தேமொழி
சர்வதேச மனித உரிமை அமைப்பினர் அறிக்கையின்படி, 40 ஆயிரம் தமிழரை இனப்படுகொலை செய்த இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்த கூடாது என இந்தியத் தமிழர்கள் கண்டனம் எழுப்புவதும், அதற்கு நடுவண் அரசு மதிப்பு கொடுக்காமல் மழுப்பிப் பேசும் செய்தியும் தமிழுலகத்திற்குப் புதிதல்ல. தமிழக முதல்வர் பிரதமருக்கு காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்குமாறு வலியுறுத்திக் கடிதம் எழுதுகிறார் [1]. இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதைத் தவிர்க்கக்கோரி தமிழக அரசியல் கட்சிகளும் மற்றும் பல்வேறு பொதுநல நோக்கு அமைப்புகளும் வலியுறுத்தி அறிக்கைகள் வெளியிட்டுள்ளன. தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தியாகு அவர்களும் இந்தக் கோரிக்கையை முன்னிறுத்தி அக்டோபர் 1, 2013 முதல் 15 நாட்களாக உண்ணாவிரதத்தை மேற்கொண்டார். மக்கள் உணர்வை மதித்து நல்லதொரு முடிவெடுப்பேன் என்ற இந்தியப் பிரதமரின் உறுதிமொழியின் பேரில் அவரது உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது [2].
இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று காமன்வெல்த் நாடுகளில் ஒன்றான கனடாவின் பிரதமர் ஸ்டீஃபன் ஹார்பர் புறக்கணித்துவிட்டார் [3]. இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்துவதற்கு இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் [4]. உலக அளவில் இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடத்த எதிர்ப்புகள் கிளம்பினாலும் உறுதியான முடிவு எதுவும் தெரியவில்லை.
இந்த நிலையில் பொதுநலவாய நாடுகள் (காமன்வெல்த் நாடுகள், Commonwealth National) என்ற அமைப்பு தேவையா? அதனால் யாருக்கு என்ன பயன் என்பதை ஆராய்வது பலனளிக்கும். காமன்வெல்த் நாடுகள் என்பவை சென்ற நூற்றாண்டு வரை இங்கிலாந்தின் ஆட்சிக்குட்பட்டிருந்த 54 நாடுகள். தற்பொழுது இவையாவும் சுதந்திர நாடுகள். முன்னாள் இங்கிலாந்தின் ஆட்சிக்குட்பட்டிருந்த இந்த நாடுகள் யாவும் இணைந்து, இங்கிலாந்து நாட்டுடனும்; அதன் அதிகாரத்திற்கு உட்பட்டிருந்த தங்கள் நாடுகளுக்கு இடையேயான நல்லுறவுக்காகவும் தோற்றுவிக்கப்பட்ட அமைப்பு காமன்வெல்த் நாடுகள் என்ற அமைப்பு. ஆங்கிலேய ஆதிக்கத்தின் கீழிருந்த நாடுகளின் பொருளாதாரம், கலாசாரம் போன்றவற்றை மேம்படுத்த தோற்றுவிக்கப்பட்டதே இந்த அமைப்பு என்று இந்த அமைப்பு தோன்றியதற்குக் காரணம், நோக்கம் என்றெல்லாம் குறிப்பிடப்படுகிறது. அத்துடன் அமைப்பின் நோக்கத்தை வலியுறுத்தும் வகையில் அமைவதே அமைப்பின் கொள்கைகளும், செயல்பாடுகளும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் உறுப்பினர் பதவி என்பது கட்டாயம் அல்ல. இங்கிலாந்தின் வரலாற்றுடன் தொடர்புடைய எந்த ஒரு நாடும் தன்னிச்சையாக விண்ணப்பித்து இந்த காமன்வெல்த் நாடுகள் அமைப்பில் தன்னை இணைத்துக் கொள்ளலாம் [5] [6].
உறுப்பினர் பதவி கட்டாயம் இல்லை என்பது மிக மிக முக்கியமாகக் கவனிக்கப் பட வேண்டிய ஒன்று. இதையும் தெரிந்துகொண்டே உறுப்பினராக இருக்க விழைவது இந்த அமைப்பில் உள்ள நாடுகளின் அடிமை மனப்பான்மையையே காட்டுகிறது. ஒருகாலத்தில் இங்கிலாந்தின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த அமெரிக்கா இந்த அமைப்பில் பங்கெடுக்க விண்ணப்பிக்கவும் இல்லை, உறுப்பினராகவும் இல்லை. இது அமெரிக்காவின் சுயமதிப்பின் நிலையை, சுதந்திர மனப்பான்மையை பறைசாற்றுகிறது. வரலாற்று உண்மையாக இருந்தாலும் தங்கள் நாடு அடுத்த நாட்டின் ஆதிக்கத்தின் கீழிருந்த நாடு என்ற அவமானகரமான காலநிலையை அமெரிக்கா மறக்கவிரும்பும் செயலாகவே இதைக் கருதலாம். அமெரிக்கா எடுத்த இந்த நிலைப்பாட்டின் காரணமாக அமெரிக்காவின் சுயகெளரவத்தை பாராட்டவேத் தோன்றுகிறது.
அமெரிக்காவைப் போன்றே எகிப்து, ஜோர்டான், ஈராக், பாலஸ்தீனம், சூடான், சோமாலியா, குவைத், பஹ்ரெய்ன், ஓமன், கட்டார் மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் யாவும் தங்களுக்கு இங்கிலாந்துடன் வரலாற்றுத் தொடர்பு இருந்தும் காமன்வெல்த் நாடுகளின் அமைப்பில் உறுப்பினர்களாக இல்லை [5].
இம்மாத துவக்கத்தில் (அக்டோபர் 3, 2013) காம்பியா காமன்வெல்த் நாடுகளின் அமைப்பில் இருந்து வெளியேறி உள்ளது [7]. அதன் தலைவர் யஹ்யா ஜம்மே (Yahya Jammeh) இங்கிலாந்தின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த நாடு என்பதனைக் குறிக்கும் அமைப்புடன் எந்த உறவும் தங்கள் நாட்டிற்குத் தேவையில்லை என அறிவித்துள்ளார் [8]. இரு மில்லியனுக்கும் குறைவான மக்கள் தொகையையும், 4,000 சதுர மைல் பரப்பளவுள்ள மிகச் சிறிய நாடு இந்தக் காம்பியா.
இதனால் இந்த அமைப்பில் பெருமையுடன் உறுப்பினராக இருக்கும் நாடுகளுக்கு, “காமன்சென்ஸ் இல்லாத காமன்வெல்த் நாடுகளே, தெளிவு பெறுங்கள், நாமார்க்கும் குடியல்லோம்,” என்று உணர்த்த வேண்டும் என்பது தெரிகிறது. இந்நாடுகளுக்கு அடிமை நாடாக இருந்தோம் என்று சொல்லிக் கொள்வதில் என்ன பெருமை என்பது விளங்கவில்லை. இதுவரை காமன்வெல்த் நாடுகளின் அமைப்பு உருப்படியாக என்ன சாதித்தது என்பதும் கேள்விக்குரியதே.
உலக அமைதிக்காக தோற்றுவிக்கப்பட்ட உலக ஐக்கிய நாடுகளின் சபையே இலங்கையின் தமிழர்களுக்கு சரியான உதவி செய்யாமல் இருக்கும் நிலையில், காமன்வெல்த் நாடுகள் அமைப்பு பெரிதாக என்ன உதவி செய்துவிடப்போகிறது? காமன்வெல்த் நாடுகள் அமைப்பின் ‘ஹாரேர் பொதுநலப் பிரகடனம்’ (Harare Commonwealth Declaration) அறிவுறுத்தும் கொள்கைக்குப் [9] புறம்பாக, மக்களாட்சி வழிமுறைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட நைஜீரியாவும், பாகிஸ்தானும், சிம்பாபுவே நாடுகளும் முறையே 1995, 1999, 2002 ஆண்டுகள் தற்காலிகமாக உறுப்பினர் பதவில் இருந்து நீக்கப்பட்டன. அதிலும் பாகிஸ்தான் இருமுறை நீக்கப்பட்டுள்ளது. தற்பொழுது ஃபிஜி நாடு நீக்கப்பட்ட நிலையில் உள்ளது [5]. இலங்கையின் மனித உரிமை மீறல் செயல்களுக்காக அந்நாட்டின் மீது இது போன்ற நடவடிக்கை எடுக்கச் சொல்லி வலியுறுத்தி கனடாவும் [10], இங்கிலாந்தும் [11] இந்த ஆண்டின் துவக்கத்தில் கண்டனக் குரல்கள் எழுப்பின. ஆனால் இந்தியாவில் இருந்து எந்த எதிர்ப்பும் இருப்பதாக இதுவரைத் தெரியவில்லை.
Adding insult to injury என்று ஆங்கிலத்தில் கூறுவது போல பட்ட காயத்தினை பெரிதுபடுத்தி நோகச் செய்யும் செயலாக இருக்கிறது மனிதஉரிமைகளை மீறிய, காமன்வெல்த் மாநாட்டின் கொள்கைக்கு எதிராகச் செயல்படும் இலங்கையிலேயே காமன்வெல்த் மாநாட்டை நடத்தும் செயல். நடவடிக்கை எடுக்கப்பட்டு உறுப்பினர் பதவியை நீக்கப்பட வேண்டிய நாட்டில் நடக்கப்போகும் இம்மாடு இலங்கைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இல்லவே இல்லை என்பதைச் சிறு குழந்தை கூட சொல்லிவிடும். காமன்வெல்த் நாடுகளின் இந்த மாநாடு [12] இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கூடுவது வழக்கம். வரும் 2013 ஆம் ஆண்டு நவம்பர் 10 முதல் 17 தேதி வரை நடக்கப்போகும் மாநாட்டின் விளைவுகள் இலங்கை அதிபதிக்கு ஒருவகையில் பாராட்டாகவே அமையும். சென்றமுறை 2011 ஆம் ஆண்டு நடந்த இம்மாநாடு ஆஸ்திரேலியாவில் கூட்டப்பட்டதால் அந்த நாட்டின் பிரதமர் ‘ஜூலியா கில்லர்ட்’ ( Julia Gillard) ‘காமன்வெல்த் சேர் பெர்சன் இன் ஆஃபிஸ்’ (Commonwealth Chairperson-in-Office) என்ற தலைவர் பதவியைப் பெற்றார். ஆஸ்திரேலியப் பிரதமரின் இப்பதவிக்காலம் வரும் மாநாட்டுடன் முடிவடைந்து அடுத்து இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்க்ஷே இப்பதவியைப் பெறுவார்; தொடர்ந்து அடுத்த மாநாடு நடக்கும் 2015 ஆம் ஆண்டு வரை இப்பதவியையும் வகிப்பார் [5]. இந்த பதவியளிப்பு நடவடிக்கை இலங்கையின் மனிதநேய மீறல்களை ஆதரிப்பதாகவே அமைகிறது. நடக்கப்போகும் இலங்கை மாநாட்டினால் அநியாயமாக உயிர்நீத்த அல்லது உயிர் நீக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு கிடைக்கும் நீதி என்ன என்பது விளங்கவில்லை.
காமன்வெல்த் நாடுகள் அமைப்பில் உறுப்பினராக இருப்பது என்பது ஒரு தனிப்பட்ட நாட்டின் விருப்பத்தின் பேரில் அமைந்திருக்கும் பொழுது (அதாவது உறுப்பினராக இருக்க எந்த ஒரு கட்டாயமும் இல்லாத பொழுது); காமன்வெல்த் நாடுகள் அமைப்பு ஏற்பட்ட நோக்கத்திற்கும் செயல்பாடுகளுக்கும் முரணாக இலங்கையில் நிலைமை மாறும்பொழுது; முதன் முதலில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக உறுப்பினர் பதவியைத் தூக்கி எறிந்து வெளிவந்திருக்க வேண்டிய இந்திய அரசு ஏன் இன்னமும் உறுப்பினராக ஒட்டிக் கொண்டிருக்கிறது? பங்களாதேஷை 1972 ஆம் ஆண்டில் காமன்வெல்த் நாடுகளின் அமைப்பு ஒரு தனி நாடாக அங்கீகரித்த பொழுது, தனது கண்டனத்தைக் காட்ட பாகிஸ்தான் கூட உறுப்பினர் பதவியை ஒருமுறை நீக்கிக் கொண்டு தனது எதிர்ப்பைக் காட்டியுள்ளது [5]. காமன்வெல்த் நாடுகள் அமைப்பில் அதிக மக்கட்தொகை உள்ள நாடான இந்தியா இது போன்று அமைப்பை விட்டு வெளியேறும் முடிவை எடுத்திருந்தால் அது இலங்கை அரசின் மனிதநேயத்திற்கு எதிரான நடவடிக்கைக்கு நல்லதொரு கண்டனமாக அமைந்திருக்கும்.
குற்றங்களைச் செய்பவர்களைக் கண்டிக்காத பொழுது அவர்கள் குற்றத்தை ஊக்குவிப்பவர்களாக ஆகிறார்கள், அத்துடன் அவர்களும் குற்றத்திற்கு உடந்தையாகவும் ஆகிறார்கள் என்பது பொது மொழி. இந்திய அரசுக்குத் தான் இன்னமும் இங்கிலாந்து நாட்டின் அடிமைநாடு என்ற எண்ணம் மாறவில்லை என்பதையே காமன்வெல்த் நாடுகள் அமைப்பில் உறுப்பினராக இருக்கும் இந்தியாவின் இச்செயல் தெளிவு படுத்துகிறது. இந்தியா ஒரு சுதந்திரநாடாக இருக்கும் பொழுது, காமன்வெல்த் நாடுகள் அமைப்பு சரிவரத் தன் கடமையை ஆற்றாத பொழுது அந்த அமைப்பில் இருந்து வெளியேற இந்தியாவிற்கு என்ன தயக்கம்? ஏன் துணிச்சல் இல்லை?
எதற்கெடுத்தாலும் அமெரிக்கா என்று பெருமை பேசி அதன் வழி நடக்க ஆசைகொள்ளும் இந்தியர்கள் இந்த நிலைமையில் அமெரிக்காவின் நிலைபாட்டை முன்னுதாரணமாகக் கொள்வது நல்லது. காமன்வெல்த் நாடுகளின் அமைப்பின் உறுப்பினர் பதவியை மறுக்கும் இந்தியாவின் நடவடிக்கை மனித உரிமைகளை ஆதரிக்க முன்வருவம் செயலாக அமையும், பாராட்டவும் படும். இந்தியா ஒரு நல்ல வழிகாட்டியாக அமையுமா?
ஆதாரங்கள்:
1. காமன்வெல்த் மாநாடு: பிரதமருக்கு ஜெ., கடிதம், அக்டோபர் 17, 2013, http://www.dinamalar.com/news_detail.asp?id=828940
2. தியாகு உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார், அக்டோபர் 15, 2013, http://www.bbc.co.uk/tamil/india/2013/10/131015_thiyaguwid.shtml
3. காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பில்லை: கனடா பிரதமர் முடிவு, அக்டோபர் 7, 2013, http://tinyurl.com/kk7orao
4. இலங்கையில், காமன்வெல்த் மாநாட்டை நடத்த கூடாது : இங்கிலாந்து எம்.பிக்கள் வலியுறுத்தல், அக்டோபர் 18, 2013, http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=65720
5. Commonwealth of Nations – https://en.wikipedia.org/wiki/Commonwealth_of_Nations
6. Commonwealth of Nations membership criteria – https://en.wikipedia.org/wiki/Commonwealth_of_Nations_membership_criteria
7. Statement by Commonwealth Secretary-General Kamalesh Sharma on The Gambia – http://thecommonwealth.org/media/news/statement-commonwealth-secretary-general-kamalesh-sharma-gambia
8. Q & A: Gambia and the Commonwealth, David Blair1, 03 Oct 2013, Telegraph, http://www.telegraph.co.uk/news/worldnews/africaandindianocean/gambia/10352888/Q-and-A-Gambia-and-the-Commonwealth.html
9. Harare Declaration – https://en.wikipedia.org/wiki/Harare_Declaration
10. Mike Blanchfield (14 January 2013). “Harper rebukes Sri Lanka over jurist’s dismissal as talk of summit boycott heats up”. The Globe and Mail. – http://www.theglobeandmail.com/news/politics/harper-rebukes-sri-lanka-over-jurists-dismissal-as-talk-of-summit-boycott-heats-up/article7341673/
11. David Miliband (11 March 2013). “Britain must stand up for human rights in Sri Lanka”. M.guardian.co.uk. – http://www.theguardian.com/commentisfree/2013/mar/11/britain-human-rights-sri-lanka?view=mobile
12. Commonwealth Heads of Government Meeting 2013 – http://thecommonwealth.org/
Picture Courtesy:
Wikipedia: https://upload.wikimedia.org/wikipedia/commons/5/51/Commonwealth_of_Nations.svg
The Commonwealth – http://thecommonwealth.org/sites/default/files/styles/large/public/images/event/chogm-flags.jpg?itok=gXMAF4HF
- மெல்ல மெல்ல…
- அகமுகம்
- விவேகானந்தர் 150 -ஆம் ஆண்டுப் பிறந்த நாள் விழாவும் பேராசிரியர் பெஞ்சமின் லெபோவுக்குப் பாராட்டு விழாவும்.
- மருத்துவக் கட்டுரை – குருதி நச்சூட்டு
- ஆழ் கடல்
- உலகெலாம்
- சிறுகவிதைகள்
- நய்யாண்டி
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 45 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) சுதந்திரமாய் நீயும் நானும் .. !
- ஆணோ பெண்ணோ உயிரே பெரிது
- கண்ணீர் அஞ்சலிகளின் கதை
- பிரயாணம்
- லீலாதிலகத்தில் வேற்றுமைக் கோட்பாடுகள்
- பாவடி
- ஜாக்கி சான். 12 ஆஸ்திரேலிய மண்ணில்
- புகழ் பெற்ற ஏழைகள் 29.இந்தியாவை அடிமையாக்கிய ஏழை
- என்ன இது மாற்றமோ ..?
- திண்ணையின் இலக்கியத் தடம் -5
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 32 (இறுதிப்பகுதி)
- சீதாயணம் [3] (இரண்டாம் காட்சி)
- “காமன்சென்ஸ்” இல்லாத “காமன்வெல்த்” நாடுகள்
- ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-6 பகுதி-2 மதுராவிலிருந்து துவாரகை நோக்கி கம்ச வதம்
- அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ‘கலை இலக்கியம் 2013’
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பால்வீதி மையப் பூதக் கருந்துளை நோக்கிப் பேரசுர அகில வாயு முகில் விரைகிறது.
- நெடுநல் மாயன்.
- Writing Competition on Tamil History, Arts and Culture (Organized by Ilankai Thamil Sangam) on Saturday November 2nd
- க்ளோஸ்-அப்
- டௌரி தராத கௌரி கல்யாணம் – 23
- வம்பை விலைக்கு வாங்கும் வனிதையர்
- பார்வையற்றோர் நலப் பணி நினவு கூர்தல்