விஷமேறிய மரத்தின் சிற்பம்

This entry is part 3 of 42 in the series 25 நவம்பர் 2012

மலைப்பாம்புக் குட்டிகளென விழுதுகளைப் படர விட்ட
மரத்தின் ஆதிக் கிளைகள்
காட்சி கூடத்தில் வனம் பார்க்கும் சிற்பங்களாகின்றன

விருட்சங்களை வெட்டிச் செல்லும்
விஷமேறிய பார்வைகளை சிற்பி
காடுகளெங்கிலும் சுமந்தலையும் செம்மாலை நேரங்களில்
வன மரங்களின் இலைகளினூடு சூரியனாடும் மஞ்சள் நடனம்
எவ்வளவு ப்ரியத்துக்குரியது

நச்சேற்றிய சிற்பியின் பாதங்களிலேயே வீழ்ந்து கிடக்கும் மரங்களில்
அவனது எண்ணங்களிலிருந்தும் ஆற்றல்களிலிருந்தும் உருவாகிய
வனக் கொலைகளுக்கான ஆயுதங்கள் தீட்டப்படுகையில்
வன்மங்கள் கூராகின

இங்கு தாயின் கரத்திலிருந்துகொண்டே தடவிப் பார்க்கிறது
புராதனச் சடங்குகளின் பிரிந்த விம்பங்களென
தனித்திருக்கும் அம் மரச் சிற்ப விலங்குகளால்
எவ்வித ஆபத்துமில்லையென்பதை உணர்ந்த குழந்தை

பிஞ்சு விரல்கள் தொட்ட மரங்கள்
உடல் சிலிர்த்து எழுந்திடப்
பற்றியெரிகிறது மலைக் காடு

– எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை
mrishansha@gmail.com

Series Navigationகடவுள் உண்டுகே.எஸ்.ரமணா எழுதிய “பாரதி பார்வையில் அரசியலும் ஆன்மிகமும் என்ற நூல் வெளியீட்டு விழா
author

எம்.ரிஷான் ஷெரீப்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *