[சென்ற வாரத் தொடர்ச்சி]
சீதாயணம் படக்கதை -13
நாடகம் : சி. ஜெயபாரதன், கனடா
வடிவமைப்பு : வையவன்
ஓவியம் : ஓவித்தமிழ்
சீதாயணம்
ஓரங்க நாடகத்தின் பின்னுரை
பின்னுரை: பன்முகமுடைய, பல இனங்கள் கொண்ட, பல மதங்கள் உடைய, பல மொழிகள் பேசும், பல மாநிலங்கள் ஒட்டிய பாரத நாட்டில் விடுதலைக்குப் பிறகு மதச் சண்டைகளும், இனச் சண்டைகளும், மாநிலச் சண்டைகளும், மொழிச் சண்டைகளும், கட்சிச் சண்டைகளும் பெருகிக் கட்டுப்படுத்த முடியாமல் காயப் படுத்திப் போவது வருந்தத்தக்க வரலாற்று மைல் கற்களாகும். கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக, இந்தியப் பிரிவினைப் போருக்குப் பிறகு மதப்போரை மறுபடியும் துவக்கி மும்மரமாக நடத்தி வருவது, அவதாரத் தேவனாகத் தவறாகக் கருதப்படும் இராமன் பெயரால் அயோத்தியில் கட்டப் போகும் புதுக்கோயில் என்பதை யாவரும் அறிவோம்! இராமன் பிறந்த புனித பூமியான அயோத்தியாவில் பாப்ரி மசூதி யிடிப்பும், அதே இடத்தில் ஓரடி பிசாகாமல் இந்து கோயில் எடுக்கும் யுத்தமும் ஆயிர வருடப் போராக ஆகும் போக்கு தென்படுகிறது! அரசியல் மேதைகளும், ஆன்மீக ஞானிகளும், ஆட்சி வர்க்கமும் இராமன் அவதாரத் தேவன் அல்லன் என்று பலமுறை பறைசாற்றி, உரையாற்றி, எழுதியும் வந்தால், இந்த தலைமுறையில் முடியா விட்டாலும், அடுத்து வரும் புதிய தலைமுறைகளில் மதப் போராட்டங்கள் படிப்படியாய் குறைவதற்கு வாய்ப்பிருக்கிறது!
இராமனைத் தெய்வீக நாயகனாகப் போற்றுவதற்குரிய எந்த சிறப்பான அம்சமும் அவன் வரலாற்றில் குறிப்பிடுவதற் கில்லை! புத்தரைப் போல, மகா வீரர் போல, இராமன் இந்து மதத்தையோ அல்லது வேறு எந்த மதத்தையோ பரப்பவில்லை! அசோக மாமன்னர் புத்த மதத்தை உலகெங்கும் பரப்பியது போல், இந்துக்கள் தேவனாய் வணங்கிடும் இராமன் இந்து மதத்தை எங்கும் பரப்பவு மில்லை, வளர்க்கவு மில்லை! அவனது வரலாற்றில் எந்த சமயத்திலும் சிந்திக்கத் தக்க, கல் வெட்டில் பொறிக்கத் தகுந்த எந்தப் பொன்மொழிகளோ அல்லது செம்மொழிகளோ பேசியதில்லை! தரணியைக் காக்க வந்த தார்மீக இந்துவென்று இராமன் என்றும் தன்னைக் கருதவில்லை! இராவணன் உள்பட அக்கிரமம் செய்த அரக்கர்களைக் கொன்றதைத் தவிர, வரலாற்று முக்கியத்துவம் பெற்ற எந்த மகத்தான பணிகளையும் இராமன் செய்திருப்பதாகத் தெரிய வில்லை. கிருஷ்ண பகவான் இசைத்ததாகக் கூறும் பகவத் கீதை போல இராமன் இந்துமத வேத நூலெதுவும் எழுதவில்லை! மெய்யாக கிருஷ்ண பரமாத்மா பூமியில் அவதரித்துப் பகவத் கீதையைப் படைத்தார் என்பதும் தர்க்கத்துக்குரிய ஒரு வரலாற்றுத் தகவலே!
உலகிலே மாபெரும் மகாபாரதக் காவியத்தை எழுதிய வியாச முனிவர்தான் அற்புத வேதநூல் பகவத் கீதையை ஆக்கினார் என்பது என் அழுத்தமான கருத்து. பூமியில் அவதரித்து யுத்த களத்தில் பகவத் கீதை படைக்கும் கிருஷ்ண பரமாத்மா, பஞ்ச பாண்டவரில் அர்ச்சுனனுக்கு மட்டும் ஏன் தேரோட்டியாக வர வேண்டும் என்பதும் தர்க்கத்துக் குரியது. வியாச முனிவர் படைத்த உன்னத நூல் பகவத் கீதையைப் பின்னால் வந்தவர், கிருஷ்ண பரமாத்மா எழுதியதாக மாற்றி அந்நூல் பேரும் புகழும் பெற தெய்வீக முலாம் பூசி விட்டர்கள். எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் மெய்ப்பொருள் காண்பது அறிவு, எப்பொருள் எத்தன்மைத் தாயினும் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்று நமக்கு வள்ளுவர் கூறி இருக்கிறார்.
சுமார் மூவாயிரம் ஆண்டுக்கு முன்பு வால்மீகி முனிவர் தன் மூலநூல் இராமாயணத்தில் இராம கதையை முதலில் எப்படி எழுதி யிருந்தார் என்பதை அறிந்து கொள்ள முடியாது! மூலநூல் இராமாயணம் பின்னால் பலரால், பலமுறை மாற்றமாகித் தெய்வீக முலாம் பூசப்பட்டுப் புராணப் பொய்க் கதையாய், உணர்ச்சி ஊட்டாத, உயிரற்ற காவியமாய்ப் போனது. பனை ஓலையில் எழுதப்பட்ட இராமாயணம் இடைச் செருகல் நுழைந்து கலப்பட மாக்கட்ட ஓரு காப்பியம் என்று அரசியல் ஆன்மீக மேதை இராஜகோபாலாச்சாரியார் தானெழுதிய இராமாயண நூலில் கூறுகிறார். தெய்வத்தைத் தொழாமல், கணவனைத் தினமும் தொழுது எழுகின்ற மனைவி பெய்யென்று சொன்ன வுடன் மழை பெய்துவிடும் என்று வள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே எழுதி யிருப்பது, அக்கால இல்லங் களில் ஆட்சி செய்து வந்த ஆணாதிக்க வர்க்கத்தின் விதிகளையும், வரலாற்றையும் காட்டுகிறது! எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்றும் அவரே சொல்லி யிருக்கிறார்.
வீட்டில் வாயைப் பூட்டி வைத்துக் கணவனால் சித்திரவதை செய்யப்படும் மனைவி, கணவன் எப்போது சாவான் என்று கடவுளைத் தினமும் வேண்டிக் கொள்வதில் எந்தத் தவறு மில்லை! தெய்வம் தொழாள் குறளின் உட்பொருள் என்ன வென்றால், அக்காலத்திலும் பெண்டிர் தனித்துவ உணர்ச்சியும், விடுதலை முதிர்ச்சியும், குடும்பத் தலைவனை எதிர்த்திடும் துணிச்சலும் கொண்டிருந்தனர் என்பதே. அந்தக் காலத்துப் பெண்டிரின் அத்தகைய விடுதலை உணர்ச்சியை, தனித்துவத் துணிச்சலைக் கட்டுப்படுத்தவே, வள்ளுவர் ஒரு பெரும் பரிசுக் கொடையை உயர்வு நவிற்சியாக எடுத்துக் காட்டி யிருக்கிறார்! கணவனைத் தினமும் தொழுகின்ற பெண், பெய்யென்றால் மழை மெய்யாகப் பெய்யாதென்று மேதை வள்ளுவருக்குத் தெரியாதா என்ன ?
இராமாயணம், மகாபாரதம் போன்ற நமது புராண கதைகள் அனைத்தும் ஆணாதிக்க வழிபாடுகளையே, பல்லாயிரம் ஆண்டுகளாகப் பறைசாற்றி வருகின்றன! பஞ்ச பாண்டவர் மனைவி திரெளபதியைச் சூதாட்டத்தில் பகடைப் பனையமாக வைத்து இழந்தார்கள்! துரியோதனன் அடிமையான திரெளபதியின் துகிலைத் துச்சாதனன் சபை நடுவே உரித்து அவமானம் செய்ய, ஆனந்தம் அடைகிறான். எல்லாம் இழந்த காலத்தில் நளச் சக்கரவர்த்தி நள்ளிரவில் தூங்கும் மனைவியை விட்டு நழுவிச் செல்கிறான். பொய்யே பேசாத சத்தியவான், மனைவியை நடுத்தெருவில் நிற்க வைத்து விற்கிறான். இந்தியாவில் இன்றைக்கும் கணவன் இறந்ததும், மனைவி மறுமணம் செய்யக் கூடாதென்பதும், கணவன் இறந்தவுடன் மனைவியை உடன்கட்டை ஏற்றி உயிருடன் எரிப்பதும் ஆணாதிக்கப் பரம்பரையின் அடாத செயல்களே!
மனைவி இறந்து சுடுகாட்டுத் தீ அணைவதற்கு முன்பே, புதுப் பெண்ணை மணம் செய்யக் கணவன் திட்டமிடுவதும் ஆணாதிக்க நீதியின் அடாத செயலே! இப்போதும் பெரும்பான்மையான இல்லங்களில் ஆணாதிக்க வர்க்கம் ஆண்டு வந்தாலும், சிறுபான்மை இல்லங்களில் பெண்ணாதிக்கமும் கையோங்கி யுள்ளது! ஆணாதிக்கமோ அல்லது பெண்ணாதிக்கமோ இரண்டில் ஒன்றில்லாத இல்லங்கள் கலியுகத்தில் மிகமிகக் குறைவே.
இராமன் ஆண்ட காலத்தில் வாழ்ந்து, இராம வரலாற்றை அறிந்த வஷிஸ்டர், விஸ்வாமித்திரர், வால்மீகி ஆகிய முப்பெரும் முனிவர்களில் வால்மீகி மட்டும் இராம கதையை ஏன் எழுதினார் என்பது கேட்கத் தக்க ஒரு கேள்வி. மூன்று முனிவர்களில் யார் மூத்தவர், யார் இளையவர், யார் இடைப்பட்டவர் என்பது தெரியவில்லை. அவர்களில் முக்கியமாக வஷிஸ்ட முனிவரே இராமன், பரதன், சத்துருகனன், இலடசுமணன் ஆகிய நான்கு இளவரசர்களுக்கும் குருகுல ஆசிரமத்தில் ஆரம்பக் கல்வி முதல் வேத ஞானக் கல்வியும் புகட்டி, வில்வித்தை, வாள்வீச்சு போன்ற போர்த்துறை திறமைகளைப் பெறவும் பயிற்சி அளித்தவர். அதைப் போன்று ஆசிரமத்தில் சீதாவின் புதல்வர் லவா, குசா இருவருக்கும் ஆரம்பக் கல்வி, வில், வாள் போர்ப் பயிற்சி அளித்தவர், வால்மீகி. இராமனது வயது, லவா, குசா இரட்டையர் வயது வேறுபாடுகளைப் பார்க்கும் போது, வால்மீகி முனியே மூவரிலும் இளையவர் என்பதை ஒருவாறு ஊகிக்கலாம். இராம கதையை வால்மீகி முதலில் தானாகவே எழுத ஆரம்பித்தாரா அல்லது சீதா ஆசிரமத்தில் வந்த பிறகு எழுத ஆரம்பித்தாரா என்பதும் தெரியவில்லை. சீதா ஆசிரமத்தில் இருந்து தன் அவலக் கதை முழுவதையும் கூறிய பின், வால்மீகி இராம கதையில் ஈடுபாடு கொண்டு எழுதத் துவங்கி யிருக்கலாம் என்று கருதவும் இடமிருக்கிறது.
[தொடரும்]
**********
தகவல்
1. Bharathiya Vidhya Bhavan Ramayana By C. Rajagopalachari [1958]
2. Valmiki ’s Ramayana, Dreamland Publications, By: Ved Prakash [2001] and Picture Credit to Kishan Lal Verma
3. Mahabharatha By: Rosetta William [2000]
4. The Wonder that was India By: A.L. Basham [1959]
5. The Ramayana & The Mahabharata By: Romesh C. Dutt [1969]
6. Ramayana [Torchlight Publishing] By: Krishna Dharma [2004]
7. http://jayabarathan.
8. http://www.vallamai.com/?p=
**************
S. Jayabarathan [jayabarathans@gmail.com ] (October 2, 2013) [R-2]
- அறிதலின் தரத்தையும் அளவையும் உயர்த்துவதை நோக்கி… ரவிக்குமாரின் இரண்டு மொழிபெயர்ப்பு நூல்கள்
- தாகூரின் கீதப் பாமாலை – 95 உன் தேசப் பறவை.
- காரைக்குடிகம்பன் கழகத்தின்சார்பில் அகில உலகக் கருத்தரங்கு – கட்டுரை தரநிறைவுநாள்15-1-2014
- திண்ணையின் இலக்கியத் தடம்-15
- ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-15 உபப்லாவ்யம் இருவர் அணிகள்
- ஜாக்கி சான் 22. புது வாழ்வு – நியூ பிஸ்ட் ஆப் புயூரி
- ஜெயந்தி சங்கர் எழுதிய சிறுகதைகளின் முழுத்தொகுப்பு விமர்சன அரங்கு
- உடைபட்ட மகாபாரதம் – ப.ஜீவகாருண்யனின் “கிருஷ்ணன் என்றொரு மானுடன்” நாவலை முன்வைத்து
- தவிர்க்க இயலாத தமிழர்தம் பட்டங்கள்
- நிர்வாணி
- மருத்துவக் கட்டுரை கிள்ளிய நரம்பு
- நீங்காத நினைவுகள் – 27
- திருப்பாவை உணர்த்தும்வழிபாட்டுநெறி
- சில ஆலமரங்களுக்கு விழுதுகள் இல்லை
- புகழ் பெற்ற ஏழைகள் – 39
- என்னை ஆட்கொண்ட இசையும், நானும்
- கிராமத்து ராட்டினம், பூ மலரும் காலம் ஜி.மீனாட்சியின் இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் –
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பூதக்கோள் வியாழனின் துணைக்கோள் ஈரோப்பாவில் நீர் எழுச்சி ஊற்றுகள் முதன்முறைக் கண்டுபிடிப்பு
- மருமகளின் மர்மம் 9
- சீதாயணம் நாடகப் பின்னுரை – படக்கதை – 13
- கண்ணீர் விட்டோம் வளர்த்தோம்
- பெண்மனதின் அரூப யுத்தம் ‘அம்மாவின் ரகசியம்’
- இடையனின் கால்நடை
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 55 ஆதாமின் பிள்ளைகள் – 3
- தாயகம் கடந்த தமிழ் – அனைத்துலக மாநாடு ஜனவரி 20, 21, 22, 2014 ஆகிய நாள்களில் கோயம்புத்தூர் என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில்
- விளக்கு விருதுக்குரியவராக எழுத்தாளர் பெருமாள் முருகன்