காட்சி 16
காலம் இரவு களம் உள்ளே
சவுக்கார்பேட்டை சத்திரம்
ஊமையனும், மனைவியும்.
வள்ளி: எத்தினி நேரம் தான் நடந்ததையே நினச்சுக்கிட்டு உக்காந்திருக்கப் போறீங்க? வந்து சாப்பிடுங்க.. சோறு பொங்கியாச்சு.. குழம்பு கூட வச்சிருக்கேன்.. வெண்டிக்கா இருந்தா போட்டிருக்கலாம்..
ஊமையன்: பசியே இல்லே வள்ளி.. பட்டணத்துலே தொழில் நடத்த கொத்தவால் சாவடிக்குள்ளே மொதல் அடி எடுத்து வச்சா, தாணக்காரன் கண்ணுலேயா பட்டுத் தொலைக்கணும்..நேரம்.. எக்குத் தப்பா பேசிடுவேன்னு பயத்துலே ஊமையனா உக்காந்தாலும் நம்ம விதி..
மனைவி: தாணாக்காரரு என்ன பண்ணியிருக்கப் போறாரு… வண்டி நம்மளது இல்லே.. காய் மட்டும் தான் .. நாலு நாள் ஆச்சே.. மறந்திருப்பாங்க..
ஊமையன் என்னமோ நீ நாலெழுத்து படிச்சவ வள்ளி
மனைவி மூணு தான் படிச்சேன்.. நாலாவது எழுத்து படிக்கச் சொல்ல உங்களைப் பார்த்தேன்.. அப்புறம்..
ஊமையன் அப்புறம் ..
வள்ளி: போங்க.. வெக்கப்படக் கூட நேரம் இல்லே. சட்டு புட்டுனு சாப்பிடுங்க.. தடா போக மாட்டு வண்டி சொல்லியிருக்குன்னீங்களே..
ஊமையன் : அவனைப் பக்கத்து வீட்டுப் பின்வாசல் பக்கம் நிப்பாட்டச் சொல்லியிருக்கேன்
வள்ளி: அது ஏங்க பக்கத்து வீடு வழியா போகணும்?
ஊமையன்: பங்காளிப் பயலுக பில்லி சூனியம் செஞ்சு நம்ம வீட்டு முன் வாசல்லே தகடு புதைச்சிருக்காங்க வள்ளி.. பக்கத்து வீடும் நம்ம வீடா இருந்ததாலே நல்லதாப் போச்சு.. ஊடுகதவைத் திறந்தா அங்கே போயிடலாம்..
வண்டிக்காரன் குரல் கேட்கிறது.
ஊமையன் (எட்டிப் பார்த்து) அவனே தான்.. சரி, சோத்தைப் போடு.. நீ துண்ணுட்டியா?
வள்ளி: முதல்லே நீங்க கை நனைச்சுட்டுக் கிளம்பற வழியைப் பாருங்க.. கஷ்டத்துக்கு மேலே கஷ்டமா கையிலே கட்டு..
ஊமையன் : நம்ம கல்யாணத்துக்கு நான் தான் தேங்கா உடைச்சு சாமிக்குப் படைக்கணும்.. அவசரக் கல்யாணம்.. நம்ம அவசரம் அரிவாளுக்கும் பத்திக்கிச்சு.. .. தானே ஆறிடும் .. விட்டுத் தள்ளு.. நீ சோறு துண்ணுட்டு வா
வள்ளி: நானா? நாலு பருக்கை கையிலே ஒரு வாழப் பட்டையிலே சுருட்டிக் கொண்டாந்துட்டா வழியிலே சாப்பிட்டுப்பேன்.. ஏங்க, தனமும் லட்சுமியும் பத்திரமா ஊரு போய்ச் சேர்ந்திருப்பாங்கல்லே
ஊமையன்: அதெல்லாம் அந்த தர்மாம்பா பாத்துக்கும்.. நீ எதுக்கு அதுங்களைக் கூட்டியாந்தேன்னே தெரியலே.. கொள்ளைக்குப் போனாலும் கூட்டு உதவாது.. நாமளே திருட்டுக் கண்ணாலத்துக்கு வந்தவங்க.. சம்பந்தி போஜனத்துக்குமா ஆள் கூட்டியாறது இப்படி?
வள்ளி: பட்டணம் போறேன்னு சொன்னது தப்பாப் போச்சு.. பிளேட் கொடுக்கணும்னு தனத்துக்கு ஆசை.. பட்டணத்துலே வீட்டு வேலைக்கு நின்னாவது பணம் சம்பாரிக்கணும்னு லட்சுமி தீர்மானத்தோட வந்தா.. நல்ல வேளை.. நீங்களும் அந்த அம்மாவும் தன்மையா பேசி அனுப்பி வச்சீங்க..
ஊமையன்: போய் ஏதாச்சும் நம்மைப் பத்தி வாயைத் தொறந்திருப்பாங்களோ? செய்யாதேன்னு சொல்லித்தான் தர்மாம்பா கையிலே ஒப்படச்சு கூட்டிப் போய் விடச் சொன்னேன்
வள்ளி: சாமியாரம்மா நல்ல மாதிரி..
ஊமையன்: அடியே காவி கட்டினவன் எல்லாம் சாமியார் இல்லே.. வெள்ளைச் சீலை கட்டினது எல்லாம் சாமியார்ப் பொம்பளை இல்லே..பரோபகாரி..நல்லது செய்யறவங்க.. அம்புட்டு தான்..
வள்ளி: வந்தேமாதர அம்மாவா?
ஊமையன்: அதுங் கிட்டேதான் கேக்கணும் அதை..
வள்ளி: என்னைய மட்டும் அங்கே தங்க விட மாட்டேனுட்டாங்க
ஊமையன்: நீ என் சொத்துன்னு தெரியுமில்லே..
(அவளை அணைத்துக் கொள்ள விலகுகிறாள்)
வள்ளி: நேரம் கெட்ட நேரத்துலே இது வேறேயா.. தடா போனாப்பலதான்.
(அவள் உள்ளே போக) ஊமையன் வள்ளி, தலையை நல்லா முக்காடு போட்டுக்க.. வயித்திலே துணியை நல்லா இறுக்கமா சுத்திக்க.. வண்டியிலே ஏறினதும் படுத்துடணும் என்ன? உனக்கு பிரசவ நேரம்.. மருத்துவச்சி கிட்டே இட்டுப் போய்க்கினு இருக்கேன்.. நகை நட்டு இருந்தா..
வள்ளி: ஏது நகை நட்டு.. பத்திரமா இருக்கட்டும்னு நேத்தே வாங்கி முடிச்சு வச்சுட்டீங்களே.. பத்திரமா இருக்கு தானே?
ஊமையன்: . எல்லாம் பத்திரம். வெகு பத்திரம்.. புள்ளைத்தாச்சி நீ.. ஞாபகம் இருக்கட்டும். இப்படி ஒயிலா நின்னா மனசு தடுமாறி. நெசமாவே புள்ளைத்தாச்சி ஆயிடுவே..
(அவன் சிரித்துக் கொண்டே நெருங்க)
வள்ளி: காளியம்மா… இனியும் பிள்ளை பெத்துக்க வச்சுடாதே தாயே.. முடியலியே.. அய்யோ.. வலி உயிர் போவுதே.. அம்மா..
ஊமையன்: ஆமா, அதே தான்.. போவலாமா?
வள்ளி: இருங்க துணிமணி எடுத்தாந்திடறேன் ..
உள்ளே போய்த் துணி மூட்டையோடு திரும்புகிறாள்
வள்ளி குரல் நடுக்கத்தோடு ஒலிக்கிறது
வள்ளி: ஏங்க, ..இது என் துணிமணியோட எப்படி வந்துச்சு?
ஊமையன் எது புள்ளே?
வள்ளி:. இந்த வளைவி.. இது தனத்தோடது ஆச்சே
ஊமையன் சும்மா சும்மா கேட்டா கோபம் வரும் தனம்.. உனக்கும் எனக்கும் கண்ணாலத்துகு சம்மானமா போட்டிருப்பா.. உன் உசிரு சிநேகிதியாச்சே.. உனக்கு நல்லது நடந்தா அவளுக்கு சந்தோஷமா இருக்காதா?
வள்ளி: அதுக்காக தங்க வளைவியைக் கழட்டி.. எப்போ போட்டிருப்பா?
ஊமையன்: (முகம் ஆறுதலைக் காட்டுகிறது) நேரம் பார்த்துத்தான் போட்டிருப்பா… என்னைப் போல கைநாட்டா .. நாள் நட்சத்திரம் தெரியாம இருக்க?
வள்ளி: நீங்களா கைநாட்டு.. கையை நட்டா பறிக்க முடியுமா
ஊமையன்: புரிஞ்சுக்கிட்டா சரிதான்.. நான் சொல்ற வரைக்கும் இந்த வளவியைக் கையிலே போட்டுக்கோ.. மொட்டைக் கையும் காது மூக்குமா இருக்கவேண்டாம்.. இது பித்தளைன்னு சொல்லிக்கலாம்
வள்ளி: கழட்டுங்கறீங்க.. போடுங்கறீங்க .. யார் கிட்டே பித்தளைன்னு சொல்லணும்?
ஊமையன்: ஊம்? வேலை மெனக்கெட்டு உன்னை மோப்பம் பிடிச்சுக்கிட்டு ஏதாச்சும் நாய் வந்தா அப்போ
வள்ளி: நாயெல்லாம் அண்டாது.. நான் யாரு?
ஊமையன் படிச்ச பொம்பளை
வள்ளி: அதை உடப்பிலே போடுங்க .. உங்க பொண்டாட்டி.. அந்தப் பவுசே போதும் காலம் முச்சூடும்
அவன் கையோடு தன் கையை இறுக்கிக் கொள்ள இருட்டில் லாந்தரோடு வண்டிக்காரன் வருகிறான். சட்டென்று வெட்கத்தோடு விலகிக் கொள்கிறாள்.
ஊமையன்: போகலாமாடா? சரக்கு அடிக்கப் போயிட்டியா?
வண்டிக்காரன்: ஆமா காசு கொழுத்துக் கிடக்கு பாரு.. (வள்ளியைப் பார்த்து) இதாரு தங்காச்சியா? (பாட ஆரம்பிக்கிறான்)
பொள்ளாச்சி சந்தையிலே அண்ணே
பொண்ணரசி அவளைப் பார்த்தேன்..
ஈரோட்டு சந்தையிலே நான்
எடுத்த சேலை வாங்கலியே
வள்ளி: (ஊமையனிடம்) தங்கச்சியா? யாருக்குங்க தங்கச்சி?
ஊமையன்: மப்புலே இருக்கான்.. அவன் கையிலே பேச்சு வச்சுக்காதே.. தடா போனதும் அவனை வெட்டி விட்டுடலாம் ..
(மூவரும் திரைக்குப் பின் செல்ல, பாட்டு தொடரும் சத்தம்..
வண்டியூர் சந்தையிலே கேட்டேன்
தண்டட்டி வேணாம்னிட்டா
தஞ்சாவூர் சந்தையிலே நானபோய்
தாழம்பு வாங்கித் தந்தேன்
மாயவரம் சந்தையிலே சிறுக்கி
மாமான்னா; சொக்கினேண்டா..)
காட்சி 17
காலம்: நடு ராத்திரி களம் தடா யாத்ரா சத்திரம்
வண்டிக்காரன் தங்கச்சி துவண்டு போச்சு
ஊமையன் (வண்டிக்காரனிடம்): பாவம்…உள்ளே போனதும் தூங்கிடுச்சு..
வண்டிக்காரன்: அட, நீ கூட பாவ புண்ணியம்லாம் பாப்பியா?
ஊமையன்: சேட்டு வந்தானா?
வண்டிக்காரன்: ஆமா, உனக்கென்ன நீ சவாரி விட்டுட்டே.. லேகியத்தை கொடுத்து பாப்பாவை ரயில் ஏத்தி விடறதுக்குள்ளே போதும்டா சாமின்னு ஆச்சு..
ஊமையன் : சாப்பிட மாட்டேன்னுதா பொண்ணு?
வண்டிக்காரன் : பின்னே.. அல்வாவா தரோம் ..இந்தக் க்சப்புக்கு.. நல்ல வேளை அதுக்கும் உடம்பு நோக்காடு.. மருந்துன்னு கொடுத்தாச்சு
ஊமையன் : சேட்டுப் பய நேரத்துக்கு வந்தானா?
வண்டிக்காரன் : வெள்ளைக்காரன் கணக்கா கன் டைம்.. எங்கே எங்கேன்னு ஓடியாந்தான்.. கம்பளியைப் போத்தினான்.. தள்ளிக்கினு போய்ட்டான்..
ஊமையன்: சரி நானும் கொஞ்சம் தலையைச் சாய்க்கறேன்.. .. விடிஞ்சு ரேணிகுண்டா .. பாஷையும் தெரியாது பயகளையும் தெரியாது
வண்டிக்காரன்: துணிஞ்சு கெளம்பிட்டே…
ஊமையன்: காசு வந்தா ஆளு வரும் அம்பு வரும்.. பேச்சு வரும்….வெண்டிக்காயும் விக்கலாம்.. வெள்ளி தங்கமும் விக்கலாம்..விக்கறேன்… இந்தா பிடி.. உன் பங்கு.. இருபத்தஞ்சு ரூபா…
வண்டிக்காரன்: கூட்டிக் கொடுப்பா
ஊமையன்: அதுக்குத்தான் நீ இருக்கியே..
வண்டிக்காரன் போகிறான்.
மாடுகளின் கழுத்து மணி ஓசை தேய்ந்து கேட்கிறது
காட்சி 18
காலம்: பகல் களம்: வெளியே
இடம்: சவுக்கார்பேட்டை பழைய சத்திரம். பூட்டப்பட்டு இருக்கிறது. நாயுடுவும் அய்யங்காரும் வாசலில் நிற்கிறார்கள்
பக்கத்தில் பழக்காரன்: ஐயா கொஞ்சம் இந்தக் கூடையை தலையேத்தி விட்டுடுங்க
நாயுடு உதவி செய்கிறார். தலையில் பழக் கூடையோடு பழக்காரன்.
அய்யங்கார்: சத்திரம் எப்போ திறப்பாங்க?
பழக்காரன்: இத்தத் தொறந்தா வவ்வால் தான் தெருமுழுக்க பறக்கும்.. ரொம்ப காலமா அடச்சு வச்சிருக்கு..
அய்யங்கார்: ஏன் அப்படி?
பழக்காரன்: கோர்ட்டு கேசுன்னு பேச்சு.. நமக்கு இன்னா போச்சு..
அய்யங்கார்: கேசா? எந்த கோர்ட்? சிவிலா கிரிமினலா?
பழக்காரன்: ஐயா எனக்கு பூவன் பழம், கிச்சிலி பழம், ரஸ்தாளி, சீமை பேரிக்கா இதெல்லாம் தான் தெரியும். வம்பு வழக்குக்கு வேறே வேலையத்த வக்கீல் யாராச்சும் கிடச்சா கேக்கலாமுங்கோ
அய்யங்கார்: நானே வக்கீல்தான்யா. வேலை இருக்கப்பட்ட வக்கீல்
பழக்காரன்: அதுக்கு ஏன் சாமி என் வாயைப் பிடுங்கறீங்க?
நாயுடு: யோவ் பழம் கிழம்.. கூழாக்கிடுவேன் உதச்சு.. எங்கேன்னு தெரியுதில்லே.. அடிகின கேள்விஹி பதில் செப்பு (கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு)
பழக்காரன்: (பயந்து) எசமான் என்ன கேட்டீங்கன்னு நினைவு வரலியே.. இந்த அய்யர் வேறே நொச்சு நொச்சுன்னு ஏதோ பேசிக்கிட்டு.. எசமான் போலீசுங்களா?
நாயுடு: ஆர்மி. இவரும் தான்.. ஆள் பிடிக்கிற டிபார்ட்மெண்ட். பழ வண்டிக்காரங்களை எல்லாம் பிடிச்சு யுத்தத்துக்கு அனுப்பச் சொல்லி ராணியம்மா கடுதாசு போட்டிருக்காங்களாம்.. பர்மா போறியா? மலேயா போறியா? ,..
பழக்காரன்: இன்னிக்கு வூட்டுக்குப் போன மாதிரிதான்..
..
நாயுடு: ஆமா, இந்த சத்திரம் அப்பப்ப தொறக்குமாமே.. உனக்குத் தெரியுமா?
பழக்காரன்: தெரியாது சாமி.. தெரியாத்தனமா இன்னிக்கு இங்கே கடை போட்டுட்டேன்.. எப்பவும் விக்கறது கூட விக்கலே..
நாயுடு: உனக்குத் தெரியாதுன்னா வேறே யாருக்குத் தான்யா தெரியும்?
பழக்காரன்: (சேட் ஜவுளிக் கடையைக் காட்டி) அவரு அப்பப்ப அடுத்த வூட்டுலே துணிமணி கொண்டாந்து வச்சு எடுத்துப் போவாரு.. சுமந்து போய் கொடுத்தா கால் ரூபா கூலி.. பழத்தை எறக்கி வச்சுட்டு நான் கூட நைனியப்ப நாயக்கன் தெரு இஸ்துக்கினு போயிருக்கேன்.. ஒரு வாட்டி மாம்பழத்தை தோ இங்கேதான்.. வச்சுட்டு ..வந்து பார்த்தா மொல்லமாரிப் பசங்க ஆட்டை போட்டுட்டானுவ..
நாயுடுவும் அய்யங்காரும் நகர்கிறார்கள்
- தலைப்பு இடாத ஒரு ஓவியம்..
- சாவடி – காட்சிகள் 16-18
- அந்த நீண்ட “அண்ணாசாலை”…
- தமிழர்களின் கடல் சாகசங்களும்-விரிவு கண்ட சாம்ராஜ்யங்களும் – தமிழன் இயக்கிய எம்டன் கப்பல்
- மு கோபி சரபோஜியின் ஆன்மீக சாண்ட்விச்
- தொடுவானம் 47. நாத்திகமா? ஆன்மீகமா ?
- சுசீலாம்மாவின் யாதுமாகி
- மறையும் படைப்பாளிகளின் ஆளுமை குறித்த மதிப்பீடுகளே காலத்தின் தேவை மெல்பன் நினைரங்கில் கருத்துப்பகிர்வு
- ஹாங்காங் இலக்கிய வட்ட உரைகள்: 6 “ஹாங்காங் என்னைச் செதுக்கியது”
- இனி
- ஹாங்காங் தமிழ் மலரின் டிசம்பர் 2014 மாத இதழ்
- ஆத்ம கீதங்கள் – 10 நேசித்தேன் ஒருமுறை .. !
- யாமினி கிருஷ்ணமூர்த்தி – (4)
- தினம் என் பயணங்கள் -39 கடலும் நானும் -3
- கிளி ஜோசியம்
- இது பொறுப்பதில்லை
- பெஷாவர்
- மருத்துவக் கட்டுரை – நீரிழிவு நோயும் இருதய பாதிப்பும்
- வரிசை
- ஆனந்த பவன் நாடகம் வையவன் காட்சி-18
- திருச்சிராப்பள்ளி – தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி – தமிழாய்வுத்துறை 2015 பிப்.5,6 நாள்களில் நிகழ்த்தும் துறைதோறும் தமிழ்வளர்ச்சி – கருத்தரங்கம்
- வையவன் 75 ஆவது வயது நிறைவு வாழ்த்து விழா
- அணு ஆயுதப் புளுடோனியம் ஆக்கிய அமெரிக்க விஞ்ஞானி கெலென் ஸீபோர்க்