“சைவ உணவு உடல்நலனுக்கு நல்லது, அசைவ உணவு உடல்நலனுக்கு கெட்டது” எனும் மூடநம்பிக்கை சைவர்கள் மனதில் ஆழமாக வேரூன்றி உள்ளது. இதற்கு பல காரணங்கள் உள்ளன. மேலைநாட்டவர் இந்தியரை விட குண்டாக இருப்பதை பொதுவாக காணலாம். இதற்கு மாமிசத்தை தவிர என்ன காரணம் சொல்லமுடியும்?
அது தவிர்த்து சுகர், பிரஷர் என எந்த வியாதிக்கு மருத்துவரிடம் போனாலும் அவர்கள் கூறும் முதல் அறிவுரை “சிகப்பு மாமிசம் குறைவாக சாப்பிடுங்கள்” என்பதே. மாமிசத்தை விட முடியாதவர்களுக்கு லீன் சிக்கன் என சொல்லி கொழுப்பெடுத்த, தோல் அகற்றிய சிக்கனை சாப்பிட பரிந்துரைப்பார்கள். மாமிசம் முழுக்க கொலஸ்டிரால்..சைவ உணவு எதிலும் கொலஸ்டிரால் கிடையாது, அதனால் சைவ உணவுதான் உடலுக்கு நல்லது. இப்படிதான் பல சைவர்களும் நம்பி வருகிறார்கள்.
முட்டை சைவமா, அசைவமா எனும் வாதம் ஒருபுறம் நடக்க முட்டையில் உள்ள கொலஸ்டிரால் அளவற்ற தீங்கு விளைவிப்பது என சைவர்கள் பலரும் நம்புகிறார்கள். முட்டை உண்ணும் சைவர்கள் கூட முட்டையின் வெள்ளைகருவை மட்டுமே உண்கிறார்கள். அடுத்ததாக ஒரு உயிரை கொன்று உடல் வளர்ப்பதா என்பது போன்ற அறம்சார்ந்த சிந்தனைகள் ..இவை எல்லாம் சேர்ந்து சைவர்களை ஒரு கற்பனை உலகில் ஆழ்த்தியிருக்கிறது. அசைவம் உண்பவர்கள் உடல்நலனை கெடுத்துகொள்பவர்கள் என்பது மாதிரி உண்மைக்கு புறம்பான நம்பிக்கைகளை கொண்டிருக்கிறார்கள்.
30 ஆண்டுக்கு முந்தைய பழுதுபட்ட விஞ்ஞானம், ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய ஜைன மதம் சார்ந்த அறநெறிகள், 20 ஆண்டு பழைய மெடிக்கல் காலேஜ் சிலபஸ், பன்னாட்டு கம்பனிகளின் லாபிகள்,,இவையே இந்த நம்பிக்கைகளுக்கு காரணம். சைவ உணவு இயற்கைக்கு முரணானது மட்டுமின்றி, பல்லுயிர் பெருக்கம், புவிநலன், உடல்நலன் என பல வகைகளில் உலகுக்கும், மனிதர்களுக்கும், மிருகங்களுக்கும் கேடு விளைவிப்பதாகும். அதன் தீமைகளையும், கற்பனைகளையும் ஆராய்வோம்.
மனித இன வரலாற்றை ஆராய்ந்தால் மனிதன் இறைச்சி உண்ணாத காலகட்டமே நம் பரிணாம வரலாற்றில் கிடையாது. கிட்டதட்ட 34 லட்சம் ஆண்டுக்கு முந்தைய லூஸி எனும் நம் மூதாதையின் எலும்புக்கூடு தான் நமக்கு கிடைத்ததிலேயே மிக தொன்மையான எலும்புகூடு. லூஸி மாமிச பக்ஷிணி. லூஸியின் எலும்புகூடு கிடைத்த பகுதிகளில் எலும்பில் இருந்து மாமிசத்தை கற்களாக லூஸி சுரண்டு உண்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

இப்படி 3.4 மில்லியன் ஆண்டுக்கு முன்பு துவங்கும் நம் மனித இனத்தின் பரிணாம வளர்ச்சி வரலாறு பின்பு ஹோமோ எரெக்டஸ், ஹோமோசாபியன்ஸ், நியாண்டர்தால் என சென்று நவீன நியோலிதிக் மனிதனில் வந்து நிற்கிறது. இந்த 3.4 லட்சம் ஆண்டுகளில் குரங்கின் மூளைபகுதி பெரிதானது, வால் விழுந்தது, நாலு காலில் இருந்து இரு கால்களில் நடக்க துவங்கினோம், கற்கருவிகளை செய்தோம், நெருப்பை கண்டுபிடித்தோம்..இப்படி குரங்கில் இருந்து மனிதனான இத்தனை லட்சம் ஆண்டுகளில் எந்த காலகட்டத்திலும் மனிதன் சைவ உணவுவழக்கத்தை கைகொண்டது கிடையாது. நம் காலரி தேவைகளில் பெரும்பகுதியை மாமிசமே பூர்த்தி செய்தது. அதுவும் இன்றைய மருத்துவர்கள் உடல்நலனுக்கு கெடுதல் என சொல்லும் கொழுப்பும், கொலஸ்டிராலும் நிரம்பிய சிகப்பு மாமிசம் தான் நம் பெரும்பகுதி காலரி தேவைகளை பூர்த்தி செய்தது. மிகபெரும் சைஸில் இருந்த கம்பளியானை, காட்டேருமை போன்ற மிருகங்களை தான் ஆதிமனிதன் வேட்டையாடி உண்டான். இன்றைக்கும் பூமியெங்கும் பரவி இருக்கும் எஸ்கிமோ, சான் புஷ்மன் போன்ற தொல்பழங்குடிகளில் ஒரே ஒரு குடி கூட சைவ உணவுவழக்கத்தை கொண்டிருப்பது கிடையாது.
ஆக குரங்காக இருந்தவனை மனிதனாக்கிய உணவு அசைவம், குறிப்பாக சிகப்பு மாமிசம். அது எப்படி திடீர் என நமக்கு கெடுதலானதாக ஆகிவிடும்? ஆதிமனிதன் எக் ஒய்ட்ஸை தான் சாப்பிட்டானா? முட்டையை கொலஸ்டிரால் என சொல்லி உண்ணாமல் விட்டானா? இன்றைய சைவர்கள் உண்ணும் அரிசி, பருப்பு, கோதுமை, பீன்ஸ், பயத்தம்பருப்பு, பாசிபருப்பு, ஸ்கிம் மில்க், பச்சைபட்டாணி…இது எல்லாம் என்னவென்றே 10,000 ஆண்டுக்கு முன்பிருந்த மனிதனுக்கு தெரியாது. அன்று அவன் உண்டது மாமிசம், சில காய்கறிகள், கொட்டைகள், விதைகள், சில கிழங்குகள் மட்டுமே. அதிலும் இன்று இருப்பதுபோல் வருடம் முழுக்க தக்காளி, காலிபிளவர் கிடைக்கும் என்ற நிலை எல்லாம் அன்று இல்லை. காய்கறிகள் ஒரு குறிப்பிட்ட மாதம் மட்டுமே முளைக்கும். மீதி நாட்களில் மாமிசம் மட்டுமே உணவு தேவையை பூர்த்தி செய்தது.
சிங்கத்தின் இயற்கை உணவு மாமிசம். ஆயுள் முழுக்க மூன்று வேளையும் அதனால் மாமிசத்தை மட்டுமே உண்டு உயிர்பிழைக்க முடியும். அதே போல் மனிதன் முற்றிலும் மிருக உணவுகளை தவிர்த்துவிட்டு மூன்று வேளையும் தாவர உணவுகளை மட்டுமே உண்டு உயிர்பிழைக்க முடியுமா? முடியாது. தாவர உணவுகளில் கீழ்கண்ட மூல சத்துக்கள் கிடையாது.
பி12 வைட்டமின். இது எந்த தாவர உணவிலும் கிடையாது. பி12 முட்டை, மாமிசம், மீன், பால் போன்ற மிருக உணவுகள் மூலம் மட்டுமே கிடைக்கும். பால் சைவ உணவுதானே என கேட்கலாம். மாட்டுப்பாலை மனிதன் உண்ணத்துவங்கியது 4000 ஆண்டுக்கு முன்பே. ஒரு பரிணாம விபத்தால் மனிதரில் சிலருக்கு இருந்த லாக்டோஸ் அலர்ஜி அகன்றது. ஆனால் இன்றும் சீனாவில் 90% மக்களுக்கு லாக்டோஸ் அலர்ஜி உண்டு. பெருமளவு சீனர்கள் பாலையும், சீஸ் போன்ற பொருட்களையும் உண்ணுவது கிடையாது. சீனர்கள் சைவ உணவு வழக்கத்தை கைகொண்டால் அவர்கள் பி12 தட்டுபாட்டால் மரணிக்க வேண்டியதுதான். சீனர்கள் தவிர்த்து உலகின் பல நாடுகளில் பல இனத்து மக்கள் லக்டோஸ் அலர்ஜியுடன் இருப்பதை காணலாம். ஆக சைவ உணவு மட்டுமே கைகொள்பவர்கள் பி12 தட்டுபாட்டால் உடல்நலன் பாதிக்கபட்டு மரணமும் அடைய நேரும். இந்திய சைவர்கள் பால் சாப்பிட்டு வைட்டமின் பி12 தட்டுபாட்டில் இருந்து தப்பலாம் என வைத்துகொள்ளுங்கள். ஆனால் 4000 வருடங்களுக்கு முந்தைய இந்திய சைவர்கள் என்ன செய்திருப்பார்கள்? ஆண்டவன் என்ன 34 லட்சம் ஆண்டிலிருந்து கிமு 6000 வரை மனிதர்கள் அசைவமாக இருக்கவேண்டும், அதன்பின் சைவமாக இருக்கவேண்டும் என திட்டமிட்டானா?
வைட்டமின் ஏ: இதுவும் எந்த தாவர உணவிலும் கிடையாது. ஈரல், முட்டை, மிருகங்களின் கண், காட்லிவர் மீன் எண்ணெய் போன்ற அசைவ உணவுகளில் மட்டுமே வைட்டமின் ஏ கிடைக்கும். காரட்டில், கீரையில் வைட்டமின் ஏ இருப்பதாக சைவர்கள் தவறாக நம்புகிறார்கள்.
வைட்டமின் ஏவின் மிருக வடிவம் ரெடினால். தாவர வடிவம் பீடா காரடின். நாமும் மிருகங்கள் தான் என்பதை நினைவில் கொண்டால் நமக்கு ரெடினாலே முக்கியம் என்பது தெரியும். பீடா காரடினை சில நிபந்தனைகளுக்குட்பட்டு உடலால் வைட்டமின் ஏவாக மாற்ற முடியும். ஆனால் குழந்தைகள், டயபடிஸ் உள்ளவர்கள், தயரய்டு சுரப்பியில் பிரச்சனை உள்ளவர்கள், கடும் உடல் உழைப்பில் ஈடுபடும் உழைப்பாளிகள் இவர்களால் பீடா காரடினை வைட்டமின் ஏவாக மாற்ற முடியது. ஆக 8, 9 வயது சைவகுழந்தைகள் காரட் சாப்பிட்டு வைட்டமின் ஏ கிடைக்கிறது என நம்பினால் ஏமாந்து தான் போவார்கள். கிலோகணக்கில் குழந்தைகள் காரட் உண்டாலும் பலன் கிடையாது. பாலில் சிறிதளவு வைட்டமின் ஏ உண்டு. ஆனால் உடலுக்கு அன்றாடம் தேவையான அளவு வைட்டமின் ஏவை பாலால் கொடுக்க முடியாது.
மேலும் வைட்டமின் ஏ கொழுப்பில் கரையும் வைட்டமின். ஸ்க்கிம் மில்க் என்ற பெயரில் பாலில் இருக்கும் கொழுப்பை எடுத்துவிட்டு குடித்தால் அதில் உள்ள வைட்டமின் ஏ உடலில் சேராது. வைட்டமின் ஏ பற்றாகுறை கண்பார்வை கோளாறுகள், மாலைக்கண் வியாதி ஆகியவற்றை உருவாக்கும்.
வைட்டமின் டி3: எந்த தாவர உணவிலும் டி3 கிடையாது. வைட்டமின் டியில் இருவகை உண்டு. டி2, டி3. டி3 கிடைக்க சிறப்பான வழி சூரிய ஒளி. சூரிய ஒளி உடலில் பட்டால் உடல் அதில் இருந்து டி3 தயாரித்து கொள்ளும். உணவு மூலம் டி3 பெறவேண்டுமெனில் முட்டை, மீன், மாமிசம், பால் போன்றவற்றில் மட்டுமே டி3 உண்டு.
டி3யை உணவின் மூலம் பெறாமல் சூரிய வெளிச்சத்தின் மூலம் பெற்றுகொள்வோம் என சைவர்கள் நினைக்கலாம். ஆனால் புதுடில்லிக்கு வடக்கே நீங்கள் இருந்தால் வருடத்தில் ஏழெட்டு மாதம் வைட்டமின் டி சூரிய ஒளியில் கிடைக்காது. டில்லிக்கு வடக்கே இருப்பவர்கள் சைவ உணவு வழக்கத்தை கடைபிடித்தால் மரணம் அடையவேண்டியதுதான். ஆண்டவன் என்ன காஷ்மிரிலும், திபெத்திலும் மனிதன் வாழ கூடாது என திட்டமிட்டானா?
சூரிய வெளிச்சம் ஏராளமாக கிடைக்கும் இந்திய திருநாட்டிலும் 80% மக்கள் வைட்டமின் டி குறைபட்டால் அவதிபடுவதை காணலாம். இதற்கு பல காரணங்கள் உள்ளன. ஆனால் வருடம் ஏழெட்டு மாதம் சூரியனையே காண இயலாத நார்டிக் நாடுகள், அலாஸ்கா முதலான பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் வைட்டமின் டி தட்டுபாடு இல்லை. காரணம் அவர்கள் உண்ணும் கொழுப்பு நிரம்பிய கடல்மீன், சீல், வால்ரஸ், சால்மன் முதலான மீன்கள் அவர்களுக்கு தேவையான வைட்டமின் டியை ஏராளமாக கொடுத்துவிடுகின்றன. ஆக சைவ உணவுவழக்கம் சூரிய வெளிச்சம் ஏராளமாக இருக்கும் நம் நாட்டு மக்களையும் வைட்டமின் டி3 தட்டுபாட்டில் இருந்து காக்கவில்லை.
பாலில் இருக்கும் வைட்டமின் டி3 அளவு போதாது. வைட்டமின் ஏ, டி3க்காக முழுக்க, முழுக்க பாலை மட்டுமே நம்பி இருந்தால் ஆபத்தே. பாலையும் பருக முடியாத லாக்டோஸ் இன்டாலரன்ஸ் உள்ள சீனர்கள் எப்படி சைவர் ஆவது எப்படி சாத்தியம்?
இதுபோக சைவ பெண்கள் அனிமியா எனும் இரும்புசத்து பற்றாகுறையால் அவதிபடுவதை காணலாம். சைவர்களுக்கு உணவின் மூலம் இரும்புசத்தை அடைய முயல்வது மிக கடினம். காரணம் சைவ உணவுகள் அனைத்திலும் நான்-ஹெமே வகை இரும்புசத்து உள்ளது. இவற்றை உடல் கிரகிப்பது மிக கடினம். உதாரணம் கீரையில் இரும்புசத்து அதிகம். ஆனால் கீரையில் உள்ள ஆக்சலேட்டுகள் அந்த இரும்பை உடல் கிரகிப்பதை தடுத்துவிடும். கீரையில் உள்ளதில் 2% அளவேனும் இரும்பு உடலில் சேர்ந்தால் அதிசயம்.
உலர்திராட்சை, பேரிச்சை, கோதுமை முதலானவற்றுக்கும் இதே நிலைதான். பேரிச்சையில் இரும்பு அதிகம் என பலரும் நம்பி வந்தாலும் அதில் உண்மை இல்லை. தினம் நூறு பேரிச்சை பழம் உண்டால் மட்டுமே 19- 50 வயது பெண்ணுக்கு போதுமான இரும்புசத்து கிடைக்கும். ஆனால் அதிலும் கிரகிக்கபடும் இரும்பின் சதவிகிதம் மிக குறைவு
அசைவர்கள் முட்டை, சிக்கன், ஈரல் முதலானவற்றில் போதுமான அளவு இரும்புசத்தை எளிதில் அடையலாம். உதாரணம் 4 முட்டை உண்டால் அதில் 2.4 கிராம் அளவு எளிதில் கிரகிக்கபடும் ஹீமே வகை இரும்புசத்து கிடைக்கும். நூறுகிராம் ஈரலில் ஒரு நாளைக்கு தேவையானதில் 130% இரும்புசத்து கிடைக்கும். அசைவ உணவுகளில் உள்ள இரும்புசத்து எளிதில் கிரகிக்கபட காரணம் அது ஹீமோக்ளோபின் வடிவில் இருப்பதுதான்.
சைவ உணவுவழக்கத்தை கைகொள்ளூம் பெண்கள் அனிமியாவால் ஏராளமாக பாதிக்கபடுவார்கள். இந்திய பெண்களில் சுமார் மூன்றில் இரு பங்கு பெண்களுக்கு அனிமியா பாதிப்பு உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. மாதவிலக்கு/பிள்ளைபேறு முதலான காலங்களில் இரும்புசத்தின் தேவை அதிகரிக்கும்.
வைட்டமின் மாத்திரை உண்டால் போதாதா? இதெல்லாம் ஒரு பிரச்சனையா என நினைக்கலாம். ஆனால் மனித உடல் மாத்திரைகளில் இருக்கும் சிந்தடிக் வைட்டமின்களை ஏற்றுகொள்வது கிடையாது. பல வைட்டமின் மாத்திரைகளில் இருக்கும் வைட்டமின்கள் மனித உடலால் பயன்பட இயலாத வடிவில் இருப்பவை. இயற்கையாக உணவில் கிடைக்கும் வைட்டமின்களே மனிதனுக்கு நன்மையளிப்பவை.
சைவ உணவின் உடல்நலன் சார்ந்த சிக்கல்களில் நூற்றில் ஒரு பகுதியே மேலே இருப்பது. அடுத்த பகுதிகளில் மாமிச உணவு உடலுக்கு கெடுதலானதா, கான்சரை வரவழைக்க கூடியதா என்பதையும் சைவ உணவு வழக்கத்தால் வரும் மேலும் பல சிக்கல்களையும் ஆராய்வோம்.

- பாலஸ்தீன் என்ற நாடோ மொழியோ பண்பாடோ என்றுமே இருந்ததில்லை.
- மெய் வழி பயணத்தில் பெண்ணுடல் 4 – அக்கா மகாதேவி
- ஒரு பரிணாமம்
- சிட்னியில் சங்கத் தமிழ் மாநாடு – அக்டோபர் 11 , 12 – 2014
- முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட நெடுங்கதை) படக்கதை – 15
- நூல் மதிப்புரை – அழிந்த ஜமீன்களும் – அழியாத கல்வெட்டுக்களும் ஆய்வு நூல்
- சுருதி லயம்
- தமயந்தியம்மாள் இல்லம், 6, பிச்சாடனார் தெரு
- மும்பைக்கு ஓட்டம்
- பேசாமொழி 19வது இதழ் வெளிவந்துவிட்டது…
- சைவ உணவின் தீமையும், அசைவ உணவின் மேன்மையும்- 1
- ஹாங்காங் தமிழ் மலரின் ஜூலை மாத இதழ்
- கவிதைகள்
- செந்நிறக் கோளை நெருங்கிச் செல்லும் இந்திய விண்ணுளவி மங்கல்யான்
- தொடுவானம் 27. கலைந்த கனவுகள்
- நூல் அறிமுகம்: ஒரு சாமானியனின் சாதனை : இளங்கோவன் நூல்
- ஆங்கில Ramayana in Rhymes
- அறிவுத்தேடல் நூல் அறிமுக மின்னஞ்சல் இதழ் 27
- மலேசியன் ஏர்லைன் 370
- பாவண்ணன் கவிதைகள்
- அவலமும் அபத்தமும் – ஸ்ரீதரனின் சிறுகதைகள்
- A compilation of three important BANNED plays by bilingual poet-playwright-director Elangovan
- ஏற்புரை
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 85
- சிட்டுக்குருவிகளால் உன்னை முத்தமிட்டேன்.