வல்லானை கொன்றான்

This entry is part 1 of 24 in the series 31 ஆகஸ்ட் 2014

எல்லே இளங்கிளியே! இன்னும் உறங்குதியோ?
      சில்லென் றழையேன்மின் நங்கைமீர் போதர்கின்றேன்
      வல்லையுன் கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும்
      வல்லீர்கள் நீங்களே நானேதா னாயிடுக
      ஒல்லைநீ போதா யுனக்கென்ன வேறுடையை
      எல்லாரும் போந்தாரோ போந்தார்போந் தெண்ணிக்கொள்
        வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றாழிக்க
      வல்லானை மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்.
திருப்பாவையின் பதினைந்தாம் பாசுரம் இது. இப்பாசுரம் அருமையான நாடகப் பாணியில் அமைந்துள்ளது. பாசுரம் முழுக்க உரையாடலாகவே அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடத் தக்க ஒன்றாகும். நம்முடைய புராண காலத்திலிருந்தே கேள்வி கேட்டு பதில் சொல்வதாகத்தான் பல விஷயங்கள் பேசப்படுகின்றன.
ப்ருகு மகரிஷி தன் தந்தையாரான வருணனிடத்தில் போய் பரப்ரம்மம் என்றால் என்ன என்று கேட்டார். அவர் சொன்ன பதில் மூலம் பல நல்ல அரிய விஷயங்கள் கிடைத்தன.
மைத்ரேயர் தன் குருவான பராசர மகரிஷியிடம் கேள்வி கேட்க விஷ்ணு புராணம் வந்தது.
பாண்டவர்கள் விராட நாட்டில் அஞ்ஞாத வாசம் செய்தபோது எப்படி இருந்தார்கள் என்று ஜனமேஜயன் வைசம்பாயனரிடம் கேட்க மகாபாரதம் உருவானது.
சஞ்சயன் திருதாஷ்டிரனிடம் கேட்டதிலிருந்துதான் பகவத் கீதை உருவானது. அதேபோல வால்மீகி நல்ல குணவான் யார் என்று நாரதரிடம் கேட்க இராமாயணம் பிறந்தது. அதேபோல இப்பாசுரமும் கேள்வி பதில் பாணியிலியே அமைந்துள்ளது.
மேலும் இப்பாட்டே திருப்பாவையாகிறது என்பார்கள். பல பாகவத விஷயங்கள் இப்பாசுரத்தில் சொல்லப்படுகின்றன. பிற்பாடு சிற்றஞ் சிறுகாலே எனும் 29 ஆம் பாசுரத்தில் பகவத் விஷயங்களைப் பார்க்கலாம்.
ஆயர் பாடிப் பெண்கள் அனைவரையும் காண விரும்பும் பெண்ணொருத்தியை இப்பாட்டில் எழுப்புகிறார்கள். எல்லாரும்போந்தாரோ என்று அவள் கேட்பதிலிருந்து ஸ்ரீ வைஷ்ணவ கோஷ்டியைக் காண விரும்பியவள் என்பதும் புலனாகிறது.
முதலில் உரையடலை அனுபவித்துவிட்டுப் பிறகு பாசுர உள்ளர்த்தங்களைப் பார்க்கலாம்.
இவர்கள் : என்ன ஆச்சரியம்? இன்னமும் நீ உறங்குகிறாய்?
அவள் :   [ கோபமாக ] இப்படி வந்து சில் சில்லென்று கூப்பிடாதீர்கள். பெண்களே இதோ வருகின்றேன்.
இவர்கள் :  ஆமாம். பழைய நாள் தொட்டே உன் பேச்செல்லாம் எங்களுக்குத் தெரியும். நாங்கள் நீண்ட நாள்களாகப் பார்த்து வருகிறோம். இப்படிச் சொல்வாய். ஆனால் வரமாட்டாய். நீ திறமையானவள்
அவள்:  நான் அந்த மாதிரி குணம் படைத்தவள் இல்லை. நீங்கள்தாம் அதுபோல குணம் கொண்டவர்கள். சரி போகட்டும். தப்பு செய்தவள் நானாகவே ஆகட்டும்.
இவர்கள் : ஒப்புக்கொண்டாயல்லவா? அஞ்சு லட்சம் பெண்களுக்கிடையில் உனக்கு மாத்திரம் என்ன தனியாய் வேறு பாடு? சீக்கிரம் எழுந்து வா.
அவள் ; பாகவத கோஷ்டியினர் அனைவரும் வந்து விட்டார்களா?
இவர்கள் ; வந்து விட்டார்கள் உனக்குச் சந்தேகமாக இருந்தால் நீயே வெளியில் வந்து எண்ணிக் கொள். மேலும் உன்னை எதற்குக் கூப்பிடுகிறோம் தெரியுமா? குவயலாபீடம் என்ற யானையைக் கொன்றவனை, மிகவும் ஆச்சரியமானவனைப் போற்றிப் பாடுவதற்காகத்தான் எழுப்புகிறோம்.
இதற்கு முந்திய பாசுரத்தில் பங்கயக் கண்ணானைப் பாடேலோ என்கிறார்கள். உடனே அவள் பாடத் தொடங்குகிறாள். அவள் குரல் மிகவும் இனிமையாக இருக்கிறது. அதைக் கேட்டு இவர்கள் ஆச்சரியப் படுகிறார்கள். எல்லே என்கிறார்கள். இளங்கிளியைப் போலன்றோ நீ பாடுகிறாய்? என்கிறார்கள்.
வெளியே இருப்பவர்கள் கிளியைப் போன்றவர்கள்; கிளியானது பேச்சினிமைக்கும் நிறத்துக்கும் ஒப்பாகுமே தவிர பருவத்துக்கு ஒப்பாகாது. ஆனால் அவளோ இளம் பருவத்தாள்; எனவே அவள் இளங்கிளி ஆகிறாள்.
திருவழுந்தூர் பெருமானிடம் காதல் கொண்ட தலைவி கிளியைப் போல பிதற்றுவதாக திருநெடுந்தாண்டகத்தில் ஆழ்வார் பாடுவார்.
”கல்லுயர்ந்த நெடுமதில்சூழ் கச்சி மேய
களிறென்றும் கடல்கிடந்த கனியே என்றும்
அல்லியம்பூ மலர்ப்பொய்கைப் பழன வேலி
அணியழுந்தூர் நின்றுகந்த அம்மான் என்றும்
மென்கிளிபோல் மிகமிழற்றும் என்பேதையே” என்பது அவர் பாசுரம்.
சீதாபிராட்டி “தளிர் நிறத்தால் குறைவில்லாத் தனிச்சிறையில்
விளப்புற்ற கிளிமொழியாள்……………………..’
என்று போற்றப் படுவார். ஆனால் இவளோ பருவத்தால் அவரையும் விட விஞ்சியிருக்கிறாள். எனவே இவள் இளங்கிளி. மேலும் பெண் பாவத்தால் பாடிய ஆழ்வார்கள் எல்லாரும் கிளிகள். இவள் இளங்கிளி. அஞ்சு குடிக்கொரு சந்ததியான இவள் இளங்கிளி.
ஆனால் அவள் இளங்கிளியே என அழைத்ததை ஏளனமாக அழைத்ததாக எண்ணிக் கொண்டாள். அது ஓர் இகழ்ச்சிக் குறிப்பு எனவும் எண்ணினாள். மேலும்,
“நாங்களெல்லாம் கிருஷ்ணனைக் காணாமல் மாசுடம்போடு இருக்கிறோம். தலை உலறி வாய்ப்புறம் வெளுத்து இருக்கிறோம். அதேபோல் இருக்க வேண்டிய நீ இளங்கிளியைப் போல பசுகு பசுகென்றிருக்கும் உடம்பையும் சிவந்த வாயையும் கொண்டிருக்கிறாயே”
என்று ஏசுவதாக எண்ணி இவர்களோடு நாம் பேசக்கூடாது என்று சும்மா கிடந்தாள். அவர்கள்,
”நீ இன்னும் உறங்கலாமா? நாங்களெல்லாம் வந்த பின்னும்  உறங்கலாமா? கண்ணனைப் பாராததாலும் உன்னைக் காணாததாலும் துவண்டிருக்கும் நாங்கள் எல்லாரும் வந்த பின்பும், எங்களின் சொல்லெல்லாம் கேட்ட  பின்பும் நீ உறங்கலாமா?’ என்று கேட்கிறார்கள்.
”நம்மை இளங்கிளியே என அழைத்தால் கண் வளருதியோ என்று தானே கேட்கவேண்டும். ஆனால் இவர்கள் இன்னும் உறங்குதியோ என்கிறார்களே. மேலும் நாம் ‘பங்கயக் கண்ணானை’ என்று பெருமாளைப் போற்றும் போது இவர்கள் இடையூறு செய்யலாமா?” என்றெல்லாம் எண்ணிய அவளுக்குக் கோபம் வந்தது. அதனால் ’சில் சில்லென்று குத்தும்படிக் கூப்பிடாதீர்கள்’ என்றாள்.
ஏனெனில் பகவத் அனுசந்தானத்திற்கு இடையூறு நிகழ்ந்தால் பொறுக்கமுடியாது. ஒருமுறை திருவரங்கத்தில் திருப்புன்னை மரத்தடியில் திருக்கோஷ்டியூர் நம்பிகள், பெரிய நம்பிகள் முதலானோர் திருவாய்மொழிக்கு அர்த்த வியாக்கியான்ங்கள் செய்து கொண்டிருக்க அப்போது செல்வர் எழுந்தருளினாராம். அதுவே அவர்களுக்கு இடையூறாக சத் விஷ்யம் பேசுகையில் என்ன குறுக்கீடு என்றார்களாம். வெளியே இருப்பவர்கள்,
“எங்களைக் காணபதும் எங்கள் பேச்சைக் கேட்பதும் உனக்குக் குறுக்கீடாக இருப்பது உன் பெருமையாலன்றோ” என்கிறார்கள்.
அவள் ‘நீங்களெல்லாம் குறைவில்லாதவர்கள்; உங்கள் எல்லாருக்கும் என் கும்பிடு; உங்கள் திருவாயைச் சற்று மூடுங்கள்; இதோ நான் வருகிறேன்” என உரைக்கிறாள்.
அதைக் கேட்ட இவர்கள், “ ஆமாம், ஆமாம், உன் சமாசாரம் எல்லாம் எங்களுக்குத்தெரியும்; நீ இப்படித்தான் சொல்வாய்; ஆனால் வராமல் ஏமாற்றுவாய்; நாங்கள் உன்னைப் பல நாள்களாகப் பார்த்து வருகிறோம்” என்று சொல்கிறார்கள்.
உள்ளே இருப்பவள், “நீங்கள்தானே இன்னம் உறங்குதியோ?” என்றும் ’வல்லை உன் கட்டுரைகள்’ என்றும் கடும் சொற்கள் பேசினீர்கள். எனவே ”நீங்கள்தாம் வல்லவர்கள்” என்றாள். இவர்கள் ‘நீதானே சில்லென்றழையேன்மின்” என்று சீறினாய். எனவே ’நீதான் வல்லவள்’ என்றார்கள்.
உடனே அவள் ‘நானேதானாயிடுக’ என்கிறாள். இதுதான் இப்பாசுரத்தின் உயிர்நாடி என்பார்கள். அவள் பாகவதர்களுடன் வாதம் செய்யக் கூடாது என்று உணர்கிறாள். எனவே “நான்தான் தப்பு செய்தவள்; இத்தனைக் குற்றத்திற்கும் ஆளானவள்; அவசரப் பட்டுவிட்டேன்; கோபித்துக் கொள்ளாதீர்கள்”என்கிறாள்.               இவ்வுலகத்தில் பெரும்பாலும் ஒருவர் ஏதேனும் தப்பு செய்து விட்டால் அதன் பழியைப் பிறர் மீது போடுவதே வழக்கம். பிறர் செய்த தவறையும் தன் மீது போட்டுக் கொண்டு ஏற்றுக் கொள்பவர்கள் மிகவும் குறைவு. ஆனால் ‘நானேதான் ஆயிடுக’ என்று எல்லாவற்றிற்கும் தானே பொறுப்பேற்றுக் கொள்வதுதான் ஸ்ரீ வைஷ்ணவ லட்சணமாகும் என்பர்.
”நானேதான் ஆயிடுக” என்பது பழி ஏற்றலாம். அதாவது தானே முன்வந்து தன் பழி ஏற்றல், தான் பழி செய்யாதபோதும் பிறர் சொல்வதால் ஏற்றல், பிறர் பழியைத் தன் பழிபோல் ஏற்றல் என்பனவாம்
இதுபோல உலகில் இருப்பவர்கள் மிகவும் குறைவானவர்கள். பரதாழ்வாரை இதற்கு உதாரணமாகச் சொல்வார்கள்.
பரதன் அயோத்தி வந்து தந்தை வானகம் சென்றதையும், அண்ணன் ஸ்ரீ ராமன் கானகம் சென்றதையும் அறிகிறான். இவை எல்லாம் நடத்தியது யார்? இது யார் செய்த குற்றம்? கூனியா? கைகேயியா? தந்தை தயரதனா? அண்ணன் இராமனா? இல்லை யாரும் இல்லை. எல்லாவற்றுக்கும் நான்தான் காரணம். நானே பழி ஏற்கிறேன் என்கிறான். இதோ பாடல்:
”கொன்றேன் நான் என் தந்தையை மற்று உன் கொலைவாயால்
ஒன்றோ கானத்து அண்ணலை உய்த்தேன் உலகு ஆள்வான்
நின்றேன் என்றால் நின்பிழை உண்டோ? பழி உண்டோ
என்றேனும்தான் என்பழி மாயும் இடம் உண்டோ”
இராமன் வனம் செல்ல வேண்டும் என்றவுடன் இலக்குவன் கோபம் கொள்கிறான். அவனிடம் இராமன், “தம்பி, இதில் யார்மீதும் குற்றம் இல்லை. அரசை ஏற்றுக் கொள் என்றவுடன் ஏற்றுக் கொள்கிறேன் என ஒப்புக் கொண்டது என்குற்றம் தானே?”என்று சொல்லி பழியைத் தன் ஏற்றுக் கொள்வதும் இங்கு நினக்கத்தக்கது.
’பின்குற்றம் மன்னும் பயக்கும் அரசு என்றல் பேணேன்;
முன்கொற்ற மன்னன் முடிகொள்க எனக்கொள்ள மூண்டது
என்குற்றம் அன்றோ? இகல் மன்னவன் குற்றம் யாதோ
மின்குற்று ஒளிரும் வெயில் தீக்கொடு அமைந்த வேலோய்”
இதுபோலப் பெண்களில் தன் பிழையேற்றவள் துருவனின் தாய் சுநீதி. துருவன் சென்று தந்தையின் மடியில் உட்காருகிறான். ஆனால் அவனை சுருசி வந்து பிடித்துத் தள்ளி ‘என்மகனுக்கு மட்டுமே அப்பாவின் மடியில் உட்காரும் உரிமை உண்டு’ என்கிறாள். துருவன் சென்று தாயான சுநீதியிடம் முறையிடுகிறான். அவளோ நாலரை வயதேயான துருவனிடம் சொல்கிறாள்.
“மகனே, அவள் சொன்னதில் தப்பு இல்லடா; நீ என் வயிற்றில் பிறந்து விட்டாய்; நான் பாபம் செய்தவள்; என்வயிற்றில் பிறந்ததால் நீயும் பாபம் செய்தவனாகிவிட்டாய்”
என்று தன் மேலேயே எல்லாப் பழியையும் போட்டுக் கொண்டாள். இப்பாட்டில் பாகவத விஷயங்கள் எல்லாம் பேசப்படுகின்றன.
“சரி, உன் குற்றத்தை ஒப்புக் கொண்டாயல்லவா? சீக்கிரம் எழுந்து வெளியில் வா. அதுவும் சடக்கென எழுந்து வா. எல்லாரும் வந்து விட்டபின் உனக்கென்ன வேறுபாடு அஞ்சு லட்சம் குடியில் எல்லா பாகவதரும் சமம்தானே? எங்கள் பெரும்பானை கண்டபின்பும் உன் ஸ்வயம்பாகம் தவிர்ந்திலையோ?” என்கிறார்கள்.
இராமபிரான் காடேகிய பின்னர் அயோத்தி வந்த பரதாழ்வார் அண்ணனை அழைத்துவர காட்டிற்குச் செல்கிறார். பரதன் வருவதைக் கண்ட இலக்குவன் அவன் மீது சந்தேகம் கொண்டு ‘அவனைக் கொன்றொழித்து விடுகிறேன்’ என்று புறப்படுகிறான். இது பொறுக்காத இராமபிரான்,
’இலக்குவா, உனக்கு ராஜ்யத்தின் மீது ஆசை இருந்தால்சொல்; பரதனிடம் உனக்கு ராஜ்யத்தைக் கொடுக்கச் சொல்கிறேன்’ என்கிறார்.
அது கேட்ட இலக்குவன் எவ்வாறு வெட்கமடைந்தானோ அது போல உள்ளே இருப்பவள் நாணமுற்றாள். அவள் கேட்கிறாள்.
“எனக்குக் கோபமே இல்லை. உங்களை விட்டால் எனக்கு மட்டும் வேறு யார் இருக்கிறார்கள்? பகவத் விஷ்யத்தில் ஈடுபாடு கொண்ட உங்கள் எல்லாரயும் காண வேண்டுமென்றுதான் ஆசைபட்டிருந்தேன் எல்லாரும் வந்து விட்டார்களா?”
அவளுக்கு பாகவதர்களைக் கண்டு அவர்களைச் சேவிக்க மிகவும் ஆசை. பகவானைக் காட்டிலும் பாகவதர்களிடம் அவள் மிகவும் ஆவல் கொண்டவள். எனவேதான் இவ்வாறு கேட்கிறாள்.
”எல்லாரும் வந்து விட்டார்கள். சந்தேகமானால் நீயே வெளியில் வந்து எண்ணிக் கொள். மணிமாலையில் ஒரு மணி குறைந்தாலும் அது மாலைக்கு இழுக்கன்றோ? அது போல் ஒரு தோழி வராவிடினும் நாங்கள் போக மாட்டோம்”   அவள் வந்து ஒவ்வொருவரையும் தொட்டு எண்ணினால் அது இவர்களுக்கு இன்பமாம். மேலும் அவள் எண்ணி முடிக்கும் வரையிலாவது அவளைப் பிரியாமல் அனுபவிப்போம் என அழைக்கிறார்கள்.
மேலும் ”எதற்காக உன்னைக் கூப்பிடுகிறோம் தெரியுமா? குவலயாபீடம் என்ற யானையை அழித்தவனான கிருஷ்ணனைப் பாடுவதற்காகத்தான்” என்கிறார்கள். கம்சனின் பட்டத்து யானையான அதைக் கொன்றதை ஆழ்வார்கள் எல்லாரும் அனுபவித்திருக்கிறார்கள்.
’கவள யானை கொம்பொசித்த கண்ணன்” என்றும்
“வெஞ்சினவேழ மருப்பொசித்த வேந்தர்கொல்ஏந்திழையார் மனத்தைத் தஞ்சுடையாளர்கொல்” என்றும்
”கவளமால் யானை கொன்ற கண்ணனை அரங்க மாலை” என்றும்
”வாரணத்தை மருப்பொசித்த பிரான் என் மாதவனே” என்றும்
”நாரணனெம்மான் பாரணங்காளன் வாரணம் தொலைத்த காரணன்” என்றும்
“பின்னை மணாளனாகிக் கருந்தாள் களின்றொன்றொசித்தான்” என்றும்
“ஓரானை காத்து ஓரானை கொன்றானை” என்றும் அருளிச் செயல்களில் காணலாம்.
மேலும் குவலயாபீடம் எனும் யானையைக் கொன்றது, சாணுகன் மற்றும் முஷ்டிரன் எனும் இரு மல்லரை மாய்த்தது, கம்சனை அழித்தது எல்லாவற்றையும் ஒரெ பாசுரத்திலும் பார்க்க முடிகிறது.
”வார்கடாவருவி யானைமாமலையின்
மருப்பினைக் குவடிறுத்துருட்டி
ஊர்கொள் திண்பாகன் உயிர்செகுத்தரங்கில்
மல்லரைக்கொன்று சூழ்பரண்மேல்
போர்கடாவரசர் புறக்கிட  மாட
மீமிசைக் கஞ்சனைத் தகர்த்த
சீர்கொள் சிற்றாயன் திருச்செங்குன்றூரில்
திருச்சிற்றாறெங்கள் செல்சார்வே”    என்பது அப்பாசுரம். மேலும் கண்ணனை அவர்கள் ‘மாயனை’ எனும் பெயரால் குறிப்பிடுகிறார்கள்.
அவனுடைய மாயச் செயல்கள் மிக அதிகமானவை. பிரளய காலத்திலே ஓர் ஆல இலையில் சயனித்துக் கொண்டிருப்பவனன்றோ? எல்லா உயிரினங்களும் அவன் காலைப் பிடிக்கத் தவம் செய்யும் போது அவன் யசோதையின் காலைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டானே. அது மாயமல்லவா?
பெருமாள் தன் பகைவர்களான கம்சன், இராவணன், கும்பகருணன், இரணியன், போன்றவர்களை எல்லாம் அழித்ததை மாற்றாரை மாற்றழிக்க வல்லான் என்கிறார்கள். அவன் புகழைப் பாடுவோம் வா என்கிறார்கள். திருப்பாவையின் உயிர் நாடி நாம சங்கீர்த்தனமே என்பது ஒரு முக்கியமான விஷயம். அவன் பெருமையைப் பாடுவதை ஆண்டாள் நாச்சியார் பல இடங்களில் அறுதியிட்டுக் காட்டுகிறார்கள்.
”வாயினால்பாடி’  “கேசவனைப் பாட” “பாடிப் பறை கொண்டு’“கீர்த்திமை பாடிப்போய்”“முகில்வண்ணன்பேர் பாட”’பங்கயக்கண்ணானைப் பாட”  என்று பாடும் ஆயர் குலப்பெண்கள் இப்போது “வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க வல்லானைப் பாட” என்று உள்ளே இருப்பவளை எழுப்புகிறார்கள்.
இந்தப் பாசுரத்தின் மையமே பாகவதர்களின் பெருமையைக் கூறுவதுதான் என்பார்கள். ‘எல்லே இளங்கிளியே’ என்பதால் பாகவதர்களைக் காண்டலும் அவர் சொல்லைக் கேட்டலும் நன்றாம்.. ’இன்னம் உறங்குதியோ?’ என்பதால் பாகவதர்களுடன் சேராமல் இருப்பது பிழையென்றாகிறது. ‘சில்லென்றழையேன்மின்’ என்பதால் ஸ்ரீவைஷ்ணவர்களிடம் கடுமையான வார்த்தைகளைப் பிரயோகிக்கலாகாது என்பது புலனாகிறது.  ’நங்கைமீர் போதர்கின்றேன்’ என்று குறிப்பிடுவது அவர்களிடம் எப்படிப் பேச வேண்டும் எனபதைக் காட்டுகிறது.
‘வல்லையுன் கட்டுரைகள்’ என்பதால் பாகவதர்கள் கடிந்து பேசிக்கொள்வதும் கண்ணனுக்காகாவே என்பதும், ‘நானேதானாயிடுக’ என்பது ஸ்ரீவைஷ்ணவர்கள் பிறர் குற்றத்தையும் தம் குற்றமாக ஏற்பார்கள் என்பதும் தெரிவிக்கப் படுகிறது. ‘ஒல்லை நீ போதாய்’ என்பது பாகவதர்களை ஒருபோதும் பிரியலாகாது என்பதையும் ’உனக்கென்ன வேறுடையை’ என்பது எல்லா பாகவதர்களும் ஒன்றே என்பதையும் காட்டுகிறது. ஒரு பாகவதர் குறைந்தாலும் உசிதமாகாது என்பதுதான் ’போந்து எண்ணிக் கொள்’ எனும் சொற்றோடரால் தெரிவிக்கப்படுகிறது.
இப்படிப் பாகவதர்களின் பிரபாவம் பேசும் இப்பாசுரம் திருமங்கை ஆழ்வாரை எழுப்புகிறது என்று கூறப்படுகிறது.
ஆழ்வார்களில் கடைக்கோடியானவர் திருமங்கையாழ்வார். அதனால் அவர் இளங்கிளியே எனப்படுகிறார். மேலும்  கிளியானது சொன்னதையே சொல்லும் தன்மை உடையது. திருமங்கையாழ்வாரும் நம்மாஅழ்வார் சொன்னதையே சொல்கிறார். நம்மாழ்வார் நான்கு வேதங்களையும் நான்கு பிரபந்தங்களில் பாடினார். இவரும் வ்யாகரணம், சந்தஸ், ந்ருக்தம், ஜோதிஷம், கல்பம், சிட்சா ஆகியவற்றை ஆறு பிரபந்தங்களில் பாடி உள்ளார். மேலும் இவர் தன்னை மென்கிளி என்றும் சொல்லிக் கொள்வார்.
எல்லாரும் போந்தாரோ என்பது இதற்கு முன் எழுப்பிய ஆழ்வார்களைக் காட்டுகிறது. இப்பாசுரம் பலவகைகளில் மிகச்சிறப்பானதாகும்

 

Series Navigation
author

வளவ.துரையன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *