நான் துணிந்தவள் ! கிரண்பேடி வரலாறு

author
0 minutes, 17 seconds Read
This entry is part 9 of 23 in the series 7 டிசம்பர் 2014

KiranBedi

முருகபூபதி

செய்தியின் பின்னால் ஒரு வீராங்கனையின்  வாழ்க்கைச்சரிதம்

நோபல் பரிசு மறுக்கப்பட்ட சிறைப்பறவை தான் நேசித்த  சிறைக்கூண்டுக்கு நோபல் பரிசு பரிந்துரைக்கின்றார்.

படித்தோம் சொல்கின்றோம்                                                                                           

இந்திய காவல்துறையில் இணைந்த முதல் பெண் என்று கருதப்படும்  கிரண்பேடி தொடர்பான  செய்தியொன்று அண்மையில் படிக்கக்கிடைத்தது.  இவரது பெயர் அடிக்கடி ஊடகங்களில் அடிபடுவதனால்  அவர் தமது சுயவிளம்பரத்திற்காக அதிரடி செயல்களில்  ஈடுபடுபவர் என்று அவரது எதிரிகள் விமர்சிப்பார்கள்.

ஆனால் – அவர் சுயபுகழ் விரும்பி அல்ல. ஊழலுக்கும் மோசடிகளுக்கும்  எதிரானவர். மனிதநேயத்துக்கும் மனித உரிமைக்கும்  குரல் கொடுப்பவர். எத்தகைய சவால்களையும் மரண அச்சுறுத்தலாக  இருந்தாலும் கூட    எதிர்கொள்ளுவார்.

சில வருடங்களுக்கு முன்னர் அண்ணா ஹசாரே நடத்திய ஊழலுக்கு  எதிரான மாபெரும் சத்தியாக்கிரக போராட்டத்திலும் கலந்துகொண்டு குரல் எழுப்பி தமது ஆதரவை                 வெளிப்படுத்தி யவர்.

பேரரசு இயக்கத்தில் நடிகர் பார்த்திபன்  உட்பட பலர் நடித்துள்ள திகார் என்ற திரைப்படத்தின் இசைகுறுந்தட்டு வெளியீட்டு விழாவில்  கலந்துகொண்டவர் ஒரு காலகட்டத்தில் திகார் சிறையில்  பணியாற்றிய கிரண்பேடி.

வழக்கமாக சினிமா – அரசியல் பிரமுகர்கள் கலந்து கொள்ளும் இதுபோன்ற விழாக்களில்  முன்னாள்  சிறைத்துறை அதிகாரி அதுவும்  ஒரு வீராங்கனை  கலந்துகொண்டிருப்பது முன்மாதிரியான தகவல்.

அத்துடன், இந்திய சுதந்திரப்போராட்டத்தின் பொழுது பாளையங்கோட்டை சிறையில் செக்கும் இழுத்து அடிவாங்கி துன்பப்பட்ட    கப்பலோட்டிய  தமிழன்  வ.உ. சிதம்பரத்தின் (..சி) பேரன்  சிதம்பரம் இவ்விழாவில் கலந்துகொண்டிருக்கிறார்.

கிரண்பேடி    இசைத்தட்டை  வெளியிட சிதம்பரம் பெற்றுக்கொண்டார்.

பொதுவாகவே சிறை வாழ்க்கை என்பது கொடுமையானதுதான். பல  உலகத்தலைவர்கள் மற்றும் தேசியத்தலைவர்களும் கலைஞர்களும் ஊடகவியலாளர்களும் படைப்பாளிகளும் சிறைச்சாலை    விருந்தினர்களாக இருந்திருக்கிறார்கள்.

அவர்களின்  சிறை வாழ்க்கை அனுபவங்கள் பின்னர் நூல்களாக வெளியாகியிருக்கின்றன.

ஜெயகாந்தன் தமது கைவிலங்கு நாவல் எழுதுவதற்காக தாம் சிறையில் இருப்பதற்கும் விரும்பியிருந்தார். எனினும் அவர் சிறை செல்லாமலேயே ஒரு கொலைக்குற்றவாளியாக மரண தண்டனைக்கைதியாக   நீண்ட  காலம் சிறையிலிருந்து பின்னர் விடுதலையாகி  வந்த எழுத்தாளர்  சி. .பாலனின்  அனுபவங்களை கேட்டறிந்து அந்த நாவலை  எழுதினார்.

1990  இல் ஜெயாகாந்தனையும் சி.ஏ. பாலனையும் சென்னை ஆழ்வார்பேட்டை ஜெயகாந்தன் குடிலில் சந்தித்திருக்கின்றேன்.

 

அம்மிக்கல்லையும்  அசைத்துவிடும்  ஆடிக்காற்று எனத்தொடங்கும் சி.ஏ. பாலனின்    தூக்குமர நிழலில் நாவலை  1972 இல்  ராணி முத்துவெளியீடாகத்தான் படித்தேன்.

சி.ஏ.பாலன் கதை எழுதி – தயாரித்த படம்தான் இன்று  நீ நாளை நான்.    இந்தப்படம் சிவகுமார் – லட்சுமி நடித்த முக்கியமான படம்.

சிறை  சம்பந்தப்பட்ட திரைக்கதையுள்ள இந்தப்படத்தை  மேஜர் சுந்தரராஜன்    இயக்கினார்.

கவிஞர்  அறிவுமதியின் கதை – வசனத்தில்  வெளியான சிறைச்சாலை திரைப்படமும்  முக்கியமானது. மோகன்லால், பிரபு தபு , வினித், நடித்த சிறந்த படம். இத்திரைப்படமும் இந்திய சுதந்திரப்போராட்டத்தின் பின்னணியில்    அந்தமான் சிறைச்சாலையை    பற்றியது.

வரவிருக்கும் திகார் படத்தின்  இசைத்தட்டு வெளியீட்டு விழாவில் திகார்  சிறைக்கு நோபல் பரிசு பரிந்துரைக்கவேண்டும் என்று பேசியிருக்கிறார் கிரண் பேடி.

KiranbedyBookCover

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கிரண் பேடி

யின் உரை வருமாறு:

திகார்  சிறை போல இந்தியாவில் உள்ள சிறைச்சாலைகள் மாறினால், இந்திய சிறைத் துறைக்கு அமைத்திக்கான நோபல் பரிசு கிடைக்கும்  என்பதில்  சந்தேகமில்லை

திகார்  என்ற வார்த்தையை  படத்திற்கு தலைப்பாக வைத்த பின் எப்படி  இந்த நிகழ்ச்சிக்கு வர    மறுக்க  முடியும். இங்கே  திகாரில் நடந்த  ஒரு சின்ன    விஷயத்தை  பகிர்ந்துகொள்ள  விரும்புகிறேன்.

9 மாதங்கள் எந்தவிதமான  பதவியும் இல்லாமல் இருந்தேன். அந்த காலகட்டம் முழுக்க சம்பளம் மட்டும்  வாங்கிக்கொண்டிருந்தேன். ஏன்  வேலை கொடுக்கவில்லை …? என்று உரிய அலுவலரிடம் கேட்டபோது – வேறு வழியில்லாமல் எனக்கு ‘திகார்’ சிறைச்சாலை பணியில்    அமர்த்தினார்கள்.    அதுவும் அந்த சிறைக்கு யாரும் போக மறுத்ததால் நான் பொறுப்பு ஏற்றுக்கொண்டு போக நேர்ந்தது.

எனது  நண்பர்கள் பலரும் ” அங்கு போக வேண்டாம். அந்த பணியை வீட்டிலிருந்தே செய்யலாம்” – என்று ஆலோசனை கூறினர். திகார் பற்றி குறையாக    பலரும்  பார்த்த நேரத்தில் நான் அங்கு மனிதத்தை மட்டுமே பார்த்தேன். அங்கிருந்த நிலையை பார்த்து – அந்த இடத்தை ஒரு மருத்துவமனையாகவே  பார்த்தேன்.

திகார்  பற்றி   It’s Always Possible என்ற புத்தகத்தை நான் எழுதியுள்ளேன்.  திரைத்துறையினர் அதை படமாக்க கேட்டுள்ளனர். அப்புத்தகத்தில் உள்ளதை அப்படியே படமாக எடுத்தால் கண்டிப்பாக ஆஸ்கர் விருது  கிடைக்கும். இத்தாலி பல்கலைக்கழகம் உள்ளிட்ட    பல நாடுகளில் அது பாட புத்தகமாக உள்ளது.

இந்த நூல் இன்னும் தமிழில் மொழிபெயர்க்கவில்லை  என்பது கொஞ்சம் வருத்தம்தான். அதை படமாக எடுத்து அதில் கிடைக்கும்  பணத்தை சிறைச்சாலை சார்ந்த ஆசிரமக் குழந்தைகளின்  எதிர்காலத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்பதே என்  ஆசை.   அங்குள்ள 10, 000 கைதிகளில், 3000 க்கும் மேற்பட்டவர்கள் படிக்காதவர்கள். அங்கே ஆசிரியர்கள் கிடையாது. கல்வி  இல்லாத இடத்தில் எந்தவித மாற்றமும் நிகழாது. அங்கு பணியாற்றிய    நாட்களில்    படித்த    கைதிகளையே    ஆசிரியர்களாக மாற்றினோம்.

தமிழ்  மட்டுமே தெரிந்த பல கைதிகள் அங்கு படித்து ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகள்  கற்றனர். கைதிகளே ஆசிரியர்களாக  மாறிய நிலை திகார் சிறைச்சாலையில் நடந்தது. காலை 9 மணி முதல்  11  மணி  வரைக்கும் பாடம் கற்கும் நேரமாக உருவாக்கினோம்.

இந்த முயற்சி இந்தியா முழுவதும் உள்ள ஒவ்வொரு சிறைச்சாலைக்கும்  சாத்தியமானது. இதை சாத்தியப்படுத்தினால் இந்தியாவை  முதல் தர நாடு என்ற பட்டியலில் கொண்டு வர முடியும்.  அங்கு வேலை பார்த்த  நாட்களில்    மட்டுமில்லாமல் இப்போதும்  அங்கே கல்வி சேவையோடு என்னை இணைத்துக்கொண்டே    வருகிறேன்.   அதற்காகவே – நான் தொடங்கிய India Vision Foundation நிறுவனம் மூலம் பலருக்கும் உதவி  செய்து வருகிறோம். இதன் துணையோடு செயல்பட்டு வரும்  பள்ளி இங்கு இன்றும் நடந்து வருகிறது.

கடந்த 20 ஆண்டு கால உழைப்பில் அங்கு கைதிகளாக இருந்து படிக்கத் தொடங்கிய பலரும் இப்போது பட்டப்படிப்பு வரைக்கும் முடித்திருக்கிறார்கள்.  இது கடந்த 20 ஆண்டு கால உழைப்பு. திகார் சிறை போல, இந்தியாவில் உள்ள சிறைச்சாலைகள் மாற வேண்டும்.  அவ்வாறு மாறினால் இந்திய சிறைத் துறைக்கு நோபல்  பரிசு கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

திகார் என்றால்  வன்முறை என்பது திரையில்  மட்டும்தான். ஆனால், அங்கு வன்முறை இல்லை. இது போன்ற படத்தை எடுப்பது கடினமான விஷயம். இந்த கடின உழைப்பை பாராட்டுகிறேன். பாலிவுட்டிற்கு பிறகு கோலிவுட்  பெரிய இடத்தை பிடித்திருக்கிறது.    படக்குழுவினருக்கு வாழ்த்துகள். ” – என்று கிரண் பேடி பேசினார்.

கிரண் பேடி  பேசி முடித்தவுடன் – நடிகர் பார்த்திபன் உடனடியாக

It’s Always Possible புத்தகத்தின்  தமிழாக்கம் பொறுப்பை தான் ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார்.

————–

எதிர்பாரதவிதமாக ( 1990 ) ஜெயகாந்தனுடன் ஆழ்வார்பேட்டை குடிலில்  சி.ஏ.பாலனை  சந்தித்தது போன்று ஜெயகந்தன் (2008) அப்பல்லோ  மருத்துவமனையில் சிகிச்சைக்காக தங்கியிருந்த பொழுது பார்த்திபனையும் அங்கே அவருடன் சந்தித்தது தற்செயலான நிகழ்வுதான். அந்தப்பயணத்தில் நான் வாங்கிய நூல்   நான் துணிந்தவள் !   கிரண்பேடி  வரலாறு.

————————-

இந்தப்பதிவின்  தலைப்பில் அவரை சிறைப்பறவைக்கு ஒப்பிட்டதன் காரணம் அவர் ஒரு கைதியாக  அல்ல – சிறையில் வாடியவர்களுக்கு அவர்    ஒரு தேவதையாக காட்சியளித்தமையினால்தான்.

——————————

இயற்பெயருக்கு முன்னால் தந்தையின் பெயரை,  ஊரின் பெயரை, பரம்பரையின் பெயரை அல்லது பதவி பட்டம் என்பன தந்த மேதாவிலாசத்தை சித்திரிக்கும் பெயரை இணைத்துக்கொள்பவர்களைப்பார்த்திருக்கின்றோம்.

ஆனால் –  எரிபொருளில் ஓடும் ஒரு வாகனத்தின் (Crane) பெயரை தொழில் சார்ந்த வாழ்நாளில் இணைத்துக்கொண்டு காலம்பூராவும் போராடிப்போராடியே  ஜெயித்த  ஒரு    பெண்ணைப்பற்றி தெரிந்துவைத்திருக்கிறீர்களா….?

தமிழில்  ஒருவரை நாம் பேடி என்று  குறிப்பிட்டால் அது அவமானகரமானது.    மகாபாரதத்தில் வரும் வில்லுக்கு விஜயன் எனப்பெயரெடுத்த அர்ச்சுனன்  கூட இந்த  பேடி வேடத்தில் சந்தர்ப்பவசமாக  அவமானத்தை சுமந்ததாக சொல்லப்படுகிறது.

ஆனால் – பாரத நாட்டில் பேடி என்றால், யார்… கிரண் பேடியா…? என்றுதான்    கேட்பார்கள்.

டில்லியில்  போக்குவரத்து காவல்துறையில்  கடமையாற்றியபோது தவறான  இடத்தில் தரிக்கப்பட்டிருந்த பாரதப்பிரதமர் இந்திராகாந்தியின்  உத்தியோகபூர்வ காரையே கிரேண் கொண்டு தூக்கிச்செல்ல வைத்தவர் என்பதனால் அந்த வாகனமே அவரது பெயராகிய அற்புதம் நிகழ்ந்திருக்கிறது.

அவர் நோபல் அமைதிப்பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்ட பெண். ஆனால், அந்த விருது அவருக்கு கிட்டவில்லை.

The Week இதழ்  2000 ஆம் ஆண்டில் நடத்திய கருத்துக்கணிப்பில் தலைசிறந்த பாராட்டுக்குரிய முதல் பெண்மணியாக தெரிவானவர்.

அவரது  வாழ்க்கைப்பாதை தென்றலும் வசந்தமும் தவழ்ந்த சுகந்தமானதல்ல. அரசியல் துஷ்பிரயோகங்களில்  ஈடுபட்ட மக்கள் விரோத  சக்திகள், மற்றும் ஈனத்தனமான அதிகார வர்க்கத்தினால் பல தடவைகள்  பந்தாடப்பட்ட    கரடு முரடான வாழ்க்கை.

அதனைச்சித்திரிக்கும்  இந்த நூலை சென்னை  கண்ணதாசன் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.  இதுவரையில் பதினைந்துக்கும் மேற்பட்ட    பதிப்புகளைக்கண்டுவிட்டது    இந்நூல்.

சிறைக் கோட்டத்தை  அறக்கோட்டம்  ஆக்கிய நவீன மணிமேகலை.

தலைக்கு விலை வைத்தபோதும்   உயிர்க்குக் குறி வைத்தபோதும்,

அஞ்சாமல் கடமையாற்றிய   வீராங்கனை.

நாட்டை உலுக்கிய போராட்டத்தில்   தனியொருத்தியாய்

நீதியின் பக்கம் நின்ற   பெண் சிங்கம்.

ஆயிரம் வாள்களுக்கு எதிராகத்  தன்னந்தனியே கம்பு சுழற்றி

முன்னே பாய்ந்த பெண் புலி

காலமெல்லாம்   எதிர் வெள்ளத்தில்  நீச்சலடித்த புத்துலக புரட்சிக்காரி

படு நரகப் படுகுழியாக    இருந்த  சிறையை அமைதி தவழும்

ஆசிரமமாக  மாற்றிய   அதிசயப்பெண்மணி

அதிகார வர்க்கமும்,   அரசியல்வாதிகளும்

துரத்தித் துரத்தி   வேட்டையாடியபோதும்

நெஞ்சம்    குலையாமல்,  கொடிய சூறாவளிகளின்  நடுவே

உறுதியாய்    நின்ற    புதுமைப்பெண்

என்று பதிப்பாளர்கள் கிரண் பேடிக்கு புகழாரம் சூட்டியிருக்கிறார்கள்.  இந்த அரிய நூலை  கவித்துவமாக மொழிபெயர்த்திருக்கிறார்    கவிஞர் புவியரசு.

போதைவஸ்து, கொலை, பாலியல் வன்முறை, கொள்ளை, மோசடி அரசியல் துஷ்பிரயோகம் உட்பட  பல விசித்திரமான சட்டவிரோதச்செயல்களுக்காக  நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான  கைதிகள் ஆடுமாடுகளைப்போன்று அடைத்து வைக்கப்பட்ட  பிரசித்திபெற்ற திகார் சிறைச்சாலையில் இன்ஸ்பெக்டர் ஜெனரலாக    கிரண் பேடி பணியாற்றத்தொடங்கியதும்,    அதனை ஒரு ஆசிரமமாகவே மாற்றியிருக்கிறார்.    அவர் அங்கு பணியாற்றிய    காலத்தை பொற்காலம்    என்றுதான்  மக்கள் வர்ணித்திருக்கிறார்கள்.

அவரை  அதிகார வர்க்கம் இடமாற்றம் செய்தபொழுது, ஒரு கைதி தனது வேதனையை  ஒரு  பெண்    பத்திரிகையாளரிடம்  இப்படி பகிர்ந்துகொண்டானாம்.

“ நான்  சிறையிலிருந்து தப்பிச்சென்று, அவரை மாற்றம் செய்தவரை  கொலை  செய்வேன்”

“ இப்படிப்பேசுவது நியாயமா…? அப்படிச்செய்தால் கிரண்பேடி  பட்ட பாடெல்லாம்  வீணாகிவிடாதா? ”- என்ற கேள்விக்கு,         அந்தக்கைதி, “ அதுவும் நியாயம்தான். கிரணை மாற்றியவன் கார் விபத்தில் சாகவேண்டும்  என்று நான் இனிக்கடவுளைப் பிரார்த்திக்கப்போகிறேன்” என்று    கண்கலங்கச்சொல்லியிருக்கிறான்.

சிறைக்கைதிகளுக்கு தாயாக சகோதரியாக சேவகியாக வாழ்ந்து காட்டியவர்  கிரண்பேடி.

போதை  வஸ்து பாவனையை ஒழிப்பதற்காகவும் கோபம் – மூர்க்கம்  முதலான குணங்களைப் போக்குவதற்காகவும் சிறைச்சாலையில் யோகா  மற்றும் தியான முறைகளை கற்பித்திருக்கிறார்.  கைதிகள் மாத்திரமல்ல சிறை வோர்டன்கள் மற்றும் சிறை அதிகாரிகளும் இந்தப்பயிற்சியைப்பெற்று தம்மை பக்குவப்படுத்திக்கொள்ளவும்    தூண்டியதுடன்    தாமும்    அவர்களுடன் இணைந்து    அந்தப்பயிற்சிகளை எடுத்து தனக்கு ஏற்படும் தொழில் ரீதியான மனஉளைச்சல்களையும் துரத்தியிருக்கிறார்.

கிரண்  பேடி பணியாற்றிய திகார் சிறையில்தான் ஒருகாலத்தில் இரண்டு முக்கியமான வி.ஐ.பி.க்களும் அங்கு தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்  என்ற தகவலை இந்த நூல் விபரிக்கிறது.

ஒருவர்    சஞ்சய்  காந்தி.

மற்றவர் பூலான் தேவி.    

அந்தச்சிறையில்  தடுத்து வைக்கப்பட்டிருந்த மனநோயாளிப்பெண்கள்  மீது நடத்தப்படும் பாலியல் சேட்டைகளை, சஞ்சய் காந்தியைப்பார்க்கவரும் அவரது மனைவி மேனகா காந்தி தமது சூர்யாஇதழில்  அம்பலப்படுத்தியிருக்கிறார். இதனையெல்லாம்  அறிந்துகொண்டே  அங்கு பதிவியேற்ற கிரண்பேடி  சிறையின் கட்டமைப்பையே மாற்றியமைக்க படாத பாடு பட்டிருக்கிறார்.

மிஸோரத்தில்  உதவி இன்ஸ்பெக்டர் ஜெனரலாக பணியாற்றிய காலத்தில் கொலை  அச்சுறுத்தலுக்கும் ஆளாகியவர் கிரண்பேடி.

இந்தியாவில்  அமிர்தசரஸில் பிறந்த கிரண், ஆங்கில இலக்கியத்திலும்  அரசியல் விஞ்ஞானத்திலும் சட்டத்துறையிலும் படித்து    பட்டம் பெற்றவர். சில பல்கலைக்கழகங்களினால் டாக்டர் பட்டமும்    வழங்கப்பட்டு   கௌரவிக்கப்பட்டவர்.

இத்தனைக்கும்  அவர் ஒரு சிறந்த டென்னிஸ் விளையாட்டு வீராங்கனை.    இந்தியாவின் பிரதிநிதியாக பல வெளிநாடுகளில் டென்னிஸ் சாம்பியன் போட்டிகளில் விளையாடியவர். ஒரு சந்தர்ப்பத்தில் ஆசிய டென்னிஸ்  சம்பியனாகவும் தெரிவாகியிருக்கிறார்.

ஆய்வாளர், எழுத்தாளர். It’s Always Possible ( ‘அது எப்போதும் சாத்தியம்தான்’) என்ற நூலையும் பல ஆங்கில இதழ்களில் ஏராளமான  கட்டுரைகளையும் எழுதியிருப்பவர். உண்மை நிகழ்ச்சிகளின் தொகுப்பாக இவரால் எழுதப்பட்ட, என்ன தவறு நேர்ந்தது…?’ என்ற நூலில் பதிவான பல சம்பவங்கள் இந்திய தேசிய  தொலைக்காட்சியில் தொடராக ஒளிபரப்பப்பட்டிருக்கிறது.

ஐ.நா. மன்றத்தினால்  அங்கீகரிக்கப்பட்ட நவஜோதி, India Vision Foundation   நிறுவியவரும் இவரே.

பெண்கள்  அணியும் சேலை குறித்து அதிரடியாகவும் ஒரு கருத்துச்சொல்லியிருக்கிறார் கிரண்பேடி.

மிஸோரத்தில்  அவர் பணியாற்றிய காலத்தில் ஆளும்வர்க்கத்து அமைச்சர்  ஒருவருடன் கருத்துப்போர் நடத்திய கிரண், இப்படிச்சொல்கிறார்:-

மிஸோரம்  அமைச்சரின் நியாயமற்ற கோரிக்கைக்கு நான் ஏன் அடிபணியவேண்டும்…? இந்த மாதிரி விவகாரங்களை ஒரு பெண் எப்படி எதிர்த்துப்போராடுகிறாள் என்று மக்கள் அடிக்கடி நினைக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் என் பதில் இதுதான்: ஒரு பெண்  பலகீனமானவள், மென்மையானவள் என்று நினைப்பது தவறு.   நான் மென்மையானவள் அல்லள். என்னை  யாரும் சேலையில் பார்த்திருக்க முடியாது. சேலை, மென்மையானவர்களுக்கானது

பிலிப்பைன்ஸ் நாட்டின் அதி உயர் விருதான ராமோன் மாகசேசே  விருது கிரண்பேடிக்கு வழங்கப்பட்ட தருணத்தில் திகார்  சிறையிலிருந்த 9,100 கைதிகள்  அதனை தங்களது சொந்த விழாவாகவே  கோலாகலமா க கொண்டாடியிருக்கிறார்கள்.

கிரண்பேடியின்  வாழ்க்கை அரசியல்வாதிகளுக்கும் ஆளும் வர்க்கத்தினருக்கும் சிறை அதிகாரிகளுக்கும் சிறந்த பாடநூல் என்றால்  அது மிகையான கூற்றல்ல.

இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக காவல்துறையில் மகத்தான சேவையாற்றியிருக்கும் கிரண்பேடி, காவல் துறையிடம் சுட்டிக்காட்டும்  சவால் பின்வருமாறு:-

துப்புத்துலக்கல்,  கைது செய்தல், தண்டனையளித்தல் ஆகியவற்றைவிட,    குற்றம் நிகழாமல் தடுத்தல்தான் காவல்துறையின்  அடிப்படை  என்பது என் உறுதியான கருத்து.

காவல்துறை முழுவதிலும் நிகழ்ந்துவரும் வெளிப்பகட்டுத்தான் எனக்கு  வேதனை தருகிறது. குற்றங்களைத்தடுத்தல்,  சீர்திருத்துதல் பற்றி வெறும்  வாய்வேதாந்தம்    பேசப்படுகிறது. துப்புத்துலக்கல், கைதுசெய்தல்  மகிமைப்படுத்தப்படுகிறது. முக்கியமான வினாவான, இவற்றையெல்லாம்    தடுக்க முடியாதா? ” –  என்பது  எழுவதே இல்லை.  இந்த நிலையில் செய்யவேண்டியதைச் செய்யாமல், வருங்கால  வழிமுறைகளை வகுத்துக்கொள்வதை இவர்கள் எவ்வாறு  கற்றுக்கொள்ள  முடியும்?”

அவரது  பரபரப்பான நடவடிக்கைகளையும் கருத்துக்களையும் அவதானித்த ஆளும்தரப்பினர் சிலர், கிரண்பேடி  பத்திரிகைகள் புகழவேண்டும் என்பதற்காக இப்படியெல்லாம் செய்கிறார் என்றும் – அவர்  ஒரு விளம்பரப்பிரியர் என்றும் காழ்ப்புணர்வில் விமர்சித்திருக்கிறார்கள்.   ஆனால் – ஒரு தலை சிறந்த பெண்மணி புரிந்த அசாத்தியமான சாதனைகள் – மனிதநேயம் மிக்க பணிகள் மக்களின்  கவனத்தை கவரும்பொழுது, அதிகாரவர்க்கத்தின் கண்களை அவை  உறுத்துகிறது என்பதற்காக, ஊடகங்கள் கண்ணை  மூடிக்கொண்டிருக்க முடியுமா?

தமது வாழ்நாளில் மேலும் மேலும் கடினமாகவே  உழைக்க விரும்பும் கிரண்பேடிக்கு மறுபிறவியில் நம்பிக்கை இல்லை. அவரது  வாழ்க்கைச்சரிதத்தை  விபரிக்கும் “ நான் துணிந்தவள்” நூல்,  தன்னம்பிக்கையை  வளர்த்துக்கொள்ள விரும்புபவர்கள் மட்டுமல்ல சிறைச்சாலை  அதிகாரிகளும் ஆளும்வர்க்கமும் அவசியம்    படிக்க  வேண்டிய    படைப்பு.

   —0—  

letchumananm@gmail.com    

 

 

Series Navigationபி.எம்.கண்ணன் என்னும் நாவலாசிரியர்தொடுவானம் 45. நான் கல்லூரி மாணவன்!
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *