நம் சாகச நாயகன் ஜாக்கி சான் மக்கள் உள்ளங்களைக் கவரக் காரணமான குங்பூ பற்றி இந்தத் தொடரில் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம்.
சீனத் தற்காப்புக் கலையான குங்பூ என்ற சொல்லிற்கு “நீண்ட பயிற்சியினால் பெறப்படும் திறமை” என்பது பொருள். இந்தக் கலையில் இருக்கும் சண்டைப் போக்கு, ஸ்டைல் மிகவும் சிக்கலானது, கடினமானதும் கூட.
குங்பூவின் வரலாறு என்று பார்க்கும் போது, அது ஹ_னான் மாகாணத்தில் இருந்த சொங் ஷான் ஷவோலின் மடத்தில் ஏசு பிறந்து ஐநூறு வருடங்களுக்குப் பின்னர், வடக்கு சீனாவின் வெய் வம்சத்தினரால் உருவாக்கப்பட்டது எனத் தெரிய வருகிறது. ஹாங்காங்கில் முதல் திரைப்படம் என்ன, அது எப்போது எடுக்கப்பட்டது என்பது பற்றிய குறிப்புகள் இல்லாத சூழ்நிலைக்கு மாறாக, சீனாவில் கி.பி. 464 ஆம் வருடத்தில் நடந்த விஷயங்களின் குறிப்புகள் இன்றும் உள்ளது. மடத்தின் முதல் தலைமைத் துறவி படாவ் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
கி.பி. 527 ஆம் ஆண்டு, போதிதர்மா என்ற புத்த துறவி, சீனாவில் புத்த மதத்தைப் பரப்ப வந்தார். அவர் பல்லவ மன்னனின் முன்றாவது மகன் என்றும் வரலாற்றுக் குறிப்புகள் சொல்கின்றன. அவர் ஷவோலின் மடத்தில் சேர விரும்பினார். ஆனால் அவர் சீனாவிற்கு புதியவர் என்பதால், அவருக்கு மடத்தில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. துறவி மடத்தின் அருகே இருந்த குகைப்பகுதிக்குச் சென்று, முதல் குகைக்குள் சென்று, தியானம் செய்ய ஆரம்பித்தார்.
தொடர்ந்து பல ஆண்டுகள் தியானம் செய்து, தன் திறமைகளை வளர்த்துக் கொண்டார். அவரது தொடர்ந்த நோக்கினாலேயே குகையின் சுவரிலே ஓட்டை போடும் அளவிற்கு, அவரது சக்தி கூடியது. தனிமையில் ஆண்டுகள் பலவற்றை கழித்த பின்னர், குகையை விட்டு வெளியே வந்தார். துறவியின் சக்தியை புரிந்து கொண்ட மடத்தினர், அவரை ஏற்றுக் கொண்டனர். அவர் ஆசான் பூ தீ தா மோ என்று அழைக்கப்பட்டார். தான் கற்றுணர்ந்த வித்தைகளை மடத் துறவிகளுக்கு கற்றுத் தர ஆரம்பித்தார்.
மாணவர்களிடம் ஒரு குறையை உணர்ந்தார். துறவிகள் எவ்வளவு முயன்ற போதும், அவர்களுக்கு தூக்கத்தையும், மற்ற உணர்வுகளையும் கட்டுப்படுத்தும் சக்தி மட்டும் மிகக் குறைவாக இருந்தன. அதனால் அவர்களிடம் அந்தத் திறமையை வளர்க்க வேண்டி இரண்டு நூல்களை எழுதி, அதைக் கற்றுத் தர ஆரம்பித்தார்.
ஈ ஜின் ஜின்ங் உடல் ஆரோக்கியத்தையும் சக்தியையும் விருத்தி செய்யும் முறைகளைப் பற்றியது.
சீ சுய் ஜின் மூளையை எப்படி கட்டுக்குள் கொண்டு வரலாம் என்ற முறையைப் பற்றியது.
முதல்முறையை பயிற்சியின் மூலமாக அனைவரும் கற்று விடலாம். ஆனால் இரண்டாவது முறையை கற்பது மிகவும் கடினமான விஷயம். அதனால், தேர்ந்தெடுக்கப் பட்ட மிகச் சிலருக்கே அது ரகசியமாகக் கற்றுத் தரப்பட்டது.
ஊ ஷ_ என்ற தற்காப்புக் கலை பல இடங்களில் அந்தச் சமயத்தில் பிரபலமாக இருந்த போதும், ஷவோலின் துறவிகளின் இந்தத் தற்காப்புக் கலை மாறுபட்ட தன்மையினாலும், கற்கும் முறை காரணமாகவும், பலராலும் விரும்பிக் கற்கும் கலையாக ஆனது.
துறவிகள் உடல் சக்தி மட்டுமல்லாது, மனதைக் கட்டுப்படுத்தவும் கற்றதனால், காலப்போக்கில் பல்வேறு புதுப்புது உடற்பயிற்சிகள் உருவாக்கப்பட்டன. ஷவோலின் மடம் 35 வகுப்புகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான சண்டை முறையைக் கற்றுத் தரும் விதமாக இருந்தது என்று கூறப்படுகிறது.
மக்களிடையே குங் பூ என்ற பெயரில் இந்தச் சண்டை முறை பிரபலமானதும், மாணவர்கள் திரளாக வர ஆரம்பித்தனர். எல்லோராலும் பயிற்சியில் சேர முடியவில்லை. உண்மையான உடல்பலமும் மனோபலமும் கொண்டவர்களுக்கு மட்டுமே மடத்தில் சேர்ந்து பயிற்சி பெற வாய்ப்பு கிட்டியது.
ஷவோலின் வாழ்க்கை முறை மிகக் கடினமான முறை. மனதையும் உடலையும் பலப்படுத்த பற்பல கஷ்டங்களைச் சந்திக்க வேண்டும். ஆசிரியர்கள் மாணவர்களிடம், பயிற்சியின் போது ஏற்படும் வலியைப் பற்றி என்றுமே பயப்படக் கூடாது என்றும், அடிப்பட்டாலும், வெயிலில் தவித்தாலும், குளிரில் உறைந்தாலும், நாளுக்கு நாள், வாரத்திற்கு வாரம், மாதத்திற்கு மாதம், வருடத்திற்கு வருடம் தொடர்ந்து குங்பூ கலையை பழகினால் தான் ஆசானாக முடியும் என்று கூறுவார்களாம்.
புத்த மதத்தினர் சாதுக்களாகவும் உயிர் வதையை விரும்பாதவர்களாவும் இருக்கும் போது, ஏன் சண்டை முறையைக் கற்றுக் தந்தார்கள் என்று நாம் எண்ணக் கூடும். குங்பூ, ஹிம்சை, கொடுமை என்றால் என்ன என்பதைத் தெளிவாக புரிய வைக்கும் கலை. அதனால் சண்டைகளை எப்படித் தவிர்க்க வேண்டும் என்பதையும் தெளிவாக அது புரிய வைக்கிறது. குங்பூ பயின்றவர்கள் என்றுமே தாக்குதல் நடத்துபவர்கள் அல்ல. அதற்குப் பதிலாக சண்டையைத் தவிர்ப்பவர்கள் என்றே சொல்லலாம்.
மிகவும் சக்தி வாய்ந்த சண்டை முறை தவறான முறையில் பயன்படுத்தப்படக் கூடாது என்பதில் துறவிகள் கவனத்துடன் இருந்தனர். அதனால் மிகவும் கண்டிப்பான சட்ட திட்டங்கள் உருவாக்கப்பட்டன. பொய்கள் பொறுத்துக் கொள்ளப்பட மாட்டாது. பணிவின்மை தண்டனைக்குரியது. மாணவர்கள் அனைவரும் விதிகளை அனுசரித்து மக்களுக்கு உதவியாக வாழ்ந்தனர். அதை எதிர்த்தவர்கள், மடத்தாரால் விசாரிக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.
தா மோ கி.பி. 536 ஆம் ஆண்டு இறைவனடி சேர்ந்தார். ஆனால் அவரது தற்காப்பு முறை சீனப் பேரரசாரால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, நாட்டில் மலிந்து கிடந்த திருடர்கள், கொள்ளையர்கள் அட்டகாசங்களை ஒழிக்க, படை வீரர்களுக்கு குங்பூ முறையே பயிற்றுவிக்கப்பட்டது.
சுங் வம்சம் (கி.பி. 1960-1279) இருந்த காலத்தில் க்யூ யூயே சான் ஷி என்பவரால், “ஐந்து முஷ்டிகளின் சாரம்” என்ற புத்தகம் எழுதப்பட்டது. இது டிராகன், புலி, பாம்பு, சிறுத்தை, கொக்கு சண்டை முறைப் பயிற்சி மற்றும் அதன் பிரயோகம் பற்றி விளக்கியது. அதுவே குங்பூ வளர்ச்சியின் கடைசி கட்டம்.
அவருக்குப் பின் மன் சூ இன மக்களைச் சார்ந்த சிங் வம்சத்தினர் ஆட்சிக்கு வந்ததும், ஹான் வம்சத்தினர் மேலே வந்து விடக் கூடாது என்ற நோக்கத்தில், 1644 முதல் 1911 வரை குங்பூவை யாரும் கற்கவும் கூடாது, பயிற்றுவிக்கவும் கூடாது என்ற சட்டத்தைக் கொண்டு வந்தனர்.
ஆனால் ஷவோலின் முறையைப் பாதுகாக்க வேண்டி, அந்த முறைகளை சாதாரண மக்களுக்கும் சொல்லித்தரப் பட்டது. மடத்திற்கு வெளியே இம்முறை பிரபலமாக ஆரம்பித்ததும், உதைத்தல் கலை முக்கியமாகக் கொண்ட வடக்கத்திய முறை, கையை முக்கியமாகக் கொண்ட தெற்கத்திய முறை என்று ஏற்பட்டது. மேலும் வழிவழியாக அவை கற்றுத்தரப்பட்டு வந்த போது, வேறு பல முறைகளும் உண்டாயின.
இறுதியில் 1912ல் சிங் வம்சம் ஆட்சியை இழந்த போது, தற்காப்புக் கலை திரும்ப வெளியே தலை காட்டியது. ஆனால் 1928ல் மிகப் பெரிய நிகழ்வு ஏற்பட்டது. சீனப் போரின் போது, ஷவோலின் மடம் எரிக்கப்பட்டது. நாற்பது நாட்கள் எரிந்த தீயில் அங்கு இருந்த புத்தகங்களும், குறிப்புகளும் எரிந்தன.
பின்னர், குங்பூ கற்றவர்கள் மூலமாக மட்டுமே அந்த முறை அடுத்த தலைமுறையினருக்கு வந்து சேர்ந்தது. அந்த வகையில் ஜாக்கி சானின் தந்தை தான் கற்றதைத் தன் மகனுக்கு கற்றுத் தர ஆரம்பித்தார்.
- ஜெயந்தன் விருது அழைப்பிதழ்
- டௌரி தராத கௌரி கல்யாணம்…! – 20
- ஆகஸ்டு-15. நாவல். குமரி.எஸ்.நீலகண்டன் – எளிமையும் இலட்சியமும்
- மருத்துவக் கட்டுரை இளம்பிள்ளை வாதம்
- குகப்பிரியானந்தா – சித்த வித்தியானந்தா..
- சேவை
- க.மோகனரங்கனின் அன்பின் ஐந்திணை –
- முக்கோணக் கிளிகள் [6] [நெடுங்கதை]
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -41 என்னைப் பற்றிய பாடல் – 34
- தாகூரின் கீதப் பாமாலை – 82 ஆத்மாவின் அமுதம் .. !
- ஆன்மீகக் கனவுகள்
- அப்பா ஒரு நாய் வளர்க்கிறார்
- சிவகாமியின் சபதம் – நாட்டிய நாடகம்
- ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் – வங்க மூலம் –பக்கிம் சந்திர சட்டர்ஜி – அத்தியாயம்-2 பகுதி-2 பிருந்தாவனம்
- பேசாமொழி 10வது இதழ் (செப்டம்பர்) வெளிவந்துவிட்டது..
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 28
- ஜாக்கி சான் 8. தற்காப்புக் கலை குங்பூவைப் பற்றி
- நீங்களும்- நானும்
- திண்ணையின் இலக்கியத் தடம் – 1
- விஸ்வநாதன், வேலை வேண்டாம்…..?
- அகநாழிகை – புத்தக உலகம்
- அருளிச்செயல்களில் மச்சாவதாரம்
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பூமியின் சிக்கலான உட்கருவின் நூதனச் சுழற்சி இயக்கங்கள்
- கற்றல்
- கவிஞர் தமிழ் ஒளி 90 அழைப்பிதழ்
- புகழ் பெற்ற ஏழைகள் 25