்த அந்த சின்ன சந்தோஷம் வந்த இடம் தெரியாமல் போய்விட்டது. தனது பார்வையை தாரணியிடமிருந்து, குரல் வந்த திசை நோக்கித் திருப்பினார். “ஆமாங்க, நாங்களே எல்லாத்தையும் ஏத்துக்கிறோம். இவ்வளவு பண்ற நாங்க, இதை பண்ண மாட்டோமா! நீங்க ஜாலியா கையைக் கட்டிக்கிட்டு வந்தா போதும். நீங்க நிம்மதியா இருங்க. அப்புறம் சமையல் எல்லாம் எப்படினு தாரணிகிட்ட சொல்லிடுங்க, அப்படியே செஞ்சிடலாம்,” என்று சொன்ன வார்த்தைகள்தான் மீண்டும் மீண்டும் தனது எண்ண ஓட்டத்தில் ஓட, அதை அசைபோட்டுக் கொண்டிருந்தார் சிவா.
“என்னங்க, இந்தாங்க காபி,” என்றாள் தாரணி.
பழைய நினைவில் மூழ்கியிருந்த சிவா, சுயநினைவிற்கு வந்து, தாரணி கொடுத்த காபியைக் குடித்த பின் ஒரு புத்துயிர் வந்தது.
“ஏண்டி தாரணி, நான் என்னதான் கவலையா இருந்தாலும், உன்னோட காபி அதை மறக்கடிச்சுடுதுடி,” என்றார்.
“சும்மா வாய்க்கு வந்தபடி உளறிகிட்டு, என்ன ஆகணுமோ அதை கவனிக்காம, இப்போ இந்த கரிசனம் எல்லாம் எதுக்கு?”
“அப்பா, ஏம்பா நீங்க எல்லாத்துக்கும் ஒத்துக்கிட்டீங்க? இப்ப பாருங்க, தேவையில்லாம நாம கஷ்டப்பட்டுப் போராட வேண்டியதா இருக்கு. உங்களையும் அம்மாவையும் பார்க்கிறதுக்கே என்னமோ மாதிரி இருக்கு.”
“ஏன் அவங்ககிட்ட சொல்ல வேண்டியதுதானே? சொந்தக்காரர் சொன்னதால நம்ம அப்படியே செய்தாகணுமா என்ன? நமக்குன்னு ஒரு சக்தி இருக்குதுல்ல, அதற்கு ஏற்பத்தானே செய்யணும். இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போயிடல. இன்னும் ஒரு மாசம் இருக்கு. நான் வேணும்னா அவர்கிட்ட சொல்லி அவங்க அம்மாகிட்ட பேசச் சொல்லட்டுமா?”
“அம்மா, காவேரி, அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். நீ சும்மா இருந்தாலே போதும். இதையெல்லாம் நாங்க சரி செஞ்சிடுவோம். நான் முன்னமே சொன்ன மாதிரி, நீ மனசைப் போட்டு குழப்பிக்காத. போய், கல்யாண கனவில் வானில் சிறகடித்துப் பறக்கப் பாரு.”
இப்படியே ஒரு வாரம் கடந்து போன நிலையில், சிவாவும் மீதிப் பணத்திற்குத் தன் ஆபீஸில் உள்ள தெரிந்தவர்களிடமெல்லாம் கேட்டுப் பார்க்க முடிவெடுத்துக் கேட்கவும் செய்தார். இந்த நிலையில் இருக்க, ஒரு நாள் சாயந்திரம் காவேரி ஆபீஸ் முடிந்து வீடு திரும்பும் சமயம், தீனா, அதாவது காவேரியினுடைய வருங்காலக் கணவன், காவேரியைப் பார்ப்பதற்காக அவளது ஆபீஸுக்கு வந்தான்.
காவேரியும், “வாங்க, எங்கே இந்தப் பக்கம்?” என்றாள்.
“சும்மா உன்னைப் பார்த்துட்டு ஒரு கப் காபி குடித்துவிட்டுப் போகலாமுன்னு வந்தேன்,” என்றான்.
“அதற்கென்ன, ஒரு கப் காபிதானே, குடிச்சிட்டாப் போச்சு. எங்க போகலாம்? பக்கத்துல கோமள விலாஸ் இருக்கு, அங்கு போலாமா?”
“சரி, அங்க காபி ரொம்பவே நல்லாயிருக்கும், போகலாம்,” என்றான் தீனா.
இருவரும் கோமள விலாஸ் வந்தவுடன் ரெண்டு காபி ஆர்டர் செய்து ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு இருந்தனர்.
காவேரியைப் பார்த்து, “என்ன காவேரி, என்னமோ போல இருக்க. வந்ததுல இருந்து உன்னோட மூஞ்சியே சரியே இல்லையே. என்னன்னு சொல்ல முடியுமா?” என்றான்.
“நீங்க இவ்வளவு கேட்கிறதால நான் சொல்றேன். நீங்க பொண்ணு பார்க்க வந்தப்போ உங்க அம்மா கேட்டதையெல்லாம் எங்க அம்மாவும் அப்பாவும் தட்டாம கொடுக்கிறோமுன்னு சொன்னாங்க. ஏதோ எங்க சொந்தக்காரர் ஒருத்தர் கூட்டத்தில் சொல்ல, அப்பாவும் கல்யாணச் செலவையும் தன் தலையில போட்டுக்கிட்டாரு. ஏதோ அந்தச் செலவை உங்க அம்மாகிட்ட சொல்லி, அவுங்க முன்னமே சொன்ன மாதிரி பாதியா ஏத்துக்கச் சொல்லுங்க. எங்களுக்கு கொஞ்சம் பாரம் கம்மியா இருக்குமில்ல.”
“அது வந்து காவேரி, எங்க அம்மா பேச்சை நான் இதுவரையிலும் மீறினதில்லை. இதை எப்படிப் போயி அவங்ககிட்ட சொல்லச் சொல்ற? நீங்க அப்பவே சொல்லியிருந்தா, அம்மா ஏதாவது சொல்யூஷன் கொடுத்திருப்பாங்களே. இப்ப வந்து நீ சொன்னா எப்படி?”
ஆர்டர் செய்த காபியைக் குடிக்காமல் அவள் அதைப் பார்த்தபடி அமைதியாக இருந்தாள். அந்த அமைதியைக் கலைக்கிற வகையில், தீனா தன் கையில் காபிக் கப்பை எடுத்துக்கிட்டு, ஒரு சிப் குடித்துக்கொண்டே அவளைப் பார்த்து, “ஏன் காவேரி, காபியைப் பார்த்துக்கிட்டே இருக்க?” என்றான்.
“ஏங்க, நான் சொல்றேன் தப்பா நினைக்க வேண்டாம். இந்தச் சின்ன விஷயத்திற்கே உங்களால ஒரு முடிவுக்கு வர முடியல. அப்படி இருக்கும்போது, நம்ம திருமணம் முடிந்து முக்கியமான விஷயம் ஏதாவது வந்தால், அவ்வளவுதான் போல. நீங்களாக ஒரு முடிவுக்கு வர மாட்டீர்கள் போல. எல்லாத்தையும் உங்க அம்மாவிடம் சொல்லித்தான் செய்ய வேண்டும் என்றால், பிறகு எதற்கு நமக்கு கல்யாணம்?”
“தீனா, நான் சிறகொடிந்த பறவையாக உங்கள் வீட்டில் வாழ முடியாது. இந்தப் பரந்த உலகத்தில் அந்த வானத்தை நோக்கிப் பறக்கும் ஒரு பறவையாகத்தான் இருக்க நினைக்கிறேன்,” என்று சொல்லிவிட்டு, ஆர்டர் செய்த காபியை அங்கேயே அதே மேஜையில் விட்டுவிட்டு, எழுந்து வீட்டை நோக்கி நடக்க முற்பட்டாள்.
-பாலமுருகன்.லோ-
- முறி…
- மௌனம் பேசும்
- பிரியாணி
- மழை புராணம்: 26 – இரும்பு வாழ்வு
- …பிறந்த பொன்னாடும்…
- ஈரான் போரும் உலக ஒழுங்கு மாற்றங்களும்
- கனவுகள் மொட்டைப் பாறையில் காய்ந்து கொண்டிருக்கின்றன
- சமூகம் கொடுக்கும் அழுத்தம்…
- அதுவும் கவிதைதான்
- வார்த்தை இலக்கியக் குழுமம் நடத்தும் கலந்துரையாடலில், அடுத்து ந. பிச்சமூர்த்தி எழுதிய “ஞானப்பால்” சிறுகதை
- ஆண் பால் -அத்தியாயம் ஐந்து
One thought on “சமூகம் கொடுக்கும் அழுத்தம்…”