காமராஜ்: கருப்பு காந்தியின் வெள்ளை வாழ்க்கை புத்தக விமர்சனம்

This entry is part 16 of 51 in the series 3 ஜூலை 2011

தமிழத்தில் பிறந்த தலைவர்களில் என்னை மிக கவர்ந்தவராக எப்போதும்  காமராஜர் இருக்கிறார். அதிகம் படிக்காமலே முதல்வர் பதவிக்கு உயர்ந்தவர், தமிழகத்தில் கல்விக்கு தந்த உத்வேகம், லஞ்ச ஊழல்களில் சிக்காத நேர்மை, இந்திய அரசியலில் அவருக்கிருந்த ஆளுமை இப்படி காரணங்களை சொல்லி கொண்டே போகலாம். எனக்கு விபரம் தெரியும் முன்பே காமராஜர் இறந்து விட்டார் என்றாலும் அவர் குறித்த எந்த தகவலையும் ஆர்வமாய் படிப்பேன். அப்படி வாசித்தது தான் கிழக்கு பதிப்பக வெளியீடான காமராஜ்: “கருப்பு காந்தியின் வெள்ளை வாழ்க்கை” என்கிற புத்தகம். இதனை காமராஜர் பிறந்த தினமான ஜூலை 15-க்கு அருகாமையில் பகிர்வதில் மகிழ்கிறேன்.

 

காமராஜரின் இளமை பருவத்திலிருந்து துவங்குகிறது புத்தகம் . ஆறாவது வரை மட்டுமே படித்த காமராஜர் தந்தை சிறு வயதில் இறந்ததால், மாமாவின் துணி கடையில் வேலை பார்க்கும் நிலை. அப்போதே அரசியல் மீது ஈடுபாடு. சுதந்திர போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்தி கொண்டு ஆர்வமாக உழைத்துள்ளார்.

 

காமராஜர்  இந்தியாவிற்கு விடுதலை கிடைத்த பின் தான் திருமணம் செய்து கொள்வது என உறுதியாக இருந்திருக்கிறார். விடுதலை கிடைத்த பின் ஏனோ திருமணம் பற்றி யோசிக்கவே இல்லை.

 

விடுதலை போராட்டத்தில் மூன்று முறை சிறை சென்று ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்திருக்கிறார். இதில் மூன்றாவது முறை சிறை சென்ற வரலாறு சுவாரஸ்யமானது. “வெள்ளையனே வெளியேறு” கோஷம் ஒலித்த காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டு தமிழகம் திரும்பியிருக்கிறார் காமராஜர். அப்போது காந்தி, நேரு உள்ளிட்ட அனைத்து காங்கிரஸ் தலைவர்களும் கைது செய்யப்பட்டது தெரிய வர ரயில் நிலையத்தில் தலையில் முண்டாசு கட்டி, தலையில் மூட்டை வைத்து கொண்டு கிராமத்தான் மாதிரி போலிசுக்கு டிமிக்கி தந்து தப்பி சென்று  விட்டார்.  மாநாட்டில் எடுத்த முடிவுகளை முக்கிய காங்கிரஸ் புள்ளிகள் அனைவருக்கும் துண்டு பிரசுரம் மூலம் பல ஊர்களுக்கு சென்று சேர்த்தவர், அதன் பின் தானாகவே போலீசில் சென்று சரண் அடைந்துள்ளார்.

 

ராஜாஜியின் குல கல்வி திட்டம் தான் காமராஜர் முதல்வராக காரணமாக அமைந்துள்ளது. ராஜாஜி கொண்டு வந்த இந்த திட்டத்திற்கு தமிழகம் முழுதும் எதிர்ப்பு வலுக்க முதல்வரை மாற்ற வேண்டும் என்ற முடிவை காங்கிரஸ்

 

எடுத்துள்ளது. இது தெரிந்து ராஜாஜி தானாகவே ராஜினாமா செய்து விட்டு தன் நம்பிக்கையாளர் சி. சுப்ரமணியத்தை முன்னிறுத்தியுள்ளார். அவர் முதல்வரானால் குல கல்வி தொடரலாம் என்ற எண்ணம் இருந்ததால் அவரை எதிர்த்து யாரேனும் போட்டியிட்டாக வேண்டிய நிலை. எனவே காமராஜர் நின்று வென்று, பின் முதல்வரும் ஆகியுள்ளார். முதல்வர் ஆனபின் குல கல்வி திட்டத்தை ஒழித்தது மட்டுமின்றி, தனக்கு எதிராக போட்டியிட்ட சி. சுப்ரமணியத்தை கூப்பிட்டு தனது அமைச்சரவையில் முக்கிய பொறுப்புகள் தந்துள்ளார்.

 

காமராஜருக்கு ஆங்கில அறிவு அதிகம் இல்லை என்று சொல்வார்கள். இது தவறு என்பதற்கு பல உதாரணங்கள் தருகிறார் நூல் ஆசிரியர். காமராஜர் முதல்வராக இருந்த போது “காந்திஜி படத்தை எல்லா அரசு அலுவலகங்களில் hang செய்யவும்” என எழுதி கொண்டு வந்துள்ளனர். அதில் hang     என்பதற்கு பதிலாக “install செய்யவும்”என்று மாற்றி கொண்டு வாருங்கள் என்றாராம் காமராஜர் .”Hang” என்றால் தூக்கில் தொங்க விடுவது போல் அர்த்தம்/ நினைவு வரும் என காரணம் சொன்னாராம். அதே போல சாஸ்திரி பிரதமராகவும் இவர் காங்கிரஸ் தலைவராகவும் இருந்த போது ஒரு சிக்கலான கேள்விக்கு பிரதமர் பதில் சொல்ல தயங்க, காமராஜர் சரளமாக ஆங்கிலத்தில் பதில் சொல்ல, சாஸ்திரி மிக சரியாக சொன்னீர்கள் என்று பாராட்டினாராம்.

 

மதிய உணவு திட்டம் கொண்டு வந்தது தான் தமிழகத்தில் லட்சக்கணக்கான ஏழை குழந்தைகள் பள்ளிக்கு வர காரணமாக அமைந்தது. இதனை துவங்கிய போது, மிக அதிக செலவாகும் என அரசு அதிகாரிகளிடமிருந்து எதிர்ப்பு வர, அவற்றை மீறி அதை நடைமுறைப்படுதியிருக்கிறார். இன்றளவும் காமராஜர் இதனால் அன்புடன் நினைவு கூறப்படுகிறார். அவரது மிக புகழ் பெற்ற திட்டம் இது தான்.

 

ஒன்பது ஆண்டுகள் முதல்வராக இருந்த போது திருச்சி பாய்லர் தொழிற் சாலை, தஞ்சை மருத்துவ கல்லூரி துவக்கம் என தொழில் துறை, விவசாயம், மின்சாரம் என பல துறைகளிலும் தமிழகம் முன்னேற்ற பாதையில் சென்றது.

 

நேருவின் புகழ் குறைய துவங்கிய காலத்தில் காமராஜர் கொண்டு வந்த திட்டம் தான் ” கே பிளான்”. இதன்படி காங்கிரசின் முக்கிய தலைவர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து விட்டு, கட்சி பணிக்கு திரும்பினர். காமராஜரும் இதனால் முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். பிறகு  அகில இந்திய காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்க பட்டார்.   காங்கிரஸ் தலைவராக இருந்த போது இரண்டு முறை பிரதமரை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு இவரிடம் வந்துள்ளது. நேரு இறந்த போது சாஸ்திரி பிரதமரானதும், பின் அவர் மறைந்ததும் இந்திரா காந்தி பிரதமர் ஆனதும் இவர் யோசனை

 

மற்றும் முயற்சிகளால் தான். இதனால்தான் கிங்மேக்கர் என பெயர் பெற்றார்.

 

தூக்கத்தில் மிகுந்த நாட்டமுள்ளவர் காமராஜர். இரவில் படுத்த உடன் தூங்கி விடும் இவர், பெருத்த குறட்டை விடும் பழக்கமுள்ளவர் ! தினமும் மதியம் தூங்கும் வழக்கம் எப்போதும் உண்டு. இவர் உயிர் பிறந்தது கூட மதிய தூக்கத்தின் போது தான் !!

 

காமராஜரை அவர் திருமலை பிள்ளை இல்லத்தில் வந்து சந்திப்பவர்களை, அவரை பேட்டி எடுப்பவர்களை  ” சாப்பிடுகிறீர்களா?”   என்று கேட்கவே மாட்டாராம். காரணம் இவருக்கு உப்பு, காரம் இன்றி உணவு சமைக்கப்படுமாம். “இதனை மற்றவர்களை சாப்பிட சொல்லி எப்படி கஷ்டபடுத்துவது?”  என்று தான் இவர் சாப்பிட சொல்ல மாட்டாராம். இரவு உறங்கும் முன் ” தன்னை பார்க்க வந்த எல்லாரும் போய் விட்டனாரா?” என்று கேட்பாராம். சிலர் நேரில் வந்து பேச தயங்கியபடி கூச்சத்துடன் வெளியில் இருப்பார்கள்; அப்படி பட்டவர்களையும் கடைசியாய் கூப்பிட்டு பேசி அனுப்புவாராம் .

 

முதல்வராய் இருந்த போது, மாதம் 150  ரூபாய் கேட்ட தாய்க்கு 120  ரூபாய் தான் அனுப்பி வந்திருக்கிறார். ” என் சம்பளத்தில் இவ்வளவு தான் அனுப்ப முடியும்” என்பாராம். அம்மாவை அடிக்கடி சென்று கூட பார்க்காது “வேலை, வேலை” என சுற்றி வந்தவர்,  தன்னிடம் வேலை பார்த்தவர்கள் மீதும் அவர்கள் உடல்நிலை மீதும் மிகுந்த அக்கறை உள்ளவராக இருந்திருக்கிறார்.

 

நேரு பிரதமராக இருந்த காலத்தில் காமராஜருக்கு நேரு கையால் சிலை திறக்கப்பட்டுள்ளது. ” உயிரோடு இருப்பவர்களுக்கு சிலை திறப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. என்றாலும் ஒரு உண்மையான மக்கள் தலைவராக காமராஜர் இருப்பதால் இதை நான் செய்கிறேன்” என்று பேசினாராம் நேரு.

 

அரசியலில் தன்னால் வளர்க்கப்பட்ட இந்திரா காந்தியின் பிற்கால நடவடிக்கைகள் குறிப்பாய் எமர்ஜன்சி கொண்டு வந்தது தான் இவரை மிகவும் மனதளவில் நிலை குலைய வைத்தது. இறக்கும் அன்று கூட அவரது கவலை அதுவாக தான் இருந்தது என சொல்லப்படுகிறது.

 

நாட்டுக்காகவே வாழ்ந்து மறைந்த இவர் இறந்த போது அவர் சொத்து பத்து கதர் சட்டை, வேஷ்டி மற்றும் நூறு ரூபாய் பணமும் மட்டுமே !!!

 

ஒரு சூரியன். ஒரு சந்திரன். ஒரு காமராஜர்!

 

நூலின் பெயர்:”காமராஜ்:கருப்பு காந்தியின் வெள்ளைவாழ்க்கை விலை: ரூ. 60

வெளியீடு : கிழக்கு பதிப்பகம் ஆசிரியர்: நாகூர் ரூமி

 

Series Navigationதளம் மாறிய மூட நம்பிக்கை!பாதல் சர்க்காரும் தமிழ் அரங்க சூழலும்
author

மோகன் குமார்

Similar Posts

Comments

  1. Avatar
    thamizhan says:

    இந்த தலைப்பே முட்டாள்தனமானது. வெள்ளை உயர்ந்தது கருப்பு தாழ்ந்தது என்ற எழுத்தாளரின் காலனிய அடிமை மனநிலையைத்தான் காட்டுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *