வில்லியம் ஸ்லீமனும் இந்திய வழிப்பறிக் கொள்ளையரும் – 1

This entry is part 9 of 34 in the series 10 நவம்பர் 2013

– நரேந்திரன்

 

William Sleemanபத்தொன்பதாம் நூற்றாண்டு இந்தியா சாலைப் பயணிகளுக்கு ஒரு ஆபத்தான இடமாக இருந்தது. பயணம் செய்யும் பல நூற்றுக் கணக்கான, ஏன், ஆயிரக்கணக்கானவர்கள் எந்தத் தடையமும் இன்றி மறைந்து போனார்கள். அவர்களுக்கு என்ன ஆனது என்பது குறித்து யாரும் அக்கறையெடுத்து விசாரிக்கவில்லை. அந்த நேரத்தில் இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் அதிகாரிகள் இந்திய உள் நாட்டு விவகாரங்களில் தலையிடுவதைத் தவிர்த்தார்கள். காளியை வழிபடும் ஒரு பெரும் ரகசியக் கூட்டமொன்று இப்பயணிகளைக் கொல்வதாக வந்த வதந்திகளையும் பிரிட்டிஷ் அதிகாரவர்க்கம் நம்ப மறுத்தது.

 

பிரிட்டிஷ் அரசாங்கத்தில் ஒரு சாதாரண ராணுவ சேவகனாக பணியில் சேர்ந்து இந்தியாவிற்க்கு வந்த சர். வில்லியம் ஹென்றி ஸ்லீமன் (Sir William Henry Sleeman 1788 – 1856) இந்தக் கும்பலைப் பற்றியும் அவர்களின் கொலை முறைகள் பற்றியும் கேள்விப்படுகிறார். அதனை ஆராயப் புகுந்த ஸ்லீமன், அவர் கேள்விப்பட்ட வதந்திகள் அத்தனையும் நம்பவே இயலாத படு பயங்கரமான உண்மைகள் என்பதனைக் கண்டறிந்து அவர்களை அடக்கும் முயற்சியை எடுக்கிறார். தனியொரு மனிதனாக ஸ்லீமன் எடுத்த முயற்சிகளாலும், நடவடிக்கைகளாலும், பல நூற்றாண்டுகாலம் இந்திய பெரு நிலப்பரப்பில் அடக்கவே முடியாத பெரும் கொள்ளையர்கள், கொலகாரர்களான “தக்கர்” (Thugs, Thugee) அடக்கி, ஒழித்துக் கட்டுகிறார்.

 

ஸ்லீமன் என்ற மனிதரின் முயற்சி மட்டும் இல்லாமல் போயிருந்தால் “தக்கர்”களை அழித்திருக்கவே முடியாது. ஆம்; ஹென்றி ஸ்லீமனுக்கு இந்தியா கடமைப்பட்டிருக்கிறது. அவரின் நடவடிக்கைகள் மற்றும் தக்கர்களின் வரலாற்றையும் வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் ஒரு சிறிய முயற்சியே இந்தக் கட்டுரை.

 

 

***

 

1831-ஆம் வருடத்து ஒரு இளம் காலைப் பொழுது.

 

வட இந்தியாவிலிருக்கும் செலேஹ்தா கிராமத்திற்கு வெளியே ஒரு விசித்திரமான கூட்டமொன்று கூடாரங்களடித்து முகாமிட்டிருக்கிறது. பல குதிரைகளும், அங்கு வந்தவர்களுக்குத் தேவையான பொருட்களைச் சுமந்து வந்த மாட்டு வண்டிகளும் நின்று கொண்டிருக்கின்றன. அவர்கள் மத்தியிலே கம்பீரமான தோற்றத்துடன், நீல நிறக் கண்களையுடைய நாற்பது வயதுடைய ஒரு ஆங்கில அதிகாரி அவரது இளம் பிரெஞ்சு மனைவியுடன் தங்கியிருக்கிறார். அவர்களைச் சுற்றி வேலையாட்கள் ஓடியாடி அவர்களுக்குத் தேவையானவற்றைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

 

கூடாரத்திற்கு வெளியே கால்களில் விலங்கிடப்பட்டுக் கீழே உட்கார்ந்திருக்கும் ஒரு உயரமான, வலிமையுள்ள மனிதனைக ஒரு டஜன் இந்திய சிப்பாய்கள் கவனமாகக் கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த கிராமத்திலிருந்து வந்த ஒரு சிறிய கூட்டம் இது அத்தனையையும் பார்த்துக் கொண்டு நின்றிருக்கிறது.

 

காலைச் சூரியன் தூசி நிறைந்த வெப்பமண்டலக் காற்றைச் சூடாக்க ஆரம்பிக்க, மைனாக்களும், கிளிகளும் அந்த முகாமைச் சுற்றி வளந்துள்ள மாமரங்களில் சத்தமிட ஆரம்பித்தன. பூச்சிகள் அங்கிருந்த காட்டுப் பூக்களைச் சுற்றி ரீங்காரமிடத் துவங்கிய அதே நேரத்தில், அருகிலிருந்த ஒரு கூடாரத்திலிருந்து காலையுணவு தயாராகும் சத்தமும் கேட்டுக் கொண்டிருக்கிறது.

 

அந்த ஆங்கில அதிகாரியின் கவனத்தை இந்த விஷயங்கள் எதுவும் கலைக்கவில்லை. மாறாக, அவர் தரையிலமர்ந்திருந்த அந்தக் கைதியுடன் சரளமான ஹிந்தியில் விசாரணை செய்து கொண்டிருந்தார். சில நிமிடங்கள் பேசிய பிறகு அந்தக் கைதி சிறிது தூரத்தில் குதிரைகள் கட்டிவைக்கப்பட்டிருந்த இடத்தை நோக்கி கையைக் காட்டுகிறான். அந்த இடத்தைத் தோண்டும்படி அதிகாரி தனது வேலையாடகளுக்கும் உத்தரவிட, அவர்களும் அந்த இடத்தைத் தோண்டத் துவங்குகின்றனர்.

 

தோண்டிய சில நிமிடங்களில் பல அச்சமூட்டும் பொருட்களைக் கண்டடையப்படுகின்றன. முதலில் ஒரு மனித மண்டையோடு மற்றும் கந்தைத் துணிகள் ஒட்டிக் கொண்டிருக்கின்ற ஒரு எலும்புக்கூடும் அந்தக் குழியிலிருந்து வெளியே எடுக்கப்படுகிறது. மேலும் சிறிது தோண்டியபின் இரண்டாவது மண்டையோடு வெளியே வருகிறது. சூரியன் உச்சிக்குச் செல்லச் செல்ல நிற்காமல் நடந்து கொண்டிருக்கும் இந்த வேலையின் இறுதியில் ஐந்து எலும்புக் கூடுகள் அந்த குழியிலிருந்து வெளியே எடுத்து வெளியே வைக்கப்படுகின்றன..

 

அந்த எலும்புக்கூடுகள் அந்தப் பகுதியில் பணிபுரிந்து காணாமற் போன ஐந்து போலிஸ்காரர்களின் எலும்புக் கூடுகள் என்று சொல்கிறான் அந்தக் கைதி. மேலும் அவர்கள் ஏறக்குறைய ஏழு வருடங்களுக்கு முன் கொல்ப்பட்டு அந்தப் இடத்தில் புதைக்கப்பட்டதாகச் சொல்கிறான்.

 

கைதி மீண்டும் வேறொரு இடத்தைச் சுற்றிக் காட்டுகிறான். அந்த இடம் ஆங்கிலேய அதிகாரி முதல் நாள் இரவில் தன்னுடைய இளம் மனைவியுடன் தங்கியிருந்த கூடாரத்தின் கயிறுகளைத் தாங்கிப் பிடிக்கும் முளைகள் அடிக்கப்பட்ட பகுதி. அந்த இடத்திலிருந்து மேலும் ஏழு எலும்புக்கூடுகள் வெளியே எடுத்து வைக்கப்படுகின்றன. அது பன்னிரெண்டு வருடங்களுக்கு முன் கொல்லப்பட்ட ஒரு பண்டிதர் மற்றும் அவரது வேலையாட்கள் என்கிறான் அந்தக் கைதி. பார்த்துக் கொண்டிருந்த கிராமவாசிகள் அதிர்ச்சியுடன் கூக்குரலிடுகின்றனர்.

 

இந்த நேரத்தில் அந்தக் கூடாரத்தினுள் காலையுணவு தயாரித்துக் கொண்டிருந்த அதிகாரியின் அழகான இளம் மனைவி கூடாரத்திலிருந்து வெளியே வருகிறாள். அங்கே நடந்து கொண்டிருக்கும் ஆரவரங்களை முகத்தில் எந்தவிதமான உணர்வுக் காட்டாமல் பார்க்கிறாள். இது போன்ற நிகழ்வுகளைக் கடந்த பல மாதங்களாகவே பார்த்துச் சலித்துப் போயிருந்தாள் அவள்..

 

அடுத்து, அந்த அதிகாரியும் அவள் மனைவியும் இரவில் உறங்கிய கூடாரம் கலைக்கப்பட்டு, அந்த இடத்தில் வேலையாட்கள் தோண்ட ஆரம்பிக்கிறார்கள். அந்த இடத்தில் மேலும் ஐந்து எலும்புக்கூடுகள் அகப்படுகின்றன. அது நான்கு பிராமணர்கள் மற்றும் ஒரு பெண்ணின் எலும்புக்கூடுகள். மேற்கூறிய பண்டிதர் கொல்லப்பட்ட அதே காலத்தில் கொல்லப்பட்டவர்கள் அவர்கள்.

 

இப்போது உச்சிவெயில் 105 டிகிர் ஃபாரன்ஹீட்டைத் தாண்டிக் கொளுத்த ஆரம்பிக்கிறது. அந்த மாந்தோப்பின் பல இடங்களைத் தோண்டிக் கொண்டிருந்த வேலையாட்கள் களைத்துப் போகிறார்கள். ஆங்கிலேயே அதிகாரி அவ்விடத்தில் கண்டுபிடிக்க எலும்புக்கூடுகளைப் பற்றி கவனமாக ஒரு நோட்டுப் புத்தகத்தில் குறித்துக் கொண்டு அவற்றை மீண்டும் அந்த இடத்திலேயே புதைக்கும்படி உத்தரவிடுகிறார். அவ்வாறே செய்யப்பட்டபின் கூடாரங்கள் கலைக்கப்படுகின்றன. பின் மதிய நேரத்தில் அந்தக் குழுவினர் சில மைல்கள் தள்ளியிருந்த இன்னொரு மாந்தோப்பினை அடைந்து, அங்கு அக் கைதி காட்டிய இடங்களைத் தோண்ட ஆரம்பிக்கிறார்கள்.

 

மேற்கூறிய சம்பம் இந்தியா முழுவதிலும் இது போல நடந்தேறிய பல சம்பவங்களுக்கு ஒரு சிறு உதாரணமே. பல நூற்றாண்டுகளாக, பல தலைமுறைகளாக இந்திய பெரு நிலப்பரப்பில் பயணம் செய்த பிரயாணிகளைக் கொன்று கொள்ளையடித்த, எளிதில் அறிந்து கொள்ள முடியாத ஒரு ரகசிய கூட்டத்தை ஒழித்துக் கட்ட அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கம் 1820-லிருந்து 1830 வரை எடுத்த பல நடவடிக்கைகளின் ஒரு பகுதியே இச்சம்பவம். ஆனால் இது போன்ற ஒரு ரகசிய கொள்ளைக் கூட்டம் இந்தியாவில் இருப்பதை பிரிட்டிஷ் அரசாங்கம் நெடுங்காலம் அறிந்திருக்கவில்லை என்பது மட்டுமல்லாமல், அவ்வாறு இருப்பதாகக் கூறப்பட்ட வதந்திகளையும் நம்பாமல் உதாசீனம் செய்து வந்தது. வில்லியம் ஸ்லீமன் வரும்வரை. இக்கும்பல்களை அடக்குவதற்காக பிரிட்டிஷ்காரர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளைப் பின்பற்றி இன்றும் உலக நாடுகள் பலவும் அந்தந்த நாடுகளில் காணப்படும் கொள்ளையர்களை அடக்கப் பின்பற்றி வருகின்றனர் என்பது ஒரு ஆச்சரியமூட்டும் செய்தியே.

 

எது எப்படி இருப்பினும் இந்தியப் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி, கொள்ளையர்களை ஒழித்த பெருமை பிரிட்டிஷ்காரர்களையே சாரும் என்பதே உண்மை.

 

*

 

பத்தொன்பதாம் நூற்றாண்டு இந்தியா அதற்கு முன்பிருந்த இந்தியாவினின்றும் பெரிதும் வேறுபட்டிருக்கவில்லை. பெருவாரியான ஜாதிகளும், மதங்களும், இனங்களும், மொழிகளும், பழங்குடிகளும் கலந்து வாழ்ந்த இந்திய பெரு நிலப்பரப்பை ஆக்கிரமித்த வெளி நாட்டுச் சக்திகளின் விருப்பத்திற்கேற்ப இங்கிருந்த அரசாங்கங்களும், பிராந்தியங்களும், தங்களின் கொள்கைகளையும், விசுவாசங்களையும், செயல் முறைகளையும் அடிக்கடி மாற்றிக் கொண்டிருந்தார்கள்.

 

17-ஆம் நூற்றாண்டில் கல்கத்தா, மதராஸ், மும்பை போன்ற துறைமுக நகரங்களைத் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்த பிரிட்டிஷ்காரர்கள், தங்களின் காலனிய ஆக்கிரமிப்பை இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் கொண்டு செல்ல முயன்று கொண்டிருந்தார்கள்.

 

இந்தியாவி’ற்கு வந்த பிற வெளி நாட்டவர்களைப் போலவே பிரிட்டிஷ்காரர்களும் பெரிய நிலப்பரப்பைக் கொண்ட இந்த தேசத்தையும், குறிப்பாக வெளியார் எவரும் எளிதில் நுழையவியலாத ஹிந்து சாதீய முறை அமைப்புகளையும், அதன் அடிப்படையில் அமைந்த பொது வாழ்க்கை முறைகளையும், மதச் சடங்குகளையும் கண்டு மலைத்துப் போனார்கள். பெரும்பாலான பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவை ஒரு மர்மங்கள் நிறைந்ததொரு கீழை நாடாகவே கருதினார்கள். நீண்ட காலம் இங்கு வாழ்ந்த ஐரோப்பியர்களும் இந்திய மரபின் சிக்கல்களை உணர்ந்து அவற்றிலிருந்து விலகியிருக்கவே தலைப்பட்டார்கள்.

 

இவற்றில் சில விதிவிலக்குகளும் இருந்தன. 18-ஆம் நூற்றாண்டின் இறுதியில் சர். வில்லியம் ஜோன்ஸ் என்ற திறமை வாய்ந்த ஆங்கிலேயர் ஒருவர் கல்கத்தாவின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் உலகின் பழமையான கிளாசிகல் (செம்மொழி?) மொழிகள் மற்றும் சட்டத்தில் பயிற்சி பெற்றவரான அவரே, இந்தியாவின் பழைய செம்மொழியான சமஸ்கிருதத்தை ஆராய்ந்து, அதற்கும் பிற ஐரோப்பிய கிரேக்க, இலத்தீன் மொழிகளுக்கும் உள்ள தொடர்புகளைக் கண்டுபிடித்து உலகிற்கு அறிவித்த முதல் ஐரோப்பியராவார்.

 

இதன் பயனாக பல மேற்கத்திய கல்வியாளர்கள் சமஸ்கிருதத்தைக் கற்று அதில் அமைந்த ஹிந்து இலக்கியங்களையும், வேத, உபநிஷத்களையும் பயிலும் ஆர்வம் கொண்டனர். அதனைத் தொடர்ந்து இந்தியா வந்த அவர்கள் இந்தியக் கலாச்சாரத்தில் ஒரு ரகசியத் திரையும், விலகலும் இருப்பதைக் கண்ணுற்றனர். உதாரணமாக ஒவ்வொரு வருடமும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்குப் பயணித்த பல ஆயிரக்கணக்கானவர்கள் எந்தத் தடையமுமின்றி மறைந்து போவதைக் குறித்து எவரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதனையும் கண்டனர்.

 

இந்தியாவில் உலவும் இரகசிய கொலைகார கும்பல்கள் பற்றிய வதந்திகள் இந்தியாவிற்குப் புதிதல்ல என்றாலும், இந்திய சமூகத்தினுள் நுழைய முடியாத காரணம், சாலைப் பிரயாணிகள் குறித்த தகவல்கள், கொள்ளைக்கார கும்பலான பிண்டாரிகள் (Pindari) நடவடிக்கைகள் குறித்தும் போதுமான தகவல்கள் இல்லாமையாலும், மேலும் இது போன்ற வதந்திகளை ஆராய்வதற்கான எந்த முகாந்திரமும் இல்லாத பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இதனை முற்றிலும் உதாசீனப்படுத்தி நிராகரித்துவிட்டனர். 1812-ஆம் வருடம், ஆங்கில அதிகாரியான ஜான் மான்செல் (John Maunsell) டில்லியிலிருந்து ஆக்ராவிற்குப் போகும்வழியில் எந்தவிதமான தடையமுமின்றி மறைந்து போன பிறகும் இது உதாசீனப்படுத்தப்பட்டு, அது குறித்தான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதே சூழ்நிலை எவ்வித மாற்றமுமில்லாமல், ஒரு திறமை மிக்க பிரிட்டிஷ் படைவீரனான வில்லியம் ஸ்லீமன் (William Sleeman) வரும்வரை நீடித்தது.

 

*

 

வில்லியம் ஹென்றி ஸ்லீமன் (William Henry Sleeman) 1788-ஆம் வருடம், இங்கிலாந்தில், கார்ன்வெல் எனுமிடத்தில் அமைந்த ஸ்ட்ராட்டன் நகரில் பிறந்தவர். இளவயதிலிருந்தே பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்ந்து ஏதேனும் ஒரு வெளி நாட்டில் பணிபுரிவதைத் தனது இலட்சியமாகக் கொண்டிருந்தார் ஸ்லீமன். ராணுவத்தில் சேருவதற்கான வயது வருவதற்கு முன்பே அராபிய மற்றும் ஹிந்துஸ்தானி மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார். ஸ்லீமன் 1809-ஆம் வருடம் கல்கத்தாவிற்கு வருமுன்பே இவ்விரு மொழிகளிலும் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தார்.

 

கல்கத்தா வந்தபின் அவர் கூர்க்கா மற்றும் பாரசீக மொழிகளையும் கற்றார். சக பிரிட்டிஷ்காரர்களைப் போல இல்லாமல், ஹிந்து மதத்தையும் அதன் சாதிய அடுக்குகளையும், பிரிவினைகளையும் கற்றுக் கொள்வதற்காக கணிசமான அளவு நேரத்தைச் செலவிட்டார் ஸ்லீமன். இதனால் இந்தியா வந்த சில வருடங்களிலேயே இந்தியக் கலாச்சாரம் குறித்தும் அதன் பழக்க வழக்கங்கள் குறித்தும் நல்ல அறிவுடன் தேர்ந்த அவர், இந்திய மக்களின் மீது அளவில்லாத நல்லெண்ணம் மற்றும் அன்பு கொண்டவராக இருந்தார்.

 

ஸ்லீமன் தன்னை ஒரு முழுமையான இந்தியனாக மாற்றிக் கொள்ளவில்லை என்பதை இங்கு குறிப்பிட வேண்டும். மாறாக இந்தியர்களின் புதிரான கலாச்சாரத்தை புரிந்து கொள்ளும் ஆர்வமுடையவராக, அவற்றின் மீது உண்மையான மதிப்பும், மரியாதையும் உடையவராக இருந்தார். இளவயதிலிருந்தே ஒழுக்கமும், சுய கட்டுப்பாடும் உடையவராக இருந்த ஸ்லீமன், தனது மற்ற பிரிட்டிஷ் சகாக்களைப் போல மதுவிலும், மாதுவிலும், பிற கேளிக்கைகளிலும் மூழ்காகம் அதனைத் தவிர்த்தே வந்தார். அவையனைத்தும் அவருக்கு எளிதாகக் கிடைக்கும் என்றாலும். அவரது நேர்மையும், ஒழுக்கமும், கட்டுப்படுமே பிற்காலத்தில் இந்தியர்களை துன்புறுத்திக் கொலை செய்து கொண்டிருந்த தக்கர்களை ஒடுக்குவதற்கு அடிப்படையாக இருந்தது எனலாம்.

 

ஸ்லீமன் அவருடைய இந்திய வாழ்க்கையின் தொடக்க காலத்தில் இந்தியர்கள் வழிபடும் பெண் கடவுளான காளியைக் குறித்து ஆச்சரியப்பட்டிருக்க வேண்டும். ஹிந்துக் கடவுளான சிவனின் கறுத்த மனைவியான காளி, எதிரிகளின் இரத்தத்தைக் குடித்து, பிணம் எரியும் சுடுகாடுகளில் நர்த்தனம் புரிவாள் போன்ற செய்திகள் அவருக்குப் புதிரான ஒன்றாக இருந்திருக்கக்கூடும்.

 

இந்தப் பயங்கர உருவமுடைய பெண் தெய்வத்தின் கோவில்கள் இந்தியா முழுவது இருந்தன. கறுத்த உடலுடைய “காளி மா” (கறுத்த அன்னை) பல கைகள் கொண்டவளாக, மனித மண்டையோடுகளை மாலையாக அணிந்தவளாக, தனது செந்நிற நாக்கு அவளுடைய ஆங்கார ஓசையிடும் வாயிலிருந்து வெளியே தொங்க பக்தர்களுக்கு தரிசனம் தந்தாள். பழங்காலத்தில் காளி கோவில்களுக்கு முன் நரபலி கொடுக்கப்பட்டதாகவும், அதுவே ஸ்லீமன் காலத்தில் ஆடுகளை பலியிடும் சடங்காக மாறியிருப்பதாகவும் அறிகிறார் ஸ்லீமன்.

 

காளியின் பல பக்தர்கள் கூர்மையான இரும்பு அலகுகளைத் தங்களின் தசைகளிலும், முதுகிலும் குத்திக் கொண்டு அந்தரத்தில் தொங்கி அவளை வழிபட்டார்கள். அந்த வழக்கம் இன்றும் தொடர்கிறது. ‘கல்கத்தா’ என்ற பெயரே ‘காளி காட்’ (காளியின் எரியும் நெருப்பு) என்பதிலிருந்துதான் பிறந்தது.

 

ஸ்லீமன் ஹிந்து மதத்தையும், ஹிந்துக்களையும் குறித்துப் படித்துக் கொண்டிருந்த அதே நேரத்தில், காளியை வணங்கும் ஒரு பழைமையான ரகசிக சமூகம், இந்தியா முழுவதிலும் பயணிகளைக் சடங்கு முறையில் கொலை செய்து (ritual murder) அவர்களின் உடைமைகளைக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது என்பது பற்றிக் கேள்விப்படுகிறார். அது குறித்தான முழுமையான தகவல்கள் எதுவும் அவருக்குக் கிட்டவில்லை.

 

ஸ்லீமன் இந்தியா வருவதற்கு முன்பாக இந்தியாவின் பல பகுதிகளுக்குப் பயணம் செய்த Th Venot என்னும் ஃப்ரெஞ்சுப் பயணி எழுதியிருந்த சில தகவல்கள் மட்டுமே அவருக்குக் கிட்டுகிறது.

 

“நான் டெல்லியிலிருந்து ஆக்ராவிற்குப் பயணம் செய்த பாதை அத்தனை மோசமல்ல என்றாலும், அந்தப் பாதையில் பயணம் செய்பவர்கள் எவரும் தங்களுக்கு அறிமுகமில்லாத மனிதர்கள் எவரையும் அருகில் சேர்க்காமலிருப்பதே நல்லது. உலகிலேயே மிக மோசமான, தந்திரமான திருடர்கள் இந்த நாட்டில்தான் இருக்கிறார்கள். ஒரு விதமான சுருக்குக் கயிற்றை உபயோகித்து, தன்னைச் சந்தேகிக்காத பயணி அருகில் வந்ததும் அவனது கழுத்தில் சுற்றி நெருக்கி, ஆச்சரியப்படத்தக்க திறமையுடன் கொல்கிறார்கள். கொல்லப்படுபவன் எக்காரணம் கொண்டும் தப்பிச் சென்றுவிடாமலிருக்க அந்தச் சுறுக்கு மூன்றுமுறை இறுக்கப்படுகிறது” என்று எழுதுகிறார் Th Venot.

 

*

 

1816-ஆம் வருடம் டாக்டர் ராபர்ட் சி. ஷெர்வுட் (Dr. Robert C. Sherwood) என்பவர் சென்னை லிட்டரரி கெஜட்டில் இந்தக் கொலைகாரக் கும்பல் பற்றிய ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். ஷெர்வுட், ஸ்லீமனைப் போலவே ஹிந்து மதத்தின் கூறுகளைப் பற்றி மிக நன்றாக அறிந்தவர். அவரும் இந்தத் ரகசியத் திருடர்களைக் குறித்து அறிய ஆர்வமுடையவராக இருக்கிறார்.

 

1815-ஆம் வருடம் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில், சென்னையில், இந்தத் திருடர்கள் கூட்டத்தில் பலர் கைது செய்யப்பட்டு நீதிபதியின் முன் நிறுத்தப்படுகிறார்கள். லஆனால் போலிஸ்காரர்கள் சொல்வதை நம்பாத வெள்ளைக்கார நீதிபதி அத்திருடர்களை விடுதலை செய்துவிடுகிறார். டாக்டர் ஷெர்வுட்டின் இந்தக் கட்டுரையே முதன் முதலாக இந்தத் திருடர்களைக் குறித்து உலகிற்கு அறிவித்த முதன் முதலாக அறிவித்த ஒன்றாகும். காளியின் பெயரால் கொலைகள் செய்யும் இந்தக் கும்பல் குறித்துப் பின்வருமாறு எழுதுகிறார் ஷெர்வுட்.

 

“செயிண்ட் ஜார்ஜ் கோட்டையின் ஆளுகைக்குட்பட்ட பிராந்தியங்களில் பயணம் செய்யும் ஐரோப்பியர்கள் மிகப்பாதுகாப்புடனே பயணம் செய்கிறார்கள். அவர்களுடன் தேவையான அளவு காவலர்களும், போலிஸ்காரர்களும் செல்கிறார்கள். ஆனால் இந்நாட்டில் பயணம் செய்யும் சாதாரண குடிமக்களில் பல்லாயிரக்கணக்கானவர்கள் இந்த ரகசிய, கொடூர, இரக்கமற்ற கொலைகாரர்களால் கணக்கற்ற முறையில் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் ஃபான்ஸிகர்கள் (Phansigars or Stranglers) என்று அழைக்கப்படுகிறார்கள். ஹிந்துஸ்தானி வார்த்தையான ஃபான்ஸி என்றால் சுருக்கு என்று அர்த்தம்.

 

வட இந்தியாவில் இந்தக் கொலைகாரர்கலை “தக்ஸ்” அல்லது ஏமாற்றுக்காரர்கள் (Thugs or Deceivers) என்று அழைக்கப்படுகிறார்கள். தமிழில் அவர்கள் “அரி துலுக்கர்கள்” (Ari Tulucar) அல்லது “முஸ்லிம் சுருக்குக் கயிற்றுக்காரர்கள்” என்று அழைக்கிறார்கள். கர்நாடகத்தில் இவர்களே “தாண்ட்டி கள்ளரு” (Tanti Calleru) என்று அறியப்படுகிறார்கள். அதாவது, கயிற்றை உபயோகிப்பவர்கள் அல்லது பூனை வயிற்றுச் சுருக்கு போடுபவர்கள் என்ற அர்த்தத்தில்.

 

ஏமாற்றுவதிலும், தந்திரத்திலும் திறமைசாலிகளான இந்த ஃபான்ஸிகர்கள், சாலையில் பயணம் செய்யும் பயணிகள் கூட்டத்தில் தங்களை தந்திரமாக நுழைத்துக் கொள்வார்கள். அப்பாவிப் பயணிகள் நம்பும் வகையில் நைச்சியமாகப் பேசியும், அவர்களுக்கு உதவி செய்பவர்களைப் போல நடித்தும் சிறிது, சிறிதாக அந்தப் பயணிகளின் நம்பிக்கையைப் பெறுவார்கள். ஏதோ ஒரு கட்டத்தில அந்தப் பயணிகளை ஒரு குறிப்பிட்ட இடத்தில் கொல்லும் முடிவு அந்தப் ஃபான்ஸிகர்களால் எடுக்கப்பட்ட பின்னர், அந்தப் பயணிகளின் தலைவனிடம் சென்று, பாதுகாப்பு காரணங்களைக் குறிப்பிட்டு நாம் அனைவரும் ஒரு நல்ல இடத்தில் தங்கியிருந்துவிட்டுச் செல்வதே நல்லது என்று கூறி அவரைச் சம்மதிக்க வைப்பார்கள். பின்னர் சரியான சந்தர்ப்பம் வந்ததும் அந்தப் பயணிகள் கழுத்தில் சுருக்கை இட்டு இறுக்கிக் கொல்வார்கள். உடன் வரும் திருடர்கள் கொல்லப்படுபவனின் உடலை கெட்டியாகப் பிடித்துக் கொண்டோ அல்லது காலை அமுக்கியோ அந்தக் கொலையாளிக்கு உதவி செய்வார்கள்”

 

இப்படியாக Thugs அல்லது Thughee என்றழைக்கப்படும் ரகசிய திருட்டுக் கும்பல்களைப் பற்றிய செய்திகள் முதன் முதலாக வெளித் தெரிய ஆரம்பித்தன. ஆனால் இத்தகவல்கள் அனைத்தும் பிரிட்டிஷ் அதிகாரிகளால் பெரிதாக எடுத்துக் கொள்ளப்படவில்லை. இதுபோன்ற நம்பவியலாத கதைகளை யாரால் ஊர்ஜிதம் செய்யவியலும்? அப்படியே அதில் உண்மை இருந்தாலும் அதனைத் தீர்த்துக் கொள்ள வேண்டியவர்கள் இந்தியர்களேயன்றி பிரிட்டிஷ்காரர்களல்ல என்ற எண்ணமும் அவர்களை எந்த நடவடிக்கையும் எடுக்கவிடாமல் செய்தது.

 

*

 

இதுபோன்ற தகவல்களைக் கேள்விப்பட, கேள்விப்பட ஸ்லீமனின் ஆர்வம் அதிகமாகியது. எத்தனை தடைகள் வந்தாலும் இந்தத் திருடர்களைக் கண்டுபிடித்து அவர்களை ஒழிப்பதற்கான அத்தனை முயற்சிகளையும் செய்யப்போவதாக முடிவெடுத்தார் ஸ்லீமன். ஆனால் இதற்காக அவர் எடுத்த அத்தனை முயற்சிகளுக்கும் அவரது மேலதிகாரிகள் முட்டுக்கட்டை போட்டனர். முன்பே கூறியது போல அவர்கள் இந்தக் கதைகளை நம்பவில்லை. இருப்பினும் ஸ்லீமன் தனது முயற்சியைக் கைவிடவில்லை.

 

முதல் காரியமாக தான் பணிபுரிந்த ராணுவத்திலிருந்து சிவில் சர்வீசிற்கு மாற்றல் கோரிப் பெற்றார். இதன்படி 1820-ஆம் வருடம், வட இந்தியாவில் அமைந்த Saugor மற்றும் Maratha பிராந்தியங்களுக்கு ஒரு கடை நிலை மாஜிஸ்ட்ரேட்டாக நியமிக்கப்பட்டார் ஸ்லீமன்.

 

இரண்டு வருடங்களுக்குப் பிறகு பதவி உயர்வு பெற்று, நரசிங்காப்பூர் மாவட்டத்திற்கு மாஜிஸ்ட்ரேட்டாக நியமிக்கப்படுகிறார் ஸ்லீமன். ஒரு வழியாக அவருக்குத் தேவையான அதிகாரமும், அவருக்குக் கீழ் பணிபுரிய ஒரு டஜன் சிப்பாய்களும், போலிஸ்காரர்களும் நியமிக்கப்படுகிறார்கள். இப்படியாக வில்லியம் ஸ்லீமன் நீண்டகாலம் காத்திருந்த தக்கர்களுக்கு எதிரான போராட்டத்திற்கு இருந்த அத்தனை தடைகளும் நீக்கப்பட்டுவிட்டன.

 

நரசிங்காப்பூரில் அமைந்த நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் செல்லும் ஸ்லீமன் அங்கிருக்கும் கிணறுகளிலும், ஓடைகளிலும், வறண்ட ஆற்றுப்படுகைகளிலும் கிடைத்த உடல்கள் குறித்தான தகவல்களைச் சேகரிக்க ஆரம்பிக்கிறார். எல்லாப் பிணங்களின் கழுத்து மற்றும் உடல் பகுதிகளில் ஒரே விதமான வெட்டுக்காயங்கள் இருப்பதைக் காண்கிறார். கிடைத்த உடல்கள் அவர்களின் துக்கமுடைய உறவினர்கள் மற்றுன் நண்பர்களினால் கமுக்கமாகப் புதைக்கப்பட்டு அவர்கள் அச்சமூட்டும் அமைதி காக்கிறார்கள்.

 

ஸ்லீமன் அவர்களிடமிருந்து தேவையான தகவல்கள் சேகரிக்க எடுத்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிவடைகின்றன. கிராமவாசிகள் தங்களுக்குத் தெரிந்த ரகசியத்தை வெளியே சொன்னால் பிசாசுகளால் தாக்கப்பட்டு ரத்தம் கக்கி இறந்துவிடுவோம் என்ற அச்சத்தில் எந்தத் தகவலையும் வெளியில் சொல்லாமல் மவுனம் காக்கிறார்கள். இருப்பினும் ஸ்லீமன் விடா முயற்சியுடன் முனைந்து தேவையான தகவல்களைச் சிறிது சிறிதாக சேகரிக்க ஆரம்பிக்கிறார். அவர்கள் மூலமாக அவருக்குத் தெரியவரும் தக்கர்களைப் பற்றிய மேலதிகத் தகவல்கள் அவரை இன்னும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

 

அவர் இவ்வாறு தகவல்கள் சேகரித்துக் கொண்டிருந்த நேரத்தில், அவர் நரசிங்காப்பூரில் தங்கியிருந்த வீட்டிற்கு வெளியே சில அடிகள் தூரத்திலேயே கூட தக்கர்கள் சிலரைக் கொலை செய்து புதைத்துவிட்டுச் சென்றிருப்பது தெரிகிறது. காலம் காலமாக எவராலும் தங்களை எவராலும் எதுவும் செய்ய இயலவில்லை என்ற ஆணவமும், தங்களின் புத்திசாலித்தான கொலைமுறைகள் குறித்த பெருமிதமும், எந்தவிதமான தடையமும் இல்லாம பிணங்களைப் புதைத்து வைக்கும் திறமையும் சந்தேகமில்லாமல் தக்கர்களுக்கு துணிவினைக் கொடுத்திருக்க வேண்டும். ஸ்லீமன் வீட்டிற்கருகேயே இந்தச் செயலைச் செய்வதன் மூலம் ஒரு வெளி நாட்டு வெள்ளையனை எளிதாக மிரட்டி, விரட்டிவிடலாமென்று தக்கர்கள் எண்ணியிருக்கக்கூடும்.

 

ஆனால் இதுவே ஸ்லீமனின் எண்ணத்தை மேலும் இறுக்கமாக்குகிறது. இது போன்ற மிரட்டல்களுக்கு அஞ்சாத ஸ்லீமன் மேலும் முனைப்புடன் தக்கர்களின் பழக்க வழங்கங்களையும், செயல்முறைகளையும் சேகரிக்க ஆரம்பிக்கிறார்.

 

தக்கர்களில் பெரும்பாலோர் பரம்பரைத் திருடர்கள். ஹிந்து மற்றும் முஸ்லிம் மதத்தைச் சார்ந்த அவர்கள் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். காளியின் உபாசகர்கள். எல்லாக் காளி உபாசகர்களும் தக்கர்கள் இல்லையென்றாலும், ஏறக்குறைய 5000 தக்கர்கள் இந்தியா முழுவதும் பரவி இருக்கலாம் என்று தோராயமாகக் கணக்கிடுகிறார் ஸ்லீமன். இவர்களைப் போலவே கழுத்தை இறுக்கிக் கொல்லும் ஒரு மத்திய ஆசியக் கலாச்சாரத்திலிருந்து இரண்டு அல்லது மூன்று நூற்றாண்டுகளுக்கு முன் இந்தியாவிற்கும் பரவியிருக்கலாம் என்று நினைக்கிறார்.

 

எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த எல்லோரா குகைக் கோவில்களில் தங்களைப் பற்றி குறிப்புகள் இருப்பதாக தக்கர்கள் நம்புகிறார்கள். ஆனால் அதற்கான ஆதாரம் எதுவும் எல்லோரா கோவில்களில் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் 13-ஆம் நூற்றாண்டில் இறுதியில் டில்லியை ஆண்ட சுல்தானான ஜலாலுதீன் கில்ஜி காலத்தில் ஏறக்குறைய 1000 தக்கர்கள் சுற்றி வளைக்கப்பட்டு வங்காளத்திற்கு நாடு கடத்தப்பட்டார்கள். ஆனால் அதற்கடுத்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் டில்லியை நோக்கி எடுக்கப்பட்ட ஒரு வெளி நாட்டுப் படையெடுப்பை முறியடிக்க பிரபல தக்கரான நிஜாமுதீன் என்பவன் உதவியிருக்கிறான். ஆக தக்கர்கள் இந்தியாவில் அழிக்கவே முடியாத ஒரு சக்தியாக இருந்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது.

 

தக்கர்களின் கொலை செய்யும் முறை மிக எளிமையான ஒன்று. “ருமால்” என்று அழைக்கப்படும் ஒரு பட்டுக் கயிற்றை கொல்லப்படுபவனின் கழுத்தில் இறுக்கிக் கொலை செய்வதுதான் அவர்களின் முறை. அவர்கள் அறியப்படும் “தக்கர்” எனும் வார்த்தையானது ஹிந்தியின் “டக்லானா” (to deceive) என்ற வார்த்தையிலிருந்து பிறந்த ஒன்றாகும். ஏற்கனவே கூறியபடி, அப்பாவி வழிப்போக்கனை மயக்கி, நைச்சியமாகப் பேசி அவர்களின் நம்பிக்கையைப் பெற்று பின் அவர்களைக் கொல்வது அவர்களின் தொழில். அதில் அவர்கள் சூரர்கள்.

 

டாக்டர் ஷெர்வுட் அவரது கட்டுரையில் சொன்னது போல, தக்கர்கள் பணக்கார வியாபாரிகள் போல நடித்து, வழியில் தெரியும் பயணிகளிடம் தாங்களும் அவர்களுடன் கலந்து சென்றால்தான் தங்களுக்குப் பாதுகாப்பு என்று அவர்களை நம்ப வைத்து அவர்களுடன் சேர்ந்து கொள்வார்கள். அக்கால இந்தியாவில் “பிண்டாரி” போன்ற கொள்ளைக் கூட்டங்களின் நடமாட்டம் சாலைகளில் அதிகமாக இருந்ததால், அந்தப் பயணிகளும் இவர்களைத் தங்களுடன் சேர்த்துக் கொள்வதில் எவ்விதமான தயக்கமும் காட்ட மாட்டார்கள். மேலும் இவர்கள் அணிந்திருக்கும் உயர்தர உடைகளும், நடவடிக்கைகளும், மிக மரியாதையான பேச்சும் இவர்கள் மீது சந்தேகம் எதுவும் எழாமல் பார்த்துக் கொள்ளும்.

 

வியாபாரிகள், கோவில்களுக்கு யாத்திரை போகும் பயணிகள், ஏன் காவலதிகாரிகளிடமும் கூட தங்களை இணைத்துக் கொள்ளும் தக்கர்கள் அவர்களுக்குச் சந்தேகம் வராதபடிக்கு பல நாள் அவர்களுடன் பயணம் செய்வார்கள். அதன் மூலமாக சக பயணிகளின் நட்பையும், நம்பிக்கையையும் பெறுவார்கள். ஒருவேளை அந்தப் பிரயாணிகள் சந்தேகம் கொண்டு அவர்களைத் தவிர்த்தால், தக்கர்களின் வேறொரு குழு சிறிது மைல்களுக்கு அப்பால் அந்தப் பிரயாணிகளைச் சந்திக்கும். எப்படியிருந்தாலும், தக்கர்கள் ஒருவனைக் கொல்வது என்று முடிவெடுத்தவுடன் அந்தப் பயணியோ அல்லது பயணக்குழுவோ உயிர் தப்புவது என்பது நடக்கவே இயலாத ஒன்றே.

 

எந்த இடத்தில் வைத்து பயணிகளைக் கொல்வது என்பது தக்கர்களால் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருக்கும். ஒரு சில தோப்புகள், புதர்கள், கிணறுகள் போன்றவை மீண்டும் மீண்டும் அவர்களால் உபயோகிக்கப்பட்டன. தாங்கள் தேர்ந்தெடுத்த இடம் நெருங்கியதும் தக்கர்கள் அந்தப் பிரயாணிகளின் பின்னால் வசதியாக நின்று கொள்வார்கள். பின்னர் ஏதேனும் ஒரு சங்கேத வார்த்தை (“அந்தப் புகையிலையை எடு” போன்ற) உச்சரிக்கப்பட்டவுடன் அவர்கள் செயலில் இறங்குவார்கள். உடனடியாக தங்களின் சுருக்குக் கயிற்றை கொல்லப்பட வேண்டியவனின் கழுத்தில் இட்டுச் சுருக்கிச் சத்தமில்லாமல் கொலை செய்வார்கள்.

 

ஒருவேளை தங்களால் கொல்லப்பட வேண்டியவன் எதிர்த்துப் போராடினால் மற்ற தக்கர்கள் உடனடியாக உதவிக்கு வருவார்கள். ஒருவன் சுருக்குக் கயிற்றை இறுக்க, மற்ற இரண்டுபேர்களும் அந்த வழிப்போக்கனைத் தரையில் அழுத்திப் பிடித்துக் கொள்வார்கள். அல்லது அவன் விரைகளை நோக்கி பலமாக எட்டி உதைத்து அவனைப் போராட விடாமல் செய்து கொல்வார்கள்.

 

குதிரையில் செல்லும் ஒருவனைத் தரையில் வீழ்த்திக் கொல்லும் ஆச்சரியமான திறைமையுடைய தக்கர்களும் இருந்தார்கள். குதிரையின் சேனத்தில் அமர்ந்து செல்பவனை கீழே இழுத்துப் போட்டு அவன் சுதாரிக்குமுன் சாலையில் வைத்தே அவன் கதையை முடிப்பார்கள். சூழ் நிலை எவ்வாறாக இருந்தாலும் அதன் இறுதி முடிவு எப்பொழுது ஒரே மாதிரியானதே. சந்தேகப்படாத ஒரு பயணியர் கூட்டம் தங்களின் சக பயணியர்களுடன் சந்தோஷமாகச் சிரித்துப் பேசிக் கொண்டிருக்கும் அடுத்த கணம் கழுத்து இறுக்கப்பட்டு பிணமாகச் சாய்வார்கள்.

 

*

 

கொலை நடந்து முடிந்த பின்னர் உடனடியாக இறந்தவர்களின் உடமைகளை எடுத்துக் கொண்டு பின்னர் ஏற்கனவே தங்களால் வெட்டி வைக்கப்பட்ட குழிகளில் இறந்தவர்களைப் புதைப்பார்கள். புதைக்குமுன் அந்த உடல்களில் நீண்ட வெட்டுக் காயங்களை ஏற்படுத்துவது தக்கர்களின் வழக்கம். இது உடல் அழுகுவதை துரிதம் செய்து, நரிகள் மற்றும் பிணம் தின்னிக் கழுகுகளால் உடல்கள் தோண்டியெடுக்கப்படுவதைத் தவிர்க்கும். இப்படியாக நடந்து முடிந்த கொலைக்கான தடயங்கள் மறைக்கப்படும்.

 

இதனைத் தொடர்ந்து “டுபோனி” என்னும் பூசையை சர்க்கரைப் படையலுடன் தங்களின் புனிதமான வெட்டறிவாளுக்குப் படைத்து பூசிப்பார்கள். இந்த வெட்டறிவாளை தக்கர்கள் செல்லுமிடமெல்லாம் தங்களுடன் எடுத்துச் செல்வது வழக்கம்.

 

இம்மாதிரியான படுபாதகச் செயல்களை எந்தவிதமான ஈவு இரக்கமில்லாம் செய்யத் தூண்டுவது எது? ஸ்லீமன் தான் தக்கர்களிடமிருந்து அறிந்து கொண்ட கீழ்க்கண்ட தகவல்களை அளிக்கிறார்.

 

“இப் பூவுலகம் ஒரு காலத்தில் “ரக்த்-பிஜ்-தானா” என்னும் பயங்கரமான ராட்சதர்களால் நிறைந்திருந்தது. அந்த ராட்சசர்கள் மனிதர்கள் உருவாகும் போதே அவர்களைத் தின்று வந்தனர். அவர்கள் மிகப் பயங்ககரமான உருவத்தினர். அவர்கள் உலகின் ஆழமான ஒரு கடலில் நின்றால் அது அவர்களின் இடுப்பு அளவிற்கே இருக்கும். அவ்வளவு பெரிய உருவம் படைத்த ராட்சசர்கள் அவர்க்ள்.

 

எனவே ஜனங்கள் காளியை வேண்டி நின்றார்கள். அதன்படி உக்கிர மாகாளியானவள் அந்த ராட்சர்களை வெட்டி வீழ்த்திய போது சிதறிய இரத்தத்திலிருந்து மேலும் பல ஆயிரம் ராட்சதர்கள் முளைத்து வந்து கொண்டே இருந்தார்கள். காளியும் தொடர்ந்து அவர்களை கொன்று கொண்டிருந்தாள். ஒரு கட்டத்தில் அவள் களைப்படைந்து நிற்கும் போது அவள் உடலில் உருவான வேர்வைத் துளிகளிலிருந்து இரண்டு மனிதர்களை உருவாக்கி, அவர்கள் கையில் “ருமாலை” கொடுத்து, அந்த ராட்சசர்களில் கழுத்தை நெறித்துக் கொல்லும்படி கட்டளையிட்டாள். அந்த இரு மனிதர்களும் எல்லா ராட்சசர்களையும் கொன்று முடித்த பிறகு அந்த “ருமாலை” காளியிடம் திருப்பிக் கொடுக்க எத்தனிக்கிறார்கள். காளி அதனை வாங்க மறுத்து, இனிமேல் அவர்களைப் போலில்லாத எல்லா மனிதர்களையும் கொல்லும்படி பணிக்கிறாள்.

 

இந்தக் கலியுகத்திலும் காளி தனது பக்தர்களான தக்கர்களுக்கு உதவும் பொருட்டு, அவர்கள் கொல்லும் உடல்களை அவளே தின்று, அந்த உடல்களை வேறு யாரும் கண்டுபிடிக்க முடியாதபடிக்குத் தடயங்களை அழிக்கிறாள் என்பது தக்கர்களின் நம்பிக்கை.

 

இப்படியான ஒரு சந்தர்ப்பத்தில் கொல்லப்பட்ட பயணி ஒருவனின் உடல் புதைக்கப்படாமல் இருந்திருக்கிறது. குழுவில் புதிதாய்ச் சேர்ந்த தக்கர் ஒருவன் திரும்பிப் பார்க்கையில் காளி அந்த உடலைத் தின்று கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறான். உடலின் பாதியானது காளியின் வாய்க்கு வெளியே தொங்கிக் கொண்டிருந்திருக்கிறது. எனவே காளி கடும் சினம் கொண்டு, இனி தக்கர்கள் தாங்கள் கொல்பவர்களை அவர்களே புதைக்க வேண்டுமென்று உத்தரவிடுகிறாள்.

 

பின்னர் காளி சாந்தமாகி அவளின் ஒரு கோரப்பல்லை வெட்டறிவாள் செய்யவும், இடுப்பெலும்பை கத்தி செய்யவும், அவளது உடையில் கீழ்ப்பகுதியை சுருக்குக் கயிறு செய்து கொள்ளவும் தக்கர்களுக்கு அளிக்கிறாள். மேலும் அவர்கள் கொல்பவர்களின் உடல்களை வெட்டிப் புதைக்கவும் உத்தரவிடுகிறாள்”

 

*

 

தக்கர்களைக் குறித்து ஏராளமான தகவல்களைச் சேகரித்தாலும், ஸ்லைமனினால் தக்கர்களுக்கு எதிரான எந்தவொரு நடவடிக்கையையும் உடனடியாக எடுக்கவியலாத சூழ் நிலை நிலவுகிறது. இதனிடையில் தாங்கள் வணங்கும் காளி தங்களைக் காப்பாள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையுடன் இந்தியாவெங்கும் தங்களின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து செய்து கொண்டு வருகிறார்கள். சில ஆயிரம் பேர்களே இருக்கும் இந்தச் சின்னஞ்சிறு கூட்டம் ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் ஏறக்குறைய 30,000 முதல் 40,000  பேர்களின் மரணங்களுக்குக் காரணகர்த்தாக்களாக இருந்தார்கள்.

 

Series Navigationபுகழ் ​பெற்ற ஏ​ழைகள் 32.உலகின் சிறந்த சிறுக​தையாசிரியராகத் திகழ்ந்த ஏ​ழை……..திருவருட்பா முற்றோதல் நிகழ்வின் அறிக்கை
narendran

பி எஸ் நரேந்திரன்

Similar Posts

6 Comments

  1. Avatar
    ஷாலி says:

    வழிப்பறி கொலை,கொள்ளையர் தக்கர்களைப் பற்றிய செய்திகளை +2 வரலாற்று பாடத்தில் பெண்டிங் பிரபு செய்த சமூதாய சீர்திருத்தத்தில் உள்ளது.இன்று மீண்டும் நினைவூட்ட வேண்டிய செய்திகள் ஏராளம் உள்ளது.படியுங்கள்.

    *-பெண்டிங் பிரபு 1828 ல் தலைமை ஆளுநராக பதவி ஏற்றார்.
    *-இந்திய மக்களின் நலனைப் பேணுவது இந்தியாவை ஆளும் பிரிட்டிஷ்சாரின் தலையாய கடமை என பெண்டிங் எண்ணினார்.
    *-கணவர் இறந்தவுடன் அவரின் சிதையிலேயே மனைவியை தள்ளிக் கொன்றுவிடும் பண்டைய முறை சதி என அறியப் பட்டது. மனிதாபிமானமற்ற இக் கொடுஞ் செயல் கல்கத்தாவில் அதிகம் காணப்பட்டது.
    *-வங்காளத்தில் ஒரே ஆண்டில் 800 நிகழ்வுகள் நடைபெற்றன என்ற செய்தி கேட்டு பெண்டிங் அதிர்ச்சி அடைந்தார்.
    *-1829 டிசம்பர் 4 ல் விதிமுறை 17 ன் படி இவ்வழக்கத்தை பெண்டிங் தடை செய்தார்.இதன் மூலம் சதி என்னும் உடன்கட்டை ஏறும் வழக்கம் ஒழிக்கப்பட்டது.
    *-இச்சட்டம் 1830 ல் சென்னை,பம்பாய் மாகாணங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது.
    *-தக்கர்கள் என்பவர்கள் மத்திய மற்றும் வட இந்தியாவில் இருந்த வழிப்பறி கொள்ளையர்கள் ஆவார்கள்.
    *-இவர்கள் 50 அல்லது 100 பேர் கொண்ட குழுக்களாக செயல்பட்டனர்.வணிகர்களாகவோ,அல்லது யாத்திரீகர்களாகவோ மாறு வேடம் அணிந்து பயணிகளின் கழுத்தை நெரித்து கொன்று அவர் பொருளை கொள்ளை அடிப்பது வழக்கம்.
    *-1830 ல் தக்கர்களுக்கெதிரான நடவடிக்கையை கர்னல் சீலீமோன் தொடங்கினார்.
    *-5 ஆண்டுகளில் 2000 பேர் பிடிபட்டனர்.பெரும்பாலானோர் கொல்லப்பட்டனர்.எஞ்சியவர்கள் அந்தமான்,நிக்கோபார் தீவுகளுக்கு அனுப்பப்பட்டனர்.
    *- இதனால் சர் வில்லியம் சீலீமோன் தக்கீ சீமேன் என்று அழைக்கப்பட்டார்.
    *- ராஜபுதனம்,பஞ்சாப்,மாளவளம்,குஜராத் கட்ச் போன்ற பகுதிகளில் பெண் குழந்தைகளை கொல்லும் வழக்கம் பரவி இருந்தது.பெண்டிங் பிரபு பெண்சிசுக்கொலை வழக்கத்தை ஒழிக்க சட்டங்களை கொண்டு வந்து அது தண்டனைக்குரியதாக அறிவித்தார்.
    http://www.kalvisolai.org/2013/03/blog-post_7103.html

  2. Avatar
    Dr.G.Johnson says:

    இப்படி விசித்திரமான ஒரு கொள்ளைக் கூட்டம் நாட்டில் உலவி வருவது வேடிக்கையும் விசித்திரமும் நிறைந்தது. இந்தக் கொலைகள் இந்தியர்களின் சமூக அல்லது மதம் சார்ந்த பிரச்னையே என்று கூறி பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் அலட்சியம் செய்தது அதைவிட வேடிக்கை! ஆனால் வில்லியம் ஸ்லீமன் எனும் ஆங்கிலேயர் இது குறித்து தீவிரம் காட்டி ஆராய்ந்து எழுதி வைத்தது சிறப்பு மிக்கது. அதைவிட இதை திண்ணை வாசகர்களுக்கு திரு. நரேந்திரன் தந்துள்ளது மேலும் சிறப்பானது. கொலை செய்வதிலும் காளியின் பெயரைச் சொல்லி இந்தக் கயவர்கள் இறுமாந்து போவது கொடுமையிலும் கொடுமை! இது வடிகட்டிய மூடத்தனம்! ” சில ஆயிரம் பேர்களே இருக்கும் இந்தச் சின்னஞ்சிறு கூட்டம் ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் ஏறக்குறைய 30,000 முதல் 40,000 பேர்களின் மரணங்களுக்கு காரணகர்த்தாக்களாக இருந்தார்கள் ” என்று படித்தது மிகுந்த வியப்பையே உண்டுபண்ணுகிறது. இவ்வளவுக்கும் வெறும் கயிற்றை மட்டும் பயன்படுத்தி கழுத்தை நெறித்துக் கொன்றுள்ளனர்! கேள்விப்படாத இதுமாதிரியான திகிலூட்டும் வரலாற்று ஆவணத்தைத் தந்துள்ள திரு. நரேந்திரன் அவர்களுக்கு நன்றி கலந்த பாராட்டுகள்! …அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

  3. Avatar
    paandiyan says:

    இந்தியாவின் முதல் வழிப்பறிக் கொள்ளையன் க்லைவ் தான்

  4. Avatar
    ஷாலி says:

    அன்பு நண்பர் பாண்டியரே! ஏன் இந்த வெறுப்பு,காழ்ப்புணர்ச்சி எந்த செய்தியை சொன்னாலும் முஸ்லிம் கிருஸ்துவ மதத்தவர்களை அர்ச்சனை அவதூறு செய்யாமல் உங்களால் இருக்க முடியவில்லை.இதனால் என்ன நன்மை அடைய போகிறீர்கள்?.பிற மத வெறுப்பு வந்தவுடன் அறிவுக்கண் அடைபட்டுப் போவதை தாங்கள் அறியவில்லையா?
    உங்கள் ஹிந்துஸ்தானின் முதல் வழிப்பறி கொள்ளையன், யார் தெரியுமா?நீங்கள் போற்றும் இராமாயணம் எழுதிய மகரிஷி வால்மீகி முனிவர்தான். கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கல்லெ றியாதீர்கள். பாண்டியனாரிடம் பரந்த வாசிப்பு இல்லை. சரி இப்ப பாட்டை கேட்போம்.

    நெஞ்சில் ஒரு களங்கமில்லை
    சொல்லில் ஒரு பொய்யுமில்லை
    வஞ்சமிலா வாழ்க்கையிலே தோல்வியுமில்லை!
    வஞ்சமிலா வாழ்க்கையிலே தோல்வியுமில்லை!!

    1. Avatar
      IIM Ganapathi Raman says:

      //இதனால் என்ன நன்மை அடைய போகிறீர்கள்?//

      இதற்கான பதிலை கருநாநிதி- செல்வி ஜெயலலிதா அவர்கள் லடாயகளை வைத்து விளக்கலாம்.

      அவர் செய்பவை இவருக்குத் தப்பு; இவர் செய்பவை அவருக்குத் தப்பு. என்று போய்க்கொண்டேயிருந்தால்தான், இருவருக்கும் நீண்ட ஆயுள். கருநாநிதி நூறைத்தாண்டுவார். செல்வி ஜெயலலிதா அவர்கள் எண்பதைதாண்டுவார் என்பது என் கணிப்பு.

      //போற்றுவோர் போற்றட்டும். புழுதிவாரி தூற்றுவோர் தூற்றட்டும். தொடர்ந்து செல்வேன். ஏற்றதொரு கருத்தை எனதுள்ளம் ஏற்றால் எடுத்துரைப்பேன் எவர் வரினும் நில்லேன், அஞ்சேன்.//

      என்று வாழ்பவர்கள் மகிழ்ச்சியாக நீண்ட ஆயுளோடு வாழ்வர். இஃது உளவியலாளர் தேர்ந்த கருத்து.

      மனசாட்சியோடு பிறர் உணர்வுகளை மதித்துவாழம்போது மன நிம்மதி தேயதேய‌, ஆயுள் குறையும். Conscience makes cowards of all. முரட்டு வீரம் இங்கே விவேகமானது நமக்கு இன்பம் தருவதால்.

      //நெஞ்சில் ஒரு களங்கமில்லை
      சொல்லில் ஒரு பொய்யுமில்லை
      வஞ்சமிலா வாழ்க்கையிலே தோல்வியுமில்லை!
      வஞ்சமிலா வாழ்க்கையிலே தோல்வியுமில்லை!!//

      பாடல் தவறு. வஞ்சமிலா வாழ்க்கையில்தான் தோல்வி. வஞ்சித்துவாழ்வோருக்கு நல்லவாழ்க்கை கிடைக்கிறது. ஷாலி, வாழ்க்கையை உற்று நோக்கி எழுதவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *