சுமை
தாராமங்கலம் வளவன்
தம்பி மாரியை முதுகில் தூக்கி தூக்கி அண்ணன் ராமுவுக்கு சலித்து விட்டது. மாரிக்கு இரண்டு கால்களும் சூம்பி உடல் பெருத்துவிட்டது. வெளியில் எங்கு போவதென்றாலும், ராமு தான் தூக்க வேண்டும். மாரி குண்டாக, குண்டாக அதன் சுமை எல்லாம் ராமுவுக்கு தான்.
ரோடு ஓரத்து இட்லி கடை அப்பாவும் அம்மாவும் நடத்துகிறார்கள். கடையிலிருந்து எடுத்து ஏழு எட்டு இட்லியை ஒரு வேலைக்கு சாப்பிடுவான் மாரி. அம்மாவுக்கு மாரி மேல் பரிதாபம், ஆனால் அம்மாவுக்கு மாரி மேல் செல்லம் என்று. ராமு நினைத்து கொள்வான். சுமக்க வேண்டியவன் அவன் தானே.
மாரி ஒரு நாள் சொன்னான். “ராமு அண்ணா, உனக்கு சிரமம் கொடுக்கிறேன்னு தெரியுது, இருந்தாலும் என்னால வாயை அடக்க முடியலே…”
அப்பா பழனிக்கும், அம்மா கமலத்திற்கும் ராமுவின் கஷ்டம் தெரியும். மனதிற்குள் புளுங்காத நாளே கிடையாது. இரண்டாவது மகன் ஊனமாய் பிறந்ததுக்காக அழுவதா, இல்லை அவனை முதல் மகன் முதுகில் தூக்கும் காட்சியை பார்த்து அழுவதா என்று அவர்களுக்கு புரியவில்லை. இதற்கு ஒரே வழி கை வண்டி வாங்கி மாரிக்கு கொடுப்பது தான். அதற்கு கையில் பணம் இல்லை.
ஒரு நாள் இட்லி சாப்பிட வந்த ஏழுமலை ஒரு வழி சொன்னான். ஜோலார் பேட்டையில் ஒரு சமூக சேவை அமைப்பு இலவசமாக ஊனமுற்றவர்களுக்கு கை வண்டி கொடுப்பதாகவும், தான் அந்த அமைப்பின் சேர்மனிடம் பியூனாக வேலை பார்ப்பதாகவும் சொன்னவன், தான் சொன்னால் கை வண்டி கொடுப்பார்கள் என்றும் சொன்னான். எந்த தேதியில் வண்டி கொடுக்கபடும் என்பதை கண்டு பிடித்து சொல்வதாகவும் சொல்லியிருந்தான். இரண்டு நாட்களுக்கு முன் புதன் கிழமை கொடுப்பதாகவும், வந்து வாங்கிக்கலாம் என்று சொல்லி விட்டு, ஜோலார் பேட்டை போய் விட்டான்.
இன்று- புதன் கிழமை மூன்று பேரும் சேர்ந்து புறப்பட்டார்கள். இட்லி கடைக்கு இன்று விடுமுறை. ஜோலார் பேட்டை பாசஞ்சரில் சார்ஜ் குறைவு என்று ஏழுமலை சொல்லிருந்ததால் ஜோலார் பேட்டை பாசஞ்சருக்காக காலையில் புறப்பட்டார்கள்.
புறப்படும்போது கமலம், “ கைவண்டி கெடைக்க போறதை ரண்டு பேரு கிட்டையும் சொல்லிடலாங்களா…. மொதல்ல ராமுக்கிட்ட தாங்க சொல்லணும்… அவன் தான் ரொம்ப சிரமப்படறான்.”
பழனி, “ வேண்டாம் கமலம். மொதல்ல கெடைக்கட்டும். அப்புறம் சொல்லிக்கலாம். கெடைக்கலேனா அப்புறம் ஏமாந்துடுவாங்க… முக்கியமா ராமு… அவன் தானே மறுபடியும் தூக்கணும்…. இப்போதைக்கு மாரியை ஜோலார் பேட்டையில டாக்டர் கிட்ட காண்பிக்கறதா சொல்லிக்கலாம் ”
கைவண்டி கையிலே கிடைத்ததிற்கு பிறகு நிஜத்தை சொல்வதாக முடிவு ஆனது. டவுன் பஸ் பிடித்து சேலம் ஜங்ஷன் வந்தார்கள்.
ஜோலார் பேட்டை பாசஞ்சர் இன்னும் வர வில்லை. பிளாட்பாரத்தில் போட்டிருந்த நாற்காலிகளில் பழனியும், கமலமும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்க, மாரி, ராமுவின் பொறுப்பில் விடப்பட்டான்.
எதிர் புறம் கேரளா போவதற்காக, எக்ஸ்பிரஸ் ஒன்று வந்து நின்றது.
“ ராமு அண்ணா, நா கிட்ட போய் ரயில பார்க்கிறேன்.” மாரி சொல்ல, ராமு தலையாட்டினான்.
ஊர்ந்து ஊர்ந்து, மாரி ஒரு பெட்டியின் வாசலுக்கு எதிரே சென்று, இறங்கி ஏறுபவர்களை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.
ராமு ஒரு கணத்திலே முடிவு செய்தான். இப்படி வாழ்க்கை பூராவும் தம்பியை முதுகில் தூக்கி கொண்டு இருக்க முடியாது. இப்படியே தம்பியை விட்டு விட்டு கேரளா போகும் எக்ஸ்பிரஸ்ஸில் ஏறி ஓடி விட வேண்டியது தான். முடிவு செய்தவுடன் பக்கத்து பெட்டியில் ஏறி விட்டான். நெஞ்சு பட பட வென்று அடித்து கொண்டது.
ரயில் உடனே புறப்பட்டு விடும் என்பது மனதில் பட, கடைசியாக தம்பியை ஒரு முறை பார்த்து விட வேண்டும் என்று தோன்ற ஜன்னலில் தலையை விட்டு பார்த்தான். அதிர்ந்து போனான். பக்கத்து பெட்டியின் வாசலுக்கு எதிரே தம்பியை காணவில்லை. ஊர்ந்து ஊர்ந்து தம்பியால் அதிக தூரம் போயிருக்க முடியாதே.
ரயிலை விட்டு கீழே இறங்காமல், பக்கத்து பெட்டியின் வாசலுக்கு உட்புறமாக வந்து பார்த்தால், மாரி எப்படியோ வண்டிக்குள் ஏறி உட்கார்ந்து கொண்டு வெளியே எட்டிப் பார்த்து கொண்டிருந்தான்.
மாரியின் முதுகுக்கு பின்னால் இருந்து ராமு, “ மாரி, எதுக்குடா, ரயில்ல ஏறின, ரயிலு புறப்பட போகுது. சிக்கிரம் எறங்கு” மாரியை தள்ளி விட்டு ராமுவும் குதித்தான். கேரளா போகும் எக்ஸ்பிரஸ் புறப்பட்டது.
ராமுவுக்கு ஆச்சர்யமாகி விட்டது. நாம் இவனை விட்டு ஓடிப் போக நினைக்க, இவன் நம்மை விட்டு ஓடிப் போக நினைத்திருக்கிறான்.
மாரி அழுது கொண்டே சொன்னான். “ எத்தன நாளக்கி நீ என்ன சுமப்ப, அதனாலே நா உங்கள விட்டு போய் பிச்சை எடுத்தாவது பொழச்சிக்கிறேன்….”
ராமுவுக்கும் அழுகை வந்தது. தான் தம்பியை விட்டு விட்டு ஓட நினைத்ததுக்காக.
தம்பியை தூக்கி கொண்டு போய் அப்பா அம்மாவிடம் உட்கார வைத்து விட்டு பக்கத்தில் தானும் உட்கார்ந்து கொண்டான் ராமு.
கேரளா போகும் எக்ஸ்பிரஸில் இருந்து இறங்கிய பயணிகள் வந்து கொண்டிருந்தார்கள். அதில் ஏழுமலையும் அவனுடைய சேர்மனும் வந்து கொண்டிருந்தார்கள். ஏழுமலையை பார்த்த பழனி,
“ ஜோலார் பேட்டை போறதுக்கு தான் பாசஞ்சருக்காக காத்துக்கிட்டு இருக்கோம்..” என்று சொல்ல
“ அட, நல்லதா போயிடுச்சி….” என்று சொன்ன ஏழுமலை, கூட வந்து கொண்டிருந்த தன்னுடைய சேர்மனிடம் மாரியை காண்பித்து,
“ ஐயா, இந்த பையனுக்காக தான் வண்டி சொல்லியிருந்தேன்.” என்றான்.
அதற்கு, ஏழுமலையின் சேர்மன், “ எதுக்கு, இந்த பையனை ஜோலார் பேட்டை வரைக்கும் கஷ்டப்பட்டு கூட்டிக்கிட்டு வரணும். இங்கேயே செவ்வா பேட்டையில ஸ்டாக் இருக்கு. என் கூட வந்து வாங்கிக்கங்க.” என்று அவர்களுக்காக காத்திருந்த வேனில் மூன்று பேரையும் உட்கார வைக்க, வேன் செவ்வா பேட்டையை நோக்கி புறப்பட்டது.
பழனி, “ கைவண்டி கையிலே கிடைச்சதுக்கு அப்புறம் சொல்லிக்கலாம்னு, உங்க ரெண்டு பேரு கிட்ட விஷயத்தை மறைச்சிட்டோம்.” என்று சொல்ல, அதற்கு
“ எதுக்கு மறைச்சிங்க, எவ்வளவு பிரச்சினை அதனால….” என்றான் ராமு கோபமாக,
மாரி அண்ணின் கையை பிடித்து அழுத்தி பேசாமல் இருக்க சொன்னான். மாரி தான் ஓடிப் போக பார்த்ததை யாரிடமும் சொல்லி விட கூடாது என்பதை சொல்லுகிறான் என்பது புரிய, தான் தம்பியை விட்டு விட்டு ஓட நினைத்ததை எப்போதும் யாரிடமும் தவறி கூட சொல்லி விட கூடாது என்று நினைத்து கொண்டான் ராமு.
செவ்வா பேட்டையில், கைவண்டி கிடைத்தவுடன் மாரி சொன்னான் ராமுவிடம்,
“ கால்ல தான் சத்து இல்ல, கையில நெறய சத்து இருக்கு இட்லி சாப்பிட்டு சாப்பிட்டு…. நீ கூட உட்காரு ”
- இஸ்லாமும் உளவியல் பகுப்பாய்வும்
- விண்கற்கள் தாக்குதலைக் கையாள அகில நாட்டு பேரவைப் பாதுகாப்புக் குடையை அமைக்க ரஷ்யத் துணைப் பிரதமர் அழைப்பு
- ரியாத்தில் தமிழ் கலை மனமகிழ் மன்ற ((TAFAREG) விழா!
- கதையும் கற்பனையும்
- நானும், நாமும்தான், இழந்துவிட்ட இரு பெரியவர்கள்
- காரைக்குடி கம்பன் கழகப் பவளவிழா அழைப்பிதழ்
- பிரதிநிதி
- சமாதானத்திற்க்கான பரிசு
- பாசச்சுமைகள்
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -1 பாகம் -8
- அமேசான் காடுகளும் சஹாரா பாலைவனமும் எப்படித் தோன்றின.?
- இருள் தின்னும் வெளவால்கள்
- மந்திரச் சீப்பு (சீனக் கதை)
- வாழ்வியல்வரலாற்றில்சிலபக்கங்கள்-46
- மார்கழி கோலம்
- PAPILIO BUDDHA : Bangalore screening on SUNDAY 3 MARCH 2013
- வாலிகையும் நுரையும் – கலீல் ஜிப்ரான் (13)
- சுமை
- வெள்ளிவிழா ஆண்டில் “கனவு“ சிற்றிதழ்
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 2
- நீலபத்மம், தலைமுறைகள் விருதுகள் வழங்கும் விழா… 26 ஏப்ரல் 2013..
- மாமன் மச்சான் விளையாட்டு
- நிழல்
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -13 என்னைப் பற்றிய பாடல் – 6 (Song of Myself)
- ‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து………..19. வெங்கட் சாமிநாதன் – ‘இன்னும் சில ஆளுமைகள்’
- மிரட்டல்
- கவிதைகள்
- தாகூரின் கீதப் பாமாலை – 54 என் மனதில் இருப்பதை அறிபவன் !
- போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 10
- தன் வரலாற்றுப் பதிவுகளில் அடித்தள மக்கள்
- திருக்குறளில் ‘இயமம் நியமம்’
- அக்னிப்பிரவேசம்-25
- ஹிந்துமத வெறுப்பென்பது மதஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தைப் பேணுதல் ஆகாது மஹாத்மா காந்தியின் மரணம் – ஒரு எதிர்வினை – பாகம் – 2