குருக்ஷேத்திரக் குடும்பங்கள் 4

This entry is part 28 of 31 in the series 31 மார்ச் 2013

ஜோதிர்லதா கிரிஜா

4.

வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்த தரணிபதிக்குத் தாங்கள் பேசப் போவது காதில் விழாத தொலைவுக்குப் போன பிறகு, “ஒரு நிமிஷம் இருப்பா. நான்  உங்க அக்கா லெட்டரைப் படிச்சுட்றேன்,” என்ற சங்கரன் தெரு ஓரத்தில், தன் வீட்டுக்கு முதுகு காட்டியபடி, அந்த உறையைப் பிரித்துப் படித்தான்.

 

“சங்கர்! ரொம்ப அவசரம். அதனால்தான் கடிதம் கொடுத்து அனுப்புகிறேன்.

இன்று மாலை என்னைப் பெண் பார்க்க வருகிறார்கள். ஏதாவது செய்யுங்கள், ப்ளீஸ். இது மாதிரி எங்கள் வீட்டில் திடீரென்று செய்வார்கள் என்று நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. என்னைப் பார்க்க வருகிறவர்கள் திருநெல்வேலிக்காரர்கள்.தங்கள் சொந்தக்காரர்கள் வீட்டுக்கு இங்கே வந்திருக்கிறார்கள். போன வெள்ளிக்கிழமை – என்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் அந்தப் பையனும் அவன் அம்மாவும் பார்த்திருக்கிறார்கள். நானும் என் அக்காவும் கோவிலுக்குப் போயிருந்தோம். இரண்டு பேரையுமே அவன் பார்த்திருக்கிறான். ஆனால் அவனுக்கு என்னைத்தான் பிடித்திருக்கிறதாம். என்ன துரதிருஷ்டம், பாருங்கள். இதற்காகவே, என் அக்காவைப் பெண் பார்க்க யார் வந்தாலும் நான் என் சிநேகிதிகள் வீட்டுக்குப் போய்விடுவேன். என் அக்கா ஒன்றும் அழகில் குறைந்தவள் என்று சொல்ல முடியாது. ஆனால் அவளைக் காட்டிலும்நான் அதிக அழகு என்பதால் எனக்கே தொல்லை விளைகிறது. நம் விஷயத்தைப் பற்றி எங்கள் வீட்டில் இப்போதைக்குச் சொல்லக் கூடாது என்று வேறு என் வாயைக் கட்டிப் போட்டு வைத்திருக்கிறீர்கள். நான் என்னதான் செய்ய? அவனை எனக்குப் பிடிக்கவில்லை என்று சொல்லிவிடலாம்தான். அல்லது, ‘அக்காவுக்கு ஆகாமல்நான் செய்துகொள்ள மாட்டேன்’ என்றும் சொல்லிவிடலாம். ஆனால் இந்த இரண்டில் எதுவுமே எடுபடாத சிக்கலை அவர்கள் ஏற்படுத்தி விட்டார்கள். அதாவது முப்பதாயிரம் என் அப்பாவின் கையில் என் அக்காவின் கல்யாணச் செலவுக்காகக் கொடுக்க அவர்கள் தயாராக இருக்கிறார்கள். சுருக்கமாய்ச் சொன்னால், எனக்கு வரதட்சிணை கொடுக்கிறார்கள்! அது மட்டுமின்றி, என் அக்காவின் கல்யாணம் நிச்சயமாகும் போது அவளுடையகல்யாணச் செலவையும் ஏற்றுக்கொள்ளுவார்களாம்.  பயங்கரமான பணக்காரர்கள். அதற்கு எழுத்து மூலம் வாக்குறுதி யளிக்கவும் அவர்கள்தயாராக இருப்பதாக என் அப்பாவிடம் சொல்லிவிட்டார்கள். என்னை அவனுக்குத் தந்தால், என் கல்யாணச் செலவு முழுவதையும் அவர்களே பார்த்துக்கொள்ளுவார்களாம். இப்படி ஒரு யோகம் போயும் போயும் எனக்குத்தானா அடிக்க வேண்டும்? இந்த மயிலாப்பூரில் எத்தனை ஏழைப் பெண்கள் இருக்கிறார்கள்! அவர்களில் ஒருத்திக்கு அடிக்கக்கூடாதா?

 

உங்களைப் பற்றி இப்போதைக்குச் சொல்லக் கூடாது என்று நீங்கள் என் வாயைக் கட்டிப் போட்டிருந்தாலும், நான் அந்த ஆள் நீங்கள் என்று சொல்லாமல், ‘நான் ஒருவரை மணந்து கொள்ள ஆசைப் படுகிறேன். அவருக்கும் அதில் சம்மதம். அதனால் என்னால் வேறு யாரையும் கல்யாணம் செய்துகொள்ள முடியாது’ என்று திட்டவட?்?டமாய் அப்பாவிடமும் அம்மாவிடமும் சொல்லிவிட்டேன். நேற்றிலிருந்து வீடுஒரேரணகளமாய் இருக்கிறது. மயான பூமி மாதிரி ஆளாளுக்கு அழுகை. நானும் உட்பட. அழாத அப்பா கூட அழுகிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இப்படி ஓர்“அதிருஷ்டம்” வரவில்லை என்று யார் அழுதார்கள்? நான் அழுது மாய்வதைப் பார்த்துவிட்டு,நான் தற்கொலை செய்துகொண்டு விடுவேனோ என்கிற பயத்தில், எனக்குக் காவல் வைத்திருக்கிறார்கள். எல்லாக் கட்டுக்காவலையும் மீறி எப்படியோ இந்தக்கடிதத்தை நான் என் தம்பி சீனுவிடம் கொடுத்து அனுப்புகிறேன். இதைத் தடுக்க நீங்கள் முயன்றால், நான் சந்தோஷப் படுவேன். சங்கர்! நான் உங்களைத்தான் நம்பியிருகிறேன். உங்களைத் தவிர வேறு யாருக்கும் மனைவி யாவதைப் பற்றி என்னால் கற்பனை கூடச் செய்து பார்க்க முடியாது. உங்கள் குடும்பத்துக்காகத் தியாகம் செய்வதாய்ச் சொல்லிக் கொண்டு என்னைக் கைவிட்டுவிடாதீர்கள், சங்கர்! சீனுவிடம் எல்லாம் சொல்லி யிருக்கிறேன். அவனுக்குப் பதினெட்டு வயது ஆகிறது. என்னை நன்றாகப் புரிந்து கொண்டிருக்கிறான். சிறுவன் என்று நினைத்து உங்கள் எண்ணங்களையோ, திட்டத்தையோ அவனிடம் தெரிவிக்க நீங்கள் தயங்க வேண்டியதில்லை.

இந்தக் காலத்துப் பதினெட்டுகள் இரண்டுங்கெட்டான்கள் இல்லை என்பது உங்களுக்கே தெரியும். அதனால், நாம் என்ன செய்து இந்த இக்கட்டிலிருந்து தப்ப வேண்டும் என்பதற்கு உங்கள் வழி அடங்கிய கடிதமோ அல்லது வாய்மொழியான திட்டமோ தேவை. கபாலீசுவரர் கோவிலுக்குப் போனதற்கு எனக்கு இப்படி ஒரு தண்டனை. உங்கள் பதிலை உடனே சீனுவிடம் கொடுங்கள். அல்லது என்ன செய்யலாம் என்பதைச்சொல்லி யனுப்புங்கள்.

உங்கள் அன்புள்ள,

தயா.”

 

தயாவின் கடிதத்தைச் சங்கரன் இரண்டாம் தடவை மிகுந்த கவனத்துடன் படித்தான். அவன் முகம் இருண்டது. சீனுவை ஏற்கெனவே அவன் அறிந்திருந்ததால் அவனிடம் பேசுவதில் அவனுக்கு அவ்வளவாகத் தயக்கம் ஏற்படவில்லை.

 

“அந்தப் பையன் என்ன பண்றான், சீனு?”

 

“காப்பி எஸ்டேட்டுக்குச் சொந்தக்காராளாம் அவா. திருநெல்வேலியிலே மூணு சொந்த பங்களாக்கள் இருக்காம். . . ”

 

சங்கரன் சில நொடிகளை மவுனத்தில் கழித்தான். ‘அவ்வளவு பெரிய பணக்காரர்கள் நிச்சயமாய் தயாவின் அக்காவுக்கும் ஒரு வழி செய்வார்கள். தயாவின் பெற்றோர்க்கு இது ஒரு கிடைக்க முடியாத வரப் பிரசாதம்தான். வெறும் அன்றாடங்காய்ச்சியான நான் இவ்வளவு பெரிய வாய்ப்பு அந்த ஏழைக் குடும்பத்துக்குக் கிடைப்பதைத் தடுப்பது என்ன நியாயம்?’ – சங்கரனின் கண்களில் நீர் மல்கிற்று.

அதை உள்ளிழுத்துக்கொள்ளும் முயற்சியில் கண்ணிமைகளைப் படபடவென்று மூடித் திறந்தான்.. ‘உண்மையான காதலுக்கு நேர்கிற கதிதான் இப்போது எங்கள் காதலுக்கும் நேரப் போகிறது. . .’

 

“அக்கா பதில் கேட்டா.”

 

“அழறதை நிறுத்திட்டு ‘சரின்னு சொல்லச் சொல்லு.”

 

முகத்தைத் திருப்பிக் கொண்டு நடக்கத் தொடங்கிய சங்கரனைச் சீனு பின்தொடர்ந்தான்.

 

“சார்! அக்கா அதுக்கு ஒத்துக்க மாட்டா, சார்!”

 

“ஒத்துண்டுதான் ஆகணும். வேற வழியே இல்லேப்பா.”

 

பொங்கிவிட்ட தன் கண்ணீரை அவனுக்குக் காட்டிவிடக் கூடாதெனும் முயற்சியில் சங்கரன் விடுவிடுவென்று கால்களை எட்டிப் போட்டான்.

 

Series Navigationதமிழ்ப் பட்டி மன்றக் கலைக் கழகத்தின் 74வது நிகழ்ச்சியாக நீயா நானா இறுதிச் சுற்று.அக்னிப்பிரவேசம்-28
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *