இலக்கிய வட்ட உரைகள்: 10 வோர்ட்ஸ்வர்த்தைப் புரிந்து கொள்வது

author
2 minutes, 5 seconds Read
This entry is part 6 of 23 in the series 18 ஜனவரி 2015

wordsworth_323269k
வித்யா ரமணி

வில்லியம் வோர்ட்ஸ்வொர்த் – இயற்கைக் கவிஞன், ஏரிகளின் கவிஞன், கற்பனையும் காதலும் பரவி
நிற்கும் ரொமாண்டிக் கவிஞன் கிராஸ்மேரின் ஞானி என்று பலவாறாக அறியப்படுபவன். எனக்கோ அவன் பிரிய கவிஞன், அபிமானப் புலவன்.

அவனது கவிதைகள் என்னைப் பலவிதமாய்ப் பாதித்திருக்கிறது. இலக்கியம் குறித்தும், வாழ்க்கை குறித்தும் என்னுடைய அனுபவங்கள் விரிவடையும் போதெல்லாம், அவனுடைய கவிதைகள் குறித்தான புரிதலும் விரிவடைவதை நான் உணர்கிறேன்.

ஏன் ஒரு பழங்காலக் கவிஞனை, மூன்று நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்தவனின் கவிதைகளை நான்
தேர்ந்தெடுத்தேன் என்று நீங்கள் வியக்கக் கூடும். ஆனால், எல்லா மாபெரும் இலக்கியங்களும் காலங் கடந்து நிற்பவை என்பதை நீங்கள் நிச்சயம் ஒப்புக் கொள்வீர்கள். அந்த வகையில் வோர்ட்ஸ்வொர்த்தின் கவிதைகளுக்கும் காலம் என்பது இல்லை. இன்னும் சொல்லப் போனால் அவனது கவிதைகள் அவன் பாடிய காலத்தைக் காட்டிலும் இந்தக் காலத்திற்குத்தான் இன்னும் பொருந்தி வருகிறது.

அவனது கவிதைக் கொள்கை என்பதை “இயற்கையோடு இணைதல்” என்று சொல்லலாம். நம்மில் எத்தனை பேர் அதைச் செய்கிறோம் ? நவீன காலத்தின் மனிதர்கள் இயற்கைச் சூழலலோடு நம்மை
அன்போடும் மதிப்போடும் இணைத்துக் கொள்கிறார்களா? இது தகவல் யுகம். கட்டுக்கடங்காத தகவல்கள் நம்மை மூழ்கடிக்கின்றன. இன்றைய ஏதேனும் ஒரு நாளிதழின் வாரப் பதிப்பு ஒன்றில் காணக் கிடைக்கிற
தகவல்கள், வோர்ட்ஸ்வொர்த்தின் காலத்தில் ஒரு சராசரி ஆங்கிலேயன் தன் வாழ்நாள் முழுவதிலும் பெறுகிற தகவல்களைக் காட்டிலும் அதிகம்.

வெற்றியையும், செல்வத்தையும் நோக்கி நாம் மூச்சிரைக்க ஓடுகிறோம். இதில் இயற்கைச் சுற்றுச் சூழலோடு நம்மை எப்படி இணைத்துக் கொள்வது, அதன் மூலம் இந்த அவசர யுகத்தில் நமது ஆன்மாவை எப்படிமேம்படுத்திக் கொள்வது என்று ஒரு கணம் சிந்தித்திருப்போமா?

இயற்கையை மதிப்பது கிடக்கட்டும், இடைவிடாமல் நாம் அதைச் சுரண்டிக் கொண்டும் அழித்துக்
கொண்டுமல்லவா இருக்கிறோம் ! நம்மை நாமே அழித்துக் கொள்கிறோம் என்பதை நாம் உணர்வதில்லை. இந்தப் பின்புலத்தில் தான் வோர்ட்ஸ்வர்த்தின் கவிதைகள் தெளிவாகவும், உரக்கவும், இயற்கையோடு ஒரு உணர்ச்சி மிக்க உறவைக் குறித்துப் பேசுகிறது. இதனால் சிந்தனையில் தெளிவையும், கூடவே இந்தப்
பூமியைச் சுய அழிவிலிருந்து பாதுகாப்பதின் தேவையையும் அவன் கவிதைகள் பேசுகின்றன.

இலக்கிய ஆர்வலர்களுக்கு வோர்ட்ஸ்வொர்த் குறித்து அறிமுகம் ஏதும் அவசியமில்லை. வட மேற்கு இங்கிலாந்தில் ஏரிகள் சூழ்ந்த ஒரு மனோகரமான பகுதியில் அவன் பிறந்தான். எழிலும்,அமைதியும் சூழ்ந்த இயற்கையினூடே அவன் வளர்ந்தான். இந்தச் சூழல் அவன் கவிஞனாக உருவானதில் பெரும்பங்கு வகித்தது.
இயற்கை அவனுள் பெரும் செல்வாக்கைச் செலுத்தியது. இயற்கையே அவனது தெய்வம். அதுவே அவனைப் பெரும் கவிதைகள் படைக்கத் தூண்டியது. அதுவே அவனது மதம். அது அவனை உணர்வுள்ள
மனிதனாக்கியது. அவனிலிருந்து ஆகச் சிறந்த படைப்புகளை வெளிக் கொணர்ந்தது.

சாதரணமாக, நாம் எதனாலேனும் தீவிரமாகப் பாதிக்கப்பட்டால், நாம் அதில் மூழ்கிவிட்டோமென்றோ,
நம்மையே அதில் இழந்து விட்டோம் என்றோ சொல்லுவதுண்டு. “இந்த ரம்மியமான காலைப் பொழுதில் என்னை இழந்தேன்” என்றோ, “இந்த சூரிய அஸ்தமனத்தின் காட்சியில் என்னை இழந்தேன்” என்றோ, “அந்த வசீகரமான இசையில் என்னை இழந்தேன்” என்றோ நம்மில் பலரும் சொல்லுவதுண்டு. ஆனால்
வோர்ட்ஸ்வொர்த் இயற்கையில் தன்னை இழக்கவில்லை, மாறாக அதில் அவன் தன்னையே கண்டுணர்ந்தான். அவனது புலன்கள் இயற்கையை உணர்ந்தன ,அதே வேளையில் இயற்கைச் சூழலில் அவன் ஆழ்ந்த சிந்தனை வயப்பட்டவனான்.

இயற்கையின் சர்வ சாதரணமான காட்சிகளும், ஒலிகளும் அவனது கவிமனத்தின் கற்பனையில் பேரழகைப் பெற்றன. இயற்கை, அவனுள் உள்முகச் சிந்தனையைத் தூண்டியது, அவனுடைய அகவுணர்வைத் தீண்டியது, அவன் தன்னையே உணர்ந்து கொள்ளவும் முடிந்தது.

நான் வோர்ட்ஸ்வொர்த்தை எப்படி ஒரு வெறும் இயற்கைக் கவிஞனாக மட்டும் புரிந்து கொள்ளத் தலைப்பட்டேன் என்றும், வாழ்க்கையின் அர்த்தத்தைத் தேடிய பயணத்தில் இயற்கையுடனான தனது தொப்புள்க் கொடி உறவை எப்படித் தனது உள்ளுணர்வால் அறியப் பெற்ற ஒரு தத்துவ ஞானியை
கண்டடைந்தேன் என்றும் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

தனது நண்பன் சாமுவேல் டெய்லர் கோல்ட்ரிட்ஜுடன் சேர்ந்து, ஆங்கிலக் கவிதையின் கற்பனாவாத இயக்கத்தின் – romantic movement – புரட்சிகரமான பரிசோதனை எழுச்சிக் கவிதைகளைப் படைக்கத் தொடங்கினான் வோர்ட்ஸ்வொர்த்.

ரொமாண்டிக் என்ற சொல்லின் பொருள் பூக்களோடும், கற்கண்டோடும், மெழுகுவர்த்தி ஒளிரும் இரவு விருந்துகளோடும் முடிந்து விடுவதில்லை. அன்று வரை ஆங்கிலக் கவிதைகளில் ஏற்றுக் கொள்ளப்பட்ட நியதிகளை ரொமாண்டிக் இயக்கம் முற்றாக உடைத்தெறிந்தது. கவிஞர்கள் புதிய கருப்பொருள்,
பாடுபொருள்,மனநிலை போன்றவற்றில் மட்டுமல்ல, புதிய வடிவங்களிலும் பரிசோதனைகள் நிகழ்த்தினர்.

வோர்ட்ஸ்வொர்த்தின் கவிதைகளின் சிறப்பியல்புகள் எவை? மனத்தின் உணர்ச்சி வேகத்திற்கு கூடுதல் முக்கியத்துவம், காரண காரியங்களைக் காட்டிலும் உள்ளுணர்விற்கு அதிக அழுத்தம். பாடுபொருள் நகரங்களிலிருந்து இயற்கை சூழ்ந்த கிராமங்களை நோக்கி நகர்ந்தது, சாதாரண மனிதர்களின் வாழ்வு கவிதைகளில் இடம் பெற்றது, தனி நபர்கள் தத்தமது மன எழுச்சி, உணர்வு, கற்பனைத் திறம் போன்றவற்றால் தாமே நமக்கு இயைந்த உண்மைகளைக் கண்டறிவதற்கான உரிமையை அது வலியுறுத்தியது.

அவனது ஆரம்ப காலப் படைப்புகளில் அவன் இயற்கை அபிமானியாக வருகிறான், இயற்கையின்
அழகையையும், விந்தையையும் பாடுகிறான். உதாரணங்கள் : Daffodils ,The Soitary Reaper போன்ற கவிதைகள். வோர்ட்ஸ்வர்த் நடப்பதில் பேரார்வமுள்ளவன். அவன் சிறுவனாக வளர்ந்த எழில் கொஞ்சும்
ஏரிக்கரைகளின் ஊடே, நீண்ட தூரம் தன்னந்தனியே நடப்பான். இந்த ஆர்வம் அவன் வாழ்நாள் முழுவதும்
நீடித்தது. இப்படி நடக்கும் போது சில குறிப்பிட்ட காட்சிகளும் ஓசைகளும் அவன் கவனத்தை ஈர்த்தன.
அவனை வெகுவாகப் பாதித்தன.

மலைகளின் பள்ளத்தாக்குகளின் கம்பீரமான மெளனம், கால்நடைகளின் அமைதியான மேய்ச்சல்,
பறவைகளின் அற்புதமான சங்கீதம், ஒளிக் கதிர் வீசுகிற காலைக் கதிரவன், அல்லது மங்கலொளி வீசும்
அந்தி மேகம், இவற்றிலெல்லாம் புதிய பொருளை அவன் கண்டான். அவனே ஒரு கவிதையில் சொல்வது
போல “ஒற்றை மலைப்பிரதேச மங்கை கொய்கிறாள் , தனக்குத்தானே பாடுகிறாள்” -“Solitary highland lass reaping and singing by herself”. அந்தக் காட்சிகளைப் பார்த்த மாத்திரத்தில் அவன் பாதிக்கப்பட்டான, நொடிப்பொழுதில் அவன் மனத்திரையில் அது நிழற்படமாகப் பதிவாகியது. பிற்பாடு அழகிய கவிதை வரிகளாய் விரிந்தது. அவனுடைய வார்த்தைகளிலேயே சொல்லுவதானால் : “A Poem is a Spontaneous Overflow of Powerful Emotions recollected
in tranquility ” கவிதை என்பது சக்தி மிக்க மன எழுச்சியின் தன்னிச்சையான பொங்கி வழிதலும், அமைதியாக அதை நினைவுகூறுதலும் ஆகும்.

இதற்கு உதாரணமாக அவனது ஆரம்ப காலக் கவிதை ஒன்றைத் தேர்வு செய்திருக்கிறேன்.

The Daffodils
I wandered lonely as a cloud
That floats on high o’er vales and hills,
When all at once I saw a crowd,
A host, of golden daffodils;
Beside the lake, beneath the trees,
Fluttering and dancing in the breeze.
Continuous as the stars that shine
And twinkle on the milky way,
They stretched in never-ending line
Along the margin of a bay:
Ten thousand saw I at a glance,
Tossing their heads in sprightly dance.
The waves beside them danced; but they
Out-did the sparkling waves in glee:
A poet could not but be gay,
In such a jocund company:
I gazed – and gazed – but little thought
What wealth the show to me had brought:
For oft, when on my couch I lie
In vacant or in pensive mood,
They flash upon that inward eye
Which is the bliss of solitude;
And then my heart with pleasure fills,
And dances with the daffodils.
இது அவனது ஆரம்ப காலப் படைப்புகளுள் ஒன்று. இளம் வாசகர்களுக்கானது. இந்தக் கவிதையை
முதன்முதலாக நான் ஐந்தாம் வகுப்பு மாணவியாக இருந்த போது படித்தேன்.

அப்போது தென்றலில் நடனமிடும் தங்கப்பூக்களின் காட்சி என் இளம் நெஞ்சை குதூகலிக்க வைத்தது. கவிஞனின் களிப்பும், உற்சாகமும் எந்த இளம் வாசகரையும் தொற்றிக் கொள்ளவே செய்யும்.

ஆனால், பல ஆண்டுகளுக்குப் பிறகு இதே கவிதையைப் படிக்க நேர்ந்த போது, முன்னிலும் பக்குவப்பட்ட என் மனதிற்கு அவன் இயற்கையின் கொடையை, அதன் அழகை கண்டு குதூகலிக்க மட்டும் செய்கிறானா அல்லது அவன் இயற்கையின் மெய்யான தத்துவத்தை உண்டாக்கி, அதன் மூலம் தன்னையே உணர்ந்து கொள்ள முயற்சிக்கிறானா என்று தோன்றியது.

கவிதையின் இறுதிப் பத்தியில் Vacant or Pensive mood எனபதன் மூலம் என்ன சொல்ல விழைகிறான்? என் இளம் பிராயத்தில் அவன் தனியாக, சோகமாக, சலிப்போடு இருக்கிறான் என்று நினைத்துக் கொண்டேன்.
பிற்பாடுதான் அவன் ஆழ்மன தியானத்தைச் சொல்லக் கூடும் என்று தோன்றியது. inward eye என்கிறானே, அது என்ன? சலிப்பூட்டும் உணர்வுகளா? அல்லது ஆன்மாவைக் குறிக்கும் கவித்துவச் சொல்லா? அடுத்து

My heart with pleasure fills
And dances with the daffodils

ஒரு தளத்தில் கவி தனது மகிழ்வான மனத்தை மீளக் கொணர்கிறான் என்று தோன்றுகிறது. வேறு தளத்தில்
அவனது ‘ஆன்மா மலர்களோடு ஒன்றாகிறது’ என்று பொருள்படுகிறது.

வோர்ட்ஸ்வொர்த் – ஒரு ஞானி :

வோர்ட்ஸ்வொர்த் ஒவ்வொருவரும் தன்னை இயற்கையோடு இணைத்துக் கொள்ள வேண்டுமென விரும்பினான். இந்த இணைப்பு மேலோட்டமானதாக அல்ல, இதயத்தோடும் ஆன்மாவோடுமான இணைப்பாக இருக்க வேண்டும். ஏனெனில் அது தான் உண்மையான மகிழ்ச்சிக்கு நம்மை இட்டுச் செல்கிறது. அவன் மலைகளையும், பள்ளத்தாக்குகளையும், ஏரிகளையும் ஓடைகளையும், செடிகளையும்
மலர்களையும் பார்த்து மகிழ்வதோடு நிறுத்திக் கொள்ளவில்லை. மாறாக அவன் ஒரு மெய்யான தத்துவத்தை உருவாக்கினான். இயற்கை ஒருமைத் தத்துவத்தை – philosophy of Monism – நோக்கிச் செல்கிறது என்றால் இதை ‘எல்லாம் ஒரு மனத்திலிருந்து கிளைத்தது’ எனலாம். அல்லது ‘உலகின் ஆன்மா’ எனலாம். அவன் இறைவன் “உள்”ளே இருப்பதாக நம்பினான். இறைவன் இந்த உலக வாழ்க்கையின் யதார்த்தங்களுக்கு அப்பால் இருக்கிறான் என்பதில் அவனுக்கு நம்பிக்கையில்லை.

இதை விளக்க அவனது அதிகம் அறியப்பட்ட பாடல் ஒன்றிலிருந்து சில வரிகளைக் குறிப்பிட
விரும்புகிறேன்.இது அவனது தலை சிறந்த படைப்புகளுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. பல விமர்சனங்களைக் கண்டது. அவையெல்லாம் இலக்கியத் திறனாய்வின் புனிதமான விதிகளுக்குட்பட்டு விமர்சிக்கப்பட்டவை. ஆனால் நான் பகிர்ந்து கொள்ள விரும்புவது , இந்தப் பாடலை நான் எப்படி புரிந்து கொள்கிறேன் என்பது. ஆதலால் எந்தத் திறனாய்வுச் சட்ட திட்டங்களுக்குள்ளும் இதை உட்படுத்த
வேண்டாம். ஏதேனும் ஒரு திறனாய்வோடு, எனது புரிதலில் ஒரு வேளை ஒற்றுமை இருந்தால், அது தற்செயலானது.
Lines Composed a Few Miles above Tintern Abbey
. . . I have learned
To look on nature, not as in the hour
Of thoughtless youth; but hearing oftentimes
The still, sad music of humanity,
Nor harsh nor grating, though of ample power
To chasten and subdue. And I have felt
A presence that disturbs me with the joy
Of elevated thoughts; a sense sublime
Of something far more deeply interfused,
Whose dwelling is the light of setting suns,
And the round ocean and the living air,
And the blue sky, and in the mind of man:
A motion and a spirit, that impels
All thinking things, all objects of all thought,
And rolls through all things. Therefore am I still
A lover of the meadows and the woods,
And mountains; and of all that we behold
From this green earth; of all the mighty world
Of eye, and ear, – both what they half create,
And what perceive; well pleased to recognise
In nature and the language of the sense
The anchor of my purest thoughts, the nurse,
The guide, the guardian of my heart, and soul
Of all my moral being.

இந்தப் பாடலில் ஒரு பகுதி, நினைவு கூறலாகும். ஆதலால் இதில் உணர்ச்சி வசமான ஆரம்பம் இருப்பது பொருத்தமே, பாடலின் முதற்பகுதி கவிஞன் இயற்கையை எப்படி எதிர்கொண்டான் என்று பேசுகிறது.
ஒளிக்கதிர் வீசும் பிரகாசமான காலை நேரத்தை உற்று நோக்கிய போது அவன் அடைகிற கிறு கிறுக்க
வைக்கும் ஆனந்தப் பரவசம் கவிதையில் வெளியாகிறது. அந்த இடத்திற்கு அவன் வந்து ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன என்கிற அறிவிப்போடு தான் கவிதை தொடங்குகிறது. அவன் கண்ட நாட்டுப்புறக்காட்சியின் அமைதி கொஞ்சும் அழகும்,அடங்கிய குரலில் சலசலக்கும் ஆற்றின் நீரும் கவிதையில் வருகிறது. அந்தக்
காட்சியின் ஞாபகங்கள் எப்படித் தனிமையான பொழுதுகளில் அவனுக்கு ஆறுதலளித்தது என்று
நினைவுகூர்கிறான்.அந்தக் காடுகளும் குழல்களும் அவன் மனதைப் புதுப்பித்தன என்றும் நினைவு கூர்கிறான். அவனுடைய அன்பிற்கும் கருணைக்கும் அவையே காரணங்கள். அந்த நினைவுகளின் பலனாகவே அவன் முற்றாக விடுதலையாகி வாழும் ஆன்மாவாக மாறி வாழ்க்கையைத் தரிசிப்பதாகக் கூறுகிறான்.

கடந்த காலத்தின் மதுரமான உணர்வுகளை இன்று இழந்து விட்டோம் என்று அவன் ஒருக்கால்
வருந்துகிறானா? இல்லை. அவன் இப்போது இருக்கிற காட்சியை விவரிக்கிறான். அந்தக் காட்சி
முன்னாலும் இப்போதும் அவனை எப்படிப் பாதித்தது என்பதை அவனால் புரிந்து கொள்ள முடிகிறது. கடந்த காலத்தின் செழிப்பும் வளமும் இல்லாமல் போனதற்கு அவன் வருந்தவில்லை. அந்தக் காட்சி கடந்த காலத்தின் மதுரமான உணர்வுகளை அவனுக்கு நினைவு படுத்தியதற்கு அவன் நன்றியுடையவனாவான். ஆனால் இதில் இழப்பின் வருத்தம் இல்லை. அது ஒரு நினைவு மட்டுமே. ஆயின் இப்போது இது நிஜம். இயற்கையோடு கொள்ளும் புனிதமான உறவு இது. இந்தக் கவிதையை எழுதியது வோர்ட்ஸ்வொர்த்தின் வயது வெறும் 28. பின்னாளில் கவிதையின் ஒரு சொல் கூட மாற்றப்படவோ திருத்தப்படவோ இல்லை.

அவனைப் போலவே உணர்வதற்கு, அவனைக் காட்டிலும் எனக்கு அதிக பிராயம் தேவைப்பட்டது என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். என்றாலும் ஒரு கல்லூரி மாணவியாக இந்த வரிகளை என்னால் விளங்கிக்
கொள்ள முடிந்தது.

பிற்பாடு தான் நான் கேள்வி கேட்க ஆரம்பித்தேன். கவிஞன் என்ன சொல்ல முயற்சிக்கிறான். அவனுடைய
அனுபவத்திலிருந்து சூழியல் நன்னெறிப் பாடம் சொல்கிறானா? அல்லது இன்னும் வேதாந்தமாக ஏதேனும்
சொல்ல முயற்சிக்கிறானா?

உயிருள்ளவற்றிலும் அல்லாதவற்றிலும் ஊடுருவிச் செல்லும் இருத்தல்(Presence) குறித்து அவன் பேசுகிறான். எல்லாவற்றிலும் இயற்கையாய் அமைந்திருக்கும் அசைவை இயக்கத்தை(motion) குறித்து அவன் பேசுகிறான். எல்லாச் சிந்தனைகளையும், எல்லாப் பொருட்களையும் இயக்குவது ஆன்மா(Spirit) என்று பேசுகிறான்.

அவன் இயற்கைக்கு எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பான். அது அவனைத் தூய்மையாக் கியது. அது அவனது தாதி, அவனது வழிகாட்டி, அவனது பாதுகாவலன். இந்த மேலான நன்னெறிக் கல்வியை
அவனுக்குப் போதித்தும் இயற்கையே.

இயற்கையை முழுமையாக கண்டடைவதன் மூலமே வாழ்வின் நன்னெறிகள் முழுமையடையும் என்று
அவன் கருதுகிறான் என்று தோன்றுகிறது. தான் எனும் சிந்தையும், நாமும் நம்மைச் சுற்றியுள்ள உலகும் வெவ்வேறானவை என்பதும் அங்கே இல்லை. அந்த நிலையை ஒருவன் எய்தினால், மற்றவர்களுக்கும் சூழியலுக்கும் அவன் நல்லதே செய்வான். ஏனெனில் தன்னுடைய நலனையும் உலகின் நலனையும் அவன் ஒன்றாகவே காணுகிறான்.

வோர்ட்ஸ்வொர்த்தின் மனதில், இரண்டு வேறு பிரிவுகளில்லை. அவன் இயற்கையை ஆதி அந்தமில்லாத,
மாற்றமில்லாத மேலான ஒரு உண்மைப் பொருளாகவும், அதில் மனிதன் ஒரு பாகமென்றும் அவன்
கருதினான். முழுமையை அடைவதற்கு ஒன்றையொன்று இட்டு நிரப்பும் Complementary கூறுகளாக அவன் பார்த்தான். இயற்கையும் சூழியலும் மனிதன் போராட வேண்டிய அந்நிய சக்திகளல்ல : மாறாக அவை நிறைவளிக்கும் உள் பொருள், அதில் மனிதன் ஒரு பாகம். இருத்தலைக் குறித்து அவன் உணர்வுகளைப் பேசும் போது இது வெளியாகிறது.

இயற்கையை முழுமையாகக் கண்டடைவது அவனுக்குச் சாத்தியமாகிறது. அவனை ஒரு அத்வைதி என்றழைக்கலாமென்று எனக்குத் தோன்றுகிறது. ஒருமையின் தத்துவத்தை தன் போக்கில் அவன்
விளக்குகிறான். அது தான் “கிராஸ்மேரின் ஞானி” என்கிற பெயரை அவனுக்குப் பெற்றுத் தந்திருக்க வேண்டும்.

ஆக, வோர்ட்ஸ்வொர்த்தின் கவிதைகள் என் வாழ்வின் வெவ்வேறு கால கட்டங்களில் மிகுந்த அளவில் எனக்குப் புரிபட்டிருக்கிறது. ஒவ்வொரு முறையும் அவனது கவிதைகளை வாசிக்கிற போதும், அதில்
பொதிந்திருக்கிற ஆழமான புதுப் புது அர்த்தங்களை நான் கண்டடைகிறேன்.

ramanivr@yahoo.com

(நவம்பர் 12, 2005 அன்று நடந்த ஹாங்காங் இலக்கிய வட்டத்தின் ‘கவிதைகள்’ கூட்டத்தில் பேசியது)

********

[தொகுப்பு: மு இராமனாதன், தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com]

Series Navigationபண்பாட்டைக்காட்டும் பாரம்பரியச்செல்வங்கள்ஹாங்காங் தமிழ் மலரின் ஜனவரி 2015 மாத இதழ்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *