புறநானூற்றின் வழி அறியலாகும் ஆள்வோருக்கான அறிவுரைகள்

author
0 minutes, 3 seconds Read
This entry is part 16 of 25 in the series 14 செப்டம்பர் 2014

 

 

செ.சிபிவெங்கட்ராமன்,

ஆய்வியல் நிறைஞர்,

இலக்கியத்துறை,

தமிழ்ப்பல்கலைக்கழகம்,

தஞ்சாவூர்.

 

முன்னுரை:

பழந்தமிழனின் ஆளுமைத் திறனறியும் ஒப்பற்றக் கலைக்களஞ்சியம், சங்கத்தொகை இலக்கியங்களுள் ஒன்றான புறநானூறாகும். இஃது பண்பாடு ,பழக்க வழக்கம், அரசியல், பொருளாதாரம் எனப் பன்முகத்தைத் தன்னகத்தே கொண்ட இலக்கியமாகும். ஆள்வோருக்கான அறிவுரைகள் இதனுள் நிரம்பக் காணப்ப்டுகிறது. அவற்றுள் சிலவற்றை எடுத்தியம்புவதாக இக்கட்டுரை அமைகின்றது

அறமும் அரசின் வெற்றியும்:

அக வாழ்வானாலும் சரி, புற வாழ்வானாலும் சரி, பழந்தமிழனின் வாழ்வில் அறமே முதலிடம் வகித்தது. அறம் பாடாத புலவர்களே இல்லை எனலாம். அரசும் அறநெறியின் பாற்பட்டதாக இருக்க வேண்டும் என்பதே பழந்தமிழர்க் கொள்கை. அரசாட்சியின் வெற்றி என்பது படை பலத்தில் இல்லை. தன் படை பலத்தாலோ அல்லது ஆணவச்செருக்காலோ, தன்னைச் சார்ந்தும் தனக்குக் கீழ்க் கட்டுப்பட்டு நடப்பவர்களையும் அடிமைப்படுத்தி ஆள நினைப்பது மற்றும், துன்புறுத்த நினைப்பது நல்லரசாகாது. அஃது அறமுமாகாது. இதனை,

கடுஞ்சினத்தக் கொல் களிறும் கதழ்பரிய கலிமாவும்

                   நெடுங்கொடிய நிமிர்தேரு நெஞ்சுடைய புகன் மறவரும் என

                   நான்குடன் மாண்ட தாயிரு மாண்ட

”அறநெறி முதற்றே அரசின் கொற்றம்”. (புறம்-55)

என்கிறது புறநானூறு. இது எக்காலத்துக்கும் பொருந்தி வரும் செய்தியாகும்.

உயிர்களின் உயிரே மன்னன்:

மன்னனானவன் மக்களால் உயிராக மதிக்கப்பட்டான். உணவாய் அமையும் நெல்லும் நீரும் அவர்களுக்கு உயிராகத் தெரியவில்லை. மன்னன் ஒருவனே மக்களின் உயிர். அம்மன்னனின் தலையாயக் கடமைகளுள் ஒன்று நீரையும் நிலத்தையும் கூட்டி வைப்பதாகும். இந்த பரந்துபட்ட உலகத்தில் நீரையும் நிலத்தையும் எவன் ஒருவன் கூட்டி வைக்கிறானோ அவனே இவ்வுலகத்தின் உடம்பையும் உயிரையும் படைத்தவனாகிறான். ஆதலால் இறையாகவும் நினைக்கப்பட்டான். வேளாண்மையின் தேவையை உணர்ந்த மன்னர்கள் அன்று ஆட்சி செய்தனர்.

”நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே

                  மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்”. (புறம்-186)

                        ”நீரும் நிலனும் புணரியோ ரீண்

                   டுடம்பு முயிரும் படைத்திசி னோரே” (புறம்-18) என்பதே அப்பாடல் வரிகளாகும்.. ஆனால் இன்றோ நிலமெல்லாம் வீட்டு மனைகளாகவும் நீரைக்கூட்டி வைக்க முடியாத அரசியலையுமே காணமுடிகிறது. உயிர்களின் உயிராக இருக்கவேண்டிய மன்னன் உயிர் குடிக்கும் மன்னனாகிப்போன அவலத்தை இன்றைய உலகில் காணமுடிகின்றது.

 

 

அறப்போர்:

”ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும்

புதுவதன்று இவ்வுலகத்து இயற்கை”( புறம்-76)

என்கிற உளவியல் சிந்தனையை புறநானூறு முன் வைத்தாலும் போர் என்னும் போது கடைபிடிக்கப்பட்ட அறநெறிச் செய்கைகள் வியப்பிற்குரியவை. பசுக்களும் பசுக்களை ஒத்த பார்ப்பனரும், பெண்களும் பிணியுடையீரும், இறந்தோருக்கு இறுதிக்கடன் செய்யும் நல்ல புதல்வரைப் பெறாதவரும் எம் அம்பை ஏவப்போகிறோம். நீங்கள் உங்களுக்குப் பாதுகாப்பான இடம் நோக்கிச் செல்க என்று பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி போரின் போது முன்னெச்சரிக்கை செய்த செய்தி புறநானூற்றில் காணக்கிடைக்கிறது.

”ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்……” (புறம்-9)

என்பதே அப்பாடலாகும். ஆனால் இன்றைய உலகில் போர் என்றாலே கொல்வது, கொடுமை செய்வது, குருதி குடித்து மகிழ்வது என்றாகிவிட்ட சூழலை நினைக்கும் போது, நாகரீகம் வளர்ந்த இன்றைய சூழலை விட அன்று மிகச் சிறப்பாக மக்கள் வாழ்ந்தனர் என்பதை அறிய முடிகின்றது

 

 

தாயுமானவன் அரசன்:

சிறு குழந்தைக்கு எங்ஙனம் தாயும் தந்தையும் தெய்வமோ அதைப் போலவே நாட்டு மக்களுக்கு மன்னனே தெய்வமானான். மன்னனை இறை எனச்சொன்ன தமிழ் இலக்கியங்கள் பல இருப்பினும், தாய் எனச்சொன்ன பழந்தமிழ் இலக்கியம் புறநானூறாகும். பரணர், உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னியைப் பாடும்போது,தாயில்லாமல் உண்ணாமல் பசித்துக்கிடக்கும் குழந்தை போல உன்னைப் பகைத்தவர் நாடு ஓயாமல் கூவி அழும் என்கிறார். இதனூடாக மன்னன் தாயோடு ஒப்பிட்டுப் பேசப்பட்டமையை அறிய முடிகின்றது.

 

”தாயில் தூவாக் குழவி போல

                   ஓவாது கூஉநின் உடற்றியோர் நாடே” (புறம்-4)

என்பதே அப்பாடல் வரிகளாகும்.

மேலும் நரிவெரூவுத்தலையார், சேரமான் கருவூர் ஏறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரல் இரும்பொறையைக் கண்டபொழுது, அருளும் அன்பும் இல்லாதவராய் நீங்காத நரகத்தை அடைபவர் வழியிலே செல்லாமல், குழந்தையைக்காக்கும் தாயரைப்போல நாடுகாவல் கடமை புரிவாயாக என அறிவுறுத்துவதாக ,

”அருளும் அன்பும் நீங்கி நீங்கா

                   நிரயம் கொள்பவரோடு ஒன்றாது காவல்

குழவி கொள்பவரின் ஓம்புமதி”. (புறம்-5)

                  என்ற பாடல் வரிகள் அமைகின்றது. இதன் வழி, மன்னன் ஒரு நாட்டின் இறை மட்டுமல்லன். தாயாக இருந்து மக்களைக் காக்கும் தன்மைப் படைத்தவனாக இருக்க வேண்டும் என்கிற அறிவுறுத்தல் வெளிப்பட்டு நிற்பதை அறிய முடிகின்றது.

குடிப்பழிக்கு அஞ்சுதல்:

பழந்தமிழ் மன்னர்கள் தன்னை யாரும் தவறாகப் பேசிவிடக்கூடாது என்பதில் கவனமாய் இருந்தனர். அக்காலத்தே மழை பெய்தாலும், பெய்யத்தவறினாலும்,விளைச்சல் குறைந்தாலும், இயல்புக்கு மாறானவை எது நடந்தாலும் மன்னனின் ஆட்சி சரியில்லாது போனதால் தான் நடந்தது என மக்கள் தூற்றும் நிலை இருந்தது. இதனை மன்னர்களும் நன்கு உணர்ந்து வைத்திருந்தனர். மக்களால் இறை எனப் போற்றப்பட்ட மன்னன் மக்களாலேயே தூற்றப்படுவான். இதனை உணர்ந்து மன்னர்கள் அறம் தவறாது ஆட்சி புரிந்தனர்.

”மாரி பொய்ப்பினும் வாரி குன்றினும்

                   இயற்கை அல்லன செயற்கையில் தோன்றினும்

                   காவலர் பழிக்கும் இக்கண்ணகன் ஞாலம்” (புறம்-35)

என்பதே அப்பாடல் வரிகளாகும். பாண்டியன் நெடுஞ்செழியனோ தன்னை எதிர்த்த பகைவரை வெல்ல முடியேனாயின்

”குடிபழித் தூற்றும் கோலேனாகுக” (புறம்-72)

என வஞ்சினமுரைக்கும் செய்தியும் காணக்கிடைக்கிறது.

முடிவுரை:

பழந்தமிழர்களின் அரசியல், போர் திறன், செம்மாந்த உளவியல் சிந்தனை, அவர்களின் இரக்கப் பண்பு என பன்முகத்தன்மையை புறநானூற்றின் வழி அறிந்துகொள்ள முடிகின்றது. தமிழர்களுக்குச் சொந்தமான இந்நூலை தமிழர்கள் மட்டுமல்லாது உலகின் ஒட்டுமொத்த மக்களும் படித்துப் பயன் பெற வேண்டும். குறிப்பாக அரசியல் சிந்தனை மிக்க, அரசியலில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள விழையும் , அல்லது ஈடுபடுத்திக்கொண்டவர்கள், இத்தனை நாள் படிக்காது போனாலும் இனி ஒருமுறையாவது வாசித்தார்களேயானால் ஒட்டு மொத்த நாடுமே அமைதி பெறும் என்பதில் சந்தேகமில்லை.

Series Navigationஎல்லைஎஸ்.ராமகிருஷ்ணன் பங்கேற்ற “அரேபிய இரவுகளும் பகல்களும்” புத்தகம் பற்றிய கலந்துரையாடல்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *