சின்னஞ்சிறு கிளியே

author
12
0 minutes, 0 seconds Read
This entry is part 4 of 31 in the series 7 ஏப்ரல் 2013

டாக்டர். ஜி.ஜான்சன்

” கியாக்… கியாக் … கியாக்…”
எனது பச்சைக்கிளியின் கொஞ்சுமொழி!
வீடு திரும்பும்போது என்னை வரவேற்கும் பாணி இது.
வீட்டுக் கூடத்திலிருந்து அதன் அமுத மொழி கேட்குமே தவிர, அதைக்
காண முடியாது.
வழக்கமான கண்ணாமூச்சி விளையாட்டுதான்.
கூடத்தைக் கண்ணோட்டமிட்டபின், ” எங்கே போனது என் கிளி? ”
என்பேன் மனைவியைப் பார்த்து.
தேநீர்க் கோப்பையுடன் என்னிடம் வருபவள்., ” எனக்கு வேறு
வேலையில்லை! நீங்களாவது உங்களின் கிளியாவது! வழக்கம்போல் எங்காவது
ஒளிந்து கொண்டிருக்கும்! நீங்களே தேடி கண்டு பிடியுங்கள் உங்கள் கிளியை!
” என்று சலித்துக் கொள்வாள்.
எனது பச்சைக் கிளியை நான் சிறு குஞ்சுலிருந்தே செல்லமாக
வளர்க்கிறேன் எனது கைகளிலும் தோள்களிலும் சட்டைப் பைகளிலும் வளர்ந்த கிளி
அது.
பட்டு போன்ற பச்சை நிற மேனி. மை தீட்டியது போன்ற அழகிய சிறிய
கண்கள். கூர்மையான அலகுகள்.மென்மையான பாதங்கள். என்னைக் கண்டு ஓடி
ஒளிவதும், ஓரக் கண்ணால் பார்ப்பதும், ஏட்டிக்குப் போட்டியாய் செய்வதும்
கண்டு மகிழ்வேன்..
பெண்களுக்கு மட்டுமே பொறாமை குணம் அதிகம் என்று
கேள்விப்பட்டுள்ளேன், ஆனால் இந்தப் பெண் கிளியிடமும் பொறாமை உள்ளது கண்டு
வியந்து போனேன்.
பெண்ணுக்குப் பெண் பொறாமை உள்ளது இயல்புதானே? அதனால்தான் என் மனைவி
மீதே பொறாமை கொண்டதோ என்னுடைய பச்சைக் கிளி?
மனைவி என் அருகில் அமர்ந்தாலே போதும். என் கிளிக்கு அதைப்
பார்க்க பொறுக்காது! வேகமாக கிடுகிடுவென்று ஓடிவந்து என் காலை நன்றாக
கடித்துவிடும். நான் எழுந்து சென்று காயத்தைக் கழுவி மருந்து போட
நேரிடும்.

என் மனைவி மட்டுமென்ன? கிளிக்கே அவ்வளவு பொறாமை என்றால் அவள் மட்டும்
விதிவிலக்கா என்ன? பொறாமைதான் பெண் இனத்துடன் சேர்ந்து பிறந்ததாயிற்றே!

” கிளியை ஏன் சட்டைப் பையில் கொண்டு செல்கிறீர்கள்? அது சும்மாவா
இருக்கிறது? சட்டையைக் கொத்திக் கிழிக்குது! நினைக்கும் போதெல்லாம் என்
காலையும் கடிக்குது.” மனைவி அவ்வப்போது சலித்துக்கொள்வாள்.அவள் நிலை
எனக்குப் புரிகிறது.

மனைவியின் அருகில் உட்கார்ந்து பேசினாலே காலைக் கடிக்கும் என்
பச்சைக்கிளி இரவில் அவளுடன் படுத்தால் சும்மா விடுமா என்ன?

நாங்கள் மூவரும் ஒரே கட்டிலில்தான் படுப்போம்.

மனைவி பக்கத்தில் நானும், என் பக்கத்தில் கிளியும் படுத்திருப்போம்.

நான் தூங்கும் வரை கிளி விழித்திருக்கும்.என்னைக் காவல் காப்பதுபோல்
பார்த்துக்கொண்டிருக்கும். தப்பித் தவறி நான் மனைவியின் பக்கம் திரும்பி
படுக்க நேர்ந்தால் போதும். உடன் சுளீர் என ஒரு கொத்து முதுகில் விழும்!

நான் கத்தும் சத்தத்தில் ஆழ்ந்த உறக்கத்திலிருக்கும் என் மனைவி
அலறியடித்துக் கொண்டு எழுந்து ” என்ன? என்ன ஆச்சு ? ” என்று எழுந்து
விளக்கைப் போடுவாள்.

தூக்கம் கேட்டது என்ற கோபத்தில் கையை ஓங்குவாள். அதை எதிர்ப்பார்த்து
காத்திருந்தததுபோல் உடன் சிறகடித்து எதோ சொல்லிக்கொண்டு பறந்துவிடும்.
சிறிது நேரம் கழித்து அவள் உறங்கியதும் மீண்டும் பறந்து வந்து என்னுடன்
ஒட்டிக்கொள்ளும்.

இந்த இரவுச் சண்டை இத்துடன் தீராது. காலையிலும் தொடரும்!

” இந்தக் கிளியால் பெரிய தொல்லையாகிவிட்டது! இரவில் நிம்மதியாகத் தூங்க
முடியலை. இப்போ அது எங்கே போய் ஒளிந்துள்ளது? ” கையில் தேநீர்க்
கோப்பையுடன் வரும் மனைவி கேட்பாள்.

நான் என்ன அவ்வளவு அப்பாவியா என் கிளியைக் காட்டிக் கொடுக்க? அது எங்கே
ஒளிந்துள்ளது என்பது எனக்கும் அதற்கும் அல்லவா தெரியும்? அவள் திட்டுவது
கேட்டது என்று சொல்வதுபோல் என் தொடையை செல்லமாகக் கொத்தும். ஆம்.
என்னுடைய கால்சட்டைப் பைக்குள்தான் அது தஞ்சம் புகுந்துள்ளது எப்படி
அவளுக்குத் தெரியப் போகிறது!

” காலையிலேயே எங்கே போனது? காணோமே? ” அவள் தேடுவாள்.

” தெரியலையே! நன்றாக தேடிப் பார். ” காலையிலேயே இப்படி ஒரு பொய்.

” சிறகு முளைத்து பறக்கத் துவங்கியதிலிருந்து இப்படித்தான் பாச்சா
காட்டுது. என் கையில் மட்டும் அகப்படட்டும்.இரண்டு போடு போட்டால்தான்
கோபம் தீரும். ” சமையல் கட்டுக்குச் சென்றுவிட்டாள்.

தேநீர் அருந்தி முடிந்தபின் நான் வெளியே வாசலுக்கு வருவேன்.வீட்டைச்
சுற்றிலும் பூச் செடிகள் , மரங்கள் , செடிகொடிகள் நிறைந்து ஒரு
சோலைவனமாகவே காட்சி தரும். இயற்கைப் பிரியர்களான கிளிக்கும் எனக்கும்
இந்த ரம்மியம் மிகவும் பிடிக்கும்.

இங்குதான் காலையில் நாங்கள் உடற்பயிற்சி செய்வோம். அதன் சிறகுகளின்
வளர்ச்சிக்கு அது தேவைப் பட்டது.

எனது கால் சட்டைப் பையிலிருந்து அதை வெளியே எடுத்து இரண்டு கைகளில்
பிடித்து மரத்தை நோக்கி மேலே உயர வீசுவேன். அது சிறகுகளை படபடவென
அடித்துக்கொண்டு பறந்து மரக்கிளைக்குச் சென்று அமரும்.

அது பறந்து போய்விடும் என்ற அச்சம் எனக்கு இம்மியும் இருக்காது. என்னை
விட்டுப் போகாது என்ற தைரியம் எனக்கு . ஆனால் அதற்கு எப்படியோ?

நான் ” கியாக் ..கியாக் ” என்று அதைக் கூப்பிட்டதும், கிளையிலிருந்து
பறந்து வந்து என் தோளில் அமர்ந்து கொள்ளும்.

இவ்வாறு பல தடவைகள் பறந்து உடற்பயிற்சி செய்து கொள்ளும்.

இப்படி தேநீர் அருந்தியபின் வெளியில் விளையாடுவது என் மனைவிக்குக்
கொஞ்சமும் பிடிக்காது. அவ்வளவு பொறாமை அவளுக்கு! காலையில் இப்படி
கிளியுடன் உடற்பயிற்சி செய்வது என் உடலுக்கும் நல்லதுதானே என்பது
அவளுக்கு எங்கே தெரியப் போகிறது?

என்னை விட்டுப் பறந்து ஓடிவிடக்கூடிய வாய்ப்புகள் நிறைய இருந்தபோதும் என்
பச்சைக்கிளி மீண்டும் என்னிடமே வந்துவிடுகிறதே? அதன் பொருள்தான்
என்ன.என்மேல் அது கொண்டுள்ள அன்பும் காதலுமே என்றே நான் நம்பினேன்.

அது இன்னொரு உண்மையையும்கூட உணர்த்தியது. உயிருக்கு உயிராகக் காதலிக்கும்

பெண்கள் திடீரென பறந்து ஓடிவிடும் இக்காலத்தில் இப்படியும் ஒரு கிளியா
என்பதே அந்த உண்மை!

அன்று மரக் கிளையில் வேறொரு பச்சைக் கிளி அமர்ந்திருந்தது தெரிந்தது. அது
எங்களைப் பார்த்து, கீச் …கீச் ” என்று எதோ சொன்னது. சிறகுகளை விரித்து
சிலிர்த்துக் காட்டியது.

என் கையில் இருந்த பச்சைக்கிளி பதிலுக்கு அதைப் பார்த்து , ” கீச்…கீச்
” என்று எதோ சொன்னது.அதற்கு மரக் கிளி பதில் சொல்ல இரண்டும் எதோ கிளி
மொழியில் பேசிக் கொண்டன. நிச்சயமாக அவை இரண்டும் எதோ பரிமாற்றம்
செய்துகொள்வது வெட்டவெளிச்சமானது. என் மனதில் அப்போது ஒருவித அச்சம்
எழுந்தது!

ஒருவேளை அந்த மரத்துக் கிளி ஆண் கிளியோ? அதனால் உண்டான ஈர்ப்போ? இது என்ன
கண்டதும் காதலோ? கிளிகளுக்கும் இப்படி உண்டோ? என் உடல் நடுங்கியது!

வழக்கம்போல் உடற்பயிற்சியைத் தொடங்கினால் என் கிளி திரும்பி வருமா?
அல்லது அந்த ஆண் கிளியுடன் பறந்து விடுமா?

நான் பயந்தது போலவே என் பச்சைக் கிளியும் கைகளிலிருந்து உடன் கிளைக்குப்
போகவேண்டும் என்பது போல் பரபரப்புடன் திமிறியது. நான் செய்வதறியாது சற்று
திகைத்துப் போனேன்.

என் கிளி மீது எனக்கு முழு நம்பிக்கைதான். என் மேல் இவ்வளவு பாசம்
கொண்டுள்ளதா என்னை விட்டு பிரிந்து போய்விடும்? அது அவ்வளவு எளிதா?
அப்படிப் போவது பெரும் துரோகம் அல்லவா?

ஒருவித அசட்டுத் தைரியத்தில் அதை வழக்கம்போல் கிளையை நோக்கி வீசினேன்.

அது மகிழ்ச்சி ஆரவாரத்துடன் ” கீச்…கீச்.. ” என்று குரல் எழுப்பிக்
கொண்டு மரக் கிளைக்குப் பறந்து சென்றது. அந்த புதுக் கிளியின் பக்கத்தில்
உட்கார்ந்து கொண்டது!

அவை இரண்டும் ஏதோ கிளி மொழியில் பேசுவது கேட்டது .இடையிடையே என் பச்சைக்
கிளி என்னையும் குனிந்து தலையை சாய்த்து பார்த்தது. நிச்சயமாக என்னிடமும்
எதோ சொன்னது. ஆனால் அதன் பொருள் எனக்கு புரியவில்லை.

சற்று நேரத்திற்கெல்லாம் இரண்டும் காதல் கீதம் பாடியவாறு ஒய்யாரமாக
சிறகடித்துப் பறந்து சென்றன!

எனக்கு ‘திக் ‘ கென்றது. துக்கம் நெஞ்சை அடைத்தது. உடல் லேசாக நடுங்கியது !

ஐயோ! என் கிளி என்னை விட்டுப் பறந்து பொய் விட்டதே! செல்லமாக வளர்த்தக்
கிளி இப்படிச் சொல்லாமலேயே சென்றுவிட்டதே! என் கிளி இல்லாமல் நான் என்ன
செய்வேன்? அதன் நினைவிலிருந்து நான் எப்படி விடுபடுவேன்? அதன் நடமாட்டம்
இல்லாத வீடு வெறிச்சோடிப் போகுமே! அதன் நினைவு என்னைக் கொல்லுமே !

காலையிலேயே எனக்கு இந்த சோதனையா? பீதியுற்ற நிலையில் வீட்டுக்குள் ஓடினேன்.

” கிளி பறந்து விட்டது! கிளி ஓடி விட்டது! ” கிலி பிடித்தவன்போல்
மனைவியிடம் உளறினேன்!

” என்னங்க ஆச்சு? கிளி எங்கே போய்விட்டது ? ” அவளும்
அதிர்ச்சியுற்றவலாகக் கேட்டாள் .

என்னதான் என் கிளி மீது பொறாமை இருந்தாலும், அது இல்லாமல் போனது
அவளுக்கும் கவலையை உண்டு பண்ணியிருக்கலாம்.

” ஒரு புது ஆண் கிளி வந்தது. அதனுடன் என் கிளி ஓடிப் போய்விட்டது! அதற்கு
கிளி ஜோடி கிடைத்து விட்டது! அது இனிமேல் திரும்பாது! ” மேலும் உளறினேன்.

மனைவியின் முகத்தில் பெரும் சோகம். என் குணம் நன்கு தெரிந்தவள். கிளி
இல்லாமல் நான் செயலிழந்துபோவேன் என்பதை அறிந்தவள்.கிளியை நான் அவளைவிட
எவ்வளவு செல்லமாக வைத்திருந்தேன் என்பதைத் தெரிந்தவள்தானே !

அன்று நான் வேலைக்குச் செல்லவில்லை. விடுப்பு எடுத்து விட்டேன்.

ஒரே நாளில் நோயாளி போலானேன்.உணவு உண்ண முடியவில்லை. வேறு எதிலும் கவனம்
செலுத்த முடியவில்லை. எந்நேரமும் கிளியின் நினைவில் வாடினேன். அடிக்கடி
அதன் இனிமையான ” கியாக் …கியாக் ” எனும் மோகனக் குரல் கேட்பது போன்ற
பிரமை. வெளியே ஓடி அந்த மரக் கிளையைப் பார்த்து ஏமாந்து போவேன். என்
கிளியை நான் இனி எங்கு போய்த் தேடுவேன்?

இரவில் தூங்க முடியவில்லை. கிளியின் நினைவில் விடிய விடிய
விழித்திருந்தேன்.அது கூப்பிடும் சத்தம் கேட்டு இரவிலும் வெளியில் சென்று
இருளில் தேடினேன்.

அவ்வாறு இரவு பகல் தூக்கமின்றி மூன்று நாட்கள் கழிந்து விட்டன. நானும்
மீசை தாடியுடன் நோயாளியானேன். இரண்டு நாள் மருத்துவ விடுப்பும்
கிடைத்தது.

என் பரிதாப நிலை கண்டு மனைவியும் வருந்தினாள் .கிளி மீது இவ்வளவு
பைத்தியம் ஆவேன் என்று அவள்கூட நினைத்திருக்க மாட்டாள். வீட்டு வேலைகளை
சீக்கிரமாய் முடித்துவிட்டு கிளியைத் தேடும் பணியில் ஈடுபட்டாள் .

ஆனால் பயனில்லை. என் பச்சைக் கிளி என்னை மறந்தே போனது . அது பஞ்சாய்ப்
பறந்து போனது! நான்தான் இலவு காத்த கிளியானேன்!

நான்காம் நாள் காலையும் விடிந்து விட்டது. கிளி கவலையில் சோகத்துடன்
கூடத்தில் அமர்ந்து தேநீர் பருகிக் கொண்டிருந்தேன்.

வாசலைப் பெருக்கிக் கொண்டிருந்த என் மனைவி என்னிடம் விரைந்தோடி வந்தாள் !

” உங்கள் கிளி! உங்கள் கிளி! ” அவளுக்கு மேல்மூச்சு வாங்கியது.

” ” எங்கே? எங்கே என் கிளி? ” என்றவாறு அவளைப் பின் தொடர்ந்து வெளியே ஓடினேன்!

தடுமாற்றத்தில் கையிலிருந்த தேநீர்க் கிண்ணம் கீழே விழுந்து நொறுங்கியது.
கெட்ட சகுனம்தான். ஆனால் அது பற்றி நான் கவலை கொள்ளவில்லை. கிளி
திரும்பியதே நல்ல சகுனம் தானே?

அங்கே மரக் கிளையில் என் கிளி உட்கார்ந்திருந்தது. உற்றுப் பார்த்தேன்.
சந்தேகமில்லை. அது என்னுடைய அருமைக் கிளிதான்!

என்னைப் பார்த்து சிறகடித்துக் கொண்டு ” கீச்…கீச் ” என்று அழைத்தது.
வந்துவிட்டேன் என்றதோ?

அதைக் கண்டு நான் ஆனந்த தாண்டவமாடினேன்!

அதன் நிலையும் அதேதான்.உரக்க , ” கியாக் !…கியாக் ! ” என்று கத்திக்
கொண்டு பறந்து வந்து என் தோள் மீது அமர்ந்து கொண்டது!

கைகளில் ஏந்தி முத்த மழைப் பொழிந்தேன்! அப்போது அருகில் நின்ற என்
மனைவியின் முகத்தைப் பார்க்க வேண்டுமே. எள்ளும் கொள்ளும் வெடித்தது!

அன்று முழுதும் என் செல்லக் கிளியை விட்டு நான் பிரியவில்லை.கைகளிலும்
சட்டைப் பையிலுமே பத்திரமாக வைத்துக் கொண்டேன்.

இரவு வழக்கம்போல் என் அருகிலேயே படுக்க வைத்தேன். அதுவும் என்றுமில்லாத
வகையில் எனது வயிற்றுப் பகுதியில் ஒட்டிக் கொண்டு படுத்திருந்தது.

அதைக் காணாமல் மூன்று நாட்கள் இரவு பகலாக தூக்கம் இல்லாத எனக்கு நல்ல
தூக்கம். திரும்பி வந்துவிட்டதே என்ற நிம்மதி வேறு!

எந்தத் தொந்தரவும் இல்லாத நிம்மதியான இரவு.மெய்மறந்த உறக்கம்.

விடிந்ததும் முதல் வேலையாக என் கிளியைத் தேடினேன். காலையிலேயே என்னைக்
கொத்தி எழுப்பி விடுமே? எங்கே போனது என் கிளி?

எழுந்து உட்கார்ந்து கண்களைக் கசக்கிக் கொண்டு படுக்கையை நோட்டமிட்டேன்.

ஐயோ! அதை எப்படிச் சொல்வேன்!

உயிருக்கு உயிரான என் பச்சைக் கிளி ….அங்கு உயிரற்று கிடந்தது!

தூக்கத்தில் நான் அதன்மேல் புரண்டு படுத்ததில் அது நசுங்கி சத்தமிடாமல்
உயர் விட்டுள்ளது!

( முடிந்தது)

Series Navigationமாணவ நெஞ்சில் நஞ்சு கலக்கும் கிராதகர்கள்காலத்தின் கொலைகாரன்
author

Similar Posts

12 Comments

  1. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    தீராத விளை யாட்டுக் கிள்ளை
    திரும்பி வந்து தோள மர்ந்த பிள்ளை
    நெஞ்சைத் தொடு மிந்தக் கிள்ளை
    நேசத்தில் நசுங்கிப் போன பிள்ளை.

    இனிய நட்புச் சோகக் கதை டாக்டர் ஜி. ஜான்சன்.
    Our sweetest songs are those that tell us the saddest thoughts- Shelley

  2. Avatar
    Dr.G.Johnson says:

    நண்பர் சி . ஜெயபாரதன் அவர்களுக்கு வணக்கம். என் கிளிக்கு இரங்கற்பா பாடியதற்கு நன்றி! நன்றி! அதோடு சோக நினைவு கூறும் பாடலே இனிய பாடல் எனும் கவிஞர் ஷெல்லியின் வரிகளை சமயோசிதமாக மேற்கோள் காட்டியுள்ளதும் சிறப்பே! இதுபோன்று ஒரு படைப்பாளர் இன்னொரு படைப்பாளரைப் பாராட்டுவது சிறந்த இலக்கியப் பண்பாகும் நன்றி நண்பரே….டாக்டர் ஜி.ஜான்சன்.

  3. Avatar
    கோவிந்த் கருப் says:

    அற்புதமான கதை. இணையத்தின் வலிமை இது தான். எழுத்தாளார்கள் என்று சொல்லிக் கொண்டு சில பேரே பத்திரிக்கைகளில் அடுத்தவர்களின் அனுபவங்களை உள்வாங்கி எழுதிகிறேன் என்று பாடாய் படுத்தினார்கள் – இணையத்திலும் கூட சிலர் அந்த ரகம் தான். ஆனால், இந்தக் கதை அற்புதம். தனிமனித அனுபவங்கள் அவர்களின் மூலமே வரும் போது அதன் வலிமை அப்பப்பா… மனது லயிக்க & கனக்க செய்யும் கதை…

  4. Avatar
    Dr.G.Johnson says:

    அன்புள்ள திரு. கோவிந்த் கருப் அவர்களுக்கு வணக்கம். சின்னஞ் சிறு கிளியே பற்றிய தங்களின் கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி. நீங்கள் கூறியுள்ளது முற்றிலும் உண்மையே. எதையும் நாமே அனுபவத்தின் மூலம் பாதிக்கப்பட்டு உணர்வுபூர்வமாக எழுதும் பொது அதன் சிறப்பே தனிதான். அப்போது அதை வர்ணிக்கவும் நாம் சொற்கள் தேடி அலைய வேண்டியதில்லை. சம்பவக் கோர்வையும் தேவையான சொற்களும் தானே அமைந்துவிடும் ..நன்றி…டாக்டர் ஜி.ஜான்சன்.

  5. Avatar
    மேகலா இராமமூர்த்தி says:

    தங்கள் வாழ்க்கை அனுபவங்கள் ஒவ்வொன்றுமே முத்திரைகள் டாக்டர். உங்கள் கதைகள் அனைத்துமே உயிரோட்டம் உள்ளவைகளாக அமைந்திருப்பது அவற்றின் தனிச்சிறப்பு.

    தேர்ந்த நடையும், திறமையாகக் கதையை நகர்த்தும் விதமும் அருமை. உங்கள் கதைகளைத் தேடித் தேடிப் படிக்கும்வண்ணம் அவற்றை அற்புதமாகப் படைக்கும் உங்களுக்கு என் மனம் கனிந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்!!

    …மேகலா

  6. Avatar
    பவள சங்கரி says:

    டாக்டர் சார், இறுதியில் சாகடித்திருக்க வேண்டுமா என்று வருத்தமாக இருக்கிறது. மூன்று நாட்கள் காணாமல் போனதையே தாங்க முடியாத நிலையில் செல்லக் கிளியின் அகால மரணத்தை எப்படித்தான் தாங்கிக்கொள்ள முடியும்…

  7. Avatar
    Dr.G.Johnson says:

    திருமதி மேகலா இராமமூர்த்தி அவர்களுக்கு வணக்கம். தங்களின் அருமையான பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி.என் கதைகளைத் தேடி எடுத்து படிக்கிறீர்கள் என்பது மகிழ்ச்சியையும் ஊக்கத்தையும் தருகிறது ….டாக்டர் ஜி.ஜான்சன்.

  8. Avatar
    Dr.G.Johnson says:

    திருமதி பவள சங்கரி அவர்களுக்கு வணக்கம். நடந்ததை எழுதியதால் கிளியை சாகடிக்க நேர்ந்தது. கொஞ்சம் விட்டுக் கொடுத்திருந்தால் கிளியைக் காப்பாற்றி ” சுபம் ” என்று கதையை முடித்திருக்கலாம்.அதுகூட சுவையாகவே இருந்திருக்கும்.இதனால்தான் படைப்பாளர்கள் தங்களின் கைவண்ணத்தில் உயிரை சிருஷ்டிக்கவும் அழிக்கவும் கூடிய ஆற்றல் உள்ளவர்கள் என்கிறோம்! கிளி மீது அனுதாபம் கொண்டு எழுதியுள்ள கருத்துக்கு நன்றி…டாக்டர் ஜி. ஜான்சன்.

  9. Avatar
    Dr.G.Johnson says:

    கவிஞர் இராய.செல்லப்பா அவர்களுக்கு வணக்கம். கிளியின் இறப்பு பாதிப்பை உண்டு பண்ணியது உண்மை.அதைக் கதையிலாவது வாழ வைத்திருக்கலாமே என்ற தங்களின் ஆதங்கம் கண்டு மகிழ்ந்தேன்…நன்றி கவிஞரே ….டாக்டர் ஜி.ஜான்சன் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *