என். ஸ்ரீராமின் “அத்திமரச் சாலை” (நாவல் வாசிப்பனுபவம்)

This entry is part 21 of 28 in the series 5 மே 2013

அத்தி-படம்அத்தி-படம் 2

    சமீப நாட்களில் நான் தேடிப் படிக்கும் நாவல்கள் எல்லாம் மனதிற்குள் விசுவலைஸ் ஆகி திரைப்படங்களாகவே எனக்குள் விரிந்து கொண்டிருக்கிறது. க.நா.சு.வின் “அவரவர் பாடு“ நாவல் படித்தபோதும் இதே உணர்வுதான் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று என்.ஸ்ரீராமின் “அத்திமரச் சாலை” படித்து முடித்தபோதும் மனதிற்குள் படம்தான் ஓடியது.

 

    நாவலைப் படித்து முடித்துக் கண்களை மூடிக்கொண்டு ஒரு சுழற்சியில் மொத்த நாவலையும் படிப்படியாய், அடுத்தடுத்த காட்சிகளாய் நினைத்துப்  பார்த்தபோது, முதலில் மனதிற்குள் படர்ந்தது அட்டைப் படத்துடன் கூடிய அந்த இறுதிக்கட்ட என்கவுன்டர் நிகழ்வுதான்.

 

    எடுத்த எடுப்பில் விரிந்து கிடக்கும் அந்தக் கறுத்து, நீண்டு, அடர்ந்த தார்ச் சாலையில் ஒற்றை ஆளாய் நிற்க வைக்கப்பட்டு குறிபார்க்கப்படும் சுப்ரமணியிடமிருந்து க்ளோஸப்பில் காமிரா பின்னோக்கிப் போவதுபோல் நகர்ந்து துப்பாக்கி முனையில் கொண்டு நிறுத்தி, மெல்ல இருட்டுப் பரவுவதாய்ச் சென்று ஒரு புள்ளியில் முடித்து, கதையை ஃப்ளாஷ் பேக்கில்  கொண்டு செல்ல வேண்டும் என்பதாய் என் மன  ஓட்டத்தில் திரைப்படம் விரிந்தது. கதையின் ஆரம்பத்திலிருந்து பாத்திரங்களையும், கதை நடக்கும் இடங்களையும் சம்பவச் சுருக்கங்களையும் குறித்து வைத்துக் கொண்டு, நாவலை மனதில் நிறுத்திக் கொண்டே நகர்ந்து, படித்து முடித்தோமானால் மொத்த நாவலும் மனதில் நின்று போகும். நிறையக் கற்பனை உள்ள மனம் என்றால், எப்படிச் சொன்னால் நன்றாக இருக்கும் என்கிற திரை வடிவம் மெல்ல மெல்லப் புலப்பட ஆரம்பிக்கும். அப்படித்தான் இந்த நாவலை வடிவமைக்க வேண்டும் என்று தோன்றியது எனக்கு. ஆனால் ஒன்று.  இதை வணிக ரீதியிலான படமாய்க் கொடுப்பதை விட, கலைப்படமாய் ஆக்கினால்தான் நாவலின் கட்டுமஸ்தான வடிவம் அப்படியே திரையிலும் கிடைக்கும். குறும்படமாகச் சொல்வதற்கு வழியில்லை. சுமார் ஒன்றரை மணி நேரப் படமாகச் சொல்லி விட முடியும். அப்படியான ஒன்றைத்தான் வணிக ரீதியாகச் சிந்திக்கும்போது, அங்கங்கே பாடல்களையும், குத்து ஆட்டத்தையும் சேர்த்து, இரண்டேகால் மணிக்கு நகர்த்தி விடுகிறார்கள். இந்தக் கதையையும் அப்படிச் செய்ய வாய்ப்பு உண்டுதான். ஆனால் எப்படிச் செய்தால் இறுக்கம் குறையாது பார்வையாளனின் மனதில் படியும் என்று யோசிக்கையில் கலைப்படமே சாத்தியம் என்ற முடிவுக்கு வரவேண்டியிருக்கிறது.

 

    ஆரம்பத்திலிருந்தே அடுத்தடுத்துத் தவறுகளை நோக்கிப் போகக் கூடியவனின் வாழ்க்கை எப்படியெல்லாம் சிதைந்து சின்னா பின்னமாகிப் போகிறது என்பதாயும், செய்த, செய்கின்ற தவறுகளின் விளைவுகளை உணர்ந்திருந்தும், அவற்றிலிருந்து விலக இயலா நிலை ஏற்பட்டுப் போவதும், அதற்காகவே தவறுகள் மேலும் மேலும் தொடர்ந்து கொண்டிருப்பதுவும், தவறான சேர்க்கையும், அதற்கான சூழலும், அந்தச் சூழலுக்கு எளிமையாக அடிமைப்பட்டுப் போகும் மனமும், எதற்காக இதுவெல்லாம்? என்று கேள்வி விழும்போது அதுநாள்வரையிலான தவறுகள் இனி உன்னை விடாது என்ற பழி நிகழ்வுகளும், சின்னச் சின்னத் தவறுகள் பெரிய பெரிய கொலைகளுக்கு வழி வகுத்து  ஒருவனின் மொத்த வாழ்க்கையும் சிதைந்து போய்விட,இனி அவ்வளவுதான் என்ற விரக்தியில், இதெல்லாவற்றிற்கும் காரணம் அவன்தானே என்று இறுதியாய் ஒரு கொலையை மேற்கொண்டு அத்தோடு தன் வாழ்வும் முடிந்து போகும்தான் என்று தெரிந்திருந்தும், எங்காவது கண் காணாத இடத்திற்குப் போய்விடுவோம், புது வாழ்வு காண்போம் என்று புறப்படும் பேதமையும்,  குற்றங்கள் துரத்தியடிக்க இறுதியில் அவன் முடிவு தானாகவே அவனுக்கு வந்து சேர்கிறது.

    மனதைத் தகிக்கும் வேதனை பெற்றெடுத்த தாயின் சோகம். மகன் என்னதான் தவறு செய்தாலும், அதிலிருந்து அவனை மீட்டு, அவன் சந்தோஷமாய் வாழ்க்கை நடத்துவதைக் கண்ணாரக் கண்டு களிக்க வேண்டும் என்று துடிக்கும் துடிப்பு. வேணான்டா கண்ணு நமக்கு,  தப்புத் தண்டா ஆகாதுடா சாமி… என்று கெஞ்சும் அந்தப் பெற்ற மனம் கடைசி வரை அவனை விட்டு விலக மறுக்கிறது.

    ஆனாலும் இப்படியான ஒருவனுக்கு இறுதி எப்படி அமையுமோ அந்த முடிவுதான் அமைந்து போகிறது சுப்ரமணிக்கும்.

    “இப்போது எனக்குப் பயம் சிறிதும் இல்லை. முடிவு தெரிந்து விட்டது. நிச்சலனமாகவே நின்று கொண்டிருந்தேன். விழித்து போலீஸ்கார்ர்களைப் பார்த்தேன். பிஸ்டல் நீட்டப்பட்டுவிட்டது. இன்னும் சற்று நேரத்தில் இந்த அத்திமரச்சாலை வெறிச்சோடி விடும். நானும் அத்திப் பழம் போல் விழுந்து நசுங்கிக் கிடப்பேன். ஏனோ எனக்கு அக்கணத்தில் நிறைமாத கர்ப்பத்துடன் ரோஸ்மேரி அசைந்து அசைந்து நடந்து வருவதுபோல் ஒரு சித்திரம் ஞாபகத்தில் எழுந்தது. கண் கலங்கிற்று.”

    ஸ்ரீராமின் கதை சொல்லும் பாணியும், சூழல் வர்ணிப்பும், காட்சிகளைப் பிம்பங்களாய் நம் முன்னே அழகாய் நகர்த்திச் செல்கின்றது. கொலை கொள்ளை மேற்கொள்பவர்களின், கூலிப் படை வைத்திருப்பவர்களின் பாஷைகளும், அவர்களின் வாழ் முறையும், தொடர்ந்து தவறுகளே செய்து கொண்டிருப்பவர்களின் புத்தி எப்படி வேலை செய்யும் என்கிற புனைவுகளும், அப்படியே கூடஇருந்து பார்த்து, அனுபவித்து எழுதியது போன்றதான உணர்வினை வாசகனுக்கு ஏற்படுத்துகிறது.

    புத்தகத்தின் பின் அட்டையில் ஸ்ரீராமின் புகைப்படத்தைப் பார்க்கும்போது, இந்தப் பையன் அந்தப் பகுதிகளுக்கெல்லாம் சென்றிருக்க முடியுமா? அந்த அனுபவங்களையெல்லாம் உடனிருந்து உள்வாங்கியிருக்க முடியுமா? அல்லது பல்வேறு வகையிலான தொடர்ந்த வாசிப்புப் பழக்கத்தில் இத்தனை துல்லியமாய் எழுதுவது சாத்தியமா? என்பதாக நம் எண்ண ஓட்டங்கள் தவிர்க்க முடியாததாகிறது.

    காட்சிப்படுத்தும் ஆர்வமுள்ளவர்கள் அவசியம் படிக்க வேண்டிய நாவல் இது. இலக்கிய ஆர்வலர்கள் ஸ்ரீராமை அறிவார்கள். சிறந்த வாசிப்பு அனுபவத்தை ஏற்படுத்தும் இந்நாவல் அனைவராலும் படித்து சுவைக்கப்பட வேண்டியது.  தோழமைப் பதிப்பகம் இந்நாவலை மேலும் இரண்டு குறுநாவல்களோடு சேர்த்து அழகிய பதிப்பாக வெளியிட்டிருக்கிறது.

    எளிய வாழ்வின் முடிச்சுகளைத் தேடி மழையின் தண்மையையும், வெயிலின் வெம்மையையும், திரியும் ஸ்ரீராமின் தனிமை நம்மிடம் ஆசுவாசம் கொள்கிறது என்கிற அறிமுகம் கவனிக்கப்பட வேண்டியது.

 

                ——————————————-

Series Navigationஒரு தாதியின் கதைகரையைத் தாண்டும் அலைகள்
உஷாதீபன்

உஷாதீபன்

Similar Posts

3 Comments

  1. Avatar
    கவிஞர் இராய. செல்லப்பா. says:

    உஷாதீபனின் ‘அத்திமரச்சாலை’ விமர்சனம் உணர்ச்சியோடு எழுதப்பட்டுள்ளது. ஆனால் நூலை வெளியிட்டவர்கள் யார், எந்த முகவரியில் கிடைக்கும் என்பது போன்ற அடிப்படை தகவல்கள் இல்லாத விமர்சனம் சோர்வையே உண்டாக்குகிறது. –நியுஜெர்சியிலிருந்து கவிஞர் இராய. செல்லப்பா.

    1. Avatar
      ushadeepan says:

      அத்திமரச்சாலை – தோழமை வெளியீடு, 5D, பொன்னம்பலம் சாலை, கே.கே.நகர், சென்னை-78. (கைபேசி-9444302967) விலை ரு.100 போதுமா நண்பரே…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *